முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்று காந்தியின் மரணத்தைப் பற்றி பேசுவோம்


காந்தி ஜெயந்தி அன்று நாம் காந்தியை நினைவுகொள்வதை விட அவர் ஏன் கொல்லப்பட்டார் என யோசிக்க வேண்டும். இந்துத்துவா சக்திகளை பழிப்பதற்காக நான் இதை சொல்லவில்லை (காந்தியை வைத்து தான் அதை நாம் செய்ய வேண்டுமென்பதில்லை). காந்தியை கொன்றது இந்துமத வெறி அல்ல, இந்திய தேசியவாதம் தான் என ஆஷிஸ் நந்தி கூறியுள்ளது முழுக்க உண்மை என்பதை நான் கடந்த சில ஆண்டுகளில் பாஜக இங்கே நடத்தும் பலவித அரசியல் தகிடுதித்தங்களை பார்க்கும் போதெல்லாம் உணர்கிறேன். பாஜகவின் கையைப் பற்றி நாம் இன்று வந்து நிற்கும் இந்த வரலாற்று சந்தர்ப்பத்தின் தோற்றுவாய் என்ன என நாம் இப்போது சிந்திக்க வேண்டும். அதுவே நாம் காந்தியை நினைவுகூரும் சரியான முறை.
 பாஜக இந்துமதத்தை ஒரு முகமூடியாக அணிகிறதே ஒழிய அவர்களுக்கு அதன் மீது எந்த அக்கறையும் இல்லை - அவர்கள் ஒரு இந்துக்கோயிலுக்கு சென்று விழா எடுத்து இஸ்லாமியர்கள் இந்த மண்ணுக்குள் ஊடுருவியவர்கள், அவர்களை துரத்த வேண்டும் என்பார்கள்; தொழில்நுட்ப  கல்வியுடன் கீதையும் பயில வேண்டும் என்பார்கள். ஆனால் அவர்களை கடவுளைப் பற்றியும் சிந்திக்க மாட்டார்கள், கீதையையும் படிக்க மாட்டார்கள்.

 மதம் என்பது ஒரு அரசியல் மொழி, அதன் ஆன்மீகமோ, தத்துவத் தளமோ தேவையில்லை என்பது இந்துத்துவர்களின் காலங்காலமான அணுகுமுறை; சவார்க்காருக்கு மதநம்பிக்கையோ கடவுள் நம்பிக்கையோ இல்லை; இன்று நான் சந்திக்கும் கணிசமான இந்துத்துவர்களும் ஆன்மீக ஆர்வம் கொண்டவர்கள் அல்ல. காந்தி ஆழமான கடவுள் பற்றாளர்; அதனாலே அவர் பிரிவினையை எதிர்த்தார்; அவர் பிரிவினையின் அடிப்படையில் ஒரு தேசம் கட்டமைக்கப்படுவதையும் எதிர்த்தார். ஆனால் எந்த தேசமும் கட்டமைக்கப்பட ஒரு எதிரியை, ஒரு மற்றமையை, மகக்ளின் கற்பனையில் நிறுவியே ஆக வேண்டும் (கிராமங்களில் ஒரு ருதுவான பெண்ணை பெண்ணாக உணர செய்ய அவளை ஆண்கள் மத்தியில் செல்லக் கூடாது என தடை செய்வதைப் போல). இதுவே வரலாறு நமக்கு திரும்பத் திரும்ப சொல்லும் சேதி.
 நம்மை ஆண்ட பிரிட்டீஷ் அரசாங்கமும் ஒரு சாம்ராஜ்ஜியமாக தோன்றிய காலத்தில் சிலுவைப் போர்களை இஸ்லாமிய அரசுகளுக்கு எதிராக நடத்தியது. பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் கிறித்துவத்தை ஒற்றை புள்ளியில் திரட்ட முயன்றார்கள்; விளிம்பில் இருக்கும் (கிறித்துவ) மதக்குழுக்களை தெருமுனையில் கட்டி வைத்து (சூனியக்காரர்கள் என பெயரிட்டு எரித்தார்கள்). இதன் பிறகு கத்தோலிக்க மதத்தலைமையுடன் பகை ஏற்பட கத்தோலிக்கர்களை கடுமையாக துன்புறுத்தி ஒடுக்கினார்கள். இப்படி மதரீதியான மற்றமை (கிறித்துவத்துக்கு உள்ளாகவே) தோன்றி இங்கிலாந்து எனும் தேசம் உருவாக வழியமைத்தது. இதன் பிறகு பிரிட்டன் பல காலனிகளை உலகம் முழுக்க தோற்றுவித்ததும் அவர்கள் ஒரு தேசமாக உணர காலனியில் வாழும் மக்களை பண்பாடற்ற மிருகங்கள், கிறுத்துவுக்கு எதிரான மதவிரோதிகள் என கற்பித்துக் கொள்வது உதவியது. அது மட்டுமல்ல பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொழ்ல்மயமாக்கலால் மக்களிடையே ஏற்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வு, அது ஏற்படுத்திய கடும் வறுமை, மக்களின் இடப்பெயர்வு, விளிம்புநிலையினரின் சமூக கோபம், ஆற்றாமை ஆகிய உணர்வுகளிலிருந்து ஆங்கிலேய சமூகத்தை திசை திருப்ப இந்த புது தேசிவாத உணர்வு, காலனியாதிக்க பெருமிதம் உதவியது என வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள் (இன்று பாஜக தேசியவாத பெருமிதம் கொண்டு பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதைப் போல). 
பூ.கோ சரவணன் தனது உரையொன்றில் சொல்வதைப் போல இந்தியா எனும் கட்டற்ற மக்களை திரளை மத அடிப்படையில் பிரிக்கும் பணியை துவக்கியது ஆங்கிலேயர் தாம். இந்தியர்களை பிரித்தாள்வது (சிப்பாய் கலகத்துக்குப் பிறகு) அவர்களுக்கு அவசியமாக இருந்தது. பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக தோன்றும் தேசியவாத அலையை இந்து-முஸ்லீம் பிரிவினை எனும் தந்திரம் மூலம் உடைக்கலாம் என அவர்கள் நம்பினார்கள்; இஸ்லாமியர் இஸ்லாமிய வாக்காளர்களுக்கு மட்டுமே ஓட்டளிப்பது, இந்துக்கள் இந்து வாக்காளருக்கு மட்டும் ஓட்டளிப்பது போன்ற முறைமைகளை அவர்கள் கொண்டு வர முயன்றது காங்கிரஸை முஸ்லீம்களிடம் இருந்து பிளவுபடுத்தி, இந்திய தேசியவாத உணர்வை மழுங்கடிக்கவும் தான்
என்னதான் பிரிட்டீஷாரிடம் இப்படி ஒரு சதித்திட்டம் இப்படி இருந்தாலும், முப்பது, நாற்பதுகளில் நாம் சுதந்திர தேசமாக, தன்னாட்சிக்கு தயாராகி வந்த சந்தர்பத்தில், மக்களிடையே பொதுவாகவே மற்றமையை நாடும் ஒரு போக்கு இருந்தே வந்தது. இதுவே திலகரின் பசுவதைக்கு எதிரான இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கைகள், இரு பக்கங்களில் இருந்து தூண்டி விடப்பட்ட, நடத்தப்பட்ட மதக்கலவரங்கள் நமக்கு காட்டுகின்றன. அதாவது இந்துக்கள் இஸ்லாமியரையும் இஸ்லாமியர் இந்துக்களையும்வெறுக்காமல்” (அல்லது வெறுக்க வைக்கப்படாமல்) இரு சாராருக்கு தனி தேசங்கள் சாத்தியமாகி இருக்காது. ஒருவேளை தேசியவாத பரஸ்பர வெறுப்பின் அடிப்படையில் இல்லாத ஒரு நெகிழ்வான (காந்தி கனவு கண்டது போல) தேசம் தோன்றி இருக்கலாம். ஒருவேளை அது தனக்கான மற்றமையை வெளியே (மேற்கத்திய ஒடுக்குமுறை சக்தியை வைத்து) தோன்றி இருக்கலாம். ஆனால் அன்றைய வரலாற்று சூழல் அதற்கு அனுமதிக்கவில்லை. அதாவது இந்திய சுதந்திரத்துக்கு முன்பான மூன்று பத்தாண்டுகளின் அரசியல் நகர்வுகளும் நம்மை பிரிவினைவாத வன்முறைக்கு, லட்சக்கணக்கானோரின் உயிரிழப்புக்கு தயாரித்துக் கொண்டிருந்தன

ஒரு கட்டத்தில் இந்துக்களும் இஸ்லாமியரும் (காங்கிரஸும் முஸ்லீம் லீக்கும்) சேர்ந்து ஆட்சி பண்ண ஒரு சமரச சட்ட அமைப்பை பிரித்தானிய அரசு முன்வைக்க அதை இரு தரப்புமே மறுத்து மோதிக் கொள்கிறார்கள். ஒரு பக்கம் காங்கிரஸ் தன்னை ஒரு இந்து கட்சி என ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை (அது ஒரு நெகிழ்வான ஆனால் பார்ப்பனிய சார்பு கொண்ட இந்தியாவை கனவு கண்டது; அதாவது ஒரு நவீன தான்-பிறிது எனும் பிரிவினை இறுக்கம் கொண்ட தேசத்தை அல்ல, ஒரு புராதனமான மழுமழுப்பான இந்திய தேசத்தை, கொடுக்கல் வாங்கல்களை ஓரளவுக்கு சாத்தியப்படுத்திய, ஆனால் அதிகாரத்தை ஒரு பக்கம் குவித்து வைத்திருக்கும் சமூக அமைப்பை காங்கிரஸ் கனவு கண்டது.); இன்னொரு பக்கம் முஸ்லீம் லீக் இந்து-இஸ்லாம் எனும் இருமை இல்லாமல் பாகிஸ்தானை பிரித்து வாங்க முடியாது என புரிந்து கொண்டிருந்தது. இரு கட்சிகளுக்கும் என்ன செய்வது எனத் தெரியவில்லை
ஜின்னா வரலாறு தன்னிடம் கோருவது என்ன (இருமையை உறுதிப்படுத்தி ஒரு நவீன தேசத்தை கட்டமைப்பது) என்பது குறித்து ஒரு தெளிவுடன் இருந்தார் - ஆக அவர் 1946 Direct Action Day அறிவித்தார். “எங்களுக்கு யுத்தம் வேண்டாம். ஆனால் உங்களுக்கு யுத்தம் வேண்டுமென்றால் யுத்தம் நடக்கும்; ஒன்றும் உடைக்கப்பட்ட இந்தியா அல்லது அழிக்கப்பட்ட இந்தியா!” என அவர் கூறினார். வங்காளத்தில் மிகப்பெரிய மதக்கலவரங்கள் நடந்தன. இரு கட்சிக்காரர்களும் முன்னின்று மக்களை கொன்று குவித்தனர்; வீடுகளை கொளுத்தினர். வங்காளத்தில் மட்டுமே நாலாயிரம் பேர் கொல்லப்பட்டனர், ஒரு லட்சம் பேர் தப்பித்து ஓடினர். கலவரம் பின்னர் பஞ்சாப், பிஹார், உத்தர பிரதேசத்திலும் பரவியது. உயிரழப்பின் எண்ணிக்கை பலமடங்காக மாறியது. இதன் பிறகு தான் இந்திய பிரிவினையை தவிர்க்க முடியாது எனும் இடத்திற்கு காலனிய ஆட்சியாளர்கள் வந்து சேர்ந்தனர்.

நாம் இங்கு ஒரு கேள்வியை எழுப்பலாம்: இவ்வளவு வன்முறை, உயிரிழப்பு இன்றியே இந்த முடிவை எடுத்திருக்கலாமே? அரசியல் கட்சிகளால் தமக்கு சாதகமான முடிவை தாமாகவே எப்போதும் எடுக்க முடிவதில்லையே. மக்களை நம்ப வைக்க வேண்டும். இரு தரப்பு மக்களும் துவேஷமின்றி அல்லது துவேஷமிருந்தும் சகித்துக் கொண்டு வாழும் போது அவர்களுக்கு உள்ளே இருக்கும் எதிர்மறை உணர்வுகளை அவர்கள் மீதே நிகழ்த்திக் காண்பிக்க வேண்டும். அப்போது அது ஒரு வரலாற்று சந்தர்ப்பம் ஆகிறது (ஆளும் தரப்பு எழுதி நிகழ்த்திய வரலாறு). இந்த சந்தர்பத்தை காண்பித்து மக்களை ஒரு இக்கட்டான நிலையில் தள்ளுகிறார்கள். இனி இந்துக்களால் இஸ்லாமியரையோ இஸ்லாமியரால் இந்துக்களையோ சற்றும் சகித்துக் கொள்ள முடியாத நிலையை தோற்றுவிக்கிறார்கள். கட்சிகளுக்கு இந்த கதையாடல் இன்றி அதிகாரத்தை தம்மிடம் குவித்து தக்க வைக்க முடியாது. அது மட்டுமல்ல அவர்களுக்கு இந்திய தேசத்தை மனதுக்குள் உருவகிக்கவே இத்தகைய கலவரங்கள் அவசியமாக இருந்தன
பிரித்தானிய அரசும் இதை நன்கு உணர்ந்திருந்தது - அவர்கள் தலையிடவில்லை; தடுக்கவில்லை; மாறாக வன்முறையை மேலும் பெருக்க, பிரிவினைக்குப் பின்னர் நடந்த பல லட்சம் மக்களின் இடம்பெயர்ச்சியின் போதான படுகொலைகளுக்கு, களம் அமைத்து தந்தனர். எப்படியோ பிரித்தானிய காலனிய ஆட்சியாளர்கள், காங்கிரஸ், முஸ்லீம் லீக் மூன்றுமே தெரிந்தோ தெரியாமலோ இந்தியா - பாகிஸ்தான் எனும் தேசங்களின் உருவாக்கத்துக்கு பல லட்சம் அப்பாவிகளை பலிகொடுக்க தயாராகின. ஒருவேளை இந்திய மக்களே கூட தமது தேசிய தாகத்தால் இதை உள்ளுக்குள் விரும்பி இருக்கலாம்.

இந்த வன்முறையின் பின்னணியில் புதிய முகத்துடன் புத்துயிர்ப்பு பெற்ற இந்துத்துவ (இந்து மகாசபை) அமைப்புகள் இந்தியா எனும் தேசம் (பாகிஸ்தானைப் போல) மத அடிப்படையிலான ஒரு நவீன வலுவான தேசமாக தோன்றவில்லையே என கசந்தனர். காந்தியின் குறுக்கீடு இதற்கு இதற்கு காரணம் என நினைத்தனர். ஜின்னாவைப் போன்றே அவர்களும் காங்கிரஸிடம்நீங்கள் இந்துக்களின் பிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்ளுங்கள்என கோரினர். முழுமையான இஸ்லாமிய வெறுப்பின் அணியில் இந்தியா ஒரு மதவாத தேசமாக தோன்ற ஒரு சந்தர்ப்பம் அமைந்தும் கூட காந்தியின் சமரச முயற்சிகளால், அகிம்சை லட்சியத்தால் அது நடக்காமல் போகிறதே என்பது அவர்களை கடுமையாக தொந்தரவு செய்தது. சுருக்கமாக, காந்தியும் பின்னர் நேருவும் தோற்றுவித்த இந்தியா (ஐரோப்பிய தேசங்களைப் போல) போதுமான தேசிய உணர்வுடன், நகரமயமாக்கட்ட, ஒற்றைப்புள்ளியில் திரண்ட மையவாத இந்தியாவாக இல்லை என்பதே அவர்களின் பிரதான புகார். ஆகையால் தான் அவர்கள் பிரிவினை காலத்துக்கு வன்முறையை பிடித்துத் தொங்கினர். இந்து மகாசபையினர் (ஒரு காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல் பண்ணினாலும்) இப்போது இந்து அகதிகளின் முகாம்களுக்குப் போய் வேலை செய்தனர். அங்கு கண்ட வெறுப்புணர்வு இந்தியா முழுக்க பரவ வேண்டும் என எதிர்பார்த்தனர் (ஆனால் காந்தி அந்த நெருப்பை சாமர்த்தியமாக அணைத்தார்). ஒருவேளை பாகிஸ்தான் போல இந்தியாவும் ஒரு இந்து தேசமாக தோன்றி இருந்தாலும் தம் கனவு பலித்திருக்கும் என நினைத்தனர். அவர்களின் ஏமாற்றத்துக்கு வடிகாலாக அமைந்ததே காந்தியின் படுகொலை.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பிரிவினை வன்முறையின் அழிவுப்பாதையில் இருந்து சமாதானத்தின் பாதைக்கு நாம் திரும்ப காந்தியின் உண்ணாநிலை போராட்டங்கள் பெரிதும் உதவின. அவர் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பயணித்து அங்கும் மக்களை அமைதிப்படுத்த விரும்பினார். 55 கோடி பணத்தை (பிரிவினை உடன்படிக்கையின்படி) பாகிஸ்தானுக்கு வழங்க அவர் நேருவை வற்புறுத்தி ஒப்ப வைத்தார். இதுவே தம் சவப்பெட்டி மேல் அவர் அறைந்த கடைசி ஆணி என முடிவெடுக்கும் கோட்சே (சாவார்க்கரின் வழிகாட்டலின் படி) காந்தியை சுட்டுக் கொல்கிறார். காந்தி தொடர்ந்து வாழ்ந்திருந்தால் என்னவாகி இருக்கும்? அவர் சர்வ நிச்சயமாக நேருவின் பரவலான தொழில்மயமாக்கலை, கிராமப்புறங்கள் வறுமையில் தவிக்க விடப்படுவதை எதிர்த்திருப்பார்

ஒருவேளை காந்தி 130-140 வயது வரை இருந்திருந்தால் அவர் நவீன இந்தியாவின் ஒவ்வொரு மதவாத முயற்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்; 1971இல் இந்திரா காந்தி மக்களிடையே தேசியவாத அலையை தோற்றுவித்து தன் அதிகாரத்தை காப்பாற்றும் பொருட்டு நிகழ்த்திய பாகிஸ்தானுடனான யுத்தத்தை காந்தி முதல் ஆளாக நின்று தடுத்திருப்பார். அதன் பின்னரும் ராணுவத்தின், மதவெறுப்பின் அடிப்படையில் தேசியவாத உணர்வு திரள்வதை எதிர்த்து பரஸ்பர அன்பு மற்றும் சகிப்புணர்வின் பெயரில் மக்கள், தேச எல்லைகள் கடந்து, ஒன்றிணைய வேண்டும் என கோரி இருப்பார். நிச்சயமாக அயோத்தியா பிரச்சனையை தலைகீழாக (மற்றமை இல்லாத ஒரு இந்து உணர்வை தோற்றுவித்து) அவர் புரட்டிப் போட்டிருப்பார். தொடர்ந்து விளிம்புநிலை மக்களுக்காக, பன்மைத்துவத்துக்காக பேசியிருப்பார். நேருவுக்குப் பிறகான பல அரசியல் தலைமைகளுக்கு மிகப்பெரிய எதிரியாக காந்தி இருந்திருப்பார். சொல்லப் போனால் இந்துத்துவா அரசியலுக்கு.

 காந்தி இறந்த பின்னர் தோன்றிய வெற்றிடத்தில் தான் இந்திய தேசியவாதம் தோன்றி, போர் நடக்கும் போதெல்லாம் தலைகாட்டி, அயோத்தியா, கார்கில் ஆகிய நிகழ்வுகளுக்குப் பிறகு முழுக்க தீர்மானமாக உருக்கொண்டது எனலாம்


காந்தி என்னதான் தேசத்தந்தை என்றாலும் வெறுப்பரசியலை, மற்றமையை வைத்து உருவாகும் தேசியவாதத்துக்கு எதிரானவர். காந்தி ஜெயந்தி அன்று காந்தியை நாம் கொண்டாட முதலில் செய்ய வேண்டியது ஒற்றைத்தன்மைக்கு, மையவாதத்துக்கு, வெறுப்பரசியலுக்கு (இந்துத்துவாவுக்கு) எதிராக போராடுவோம் என சூளுரைப்பது தான். காந்தியின் ஆன்மா மீது நாம் தூவும் ரோஜா இதழ்கள் ரத்தத்தின் நிறமற்றவையாக இருக்க வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...