இரண்டு வகையான உரைநடை உண்டு - (1) நேராக சொல்ல வந்ததை சொல்லி விட்டு மளிகைக் கடையில் பொட்டலம் கட்டுகிறவரைப் போல அடுத்த விசாரிப்புக்கு நகர்ந்து விடுவது; (2) செறிவான கவித்துவமான எழுத்து; மொழிவிளையாட்டுகள் நிறைந்த நடை. இது இரண்டு சொற்களுக்கு நடுவே சின்னச் சின்ன நுணுக்கங்கள் வழி நிறைய விசயங்களைக் கடத்தி விடுவது. என்னைப் பொறுத்தமட்டில் இந்த வகை உரைநடையே அரிதானது ஆனால் ரசிக்கத்தக்கது. திரும்பத் திரும்ப வாசித்து மனத்தில் ஊறப் போட்டு புதிய அர்த்தங்களை விளங்கிக் கொள்ளத் தக்கது.
தமிழில் எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவது லா.ச.ராவின் நடை. கதையைக் காட்டிலும் கதைகூறும் விதத்தில் பல புதிய கதைகளை அவர் நமக்கு உணர்த்துவார்; ஒருவித கொதிக்கும் எரிமலைக்குழம்பு போன்ற நடை. அதன் அருகில் வரும் போதே நம்மை சுட்டுப் பொசுக்கி விடுமோ என அஞ்சுவோம். ஆனால் சில்லென்ற இணக்கம் கொண்டதாக, மலரின் மென்மை கொண்டதாக அது மறுநொடி மாறி விடும்.
ஆங்கிலத்தில் உரைநடையாளர்களில் ஐம்பதுகளுக்குப் பிறகு தோன்றிய பிரஞ்சு தத்துவஞானிகள், கோட்பாட்டாளர்களில் சிலரிடம் இதைப் பார்க்க முடியும். லக்கான், சிக்ஸூ, ரொலாண்ட் பார்த் (பிற்கால எழுத்துக்கள்) என. ஜெர்மன் தத்துவத்தில் நீட்சே தான். நீட்சேயின் ஜாருதுஷ்டிரன் மொழியாக்கம் தமிழில் வெளியான போது அதை கணிசமானோர் மொழி அழகுக்காக, கவித்துவத் தெறிப்புக்காகவே வாங்கிப் படித்தார்கள். நீட்சே தனது மொழியையும் கருத்துக்களையும் கிட்டத்தட்ட ஒன்றாகப் பார்த்தார் - அவரது மொழி பயணிக்கும் மார்க்கத்தைப் பின் தொடர்ந்தால் அவரது தத்துவத்தின் ஆன்மாவைத் தீண்டி விட முடியும். தெரிதாவும் அப்படித் தான்.
தெரிதாவைப் படிப்பதன் சிரமங்களை, குழப்பங்களை பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நானும் தலையை சுவரில் மோதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் போகப் போக அவரது சுவை பழகினதும் தெரிதாவைப் படிப்பது கவிதையில் புழங்குகிற சிலாகிப்பைத் தரும். தத்துவத்தில் நடனமாடுகிற ஒரு கோலமயிலாக அவர் தோன்றுகிறார். ஒரு லா.ச.ரா தவறுதலாக பிரான்ஸில் பிறந்து விட்டதைப் போல. ஒரு வாக்கியத்தில் சொற்களை திரும்பத் திரும்ப பயன்படுத்துவது, ஒவ்வொரு பயன்பாட்டிலும் புதிய அர்த்தங்களை உண்டுபண்ணுவது, சொற்களின் தொனியை வைத்து விளையாடுவது, “மரணம்”, “தனிமை” போன்ற சொற்களை மறைமுகமான அர்த்தத்தில் மட்டுமல்ல முழுக்க மாறான அதிர்ச்சியான பொருளில் எல்லாம் பயன்படுத்துவது அவரது தனித்துவம். ஒரு வாக்கியத்தை நீங்கள் படித்ததும் அதன் பொருள் ஒரு பேஸ்டை பிதுக்கினதும் வெளிவருவது போல வர வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் தெரிதாவின் வாக்கியங்கள் முடிகிற இடத்தில் இருந்து திரும்ப தன் துவக்கத்துக்கு சுருண்டு கொள்கிறது. அதன் ஒவ்வொரு சொல்லாக எடுத்து ரசித்தபடி நாம் அதனுடன் சரசமாட வேண்டும், கொஞ்சி கோபித்து விளையாட வேண்டும். அப்போது அது உங்களைத் தழுவிக் கொள்ளும். உங்கள் தோளில் ஒரு மாலையாகும். நீங்கள் அதன் பிறகு எங்கு சென்றாலும் என்ன பேசினாலும் அது உங்கள் நினைவில் மணந்து கொண்டே இருக்கும். கழுத்தில் குளிர்ச்சியாக முத்தமிட்டபடியே கிடக்கும். அதுவும் ஒரு வாக்கியம் தான் முடிகிற இடத்தில் ‘நான் இங்கு முடியவில்லை, நான் இங்கு துவங்கவும் இல்லை’ என கோருவது மொழியில் தெரிதாவுக்கு மட்டுமே சாத்தியமான ஒரு அபாரமான புரட்சி.

Comments