முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தகக் கண்காட்சி 2020: நாவல்கள் எனும் ஆடிப்பெருக்கு



ஒவ்வொரு கண்காட்சியிலும் இதை கவனிக்கலாம்: ஒவ்வொரு மூன்று, நான்கு வருடங்களும் புத்தக வரவில் புது வெள்ளம் பாய்கிறது. இந்த முறை கண்காட்சியில் நான் அதிகமாய் நாவல்களைக் கண்டேன். அதிகமாய் வலைதளங்களில் பேசப்பட்டவையும் நாவல்கள் தாம். அடுத்து புதிய புதிய பொருளில் அபுனைவு நூல்களும் குவிந்துள்ளன. அதுவும் அரசியல் சமூக நூல்கள். கவிதை நூல்களும் மலிந்துள்ளன என்றாலும் நான் எடுத்து வாசித்துப் பார்த்தவரையில் உருப்படியாய் புதிய தொகுப்புகளில் கண்ணில் படவில்லை (ஒருவேளை நான் அதிக அக்கறையுடன் கவிதைகளைத் தேடியிருக்க மாட்டேன்).

 நாவல் வடிவிலும் பரீட்சார்த்த முயற்சிகள் அரிதாகி எதார்த்தவாத கதைகளே அதிகமாகி விட்டன. அதுவும் நிறைய பேர் முகநூல் எழுத்து அல்லது சிறுகதையில் இருந்து தம் முதல் நாவல்களை வெளியிட்டிருக்கிறார்கள். எந்தளவுக்கு என்றால் ஏற்கனவே தடம் பதித்த எழுத்தாளர்களை விட புத்தகமே வெளியிடாத இளம் பேஸ்புக்கர்களை இது நெருக்கடியில் தள்ளி உள்ளது. யாவரும் டாட்காம் சென்ற போது ஜீவ.கரிகாலன் தான் கொண்டு வந்துள்ள புது எழுத்தாளர்களின் நாவல்களை அடுக்கடுக்காய் காண்பித்தார்; அசந்து போனேன். பிரியா விஜயராகவனின்அற்றவைகளால் நிரம்பியவள்நாவலை அரங்கில் இருந்தே சில அதியாயங்கள் படித்தேன். முதலில் ஆச்சரியப்படுத்தியது தன் முதல் நாவலையே இவ்வளவு பெரிதாக எழுதியிருக்கிறாரே என்பது. அடுத்து தலைமுறைகளின் கதையை எழுதாமல் ஒரு பெண்ணின் கதையை பல நாடுகளுக்கு எடுத்துப் போய் அந்தரங்கமான அனுபவங்களின் தொகுப்பாக எழுதியிருக்கிறார் என்பது. அடுத்து தனித்தமிழில் எழுதுகிற மெனக்கேடு ஒன்றும் அவருக்கு இல்லை - ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்துகிறார்; சிறிய அதிர்ச்சி மதிப்பும் சிலாகிப்பும் கலந்து பாலியலை எழுதுகிறார். இது இன்றைய முகநூல் எழுத்தின் தாக்கத்தினால் இருக்கலாம்
படித்தவரையில் அந்த நாவலில் ஒரு நாவலாசிரியருக்கான பல லட்சணங்களைக் கண்டேன்.


புது எழுத்தாளர்களின் நாவல் முயற்சிக்கு பேஸ்புக் பெரிய அடித்தளம் எனத் தோன்றுகிறது. தினமும் இங்கு எழுதுவது அவர்களுக்கு சரளமான மொழிநடையையும் தம் கதையை சொன்னாலே அது நல்ல கதையாக அமையும் எனும் நம்பிக்கையையும் கொடுக்கிறது. இரண்டுமே புனைவெழுத்தாளனுக்கு அவசியமான இயல்புகள். நான் இந்த போக்கை ஆரோக்கியமானதாகப் பார்க்கிறேன் - ஒருவர் தன் முதல் நாவலை எழுதுவது ஒன்றும் சாதாரண விசயம் அல்ல. நீங்கள் எந்தளவுக்கு அதிகமாய் வாசிக்கிறீர்களோ அந்தளவுக்கு எழுதுவது சிரமமாகும். இத்தனை அற்புதமான நாவலாசிரியர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் செய்தாக வேண்டும்; அவர்களின் சாதனைக்கு சற்றும் குன்றாமல் செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட சூழலை, சம்பவத்தை, பாத்திர அமைப்பை அவர்களுக்கு ஒப்பாக நாமும் எழுத வேண்டும் என்கிற அழுத்தங்கள் நாவலை சரளமாக எழுதிப் போக சிலநேரம் பாதகமாகும். சிலபேருக்கு இத்தகைய எதிர்பார்ப்புகளே நாவலை துவங்குவதற்கு தடையாகும். ஆனால் தோளில் பாரமில்லாமல் பயணத்தை ஆரம்பிக்கிறவர்கள் சுலபத்தில் இலக்கை தொட்டு விடுகிறார்கள். அடுத்தடுத்து இவர்கள் எழுதுவது மற்றும் நாவலின் கலையை கற்றும் அனுபவத்தில் உணர்ந்தும் அறிவது முக்கியமாக இருக்கும். 2023இல் இவர்களே அடுத்தடுத்த நாவல்களை வெளியிடுவார்களா அல்லது வேறு ஆட்கள் வருவார்களா எனப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...