முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்நியர் மத்தியில் குழந்தைகள்



இன்று என் வேலையிடத்தில் நான் காண நேர்ந்த இரு குழந்தைகள் இடம் குறித்த என் பார்வையை முழுக்க மாற்றினார்கள்.

முதல் குழந்தை அவனது அப்பாவுடன் கையைப் பற்றி வந்தான். நான்கு வயதிருக்கும். பள்ளி சீருடை அணிந்திருந்தான். அவனுடைய அப்பா (அவர் அங்கு ஒரு ஊழியர்) சைன் இன்  செய்ய மேலே மாடிக்கு செல்ல்லும் முன் சில நிமிடங்கள் குழந்தையை கீழே உணவருந்தும் இடத்தில் ஒரு மேஜை அருகே விட்டு செல்கிறார். நான் பின்னால் ஒரு மேஜை அருகே என் சக்கர நாற்காலியைபார்க்செய்து ஒரு தேநீரை ருசித்தபடி எழுதிக் கொண்டிருக்கிறேன். கடைக்கண்ணால் குழந்தை படிக்கட்டையும் தன்னைக் கடந்து செல்லும் அந்நியர்களையும் கவனித்துக் கொண்டு நிற்கிறான். நிமிடத்துக்கு நிமிடம் பதற்றம் ஜுரம் போல ஏறுவதை அவன் முகத்தில் பார்க்கிறேன். நான் எழுதுவதைத் தொடர்கிறேன். அப்போது ஒருவர் வந்துயாருப்பா நீ? ஏன் தனியா நிற்கிறே? என்னாச்சு?” என அக்கறையாய் விசாரிக்க அவன் பதிலளிக்காமல் முழிக்கிறான். பயந்து அழுகிறான். இப்போது அவர் தன் பையை கீழே வைத்து விட்டு அவன் முன் மண்டியிட்டு ஆறுதல்படுத்துகிறார். அவன் பதில் சொல்லாமல் தாரைத்தாரையாய் கண்ணீர் வடிக்கிறான். நான் எழுதுவதை விட்டு விட்டு அங்கு செல்லுமுன்பு நான்கைந்து பேர்கள் கூடுதலாய் சேர்ந்து விட்டார்கள்.
அவனுக்கு தமிழ் தான் புரியும் எனத் தெரிய வர தமிழிலும் அவனிடம் விசாரிக்கிறோம். அவனுடன் வந்தது அவன் அப்பா என நான் ஆரம்பித்து நினைத்தாலும் இப்போது ஒரு குழப்பம் வருகிறது. யாராவது தெரியாமல் அங்கே கொண்டு விட்டு விட்டு போய் விட்டார்களா? ஆனால் அது அப்பா தான். “அம்மா எங்கே?” “அம்மா எங்கே?” எனும் கேள்விகளுக்கு அசைந்து கொடுக்காதவன், கூடுதலாய் அழுதவன், “அப்பா எங்கே?” என்றதும் நிதானமாகிறான். தளும்பி நிற்கும் விழிகளால் பார்த்து நெஞ்சங்களை கரைத்து விட்டு தன் அப்பா மேலே மாடிக்கு சென்றிருப்பதாய் சைகை செய்து சொல்கிறான். இப்போது குறிப்பாய் விசாரிக்கப்பட அவன் அமைதியாகி தன் அப்பாவின் பெயரைக் குறிப்பிடுகிறான்ஆனால் கூட்டத்தைக்  கண்டு ஏனோ அவன் மீண்டும் அழுகிறான். இப்போது ஒருவர் அவன் அப்பாவைப் போய் அழைத்து வருவதாய் உறுதிப்படுத்துகிறார், அவன் அதை நம்பத் தயாரில்லாதது போல கூடுதலாய் அழுகிறான். இப்போது அவன் அப்பாவே வந்து அரவணைத்து அழைத்து செல்ல, ஒரு டிப்பிக்கல் ஆணைப் போல, வேகத்துடன் கண்ணீரைத் துடைக்கிறான். சின்ன பயத்துடன் அப்பாவின் கையைப் பற்றி அங்கிருந்து நடந்து அகல்கிறான்
சற்று நேரத்தில் அங்கு மற்றொரு சிறுவனை அவன் அப்பா அழைத்து வருகிறார். அவனுக்கும் நான்கு வயதுக்குள் தான் இருக்கும், அதே சிருடை. அவனுடைய அப்பா அங்குள்ள உணவகம் ஒன்றில் பணி புரிகிறார். அவர் பையனை விட்டு சில நிமிடங்கள் கழிவறைக்குள் போய் விட்டார். அதற்குள் அவன் நாற்காலியில் ஏறி குட்டிக்கரணம் அடித்து, அங்கு பெருக்க வந்த பாட்டிகளை துரத்திக் கொண்டோடி, கூச்சலிட்டு அதகளம் பண்ணி விட்டான். உணவகத்தில் ஒரு பொறுப்பில் இருக்கிறவரைக் கண்டதும் போய் பேசினான். ஒரு நிமிடத்துக்குள் இத்தனையையும் அவன் எப்படி செய்தான் என நான் வியந்தேன்.
ஒரு குழந்தை பேசவே அஞ்சி கண்ணீர் வடிக்க மற்றொரு குழந்தை மொத்த இடத்தை ஆளுகை செய்கிறான். அவனுக்குள்ள தயக்கம் ஏன் இவனுக்கு இல்லை?
 இரு குழந்தைகளுக்கும் முக்கிய வித்தியாசம் அவர்களின் ஆளுமை மட்டுமல்ல அவர்களுக்கு அந்த இடத்தில் உள்ள மனிதர்களுடன் உள்ள பரிச்சயமும் தான். இடமும் (வெளியும்) மனிதர்களும் ஒன்றே எனும் புரிதல் குழந்தைகளுக்கு கூர்மையாக உள்ளது. அதனாலே ஒரு புதிய இடத்திற்கு செல்லும் போது அவர்கள் அந்த இடத்தைக் கண்டு எதையும் மதிப்பிடுவதில்லை; தன்னை நோக்கி வரும் மனிதர்களையே கவனித்து அனுமானிக்கிறார்கள்; அடுத்தடுத்த செயல்களை ஊகிக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு தன்னை நோக்கித் திடீரென வந்து விசாரிக்கும் மனிதர்கள் திடீரென மூடுகிற ஒரு கதவுக்கு சமானம். இது நமக்குப் புரிந்து கொள்ள குழப்பமாக இருக்கும், ஆனால் குழந்தைகள் இயல்பாகவே அப்படித் தான் வெளியைப் புரிந்து கொள்கிறார்கள்

குழந்தைகள் ஒரு புது இடத்துக்கு செல்லும் போது தம் பெற்றோரின் கையைப் பற்றி செல்வதை கவனியுங்கள். அது பாதுகாப்புக்காகவும் வழியறிதலுக்காகவும் மட்டுமல்ல. பெற்றோர் ஒரு புது இடத்துக்குள் புகுந்து நடந்து செல்ல அங்கு பல கதவுகள் குழந்தைக்குத் திறக்கின்றன. சற்று கூடுதல் துணிச்சலான குழந்தைகள் பெற்றோர்கள் அருகாமையில் இருந்தால் சற்று தொலைவு வரை தனியாக ஓடி விளையாடுவார்கள். ஆனால் தாம் தனியாக இருப்பதாக உணர்வு ஏற்பட்டால் உடனடியாய் அழுவார்கள். (இது வீட்டு நாய் தன் சொந்தக்காரருடன் புது இடத்துக்கு செல்வதற்கு இணையானது.)

குழந்தைகளிடம் நாம் முதலில் பேசும் போது நாம் முன்னேகி சென்று கேள்விகளைக் கேட்டால் அவர்கள் பயந்து அழுவதன் காரணமும் இது தான். அப்போது அவர்களுக்கு அந்த வெளி நான்கு சுவர்களாக மாறி எழுந்து வந்து தம்மை நெருக்குவதாகத் தோன்றுகிறது. அதனால் குழந்தைகளை நோக்கி நாமாக செல்லாமல் அவர்களை நம்மை நோக்கி வரவழைப்பது, அவர்களாக நம்மிடம் பேச வைப்பது முக்கியம். அப்போது உடனே நட்பாகி விடுவார்கள்


முதல் குழந்தைக்கு அங்குள்ள மனிதர்கள் அந்நியம் என்பதால் அது தனக்கு சொந்தமில்லாத இடத்தில் தனக்கு சொந்தம் ஒரு சிறிய சதுர அளவு இடம் மட்டுமே என நினைத்து அசையாது நின்ற இடத்தில் நின்றான். ஆனால் அடுத்த குழந்தைக்கோ அங்குள்ள ஆட்கள் சிலரைத் தெரியும் என்பதால் மொத்தமும் தன் இடமே என நம்பி குதித்து கூச்சலிடுகிறான்

கருத்துகள்

https://antonyfrancisomd.blogspot.com/ இவ்வாறு கூறியுள்ளார்…
"முதல் குழந்தைக்கு அங்குள்ள மனிதர்கள் அந்நியம் என்பதால் அது தனக்கு சொந்தமில்லாத இடத்தில் தனக்கு சொந்தம் ஒரு சிறிய சதுர அளவு இடம் மட்டுமே என நினைத்து அசையாது நின்ற இடத்தில் நின்றான்."

சிறுவயதில் (5 வது படிக்கும் போது) கை மூட்டு விலகி நாட்டு வைத்தியரிடம் சென்று கையைக் கட்டி தொட்டில் போட்டு அப்பாவுடன் மிதிவண்டியில் திரும்பி வந்தோம். வழியில் ஒரு தேநீர் கடையில் அப்பா மிதிவண்டியை நிறுத்தி ஸ்டாண்டு போட்டு டீ குடிக்கப் போய்விட்டார். எனக்கும் ஒரு வடை வாங்கி கொடுத்தார். பிறகு அவர் நண்பர்களுடன் கதை பேச ஆரம்பித்துவிட்டார். அவர் அருகில் வந்தால் ஆடாமல் அசையாமல் நிற்கும் சைக்கிள், அவர் விலகியதும் எனக்கு ஆடுவது போலத் தோன்றியது. நிலமே மெல்ல அசைந்து சைக்கிளோடு விழுந்துவிடுவேனோ என்று தோன்றியது. கண்களை மூடினாலும் நிலம் மெல்ல பாதாளத்தை நோக்கி சரிவதைப் போல இருந்தது. வயிற்றைப் புரட்டி பயத்தில் அழத்தொடங்கி விட்டேன். அப்பா வந்ததும் சைக்கிள் கல்லு மாதிரி நின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...