முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புலி வேட்டையும் கொரோனா வேட்டையும்


பி.பி.சி இணையதளத்தின் புள்ளிவிபரக் கணக்கு இது - கொரோனா வைரஸ் தாக்கியவர்களில் ஆயிரத்தில் ஒன்பது பேர் மட்டுமே மரணமடைகிறார்கள். அதாவது 1%. அதுவும் இந்த வைரல் ஜுரம் வந்தவர்களில் மிகவும் வயதானவர்கள், ஏற்னவே உடல்நிலை சீர்குலைந்து போனவர்களே மரணமடைய வாய்ப்பதிகம். பெரும்பாலோனவர்களுக்கு இது ஒரு சிறிய ஜுரம், சளித்தொல்லை போலத் தோன்றி வந்த வேகத்தில் மறைந்து போகும். ஆனால் இப்போது உலகம் முழுக்க பரவியுள்ள பீதியால் தும்மினால் கூட ஐயோ சாவு நெருங்குதோ என மக்கள் பதறும் நிலை ஏற்படுகிறது. மூக்கு ஒழுகினால் உங்களிடம் இருந்து தள்ளி நிற்கிறார்கள். என்னுடைய கல்லூரியில் எங்கு பார்த்தாலும் முகமூடியுடன் மாணவர்கள் திரிகிறார்கள். சென்னையில் கொரோனா முகமூடி என்று சொல்லி கூவி விற்கிற காணொளி ஒன்றைப் பார்த்தேன். ஹேண்ட் சேனிடைஸர்கள் மருந்துக்கடைகளில் காலியாகி விடுகின்றன. பள்ளிகளை மூடிவிட்டார்கள் (ஆனால் புள்ளிவிபரப்படி இந்த நோய்த்தாக்குதலால் குழந்தைகள் அதிகம் மரணமடைவதில்லை). ஒரு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் வெளியாகியதை விட, தேர்தல் முடிவுகளை விட அதிக பரபரப்பை இது தோற்றுவித்துள்ளது.

ஒப்பீட்டளவில் தில்லியில் நடந்த  (நடத்தப்பட்ட) கலவரங்களில் கொல்லப்பட்டவர்களில் பத்தில் ஒரு மடங்கு கூட இன்னும் கொரோனாவுக்கு பலியாகியதாய் தெரியவில்லை. தூத்துக்குடியில் காவல்துறையில் துப்பாக்கிச்சூட்டில் கொடூரமாய் கொல்லப்பட்டதைப் போல மக்கள் இன்னமும் இந்நோய்க்கு பலியாகவில்லை. ஆனால் தில்லி கலவரங்களின் போது ஆயிரக்கானோர் கைகால் உடைக்கப்பட்ட ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள் என செய்தி வந்த போது அசராத நாம் இந்த 1% மரண வாய்ப்புள்ள கொரோனாவுக்குப் போய் ஏன் இப்படி அல்லோலப்படுகிறோம் என்னும் கேள்வி கடந்த சில தினங்களாகவே என்னை அலைகழிக்கிறது. எனக்கு உண்மையில் எந்த தெளிவான விடையும் கிடைக்கவில்லை. சில அனுமானங்கள் மட்டுமே:

1) ஒரு குறிப்பிட்ட கட்சியினரால் அல்லது போலீசாரால் மக்கள் திரள் கொல்லப்படும் போது அங்கு ஒருமற்றமைதோன்றுகிறது - செத்தவர்கள் ஒன்று இஸ்லாமியர் என சமாதானம் கொள்கிறோம். இந்து ஒருவர் கொல்லப்பட்டதாய் தெரிய வந்தால் அவர் தான் இஸ்லாமியர் வீட்டுக்குள் தாக்குதல் செய்ய போயிருப்பார் என நினைக்கிறோம். இந்த இரண்டு தரப்புமே மனிதர் தாம், அவர்கள் நம்மில் ஒருவர் என நமக்குத் தோன்றாது. இவர்களுக்கு வெளியே நாம் இருப்பதாய் நினைக்கிறோம். துப்பாக்கிச் சூட்டின் போதும் கூட இந்த மத்திய வர்க்க மனநிலை தான் வெளிப்படுகிறது - அவர்களை யார் தெருவில் இறங்க போராடச் சொன்னது என சிந்திக்கிறோம்; அப்படி உயிர்விட்டவர்களை மற்றமையாக்கி நம் பிரக்ஞைக்கு வெளியே வைக்கிறோம். நகரவயப்பட்ட எல்லா நாடுகளிலும் இன்று இந்த தனிமைப்படல், மற்றமையைப் புரிந்து கொள்ள மறுத்தல் உள்ளது. ஆனால் கொரோனாவின் போது இது சாத்தியப்படுவதில்லை. வைரஸ் ஒரு கண்ணுக்குப் புலப்படாத எதிரி. வைரஸால் பாதிக்கப்பட்டதாய் சொல்லப்படுகிறவர்களும் கண்ணுக்குப் புலப்படாதவர்கள். அவர்களை நாம் தேடிக்கொண்டே இருக்கையில் ஒருவேளை நாமும் பாதிக்கப்பட்டிருப்போமோ என அஞ்சுகிறோம். நம் நெருங்கிய நண்பர்கள், சாதியினர், குடும்பத்தினர், மனைவி, குழந்தைக்கு நோய்த்தொற்று இருக்குமோ எனப் பதறுகிறோம். எங்கெங்கும் நீக்கமற நிறைந்த ஒருபரப்பிரம்மமாகவைரஸ் உள்ளதால், அதன் முன் பாகுபாடே இல்லாததால் நாம் நிஜமாகவே பீதியாகிறோம்

2) ஊடகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்னும் பெயரில் இந்த பீதியை வைத்து வியாபாரம் பண்ணுகிறது. இதற்கு இணையாக மற்றொரு மிகப்பெரிய பரபரப்பு நிகழும் வரை இது நன்கு விற்கும் சேதியாக இருக்கும். உங்களுக்கு பெரிய கவரேஜ் எல்லாம் தேவையில்லை - சென்னையில் ரெண்டு பேர் மரணமடைந்தார்கள் என தலைப்பு செய்தி போட்டால் போதும். அன்றே கூட ஒரு விபத்தில் நாற்பது பேர் செத்திருந்தாலும் அது பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். செத்தால் கொரோனாவால் சாக வேண்டும் என்பதே இன்றுள்ள நிலை

3) இன்று நமக்கு நிஜமாகவே கொரோனா தேவைப்படுகிறது - இவ்வளவு அர்த்தமற்றதாய், எதிர்பார்ப்புகள் அற்றதாய் முன்பு வாழ்க்கை இல்லை; வாழ்க்கை பயம் தான் மிகப்பெரிய திகில் உணர்வு. திகிலுணர்வு ஒரு சாகச உணர்வைக் கொண்டு வருகிறது. ஒரு பழைய பேட்டியில் இயக்குநர் ராம் தான் ஏன் சினிமா எடுக்கிறேன் என்பதற்கு ஒரு காரணம் சொன்னார் - ஒரு 9-5 வேலையில் இல்லாத சாகசத்தன்மை சினிமாவில் உள்ளது; ஒரு சினிமா கனவு காணப்பட்டு, திட்டமிடப்பட்டு, அது படம்படிக்கப்பட்டு வெளியாவது வரை எத்தனையோ எதிர்பாரா தடைகள், தலைகீழ் மாற்றங்கள் வரலாம். இன்று சினிமாவில் இருப்பவர் நாளை இருப்பாரா எனத் தெரியாது. சினிமா எடுப்பது அல்லது சினிமாவில் தன்னை தக்க வைப்பது வனத்துக்கு வேட்டைக்கு செல்வதைப் போன்றது, அதுவே தனக்கு சினிமாவில் இருந்து கிடைக்கும் பெரிய மகிழ்ச்சி, நிறைவு எனச் சொன்னார் ராம். மனிதன் இப்படி வேட்டையாடி ஆபத்துடன் கண்ணாமூச்சி ஆடுவதற்காக தோன்றியவன். ஆனால் இன்றைய எந்திரமய வாழ்க்கையில் கணிசமானோருக்கு சலிப்பும், மாற்றமின்மையும் தான் ஒரே சாத்தியமாக உள்ளது. ஓரளவுக்கு வேட்டையாடும் திகிலை இன்று நுகர்வு அனுபவம் சாத்தியமாக்குகிறது. ஆனால் ஒரு எவ்வளவு பொருட்களைத் தான் வாங்குவது? புலி வேட்டையாட முடியாத இந்த வாழ்க்கையில் நமக்கு வேட்டையாட தற்காலிகமாக இப்போது கொரோனா வைரஸ் கிடைத்து விட்டது; நாம் கொரோனா வேட்டைக்குக் கிளம்பி விட்டோம், அல்லது கொரோனாவிடம் இருந்து (ஜுராசிக் பார்க்கில் போல) தப்பித்து ஓட என நினைக்கிறோம்.


கொரோனாவுக்கு நாம் மிகவும் கடன்பட்டிருக்கிறோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...