Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

புனைவு எழுதுவது ஏன் அபுனைவை விட சவாலாக உள்ளது?


எழுதுவது என்றுமே சவால்தான். இல்லை என்று யாராவது சொன்னால் அது பொய். ஆனாலும் அபுனைவுடன் ஒப்பிட்டால் புனைவு எழுதுவது கூடுதல் சிரமம், அல்லது இன்னும் துல்லியமாக சொல்வதானால் கூடுதல் சவால் என்பேன். இன்று நானும் ஆயுஷும் நாவல் கலையின் நுணுக்கங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இந்த கேள்வியை அவன் என்னிடம் கேட்டான். அவன் கடந்த இரு வருடங்களாக அபுனைவு எழுதி வருகிறான். அவனால் நினைப்பதை இப்போது ஒரு கட்டுரையாக வேகமாக எழுத முடிகிறது. அதற்கான மனக்குவிப்பு அமைந்து வருகிறது. ஆனால் சிறுகதையோ நாவலோ எழுதும் போது மனம் சிக்குண்டது போல ஸ்தம்பிக்கிறது. இது ஏன்?
 நான் அவனிடம் என் நாவல் எழுதும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். ஒவ்வொரு நாளும் எழுதி வரும் போது, குறிப்பாக எழுதும் முன்பு, அன்றைக்கு எதை எப்படி எழுதி நகர்த்தி செல்வது என குழப்பம் வருகிறது, எழுத முடியுமா என கேள்வி எழுகிறது, அந்த கேள்வி ஒரு பயமாக மாறி, பயத்தை மறைக்க முயன்று அது பதற்றமாக உருக்கொண்டு என்னை அழுத்துகிறது. இது ஏன்?


முதல் காரணம்: அபுனைவு எழுதும் போது எதை எழுதப் போகிறோம் என முன்கூட்டியே தெரிந்திருக்கிறது; ஆனால் புனைவுக்கு ஒரு வரைவு இருந்தாலும் கூட அடுத்து என்ன என்பது ஒரு மர்மமே. எதிர்பாராமைகள் நிறைந்தது புனைவு; எதிர்பாராமைகளே புனைவின் சுவாரஸ்யம், அவையே புனைவை சவால் நிரம்பியது ஆக்குகின்றன. ஆனால் புனைவை சவால் ஆக்குவது பிரதானமாக இதுமட்டும் அல்ல.

புனைவுக்குள், குறிப்பாக ஒரு நாவலுக்குள், பல (சிந்தனை / உணர்வு / வரலாற்று / தத்துவார்த்த / பண்பாட்டுத்) தரப்புகள் உண்டு. ஒன்றுக்கொன்று முரண்படுகிற தரப்புகளாக இவை இருக்கும். உதாரணமாக பிறழ்வு உறவுகளை எடுத்துக் கொள்வோம். மணமான ஒருவர் தான் நம் நாயகன் - அவர் தன் மனைவியை மனதார விரும்புகிறவர், தன்னையும் மீறி மற்றொரு பெண்ணை நேசிக்கிறார். இங்கே தாம்பத்ய அன்பும், காதலும் இரு வேறு தரப்புகள். இரண்டையும் அங்கே தெளிவாக முன்வைக்க வேண்டும், அதுவும் சமமாக தெளிவாக. இரண்டையும் மனம் பிடித்து தொங்குவதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரிய வேண்டும். தர்க்கபூர்வ காரணங்கள் அல்ல, உணர்வுரீதியான காரணங்கள். அந்த காரணங்களை நீங்கள் வரலாற்றில், சமூகவியலில், உளவியலில், நடைமுறையில் கண்டுபிடிக்க முடியாது, அதை நீங்கள் அந்த பாத்திரத்தின் உணர்வுத் தளத்தில், அவன் / அவளது அகச்சாய்வுகளில், இருண்மைக்குள் தான் கண்டுபிடிக்க முடியும். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் அவரவருக்கான நியாயங்கள் இருக்கும். அவரளவில் அது தர்க்கபூர்வமாகவும் பிறருக்கு அபத்தமாகவும் இருக்கும். இதுவே அந்த பாத்திரத்தின் சாரம். ஒரு படைப்பாளி இந்த தரப்பை கண்டுணர்வதே பெரிய சவால் (செகாவ் தனதுநாயுடன் தோன்றிய சீமாட்டிசிறுகதையில் இதை அபாரமாக செய்திருப்பார்.) ஒரு நாவல் என்றால் இது போல பல்வேறு தரப்புகளை கண்டறிந்து மோத செய்ய முடிய வேண்டும். அப்போதே அது சிக்கல்களும் முடிச்சுகளும் நிரம்பிய சுவாரஸ்யமான வியப்பூட்டும் படைப்பாகும்.

இதை செய்வதற்கான முதல் தடை நீங்கள் ஒரு கதையை சொல்லும் போது அந்த கதையின் போக்கு குறித்த நியாயங்கள் உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்காது என்பதே. .தா., அபிராமி ஏன் தன் குழந்தைகளுக்கு விஷமளித்து கொன்றாள் என்பது உங்களுக்கு அவரைப் பற்றி ஒரு நாவல் எழுதும் போது தெரிந்திருக்காது. ஆனால் ஒரு கட்டுரையாக எழுதும் போது கொலைக்கான காரணங்களை சுலபமாக அடுக்க முடியும். ஏனென்றால் அத்தரப்புகள் ஏற்கனவே தயாராக உள்ளன. நீங்கள் அந்த தரப்புகளின் தர்க்கத்தை மட்டுமே அபுனைவில் பரிசீலிக்கிறீர்கள்

ஒரு கட்டுரை / கட்டுரை நூல் எழுதும் போது அங்கு ஒரு தரப்பு உண்டா என ஆயுஷ் என்னிடம் கேட்டான். நான் அவனிடம் சொன்னேன், “ஆம் உண்டு. ஒரு அபுனைவில் அதை எழுதுகிறவன் தான் பாத்திரம். எழுத்தாளன் தன்னை பாத்திரமாக நம்பியே தன் தரப்பில் இருந்து பேசுகிறான். அதாவது கட்டுரையாளன் தன்னையே பாத்திரமாக்கிய பின்னரே எழுதத் தொடங்குகிறான். அபுனைவிலும் உள்ள புனைவுத் தன்மை இது தான். ஆனால் புனைவில் அவன் தன்னை மட்டுமே பாத்திரமாக்கி கதை சொல்ல முடியாது. (ஆட்டோபிக்‌ஷனில் ஓரளவுக்கு முடியும் என்றாலும்) நாவல் எழுதுவது ஒரே கட்டுரை நூலை நான்கு ஐந்து விதங்களில் மாறுபட்ட, முரண்பட்ட நோக்குகளில் இருந்து எழுதிப் பார்ப்பது போன்றது. அதாவது ஒரே கருத்தை நான்கைந்து கோணங்களில் இது முழுக்க முரண்பட்ட முன்வைப்பது. அதுவும் கட்டுரையில் தர்க்கரீதியாக வைக்கும் கோணத்தை இங்கு உணர்வுநிலையில் இருந்து செய்ய வேண்டும்.”

இதை சொல்லும் போது எனக்குத் தோன்றிய முதல் உதாரணம் தி.ஜாவின்மோகமுள்”. பாபு தன்னை விட மூத்தவளான யமுனாவை காதலிக்கிறான். ஏன் அப்படி அவன் செய்கிறான் என்பதே நாவலின் மையக் கேள்வி. நாவலின் போக்கினூடே தி.ஜா இக்கேள்விக்கு பலவிதமான பதில்களை தொகுக்கிறார். இறுதியில் நாம் புரிந்து கொள்கிறோம் - பாபுவினுடையது சாத்தியமாகாத பிறழ்வுறவின் கதை மட்டுமல்ல; இசையில், அன்பில், காமத்தில், வாழ்க்கைத் தேடலில் மிகையை நாடி, தன் லட்சியத்தை தொடர்ந்து தள்ளிப் போடும் ஒரு இளைஞனின் கதையும் தான்.
 பாபு நாவல் முழுக்க இசையை கற்றபடியே இருக்கிறான்; கற்று முடித்து கச்சேரி பண்ண தயங்குகிறான். ஏனென்றால் எதையொன்றையும் நாம் முற்றும் தெரிந்து கொண்டு செயல்படும் போது அங்கு ஒரு ஏமாற்றம் வந்து விடும்; ஆனால் அதை அடையும் ஒரு நொடி முன்பு வரை நமக்கான சாத்தியங்களுக்கு வானமே எல்லையாக இருக்கும். இதை உணர்ந்தே பாபு முதலில் யமுனாவை நேசித்து அவள் பொருட்டு தன் காதலை தள்ளிப் போடுகிறான்; பிறகு அவளுக்காக தன் இசையை தள்ளிப் போடுகிறான். இறுதியில் பல வருடங்களுக்குப் பிறகு யமுனாவே அவனை நாடி வந்து, அவளுடன் உடலுறவு கொண்ட பின்பு இவ்வளவு தானா, இதற்குத் தானா எனும் கேள்வி, ஏமாற்றத்தின் கசப்பு அவனை உலுக்குகிறது. யமுனா இதற்கு நேரெதிர் கோடியில் இருக்கிறாள் - அவள் நடைமுறையை தேவைக்கு அதிகமாய் புரிந்து கொண்டவள். திருமணம் என்பதை தன்னை அடிமைப்படுத்தும், தனது சுயமரியாதையை பறிக்கும் என எண்ணி தொடர்ந்து அதை தள்ளிப் போடுகிறாள். ஒரு கட்டத்தில் வேறுவழியின்றி, பசிக்கொடுமை தாளாதே அவள் பாபுவை நாடுகிறாள். அது ஒரு சமசரம். எவ்வளவு தான் யமுனா ஒவ்வொரு சமூக அமைப்பிலும் மாட்டாமல் அவள் தப்பித்து சென்றாலும் அந்த சுதந்திரமும் ஒரு முடிவுக்கு வருகிறது. இருவரும் இருவித நாட்டங்களை முழுக்க மாறுபட்டு அணுகும் ஆட்கள். இருவரும் அப்படி இருக்க அவர்களுக்கான நியாயங்கள் உண்டு. அவர்களுக்கு மட்டுமே புரியும் தர்க்கம் உண்டு. தி.ஜா இது என்ன என விவாதிப்பதில்லை; ஆனால் இந்த நியாயப்படி அவர்கள் நாவல் முழுக்க பயணிக்கிறார்கள். இது ஏற்படுத்தும் சிக்கல்களே நாவலின் உச்சங்களை ஏற்படுத்துகின்றன.

இப்போது நான் சொல்லியிருப்பதைப் போல பாபு மற்றும் யமுனாவின் அடிப்படையான நோக்கங்களை வரையறுப்பது கட்டுரை; ஆனால் அதை வரையறுக்க முடியாதபடி கையாள்வது நாவல். கிளியை இறகுகளை நறுக்கி கூண்டு வைத்தால் கட்டுரை; இறகுகள் வளர விட்டு பறக்க விட்டு ஆகாயத்தை அது ஆளும் போது இங்கிருந்தே அதை கட்டுபடுத்தி தேவைப்படும் போது வரவழைத்து மீண்டும் கூண்டு அடைக்க முடிவது நாவல்


Comments

Lakshmi Narayanan said…
பிரமாதம் அபிலாஷ் சார்.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...