முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதம் மாறவோ அல்லது ஒரு மதத்தில் வாழவோ அதன் தத்துவம் தெரிந்திருக்க வேண்டுமா?


ஶ்ரீனிவாசன் தோதாத்ரி தனது முகநூல் பதிவு ஒன்றில் பௌத்தம் தழுவ இருப்பதாக சொன்ன தனது முற்போக்கு நண்பருடனான உரையாடல் ஒன்றை விவரிக்கிறார். தோதாத்ரி அவரிடம் சில அடிப்படையான கேள்விகளைக் கேட்ட போது பௌத்தத்தின் பிரிவுகள், அந்த பிரிவுகளின் தத்துவம், அத்தத்துவங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் அவருக்கு தெரியவில்லை என்றும், தன் கேள்விகளுக்கு பதிலளிக்க தெரியாமலும், பௌத்தத்தில் புலால் உண்ணவோ வேறு உல்லாசங்களில் ஈடுபடவோ வழியில்லை என அறிந்து அவர் பின்வாங்கியதாகவும் சொல்கிறார். இதை ஒரு பகடிப் பதிவு என தோதாத்ரி நம்புவதன் அபத்தம் ஒரு பக்கம் இருக்கட்டும், இதன் மூலம் அவர் தனக்கு மதம் எப்படி செயல்படுகிறது என்கிற அடிப்படையான புரிதலே இல்லை என்பதையே காட்டுகிறார்.

இந்தியாவில் வாழும் இந்தியர்களில் 99% பேருக்கு இந்து மத தத்துவங்கள் குறித்து எந்த அடிப்படையான புரிதலும் இல்லை. இங்கு அத்வைதியாக வாழும் பலருக்கு தாம் அத்வைதி என்பதே தெரியாது. அப்படி தெரிந்த எத்தனை பேர் The Seven Great Untenables போன்று த்வைதத்துக்கும் அத்வைதத்துக்குமான மோதலை, வித்தியாசங்களை விளக்கும் நூல்களை படித்திருக்கிறார்கள்? விரல் விட்டு எண்ணி விடலாம்


இதன் பொருள் இந்துக்கள் முட்டாள்கள் என்றோ அவர்களுக்கு இந்துவாக இருக்க தகுதி இல்லை என்றோ அல்ல. இதன் பொருள் மதத்துக்கு தத்துவம் அவசியமில்லை என்பதே. குறிப்பாக இந்துமதத்துக்கு
இந்து மதம் ஒரு வாழ்நிலை மதம். அது அப்ரகாமிய மதங்களைப் போல குறிப்பிட்ட விதிமுறைகள், நம்பிக்கைகள், கருத்துக்கள் ஆகியவற்றை புத்தக வடிவாக்கி மக்களை அவற்றை எழுத்து பிசகாமல் படித்து அறிந்து பின்பற்றக் கோருபவை அல்ல. மத்யாமிக பௌத்தம் குறித்து ஓரளவு படித்தவன், நாகார்ஜுனரை தொடர்ந்து வாசித்து அவரைப் பற்றி ஒரு நூல் எழுதி வருகிறவன் என்கிற முறையில், அதன் தத்துவத்தை நிச்சயமாக ஒருவர் பின்பற்ற முடியாது, பின்பற்றினால் சமூக மனிதனாக சுலபத்தில் வாழ முடியாது என உறுதிபட கூறுவேன். ஆக, ஒருவர் எந்த ஒரு தத்துவத்தையும் ஆழ்ந்து படித்து கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தால் அவர் அந்த மதத்தில் இருந்து வெளியேற வேண்டியது தான்
ஜெ.கிருஷ்ணமூர்த்தி அதைத் தானே செய்தார்? நாகார்ஜுனரும் புத்தரையே மறுப்பவர் தானே? இதனால் தான் பொதுமக்கள் தாம் பின்பற்றுகிற மதத்தின் தத்துவத்தை படிப்பதில்லை. அவர்களுக்கு பல்வேறு துறைகள் சார்ந்து ஆழ்ந்த அறிவிருக்கும், ஆனால் தத்துவத்தை நெருங்குவது ஆபத்தானது, அவசியமற்றது என உள்ளுணர்வு அவர்களுக்கு சொல்கிறது. இதை எல்லா மதங்களுக்கும் சொல்லலாம் எனும் போது பௌத்தம் தழுவுகிறவர் மட்டும் அதன் தோற்றம், அமைப்பு, தத்துவம், கொள்கை பற்றி ஆராய்ந்து அறிய வேண்டிய அவசியம் என்ன? அதுவும் குறிப்பாக பௌத்தம் உங்களை வாழ்க்கைக்குள் விடுதலையை தேடக் கோரும் மதம், படிப்புக்குள் அல்ல எனும் போது

இன்னொரு விசயம் கணிசமான பக்தர்களுக்கு கடவுள் நம்பிக்கையோ கடவுளைத் தேடும் விருப்பமோ இல்லை. இது ஒரு விநோதம், ஆனால் உண்மை.

சரி மதத்தின் பயன், நோக்கம் தாம் என்ன?
மதம் நமது சமூகமாக்கலுக்கு உதவுகிறது. பண்பாட்டை வலுப்படுத்தி தக்க வைக்க உதவுகிறது. இந்தியாவில் அது சாதிய அமைப்பை பாதுகாத்து மேல்சாதியினருக்கு உதவுகிறது. அடுத்து, இறுதியாக, ஏன் வாழ்கிறோம் எனும் கேள்விக்கு குறியீடுகளால் (விக்கிரகம், பூஜை, விழா) பதில் தேட உதவுகிறது. வாழ்வின் வெறுமையை நாம் உணராதிருக்க, சமூக அமைப்பு சிதறாதிருக்க உதவுகிறது. மதம் ஒரு அபின் என நான் கூற மாட்டேன். ஆனால் வாழ்வைக் கடந்த ஒரு நித்தியத்தை கற்பனை செய்ய, ஒரு பராபரத்தின் மீது பழியையும் நம்பிக்கையையும் சுமத்த உதவுகிறது. அடுத்த கட்டமாக இன்று மதம் தேசியவாத அரசியலுக்கும் பரவலாக உதவுகிறது

ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா போல (நன்றாகவும் அரைகுறையாகவும்) மதக்கோட்பாடுகளை எளிமைப்படுத்தித் தரும் குருமார்களின் இடம் என்ன
சமூகமாக்கல், அரசியல், சாதி ஒருங்கிணைப்பு, குறியீட்டு புரிதல் ஆகியன தாண்டியும் கேள்விகளும் தேவைகளும் மீந்து நிற்கும் போது ஒரு கார்ப்பரேட் சாமியார் வந்து இன்றைய உளவியல் தேவைகளுக்கு ஏற்ப நமது அத்வைதமும் யோகாவும் கற்றுத் தருகிறார்கள். ஆனால் மிக கவனமாக அது சமூக கட்டமைப்பை சிதைக்காதபடி, சிதறடிக்காதபடி தான் கற்றுக்கொடுக்கிறார்கள்

ஏன் கார்ப்பரேட் சாமியார்கள் இவ்வளவு படோபமாக, செல்வாக்காக தம்மை காட்டிக் கொள்கிறார்கள்? தத்துவத்தின் சாரம் என்பது அனார்க்கிசம். இவர்கள் தமது தோற்றத்தின் படி நமக்கு ஒரு சேதி விடுக்கிறார்கள் - “என்னைப் பின்பற்றினால் நீங்கள் லௌகீக வெற்றிகளை, அதன் வசதிகளை துறக்க வேண்டி வராது. என்னைப் போன்றே நீங்கள் மாற வேண்டுமெனில் வாருங்கள்.” இவர்கள் குளிக்காமல், சடாமுடியுடன், கூட்டமும் பணமும் சேர்ப்பதில் அக்கறையின்றி / பிணங்களைத் தின்று பிணங்களுடன் வாழ்கிறவர்களாகத் தோன்றினால் ஐம்பது பேருக்கு மேல் இவர்களைக் காண செல்ல மாட்டார்கள்.

சரி இதையெல்லாம் தெரிந்திருந்தும் ஏன் ஒருவர் இந்து மதத்தில் இருந்து வெளியேற வேண்டும்?
இந்து மதம் வெகுவாக புரையோடிப் போய் விட்டது. அதனுள் இருந்தால் மூச்சுத்திணறல் ஏற்படும் எனத் தோன்றும் ஒருவர் வெளியேறுகிறார். இதை விட பரவாயில்லை எனத் தோன்றுகிற பௌத்தத்தை அவர் நாடுகிறார். அதன் பொருள் அங்கு அவர் இறைவனை நாடுவார் என்றில்லை. அங்கு ஒருவேளை இந்துத்துவாவை, சாதியத்தை எதிர்க்க தன்னால் இயலுமோ என நினைக்கிறார். இது ஒரு தவிப்பு. இந்த தவிப்பினால் தான் எத்தனையோ தலித்துகள் பௌத்தம் தழுவுகிறார்கள். அம்பேத்கரும் அதையே செய்தார், செய்யக் கேட்டார். மதம் மாறுவது ஒரு அரசியல் அறிக்கை; அது மற்றொரு சமூகத்திரளில் பொய் சேருவதற்கான முயற்சி
ஆனால் ஒரு மதத்தில் இருந்து தப்பிக்க நினைப்பவர் தத்துவத்தையே நாட வேண்டும், மற்றொரு மதத்தை அல்ல என்பேன்.
புலால் உண்ணுவதற்கு அடுத்து வருகிறேன். எத்தனையோ பிராமணர்கள் எனக்குத் தெரிந்து புலால் உண்ணுகிறார்கள், ரகசியமாக. அவர்கள் எல்லாம் வேதம் கூறும் வழியிலா நடக்கிறார்கள்? (ஆதி பிராமணர்களும் கூட யாகத்தீயில் பசுவை வெட்டி பலியிட்டவர்கள் தானே!)  இதனால் இந்த பிராமணர்கள் இந்து அல்லாமல் போய் விட்டார்களா? எந்த மதத்திலும் நீங்கள் இருக்க அதன் விதிமுறைகளை பின்பற்ற அவசியம் இல்லை


வலதுசாரிகள் உளறுவதில் வித்தகர்கள் என முந்தைய கட்டுரையில் சொல்லி இருந்தேன். அதற்கு தோதாத்ரியைப் போன்றோர் சிறந்த சான்று, குறிப்பாக மேற்சொன்ன அவரது பகடிப்பதிவு. இவர்கள் சாலையில் பட்டாசு வெடிக்கும் பையன்களைப் போன்றவர்கள். யோசிப்பார்கள், ரொம்ப தெளிவாகவே, ஆனால் மூளையை கழற்றி வைத்து விட்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...