
பவுத்த அய்யனார் எண்பதுகளில் துவங்கி ரெண்டாயிரத்தின் பிற்பகுதி வரை எழுதிய நவீன கவிதைகள் “மேன்சன் கவிதைகள்” என்ற பெயரில் தொகுப்பாக வெளியாகியது. அத்தொகுப்பின் ஆங்கில மொழியாக்க நூலை படிக்க நேர்ந்தேன் - Rooms (Mansion Musings). லதா ராமகிருஷ்ணன் அவ்வளவு சரளமாக, கிட்டத்தட்ட ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்பட்டவையோ எனத் தோன்றும் அளவுக்கு ஆங்கில சொல்லாக்கங்களின் சரியான லயம் மற்றும் தோரணையுடன் இத்தொகுப்பை மொழியாக்கி இருக்கிறார்.
பவுத்த அய்யனாரின் கவிதைகளில் பிரபலமான “கொம்புகள்” உள்ளிட்டவை மொழியாக்கத்தில் படிக்க அதே வியப்புணர்வை தருகின்றன - ஒரு பழைய நண்பர் சட்டென இளமையாகி புதிய கோலத்தில் கண் முன்பு வந்து நிற்பதைப் போல படிக்கையில் உணர்ந்தேன் (நல்ல விதமாகத் தான்).
பவுத்த அய்யனாருக்கு என்று ஒரு தனித்துவமான முகம் உண்டென்பது அப்போதிருந்தே எனக்கிருந்த எண்ணம். அந்த முகம் ஆனால் அவருடையது மட்டுமல்ல, அதில் நாம் தொண்ணூறுகளில் மனுஷ்யபுத்திரன் பிரபலமாக்கிய முகங்களைக் காணலாம்; அதில் நிச்சயமாக சுகுமாரனின் தாக்கத்தைக் காணலாம். பசுவய்யா ஒரு கனவைப் போல வந்து போகிறார். கலாப்ரியா தென்படுகிறார். ஒற்றர்கள் பற்றின கவிதை ஒன்றில் ஆல்பர்ட் காமு வந்து நம் கையைப் பற்றி இழுக்கிறார். எளிமையான நேரடியான ‘நான் vs நீ’ எனும் எதிரிடையை வைத்து பின்னப்படும் இக்கவிதைகள் இன்றைய கவிதையுலகில் முழுக்க வேறு வடிவம் எடுத்து விட்டது. ஏனென்றால் இன்று பௌத்த ஐயனாரின் கவிதைகளின் ஒடுக்கப்பட்ட தனிமனிதன் இப்படியாக இல்லை - அவன் சதா பகடியும் கேலியுமாக, உணர்ச்சிப்பிரவாகமாக, சமூகத்தை ஒலிபெருக்கி வழியாக பேசி உறக்கம் கலைப்பவனாக, தன்னையே மறுப்பவனாக மாறி விட்டான். நம் அலங்காரமற்ற நேரடிக் கவிதை (plain poetry) இப்படி மாறுமுன், சற்றே கூச்சத்துடன் ஒதுங்கி இருந்த காலத்தின் முகத்தை நாம் பார்க்க இக்கவிதைகள் காத்திருக்கின்றன.
Comments