முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு காதல் முறியும் போது…


(இங்கு நான் காதலி பற்றி சொல்வதை அப்படியே காதலனுக்கும் பொருத்தலாம்.)

காதல் தோல்வி அடைந்தாலோ காதலியை இழந்தாலோ நாம் அழுது வடிப்போம், மன அழுத்தத்தில் மௌனமாவோம், குடி உள்ளிட்ட போதைகளில் ஈடுபடுவோம், சிலர் வீட்டை விட்டு வெளியே வராமல் டிவி முன்பே பழியாகக் கிடப்பார்கள், சிலர் இலக்கியம், இசை, வேலை என மனத்தை திசைதிருப்ப முயல்வார்கள், சிலர் மனநல சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள், சிலர் தற்கொலைக்கு முயன்று தோல்வி அடைந்து ஐயோ இதிலும் தோல்வியா என நொந்து போவார்கள், சிலர் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட்டு மனத்தை தேற்ற முயல்வார்கள், சிலர் புத்திசாலித்தனமாக ஒரு திருமணம் செய்து கொள்வார்கள், சிலர் காதலியின் பெயரில் நாய், பூனை வளர்ப்பார்கள், மேலும் பலர் பேஸ்புக்கிலே குடியிருப்பார்கள் - இப்படி எத்தனை எத்தனையோ வழிமுறைகள், பதிலீடுகளை காதலிக்கு வைத்திருக்கிறோம். ஆனால் அனைத்துமே உங்களை நடுத்தெருவில் தான் கொண்டு போய் விடும். ஏனென்றால் ஒரு காதலிக்கு மாற்று மற்றொரு காதலி மட்டுமே
ஆகையால் காதல் முறியும் போது அடுத்த நாளே அல்லது அதற்கு அடுத்த நாளே மற்றொரு காதலியை தேடத் தொடங்க வேண்டும். ஆறுதலுக்காக அல்ல. வாழ்க்கையை தொடர்வதற்காக சொல்கிறேன். ஏன் முன்னாள் காதலியின் நினைவில் வாழலாகாதா? அதுவல்லவா உண்மையான காதல்?


நிச்சயமாக இல்லை. அது ஒரு கற்பிதம். நிஜமான வாழ்க்கை என்பதை தொடர்ந்து போய்க்கொண்டே இருப்பது
ஏன் மற்றொரு காதலி இல்லாமல் வாழ்க்கையை தொடரக் கூடாதா? முன்னாள் காதலி தந்த காயங்கள் போதாதா? ஒரு தடவை பட்ட செருப்படி பத்தாதா? இன்னொரு முறை வேறு அடிபட வேண்டுமா? ஆம், போதாது. இதில் கூச்சமே பார்க்கக் கூடாது. ஏனென்றால் மனிதனுக்கு வேறு வழியில்லை

உங்கள் வாழ்க்கையில் ஒரு காதலி இருந்தால் அந்த இடத்தில் மற்றொரு பெண் அவள் போன பிறகு வந்தாகவே வேண்டும். அல்லாவிடில் அந்த இன்மை ஒரு புண்ணாக உங்களை தொந்தரவு பண்ணிக் கொண்டே இருக்கும். மனம் அவளை / அவளது பதிலியை நாடிக் கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் இந்த தேடலின் சுவாரஸ்யத்தில் நிஜ காதலை அடையாமல், எந்த பெண்ணிடமும் நிலைக்காமல், பலரிடம் கடலை போட்டு அலைந்து கொண்டே இருப்பீர்கள். ஆனால் இயல்பான நிறைவான வாழ்வு என்றால் அந்த இன்மையை ஒருத்தி வந்து நிறைவு செய்தே ஆக வேண்டும், அதுவும் உடனே வேண்டும்.

வள்ளுவர் காமத்துப் பாலில் ஒரு குறளில் காதலியை காயம் ஏற்படுத்தி அதற்கு மருந்தும் இடுகிறவள் என்பார்
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.”

இது ஒரு ஆழமான அவதானிப்பு - அதாவது காதல் என்பது ஒரு அகப்புண். மனிதன் பிறக்கும் போதிலிருந்தே இந்த புண் மிக மெல்லிய ஒரு கீறலாய் அவனுக்குள் தோன்றி விடுகிறது. அதன் பிறகு அவன் வளர வளர புண்ணும் வளர்கிறது. இப்போது அதற்கு மருந்திடுவதற்கு ஒரு பெண்ணை மனம் நாடத் தொடங்குகிறது. அவள் உடலின்பத்துக்கு ஆனவள் என தேகம் சொன்னாலும் நிஜத்தில் அவள் அவன் அகப்புண்ணை ஆற வைப்பவளே. இந்த புண்ணானது அவன் சாகும் வரை முழுமையாக ஆறாது. ஏனெனில் அவன் வாழ்வில் வரும் ஒவ்வொருத்தியும் இந்த புண்ணுக்கு மருந்திட்டபடியே அதை மேலும் அகலப்படுத்துவாள்.
பெண்களைத் தவிர்த்து அவர்கள் இடத்தில் வேறு நாட்டங்களை ஒரு மனிதன் வைக்கும் போது அவன் தன் காயத்துக்கு வலிநிவாரணியை அளிக்கிறான். ஒவ்வொரு இரவும் தூங்கப் போகும் போது அவன் தன் காயத்தை தடவிப் பார்த்துக் கொள்கிறான்.
வயோதிகத்திலும் பெண்ணாசை மனிதனுக்கு தீருவதில்லை. காமத்தை நுகர முடியாத போதும் மனம் காதலை நுகர அலைபாயும். அது ஒருபோதும் ஆற வாய்ப்பற்ற ஒரு இன்பச்சாறு ஊறும் காயம்.
காதல் வேறு எந்த அன்பை விட தூய்மையானதாக, பாசாங்குகள் அற்றதாக இருப்பதற்கு காரணம் அது மிக மிக பொதுவானது என்பதே. ஒரு நட்பு சிறப்பாய் அமைய அந்த நண்பர்கள் அன்பான, ஆழமான ஆளுமை கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால் காதல் சிறப்பாக அமைய ஒரு ஆணும் பெண்ணும் மட்டுமே போதும் - அவர்களுக்கு அன்பு காட்ட தெரிய தேவையில்லை, அவர்களுக்கு துலங்கும் காத்திரமான ஆளுமைகள் இருக்க வேண்டியதில்லை. காதல் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். காதல் எல்லாரையும் சமமானவரக்ள் ஆக்கி விடும்; ஏனென்றால் காதலிப்பவர்கள் இடையே வித்தியாசங்கள் இருக்க முடியாது. ‘த்ரிஷா இல்லையென்றால் நயன்தாரா’, ஏனென்றால் இருவருமே ஒன்று தான், ஒன்றல்லவெனில் நீங்கள் இருவரையுமே காதலிக்க முடியாது.
முன்னவளின் இடத்தில் மற்றொருத்தி வரும் போது சட்டென எல்லா சமநிலைக்குலைவுகளும் முடிவுக்கு வருகின்றன. வெறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. சின்ன சின்ன ஏமாற்றங்களும் தோல்விகளும் எரிச்சலைத் தராமல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கோபங்கள் அழகான சமாச்சாரங்கள் ஆகின்றன. எதிர்பார்ப்புகளுக்கு ஒரு பூவண்ணம் வருகிறது. காத்திருப்புகளுக்கு பொறுமையின் புன்னகை பூக்கும் உதடுகள் வாய்க்கின்றன. இப்போது நீங்கள் வாழ்வின் பெரிய சமநிலைக்குலைவுகளை, வெறுமையை, பிரமாண்ட ஏமாற்றங்களை, தோல்விகளை சந்திக்கும் வலுவுடன் கிளம்புகிறீர்கள். ஒரு சின்ன அதிர்ச்சியைக் கண்டு நடுங்குகிறவர் பெரிய நடுக்கங்களை நிதானமாய் எதிர்கொள்கிறீர்கள்

இதை ஆண்களை விட பெண்களே நன்றாய் புரிந்து வைத்திருக்கிறார்கள். மேலும் நமது சமூகமும் அவர்களை தனிமையில் வாழ விடுவதில்லை. ஆகையால் அவர்கள் ஒரு காதல் முறிந்த உடனே மற்றொரு காதலையோ அல்லது அதற்கு ஈடான நட்புகளையோ உருவாக்கி நகர்ந்து செல்கிறார்கள். அல்லது திருமணம் செய்து கொள்கிறார்கள். அரிதாகவே பெண்கள் (ஆண்களைப் போல) தேங்கி நிற்கிறார்கள். உறவின் தாத்பரியத்தை ஆண்களை விட பெண்களே நன்றாய் புரிந்து வைத்திருக்கிறார்கள் எனலாம் (இதிலும் விதிவிலக்கு உண்டு என்றாலும்).


அது என்ன?

(மேலும் படிக்க)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...