முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர்



பொதுவாக நாம் மலையாளப் படங்களின் புதுமையான எதார்த்தமான கதைகளை வியப்பது வழமை. அதற்கு ஏற்றாற் போல தமிழில் கற்பனையே பண்ண முடியாத வித்தியாசமான எண்ணற்ற படங்களை மலையாளத்தில் ரொம்ப குறைவான பட்ஜட்டில் எடுத்திருக்கிறார்கள். பாசில், பரதன் போன்றவர்கள் மலையாளக்கரை தாண்டி இங்கே வந்து வெற்றிப்படங்களை (அல்லது நல்ல படங்களைத்) தந்திருக்கிறார்கள். ஆனால் மலையாள மண்ணில் தமிழ் சினிமாவுக்கே உரித்தான குடும்ப செண்டிமெண்டுகளுடன் கடந்த முப்பது வருடங்களாக ஒருவர் படமெடுத்து வருகிறார் - சத்யன் அந்திக்காடு.
 மலையாளப் படங்களைப் பார்க்க விரும்பும் தமிழ் நண்பர்கள் / தோழிகளுக்கு நான் உடனடியாய் பரிந்துரைப்பது சத்யன் அந்திக்காடின் படங்களையே. ஏனென்றால் நமது விசு அல்லது விக்கிரமன் போன்றவர்கள் தெரியாமல் மலையாளத்துக்கு சென்று சற்று நேர்த்தியாக தெளிவாக படமெடுத்தது போல இருக்கும் அவரது பல படங்கள். குறிப்பாகமனசினக்கரே”, “வீண்டும் சில வீட்டு காரியங்கள்”, “தலையண மந்திரம்”, “அச்சுவிண்டே அம்மா”, “கத துடருந்நுபோன்ற படங்களை இதைப் படிக்கிற உங்களில் யார் வேண்டுமெனிலும் கண்ணை மூடிக் கொண்டு பார்க்கலாம் என்பேன். அதுவும்யார்த்திரக்காருடே ஷ்ரெத்தெக்குஅப்படியே வசந்த் எடுத்தது போல இருக்கும்.

 நான் அவர் எடுத்தது தான் எனத் தெரியாமல் சத்யன் அந்திக்காடின் படங்களுக்கு ரசிகனாக இத்தனைக் காலமும் இருந்திருக்கிறேன். அதற்குக் காரணமும் என் தமிழ் உளவியலாக இருக்கலாம்அதிலும்வீண்டும் சில வீட்டு காரியங்கள்நான் பலமுறை மனம் கசிய பார்த்த படம்: ஒரு வசதியான கிறித்துவக் குடும்பம். இளைய மகனைத் தவிர பிற பிள்ளைகள் படிப்பு, வேலை என செட்டில் ஆகி விடுகிறார்கள். இளையமகன் தான் அப்பாவுக்கு ரொம்ப பிரியம். அதனாலே செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்து விடுகிறார். அவனுக்கு நாடகம், இசை போன்றவற்றில் ஆர்வம் அதிகம். தான் ஒரு பெரிய நடிகன், நாடகாசிரியன் என வீண் ஜம்பம் அவனுக்கு. ஆனால் நாடகத்தின் அரிச்சுவடி தெரியாது. அப்பாவுக்கும் நாடகத்தில் அனுபவமும் ஆர்வமும் உண்டு என்பதால் இரண்டு பேரும் பிறருக்குத் தெரியாமல் நாடகம், கலை என கூத்தடிக்கிறார்கள். ஒருநாள் தன் மகன் எல்லை மீறிப் போகிறான், பொறுப்பில்லாமல் வீணாகிறான் எனத் தோன்றும் அப்பா அவனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அடுத்து என்னவாகிறது என்பது தான் மிச்சக் கதை
அப்பாவாக திலகனும் மகனாக ஜெயராமும் அபாரமாக நடித்திருப்பார்கள். லோகித தாஸின் கச்சிதமான திரைக்கதை. இந்த படத்தின் கதை அப்படியேபடிக்காத மேதைபடத்தைக் தழுவியது என்பது இந்நேரம் உங்களில் சிவாஜி ரசிகர்களுக்கு நிச்சயமாய் புரிந்திருக்கும். ஆனால்படிக்காத மேதைஒன்றும் புதிய கதை அல்லவே. அதுஜோக் பியாக்எனும் வங்கப்படத்தை தழுவியது. அந்த படத்தையும் கூட ஒரு நாவலைத் தழுவி எடுத்திருந்தாலும் அதுவும் ஒன்றும் ஒரிஜினல் அல்ல. தழுவித் தழுவி நம் ஆட்கள் பதினாறாம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரசித்த நாடகமானகிங் லியர்வரை போய் விட்டார்கள். “கிங் லியரில்கதையில் ஒரு வயதான மன்னர் தனது நாட்டை மூன்று மகள்களில் யார் தன்னிடம் அதிகம் பாசம் காட்டுகிறார்களோ அவர்களுக்கே பங்கிட்டு அளிப்பேன் என அறிவிக்கிறார். பாசாங்கு காட்டி இரண்டு பெண்கள் நாட்டைப் பறித்துக் கொண்டு அப்பாவை பின்னர் துரத்தி விடுகிறார்கள். நாணயமாக இருந்த ஒரு மகளுக்கு உரிய பங்களிக்காமல் அப்பா ஆரம்பத்தில் துரத்தி விடுகிறார். இப்போது மன்னர் நாட்டையும் அதிகாரத்தையும் இழந்து கண்ணில்லாத பிச்சைக்காரராகத் திரியும் போது அவருக்கு ஆதரவளித்து பாதுகாப்பது அந்த மூன்றாவது மகள் தான். அந்த கதையை சுதந்திரத்துக்குப் பிறகான ஒழுக்கம் சீரழிந்த பாசம் மறந்த இந்திய சமூகத்தில் வைத்தால்படிக்காத மேதைதோன்றுகிறது. அதே கதையை கேரளாவுக்கு கொண்டு வந்து அப்பா மகனைத் திருத்துவதற்காக வீட்டை விட்டு துரத்துவதாக மாற்றினால்வீண்டும் சில வீட்டு காரியங்கள்வந்து விடுகிறது.

 இதேவீண்டும் சில வீட்டு காரியங்கள்கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து அப்பாவுக்குப் பதிலாக அம்மாவை மாற்றி மகனுக்கும் வளர்ப்பு மகனுக்கும் இடையிலான பாசப்போராட்டம் ஆக்கினால்மனசினக்கரேவந்து விடுகிறது (இந்த கதையையும் இன்னும் கொஞ்சம் தழுவி தமிழுக்கே திரும்ப கொண்டு வந்தார்கள் என்பது வேறு கதை - ரஞ்சித் நடித்தபசுபதி மே / பா ராக்காபாளையம்”).
ஆனால் இந்த படங்களில் சொல்லாமல் சுட்ட பாவத்துக்குப் பரிகாரம் என்பது போல சத்தியன் அந்திக்காடு ஒரே ஒரு படத்துக்கு மட்டும் ஒழுங்காக அனுமதி பெற்று தழுவி எடுத்தார்.  “சம்சாரம் அது மின்சாரம்படத்தை மலையாளத்தில்குடும்ப புராணம்என மறுஆக்கம் செய்தார்.
 சத்யன் அந்திக்காடு குடும்ப செண்டிமெண்ட் படங்கள் மட்டுமல் அல்லாமல்  “நாடோடிக் காற்று”, “பட்டணப் பிரவேசம்”, “சந்தேஷம்”, “காந்தி நகர் செகண்ட் ஸ்டிரீட்போன்ற நகைச்சுவை, பகடி படங்களும் எடுத்து பெரும் வெற்றி பெற்றார். மோகன்லால், ஶ்ரீனிவாசன் இருவரின் நடிப்பு வாழ்வில் மறக்க முடியாத முத்திரைப் படங்களாக இவை அமைந்தன. “அர்த்தம்எனும் வித்தியாசமான இருத்தலிய சாயல் கொண்ட சற்றே பரிட்சார்த்தமான படத்தையும் எடுத்தார்; அது வெற்றியும் பெற்றது. மற்றொரு பக்கம்பின்காமி”, “களிக்களம்போன்ற ஆக்‌ஷன், போலீஸ்-திருடன் பாணி படங்களை எடுத்து கையையும் சுட்டுக் கொண்டார். இந்த மாற்றுக்கதைகளை விடுத்தால் சதய்ன் அந்திக்காடின் கிட்டத்தட்ட எல்லா படங்களுக்கு ஒரு பொதுவான சரடு உண்டு - அது ஒரு கதாபாத்திரம். வாழ்க்கையில் தொடர்ந்து தோற்றுப் போகும் ஆனால் அதை ஏற்றுக் கொள்ள விரும்பாத போலி அபிமானம் மிக்க ஒரு மத்திய வர்க்க ஆண். அவனது அதிரடி சேட்டைகளை, குழப்படிகளை நகைச்சுவை கதைப்பின்னணியில் வைத்தால்நாடோடிக் காற்று”, “பட்டணப் பிரவேசம்ஆகி விடும். சமூகக் களத்தில் வைத்தால்சந்தேஷம்வந்து விடுகிறது. போலி கௌரவம் காரணமாய் சொந்த ஊரில் வேலை செய்ய முடியாமல் கூர்க்காவாக மாறுவேடம் போட்டு வேறு ஊருக்கு வேறு மாநிலத்துக்கோ சென்று புதிய வேலைகள் செய்கிறவனின் கதையாக்கினால்நாடோடிக் காற்று”, “காந்தி நகர் செகண்ட் ஸ்டிரீட்போன்ற படங்கள் தோன்றுகின்றன. இதே பாத்திரத்தை குடும்பக் களம், அரசியல் களம் என மாற்றி வைத்து பல சுவையான படங்களை சத்யன் அந்திக்காடு எடுத்தார். (இந்த வெட்டி வீராப்பு நாயகன் தான் தமிழில் வடிவேலுவின் வடிவில் எதேச்சையாக ஒரு அட்டாகாசமான நகைச்சுவை சாதனையாளனாக மாறியதோ எனத் தோன்றுகிறது.)  ஒரே பாத்திரம், வெவ்வேறு சூழல்கள் என வித்தியாசமான கதைகளை அவர் உண்டு பண்ணி வெற்றிப்படமாக்குவது ஒரு தனிசாதனை எனத் தோன்றுகிறது. வேறு எந்த இயக்குநரையும் இவ்விசயத்தில் சத்தியன் அந்திக்காடுடன் ஒப்பிட இயலாது (தமிழில் பாக்கியராஜ் மற்றும் அவரது சீடர்களைத் தவிர).


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...