முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜுரம் காட்டும் பாசம்



கடந்த மூன்று வருடங்களாக, பெங்களூருக்கு வந்த பின், எனக்கு அதிகமாய் ஜுரம், ஜலதோஷம் போன்ற தொற்றுநோய்கள் வந்ததில்லை - சற்று காலம்  பேலியோ டயட்டில் இருந்தேன்; அதன் பிறகு ஒருவேளை மட்டும் உண்னுகிற intermittent fasting உணவுமுறைக்கு மாறினேன். இந்த இரண்டும் தான் என் உடல்நலனை ஓரளவுக்கு காப்பாற்றி வந்திருக்க வேண்டும் - ஏனென்றால் பெங்களூரில் காற்று மற்றும் நீர் மாசு அதிகம், அதோடு குளிர் காற்று வேறு; மக்கள் தும்மிக் கொண்டும் இருமிக் கொண்டும் இருப்பது இங்கு வாடிக்கை. ஆனால் நீண்ட காலத்துக்குப் பிறகு எனக்கும் ஜுரம் வந்து விட்டது. இவ்வளவு நாள் பார்க்காத வருத்தமோ என்னமோ வந்ததும் என்னை ஆரத்தழுவி கசக்கி பிழிந்து விட்டது. முதலில் மருந்துக்கடையில் தொண்டை வலி, ஜலதோசத்துக்கு மாத்திரை. அடுத்து ஜுரம் வெளித்தெரிய மருத்துவரிடம் போனேன். அவரது ஊசி இரண்டு மணிநேரத்துக்கு வேலை செய்து விட்டு தன் வேலையை பார்க்க போய் விட்டது. மருத்துவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம்உங்க இடது கை நடுங்குதேஎன்பார். என் கண்ணுக்கு மட்டும் அந்த நடுக்கம் புலப்படாது. இம்முறையும் மறக்காமல் சொன்னார். ஜுரத்திற்குப் பிறகு ரெண்டு கைகளும் வேறு சதா நடுங்குகின்றன. எழுதினால் கை வலிக்கிறது

பா. வெங்கடேசனிடம் சொன்னால்டெங்கு பரவுதுஎன பயமுறுத்துகிறார். இது வேறயா என நினைத்துக் கொண்டேன். அண்மையில் எந்த கொசுவையும் நான் சந்திக்க நேரவில்லை என்பதால் பெரிய பயமில்லை.
இரவெல்லாம் மீண்டும் ஜுரம் படுத்தி எடுத்து விட்டது - நள்ளிரவில் எழுந்து இருமினால் நெஞ்சு வலிக்கிறது. வாயில் கசப்பு. பழைய அரசுப்பேருந்தில் பயணிப்பது போல மெல்லிய நடுக்கம் உடம்புக்குள் ஊடுருவுகிறது. இதோடு என் ரத்த சர்க்கரை வேறு டிராப்பிக்கில் நடுரோட்டில் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து சண்டை போடுகிறவரைப் போல தாவித் தாவி குதிக்கிறது. ஜுரத்தின் பின்விளைவு என புரிந்து கொண்டேன். சர்க்கரை அளவைக் குறைக்க இரட்டிப்பு இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும். அது குறைந்தால் ஜுரமும் கட்டுக்குள் வந்து விடும் எனத் தோன்றுகிறது
நேற்றிரவு அம்மா போன் செய்துஉனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லையே?” என விசாரித்தார். நேற்றைக்கு முந்தைய தினம் அவருக்கு ஒரு கனவாம். அதில் நான் உடல் நலிவுற்றிருக்கிறேன். அதனால் என்னை நேற்று முழுக்க போனில் பிடிக்க முயன்றிருக்கிறார். இது ஏற்கனவே பலமுறை நடந்திருக்கிறது. எனக்கு இப்படி ஆகும் போதெல்லாம் அவர் போனில் வந்து விடுவார். சில நாட்களில் நான் ஜம்மென்று இருக்கும் போது கூட அம்மாவிடம் இருந்து இத்தகைய அழைப்பு வரும் என்பதால் (அடிக்கடி அவர் கனவில் நான் வியாதிஸ்தனாகத் தோன்றுகிறேன் போல) இதன் மன அலைகளின் தொடர்பாக்கம் பற்றியெல்லாம் நான் மெனக்கெட்டு யோசிக்க வில்லை. அவரது பாசத்தை மட்டும் இதில் இருந்து எடுத்துக் கொள்கிறேன்.


ஜுரம் என்பது நன்றாக ஓடுகிற நமது வாழ்வின் குறுக்கே வந்து மனதைக் கலைக்கும் தற்காலிகக் காதலைப் போன்றது. அது கடந்து போன பிறகு தான் தள்ளிப் போட்ட பல பிரச்சனைகள் கதவைத் தட்டி பஞ்சாயத்தைக் கூட்டும். இந்த ஜுரம் சீக்கிரம் சரியாக வேண்டும் - எழுதி முடிக்கப்படாதவை, எடுத்து முடிக்காத வகுப்புகள் ..., விடுப்பெடுத்து ஜாலியாக வேறு பல வேலைகளை மறந்து விட்டு படுத்த வாக்கில் நாவல் படிப்பது இப்போது நன்றாக இருந்தாலும், இது முடிந்ததும் அவை டெர்மினேட்டர் படத்து ஆர்னல்டு ஷுவஸ்னேக்கர் போல வந்து துரத்தி துரத்தி சுடும். அதுக்கு ஜுரப் பாசமே பரவாயில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...