முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடிமைகளின் உடல்மொழியும் அதிகாரத்தின் உடல்மொழியும் (1)



சமீபமாக பாரதியார் பல்கலைக்கழக (யுவபுரஷ்கார் விருதாளர்களுக்கான) கருத்தரங்கின் போது பேசிய பாரதி கிருஷ்ணகுமார் தான் ஒரு நிகழ்ச்சியில் கால்மேல் கால் இட்டு அமர்ந்ததற்காக கண்டிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டார். அப்போது அவர் பொதுவாக அடிமை மனநிலை கொண்டவர்கள் கால் மேல் கால் இடாமல், கால்களை ஏதோ கட்டைகளைப் போல வைத்திருப்பார்கள் எனச் சொன்னார். பிற்பாடு யோசித்த போது இது ஒரு முக்கிய பார்வை எனப் பட்டது. கால் மேல் காலிடாமல் இருப்பதைப் பற்றி மட்டுமே அவர் சொல்லவில்லை (துணிச்சலான ஒருவர் கால்மேல் காலிடும் விருப்பமில்லாமலும் இருக்கலாம்). எளிய மனிதர்கள் தம் உடல்மொழியினூடாக எப்படி சமூக அதிகாரத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி அவர் பேசுகிறார்.
தன்னை அதிகார மையங்கள் கவனிக்கின்றன, கண்காணிக்கின்றன என உணர்ந்து கொள்ளும் ஒருவர் மூன்று விதமாக எதிர்வினையாற்றலாம்:

1) தனித்துவமற்ற, தனி குணமற்ற, தனி தோற்றமற்ற ஒருத்தராக மாற்றி விட்டு தன்னை கும்பலோடு கரைத்துக் கொள்ளலாம். எந்த சந்தர்பத்திலும் கேள்வி எழுப்பாதவராக, கருத்துக்களை வெளிப்படுதாதவராக, கருத்துசொல்லும் நெருக்கடி வந்தாலும் நழுவலாக சொல்லி விட்டு செல்கிறவராக அவர் இருக்கலாம். இத்தகையோர் நிச்சயமாக முன்னிருக்கையில் கால் மேல் கால் இட மாட்டார்கள்.
2) அதிகாரத்தின் பார்வையை தன் மீது உணராமல் அல்லது உணர்ந்தும் அதை நினைவில் வைக்காமல் போகலாம்; வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என இருக்கலாம்.
3) நீயென்ன சொல்வது, நான் என்ன செய்வது என துணிந்து கால் மேல் கால் இடலாம், பெரிதாய் பக்கடா மீசை வளர்க்கலாம்; டாட்டூ குத்திக் கொள்ளலாம்; சத்தமாக சிரிக்கலாம்; துணிந்து விமர்சிக்கலாம்; தன் தோற்றத்தினாலும் செயல்களாலும் தொடர்ந்து அதிகாரத்தை எரிச்சலூட்டலாம்.

நம் சமூகத்தில் பெரும்பாலானோர் இந்த முதலிரண்டு வகைமைக்குள் தான் வருகிறார்கள்
என் கிராமத்தில் முன்பு ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான தோற்றம் இருந்தது நினைவுக்கு வருகிறது. ஒருவர் சதா இரண்டு வார தாடியுடன், முதல் இரு சட்டை பட்டன்களை திறந்து விட்டபடி திரிவார்; மற்றொருவர் சட்டையணியாமல் பெரிய தொப்பையுடன் தோள் துண்டு மட்டுமே அணிந்திருப்பார்; சிலர் பெரிய முறுக்கு மீசையும் மற்றும் சிலர் நீண்ட தாடியும் வைத்திருப்பார்கள். சிலர் பல வருடங்களாக முடியே வெட்டாமல் பாகவதர் போல தோற்றமளிப்பார்கள். சிலரது மூக்கில் இருந்து புசுபுசுவென தோன்றும் மயிர்கள் குழந்தைகளை அச்சுறுத்தும். ஒவ்வொரு மனிதனையும் இந்த தனித்துவ தோற்றத்தினாலே மனதில் பதித்திருப்பேன். ஆனால் இவர்கள் இடையே எங்களூர் மத்தியவர்க்க குமாஸ்தாக்கள் மட்டும் எந்த தோற்ற தனித்துவமும் இல்லாமல் இருப்பார்கள் - அவர்கள் தினமும் ஒரே வண்ணத்தில் கால்சட்டையும் ஒரே வெண்பழுப்பு சட்டையும் அணிவார்கள். இவர்களின் கன்ணாடி கூட ஒரே போலத் தான் இருக்கும். தினமும் சவரம் செய்வார்கள்; தவறாமல் இஸ்திரி பண்னி சட்டை போடுவார்கள். விடுமுறை தினமன்று கூட அப்படியே அலுவலகம் செல்வது போன்றே இருப்பார்கள். பேச்சிலும் ஒரு கவனம், நேர்த்தி, சின்னதாய் பதற்றம் இருக்கும். இவர்கள் அவர்களை மதிக்க மாட்டார்கள்; அவர்கள் இவர்களை பகடி பண்ணுவார்கள்.
 இன்று பெரும்பாலானோர் விவசாயம், தனித்தொழில், வேலையற்றிருக்கும் வேலை ஆகியவற்றில் இருந்து 9-5 அலுவலக வேலைகளுக்கு நகர்ந்து விட்டார்கள். அதோடு மக்களின், குறிப்பாக ஆண்களின், தோற்றமும் ஒற்றைத்தன்மை கொண்டதாக மாறி விட்டது; அவர்களின் உடலசைவுகளில் எந்திரத்தனம் வந்து விட்டது
இன்றைய மத்திய வர்க்க ஆண்கள் முடியை ஒழுக்கமாக சீராக வெட்டிக் கொள்ளும் போக்கை கவனியுங்கள். அது ஒருவரது தோற்றத்தை அழகாக்குவதை விட அவரை தனி அடையாளமற்றவராக ஆக்குகிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியரின் தோற்ற ஒழுங்கு வலியுறுத்தப்படுகிறது - நீண்ட முடியை வைத்திருப்பவர்கள், வண்ணமடிப்பவர்கள், டாட்டூ குத்திக் கொள்பவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் தோற்றம் மூலம் ஒருவர் செய்யும் கலகம் அதிகாரத்தை தொந்தரவு செய்வதைப் போல வேறெதுவும் செய்வதில்லை. நீங்கள் கருத்தளவில் கலகம் செய்தால் அந்த கருத்தை அங்கீகரிக்காமல் அதிகாரம் உங்களை மௌனமாக்கலாம். ஆனால் தோற்றமளவில் கலகம் செய்தாலோ அதிகாரத்தால் உங்களை புறக்கணிக்க முடியாது. அது உங்களை நேரடியாக தடுத்தே ஆக வேண்டும்

மெல்ல மெல்ல நீங்கள் ஒன்றை புரிந்து கொள்கிறீர்கள் - தனியாக தெரிந்தால் நீங்கள் அதிகமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்; வகுப்பில் ஆசிரியர்கள் நீங்கள் செய்வதை நுணுக்கமாக கவனித்து கேள்வி கேட்பார்கள்; வகுப்பில் பிறரின் ஒழுங்கீனத்துக்கு நீங்களே முகமாவீர்கள். அலுவலகத்திலும் அப்படியே நடக்கும். பேச்சு, செயல், தோற்றம் ஆகியவற்றில் தனித்து தெரிகிறவர்களின் சின்ன சின்ன பிறவுகளும் நிர்வாகத்தால் பெரிது படுத்தப்படும். சக பணியாளர்களின் உட்குழுவிலும் அவர்கள் (பெண்களாக இருக்கும் பட்சத்தில்) அதிகமாய் கிண்டல்களை, விமர்சனங்களை எதிர்கொள்வார்கள். எதற்கு வம்பு என முடிவெடுத்து பலரும் அடையாளமற்றவராய், ஜெராக்ஸ் பிரதிகளாக தம்மை மாற்றிக் கொள்கிறார்கள். ஆயிரம் முகங்களில் ஒரு முகமாய் ஒளிந்து கொள்கிறார்கள். இப்போது எந்த பிரச்சனையையும் தனதில்லை என சொல்லி விலகிச் செல்லலாம்; தன்னை யாராவது விமர்சித்தால் கூட பக்கத்தில் இருப்பவரைத் தான் சொல்கிறார் என பாவனை பண்ணி தப்பிக்கலாம்



பகுதி இரண்டை படிக்க...

https://thiruttusavi.blogspot.com/2019/11/2.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...