முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Mi Band 4



ஒரு வாசகர் எனக்கு பிறந்த நாள் பரிசு அளிக்க விரும்புகிறார் என போன மாத இறுதியில் ஒரு தோழி சாட்டில் வந்து சொன்ன போது நான் நம்பவில்லை. நான் பொதுவாக வாசகர்களை அப்படி ஒருங்கிணைத்து லாபி பண்ணுவதில்லை; அவர்களை வாசகர்களாகவும் கருதுவதில்லை; பேச ஆரம்பித்த மறுநிமிடமே அவர்கள் என் நண்பர்கள்; எழுத ஆரம்பித்தால் என் சக எழுத்தாளர்கள். ஆகையால் வாசகர்களுடன் தேநீர்க் கடைக்குப் போனால் கூட பணத்தை நான் முதலில் நீட்டுவேன். ஆனாலும் அவ்வப்போது வாசக நண்பர்கள் எதிர்பாராமல் உதவியிருக்கிறார்கள். இப்போது தோழி என்னிடம்உங்களுக்கு ஒரு நல்ல பரிசை உங்கள் வாசகர் ஒருவர் தர விரும்புகிறார் - நீங்கள் நீண்ட காலமாக ஆசைப்படும் பொருள் என்ன?’ எனக் கேட்டார். யோசித்தால் அப்படி ஒன்று என் மனத்தில் இல்லை. ஒரு மேக்புக் ஏர் வாங்க ஆசையுண்டு; ஆனால் அதுவும் ஒன்றும் அத்தியாவசியம் இல்லை. இருக்கிற ஐபேடே தாராளமாக உள்ளது. பொருள் வசதி எனக்கு என்றுமே முக்கியமில்லை. ஆகையால் ரொம்ப யோசித்து ஒரு சிறிய பட்டியலை அனுப்பினேன். அத்தோழி பிறகு அந்த வாசகரின் பட்ஜெட்டை சொன்னார். அதற்குள்ளாக நான் மற்றொரு பட்டியலைக் கொடுத்தேன். இப்படியே போன பின் வாசகரே என் சாட்டுக்கு வந்தார். எனக்கு அவரை ஏற்கனவே தெரியும். ‘நீங்க எனக்கு ஏன் பரிசு தர வேண்டும், உங்க அன்பே போதும்என தட்டிக்கழிக்கப் பார்த்தேன். அவர் பிடிவாதமாக இருந்தார். அப்படித் தான் நான் அவரிடம் ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்கித் தரக் கேட்டேன். அவர் நான் குறிப்பிட்ட Mi Band 4 வாங்கி அனுப்பினார். அவர் கேட்டுக் கொண்டது படி பெயரை வெளியிடாமலே அவருக்கு இங்கே நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


நான் என் பிரியத்துக்குரியவர்களிடம் எப்போதும் கைக்கடிகாரத்தைத் தான் பரிசாக வேண்டுவேன். அது எப்போதும் மணிக்கட்டில் விழித்தபடி இருக்கும், ஒரு அன்பின் நினைவுறுத்தலாக. நான் பெங்களூருக்கு வருவதற்கு முன்பான பிறந்த நாளின் போது மனுஷ்யபுத்திரன் என்னை அழைத்து ஒரு அழகிய கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார் - அவர் அப்படி பரிசளிப்பார் என்பதை என்னால் ரொம்ப நேரம் நம்பவே முடியவில்லை. அதன் ஸ்டிராப் அறுந்து போன பின்னரும் கூட சரி செய்து கையில் கட்டியிருந்தேன். அதன் பிறகு ஒரு காதல் பரிசாக மற்றொரு கைக்கடிகாரம் வந்தது. அதன் பிறகு இந்த Mi Band. இதை ஒரு வாரமாவது பயன்படுத்திய பிறகு எழுதலாம் என உத்தேசித்தேன். இதை ஒரு மதிப்புரையாகவும் கொள்ளலாம்.

Mi Bandஇன் சிறப்புகளை முதலில் சொல்லி விடுகிறேன்:
1) மெல்லிசானது - அது கையில் இருக்கிற உணர்வே இருப்பதில்லை
2) தொடர்ந்து என் இதயத்துடிப்பை பதிவு பண்ணி சராசரியைக் காட்டுகிறது. பொதுவாக என் நாடித்துடிப்பு சற்றே குறைவாக இருக்கும். ஆகையால் இப்போது எந்த நேரத்தில் எல்லாம் அது அதிகமாகிறது எனப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது. எழுதும் போது கொஞ்சம் அதிகமாகிறது. சராசரியான 70-78இல் இருந்து 91க்கு வருகிறது. சாப்பிடும் போதும் அதிகரிக்கிறது. உடற்பயிற்சி பண்ணும் போது 110-120 வரைப் போகிறது.
3) இரவுத் தூக்கத்தை துல்லியமாக கணிக்கிறது - ஆழ்துயில் 40-50 நிமிடங்கள் என சொல்கிறது. ஆழ்துயிலின் கால அளவு குறையும் போது சரியாக சுட்டுகிறது. தூக்கம் சரியில்லை என்றால் காலை எழுந்ததுமே நமக்கு அது தெரிந்து விடும் - அலுப்பாக உடம்பு இறுக்கமாக இருக்கும். ஒருநாள் நான் சீக்கிரமாகத் தூங்க போய் விட்டதாய் சொல்கிறது. தாமதமாய் தூங்கப் போனாலும் அதை சுட்டி கண்டிக்கிறது. மற்ற பயனர்களுடன் ஒப்பிட்டு நீ எவ்வளவோ பரவாயில்லை என ஆறுதல் சொல்கிறது. எனக்கு இந்த மாதிரி AI சமாச்சாரங்கள் பிடிக்கும் என்பதால் வெகுவாக ரசிக்கிறேன்.
4) வலுவான மின்கலன் - நீங்கள் தொடர்ந்து நாடித்துடிப்பையும் தூக்கத்தையும் அளக்கும்படி செட்டிங்ஸில் மாற்றிக் கொண்டாலும் கூட சுலபத்தில் 14 நாட்கள் தாங்குகிறது. அல்லாவிடில் 18-20 நாட்கள் வருமென நினைக்கிறேன்.
5) அழைப்புகள், வாட்ஸாப், மெஸெஞ்சர் குறுஞ்செய்திகள் ஆகியவற்றின் நோட்டிபிக்கேசன்களை நான் ஸ்மார்ட்போனில் விரும்ப மாட்டேன். அது ஒரு தொந்தரவு என்றே முதலில் நினைத்தேன். ஆனால் இப்போது வசதியாக இருக்கிறது. போனை பைக்குள் வைத்துக் கொண்டு சுற்றலாம். தூங்கும் போது எட்ட வைத்துக் கொள்ளலாம். எந்த அவசர அழைப்பென்றாலும் மணிக்கட்டிலே தெரிந்து போகும். (அழைப்பை எடுக்க முடியாது, நிராகரிக்கலாம்)
6) போனில் இருந்து ஸ்பீக்கப்ரிலோ ஹெட்போனிலோ பாட்டு கேட்கிறோம் என்றால் அதை இந்த கைக்கடிகாரத்தில் இருந்தே மாற்ற முடியும். வண்டி ஓட்டும் போதும் மற்ற சமயங்களிலும் இது ரொம்ப சௌகர்யம்
7) அலாரம் வசதியும் பிடித்திருக்கிறது. மணிக்கட்டில் ஏதோ பூச்சி ஊர்வது போன்ற உணர்விலே நான் சட்டென எழுந்து கொள்கிறேன். போனை தூங்கும் போது எட்ட வைத்துக் கொள்வதும் நல்லதாக உள்ளது. இந்த அலாரம் போன் அலாரம் போல நச்சரிப்பாக இல்லை. போன் வெறித்தனமாக இசைத்து என்னை துயிலெழுப்ப முயலும் போது உறக்கச் சடவுடன் சரியாக எடுத்து அணைத்து வைக்க முயன்று கீழே போட்டு அதிர்ந்து போய் மீண்டும் தூங்கப் போய் விடுவேன். ஆனால் Mi Band சன்னமாக அழைக்கும் போது ஒன்று நீங்கள் எழுந்து கொள்ளலாம், அல்லது அப்படியே தூங்கலாம். அருகிலுறங்கும் ரொம்ப தன்மையான காதலியைப் போலபரவாயில்லை இன்னும் கொஞ்சம் தூங்குங்கஎன ஆறுதல் சொல்லி விடும்.
8) இறுதியாக சொன்னாலும் இதுவே ரொம்ப முக்கியம் - உடற்பயிற்சிக்கான பெரிய தூண்டுதலாக இது இருக்கிறது. பரிசு கைக்கு வந்த நாளில் இருந்தே (இடையே விட்டிருந்த) உடற்பயிற்சியை மீண்டும் துவங்கி விட்டேன். எவ்வளவு நேரம் பயின்றிருக்கிறோம், எவ்வளவு கலோரிகள் எரித்திருக்கிறோம் எனும் கணக்கு பெரும் உத்வேகம் அளிக்கிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் கலோரிகளாவது எரிக்க வேண்டும் என தம் கட்டி இரண்டு வேளைகள் கூட உடற்பயிற்சி செய்து பார்த்தேன். உடற்பயிற்சியை ஒரு ஜாலியான விளையாட்டு ஆக்குகிறது இந்த Mi Band.

இனி சிறிய குறைகள்:
1) நேரம் பார்க்க நீங்கள் மணிக்கட்டை ஒரு வாக்கில் வெடுக்கென திரும்ப வேண்டி இருக்கிறது. படுத்தபடி பார்த்தால் அதுவும் படுத்து தூங்கி விடுகிறது. நின்ற நிலையிலும் சில நேரம் எந்த கோணத்தில் திருப்புகிறோம் என்பதைப் பொறுத்து மட்டுமே வேலை செய்கிறது. ஆனால் தொடு திரையை தொட்டால் கூட உடனே விழித்துக் கொள்ளும் என்பதால் பிரச்சனையில்லை.
2) சக்கரநாற்காலியில் நான் சுற்றுவத்ற்கே ஒரு நாள் 1800 அடிகள் நடந்ததாய் சொன்ன போது மூக்கில் விரல் வைத்தேன். இந்த சேட்டையை மன்னித்தாலும் கூட சும்மா எழுந்து உட்கார்ந்து கைகால்களை அசைத்தாலே அதை நாம் நடந்ததாக கணக்கு காட்டுகிறது என்பது தான் ரொம்ப அதிகம்.
3) Mi Fit ஆப் மூலமாகத் தான் கணிசமான தகவல்களை நாம் அறியவும் தொகுக்கவும் முடியும். ஆனால் ஆப் அவ்வளவு லகுவாக நட்பாக இல்லை

கடைசியாக - பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் பெருமையாகவாசகர் ஒருவர் அளித்த பரிசுஎன சொல்லிக் கொள்கிறேன். இப்படி அங்கீகரிக்கப்படுவதாய் நினைத்துக் கொள்வது பிடித்திருக்கிறது.

 இம்முறை பிறந்த நாளுக்கு என் முகநூல் சுவரில் வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் சேர்த்து இங்கு மீண்டும் ஒரு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தும் கொள்கிறேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...