Skip to main content

செக்‌ஷன் 375


செக்‌ஷன் 375” கடந்த வருடம் வெளியான மிகச்சிறந்த இந்திப் படங்களில் ஒன்று. இதை
வழக்காடு மன்ற கருத்துமோதல் படம் (courtroom drama) என வகைப்படுத்தலாம். தொண்ணூறுகள் வரை இத்தகைய படங்களுக்கு தனி மார்க்கெட் இருந்தது. இப்படங்களுக்கு என ஒரு டெம்பிளேட் உண்டு - ஒரு பரபரப்பான குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதாவார். அவர் தான் அந்த குற்றத்தை செய்ததாய் பலத்த ஆதாரம் இருக்கும். முதல் அரைமணிநேரம் நமக்கே இவர் தான் குற்றவாளி எனத் தோன்றும். அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் எனும் நிலை. நமக்கு சற்றே அவர் மீது பரிதாபம் ஏற்படும். அப்போது ஒரு வழக்கறிஞர் தோன்றுவார்; அவர் இந்த வழக்கில் ஆபத்பாந்தனாக ஆஜராகி யார் எதிர்பாராத கோணத்தில் குற்ற விசாரணையை அலசுவார்; விசாரணையிலும் அரசுத்தரப்பின் வாதங்களிலும் பிழைகளைக் கண்டறிவார். வழக்கை முற்றிலும் ஒரு மாறுப்பட கோணத்தில் காட்டி நிஜக்குற்றவாளியை அம்பலப்படுத்துவார்.

 ஒரு மனிதனின் விதியை கையில் வைத்து ஆடும் ஒரு வழக்கறிஞர்-சூப்பர் மேன் போல இவர் தோன்றுவார். வழக்காடு மன்றம் மொத்த உலகமுமாக ஆக அங்கே அவர் ஒரு கடவுள் போல அனைவருக்கும் தோன்றுவார். கடவுள் வழங்காத நீதியை வழக்கறிஞர் வழங்கி விட்டதாக பாத்திரங்கள் அவரைப் பாராட்டுவார்கள். கடவுள், மதம், மற்றும் சிவில் அமைப்புகள் மீது நமக்கு நம்பிக்கை தளர்ந்து போன சுதந்திரத்துக்குப் பின்பான ஒரு காலத்தில் துப்பறிவாளர்கள், போலீஸ் இன்பெக்டர் மற்றும் வக்கீல் ஆகியோர் பார்வையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதம் இப்படியான குற்றவழக்கு படங்களில் தோன்றினார்கள் என நினைக்கிறேன். இவர்களுக்குள் ஒரு கொடுக்கல் வாங்கல் இருக்கும் - போலீஸ் நாயகன் என்றால் துப்பறிவாளர்கள் சீனிலே இருக்க மாட்டார்கள், வக்கீல் வில்லனுக்கு கூஜா தூக்குபவராக இருப்பார். இதுவே வக்கீல் நாயகன் என்றால் போலீஸ் டம்மியாகி விடுவார்.
 இந்த பாணி படங்களில்செக்‌ஷன் 375” மிக வித்தியாசமானது. இப்படத்துக்கு என்று ஒரு தனித்த தத்துவச் சரடு இருக்கிறது, கச்சிதமான வடிவம் இருக்கிறது, எங்கு ஆரம்பிக்கிறதோ அங்கே போய் முடிகிறது. குற்றவாளி யார், வில்லன் எப்படி முறியடிக்கப்பட்டான் என எளிதாக படத்தை சுருக்காமல், நீதி என்றால் என்ன எனும் சிக்கலான கேள்வியை இது கேட்கிறது. குரசாவோவின் பிரபலமான படம்ரோஷோமோனில்வரும் அவதானிப்பு இருக்கிறதல்லவா - உண்மை என்பது அதை யார் பார்க்கிறார்களோ, யார் விவரிக்கிறார்களோ அதைப் பொறுத்து மாறும் - அதை இப்படம் நீதி மீது வைக்கிறது. அதுவே இப்படத்தின் சுவாரஸ்யம்

படத்தின் கதையை ஒரு வரியில் இப்படி சொல்லலாம் - தன்னுடைய ஆடை வடிவமைப்பாளரான அஞ்சலியை பலாத்காரம் செய்ததாய் பொய்வழக்கில் மாட்டிக்கொண்ட ரோஹன் எனும் ஒரு இயக்குநர் இறுதியில் காப்பாற்றப்படுவாரா மாட்டாரா? இப்படத்தின் controlling idea இது - சட்டபடி தவறான ஒன்று ஒரு பாதிக்கப்பட்டவருக்கு நீதியைத் தருமானால் அது நியாயம் தானா? இந்த கேள்வியுடனே படம் ஆரம்பிக்கிறது, அதனோடே முடிகிறது. நேரடியாக எந்த போதனையோ அலப்பறையோ இல்லாமல் மிக நுணுக்கமாக பார்வையாளரையே விடையை யோசித்து முடிவு பண்ண விட்டு விடுகிறது.

படம் துவங்கும் போது ஒரு வழக்கறிஞர் அரங்கில் பேசும் வழக்கறிஞர் தருண் சலூஜா (அக்‌ஷய் கன்னா) சட்டமும் நீதியும் வேறுவேறு விசயங்கள்; இதை ஒரு வழக்கறிஞர் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார். இதற்கு உதாரணமாக அவர் நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆகக்கொடூரமான சிறுவனைக் குறிப்பிடுகிறார். நியாயமாக அவனுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டப்படி அவன் குற்றம் நடக்கும் போது சிறுவன் என்பதால் மூன்று வருடங்களில் சிறையில் இருந்து வெளிவந்து விடுகிறான். இங்கு சட்டம் நிறைவேற்றப்பட்டது, ஆனால் நீதி முறியடிக்கப்பட்டது. இப்போது தூக்குத்தண்டனைக்கு எதிராகப் பேசுகிற ஒருவர் நீதி என்றால் உயிரை எடுப்பது அல்ல என வாதிடலாம். பாதிக்கப்பட்டவர்கள் ஆம் அது மட்டுமே நீதி எனப் பேசலாம். மனதளவிலும் உடலளவிலும் முதிராத ஒருவன் செய்த குற்றத்தை முதிர்ந்தவர்களின் குற்றத்துடன் ஒப்பிடுவது அநீதியானது என ஒரு உளவியலாளர் கூறலாம். இப்படி நிர்பயா வழக்கின் தீர்ப்பை மட்டுமே எடுத்துக் கொண்டால் நீதி என்பது எவ்வளவு சிக்கலானது என விளங்கும்

அடுத்து வழக்கு விசாரணையின் போது தருண் சலூஜா தன் கட்சிக்காரர் ரோஹன் பலாத்காரம் பண்ணவில்லை, அஞ்சலியுடன் அவருக்கு இருந்தது ஒருகள்ள உறவுஎனக் காட்டுகிறார். குரூரமாக மனிதநேயமின்றி அவர் அப்பெண்ணை நடத்தியதால் அவள் வெறுத்துப் போய் அவரைப் பழிவாங்கும் பொருட்டு திட்டமிட்டு பலாத்கார வழக்கில் அவரை மாட்டி விடுகிறாள். நீதிபதிகள் இரு தரப்பின் வாதங்களையும் மெச்சுகிறார்கள். அரசுத்தரப்பு குற்றம் நடந்ததற்காக சந்தர்ப்ப சூழல் சாத்தியங்களை நேர்த்தியாக அடுக்குகிறது. ஆனால் அஞ்சலியின் வாக்குமூலத்தில் உள்ள பொய்கள் போகப் போக அம்பலமாகின்றன. அவள் ஆரம்பத்தில் தனக்கு ரோஹனுடன் எந்த காதலுறவும் இல்லை எனக் கூறுகிறார்; பின்னர் இருவரும் காதலர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறாள். தன்னை ரோஹன் பலாத்காரத்தின் போது அடித்து காயப்படுத்தியதாக வாக்குமூலத்தில் சொன்னவள் பின்னர் தன்னை அடித்தது தன் அண்ணனே என ஒப்புக் கொள்கிறாள். ஆனால் பலாத்கார குற்றச்சாட்டை மட்டும் அவள் கடைசி வரை பின்வாங்குவதில்லை. அரசுத்தரப்பால் குற்றம் நிச்சயம் நடந்ததாய் நிரூபிக்க முடியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பிலும் குற்றம் நடக்கவில்லை என நிரூபிக்க முடியவில்லை. இங்கு தான் சட்டப்பிரிவு 375 என்பது அரங்குக்கு வருகிறது - 375இன் படி ஒரு பலாத்கார வழக்கில் காதலர்கள் நடுவே கூட பாலுறவு நிகழ்கையில் அது பலாத்காரமாக நடந்தது என சம்மந்தப்பட்ட பெண் குற்றம் சாட்டினால் நீதிமன்றம் அப்பெண்ணையே ஆதரிக்கும். குற்றம் சாட்டப்பட்ட ஆண் தவறே செய்யவில்லை என்றாலும் தன் குற்றமின்மையை நிரூபிக்கும் பொறுப்பு அவனுக்கே. இதன்படி நீதிபதிகள் இருவரும் ரோஹனுக்கு பத்து வருடங்கள் சிறைத்தண்டனையை உறுதி செய்கிறார்கள் - ஆனால் குற்றம் நடந்தது எனும் உறுதிப்பாடு இன்றி, பெண்ணுரிமைப் போராளிகளின் போராட்டங்களும் அழுத்தமும் காரணமாய், சட்டப்பிரிவு 375இன் ஓட்டையை பயன்படுத்தி நீதிபதிகள் இத்தீர்ப்பை அளிக்கிறார்கள்.

இப்போது ஒரு கேள்வி: இத்தீர்ப்பு நியாயமானதா?
இதற்கு இரண்டு இடங்களில் தருண் சலூஜா பதிலளிக்கிறார்; தன் வாதத்தின் போது ரோஹன் அஞ்சலிக்கு இழைத்தது பலாத்காரத்தை விட மோசமான கொடுமை; அவர் அவளை ஏமாற்றி இருக்கிறார், அவமதித்திருக்கிறார், அவளது நம்பிக்கையை தரையில் இட்டு உடைத்திருக்கிறார், உணர்வுகளை காயப்படுத்தியிருக்கிறார், ஆனால் அவர் பலாத்காரம் பண்ணவில்லை என்கிறார். ஆம் உடலளவில் நிகழ்ந்த குற்றமெனும் பட்சத்தில் பலாத்காரமும் உணர்வளவில் ஒருவரை அவமதிதித்து கைவிடுவதும் ஒன்றல்ல. ஆனால் பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு அந்த மனக்காயம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வேதனை மிக்கது என இப்படம் சித்தரிக்கிறது. அப்படித் தான் பழிவாங்கும் வெறி அவளுக்கு ஏற்படுகிறது.
 தீர்ப்பு வழங்கப்பட்ட பின் தன்னுடைய வழக்கறிஞரிடம் பேசும் அஞ்சலி பலாத்கார குற்றச்சாட்டு பொய் தான் என ஒப்புக்கொள்கிறாள். இறுதிக்காட்சியில் இரு வழக்கறிஞர்களும் இரவுணவின் போது நட்பாகப் பேசும் போது அஞ்சலியின் வழக்கறிஞர் சலூஜாவிடம் வந்துநான் ஜெயித்து விட்டேன், ஆனால் இவ்வழக்கில் நியாயம் வழங்கப்பட்டதாய் எனக்குத் தோன்றவில்லைஎன்கிறாள். அவள் ஒரு பொய்க்கு உடன்பட்டதற்கு வருந்துகிறாள். மிகவும் உடைந்து போயிருக்கிறாள். அதற்கு சலூஜாநீதி வேறு, சட்டம் வேறுஎன்கிறார். இந்த முடிவை நான் மிகவும் ரசித்தேன். இந்த ஒரு வரி இக்குற்றத்தை இரு கோணங்களில் பார்க்க நமக்கு உதவுகிறது - அஞ்சலியின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் அவளுக்கு மிகவும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் பலாத்கார குற்றச்சாட்டை பொய்யாக வைக்காமல் அவளுக்கு நீதி கிடைத்திருக்காது. ரோஹனைப் பொறுத்தவரையில் சட்டப்படி அவன் குற்றமற்றவன், ஆனால் மனசாட்சிப்படி குற்றவாளி; பெண்களை கருவேப்பிலை போன்று பயன்படுத்தும் அவனது இயல்புக்கு இந்த தண்டனை தேவை தான், சற்று அதிகமென்றாலும் கூட. இந்த அவதானிப்பை படம் போகிற போக்கில் உணர்த்தி சென்று விடுகிறது என்பதே அழகு.

திரைக்கதைத் தவிர, அக்‌ஷய் கன்னாவின் அபாரமான நடிப்பும் இப்படத்தின் பிளஸ். நிலா, எஸ்.ஜே சூர்யாவின் படங்களில் பொம்மை போலத் தோன்றி சென்ற அதே நிலா, இப்படத்தில் அவ்வளவு திறமையாக நடித்திருக்கிறார். தன் மீது கேமரா திரும்பாத இடங்களில் கூட அவரது சின்னச் சின்ன எதிர்வினைகள் அவ்வளவு இயல்பாக நுட்பமாக உள்ளன. இந்த நிலாநிலாவைப்போன்றே இல்லை.


பார்க்க வேண்டிய படம்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...