சிலர் பல நல்ல பாடல்களைத் தந்திருப்பார்கள். அவர்களில் ஒரு சிலர் தாம் சில பத்தாண்டுகள் தம் குரலே இசை என்னும் அளவுக்கு ஆதிக்கம் பண்ணியிருப்பார்கள். யேசுதாஸ் எனும் அந்த கான கந்தர்வன் அப்படியானவர். மலையாள இசையில் யேசுதாஸ் இன்றி ஒரு காலகட்டத்தை நீங்கள் நினைவுகூரவே முடியாது என்கிற அளவுக்கு, எந்த மலையாளி பாடுகிறேன் எனும் தோரணையில் முனகினாலும் அதில் யேசுதாஸின் சாயல் வந்துகிற அளவுக்கு. தமிழிலும் யேசுதாஸ் ஆளுமை செலுத்திய வகையான பாடல்கள் உண்டு - அவற்றை வேறு யாராலும் பாடவே முடியாது என நாம் நம்பும் அளவுக்கு, இளையராஜாவையே நாம் மறந்து லயிக்கும் அளவுக்கு. அவருடன் பாடிய ஜெயசந்திரன், எம்.ஜி ஶ்ரீகுமார், வேணுகோபால் போன்றவர்கள் நீண்டகாலம் அவரது நிழலிலே இருந்தார்கள். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக அவர் பெரும்பாலும் பாடுவதை குறைத்திருக்கிறார். ஆனாலும் அவர் இடத்தை அங்கு யாரும் எடுத்துக் கொள்ளவில்லை; ஒரு பெரும் வெற்றிடம் மலையாள திரையிசையை வெறித்துப் பார்த்திருக்கிறது. தமிழில் அப்படியான ஒரு பாடகர் என்றால் டி.எம்.எஸ். எஸ்.பி.பி வரும் வரை எல்லா ஆண் குரல்களும் இங்கு டி.எம்.எஸ்ஸையே போல செய்தன. அவரைப் போல பாடும் பல மேடைப்பாடகர்கள் தோன்றினார்கள். எஸ்.பி.பி கூட சில தொடக்க கால பாடல்களில் டி.எம்.எஸ்ஸைப் போல கட்டைக்குரலில் பாடியிருக்கிறார் என நினைவு.
இப்படியான யேசுதாஸ் சிங்கப்பூரில் Voice of Legends எனும் மேடைக்கச்சேரியில் எஸ்.பி.பி மற்றும் சித்ராவுடன் அந்த காலப் பாடல்கள் பலவற்றைப் பாடுவதை (யூடியூப்பில்) கேட்டேன். எஸ்.பி.பியும் சித்ராவும் தம் குரலின் தொய்வை ஈடுகட்டி சமாளிக்கிறார்கள், அதுவும் சித்ரா குழலூதும் கண்ணனுக்கு பாடலை இன்னமும் அவ்வளவு அபாரமாக பாடுகிறார். ஒப்பிடுகையில் யேசுதாஸின் குரல் மரணமடைந்து விட்டது. அவரும் அதை உணர்ந்தே தன்னுணர்ச்சியுடன் உணர்ச்சிவயப்பட்டு பாடுகிறார்; தனது முந்தைய உயர்வுகளுக்குப் பக்கத்தில் ஒரு சிறிய நிழலாக மட்டுமே தன்னால் இப்போது ஊர்ந்து போக முடியும் எனும் புரிதல் அவருக்கும் இருக்கிறது; இது அவரை இன்னும் மோசமாக பாட வைக்கிறது. இசை ஒரு பக்கம் அவரது குரல் மறுபக்கம் பறக்கிறது என்றால் ஸ்ருதி எங்கேயோ மேடையைத் தாண்டி பல மைல் தூரம் ஓடுகிறது. யேசுதாஸுக்கு 79 வயதாகிறது. எஸ்.பி.பிக்கு 73. வயதும் ஆரோக்கியமும் ஒருவரது இசைத்திறனை இந்த அளவுக்கு சீரழிக்குமா என வியப்பாக இருக்கிறது. சிலர் வயதாக ஆக பாதி திறனுடன் இருப்பார்கள். தாஸேட்டன் கால்வாசிக் குரலைக் கூட தக்க வைக்க முடியாமல் தவிக்கிறார். அவரது தீவிர ரசிகர்களுக்கு அவர் இப்போது பாடுவதைக் கேட்க பரிதாபமாக வருத்தமாக இருக்கும்; அவர் தன்னை இப்படி வருத்தி தாழ்த்திக் கொள்ளத் தான் வேண்டுமா?
Comments