முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தற்கொலையை வணங்குவது



கவிஞர் சபீதாவின் தற்கொலை குறித்த பலவிதமான பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்த போது ஒருவருக்கு தற்கொலை செய்ய உரிமை உண்டா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. முதலில், குடும்பம் அதை அனுமதிப்பதில்லை. அடுத்து, நண்பர்கள், ஆதரவாளர்கள், நேசம் கொண்டவர்கள் நம்மைப் போகாதே எனக் கையைப் பற்றி இழுக்கிறார்கள். சரி, தற்கொலையின் பிரச்சனை தான் என்ன?
1) வாழ்வு முழுமையடையுமுன் முடித்துக் கொள்கிறோம் - சரி, எத்தனையோ பேரின் வாழ்க்கை, முழுமையாக வாழ்ந்தும் கூட, அப்படித் தான் இருக்கிறது. அதற்கு உண்மையில் ஒன்றுமே பண்ண முடியாது தானே. முழுமையற்ற வாழ்வை நீண்ட ஆயுளுக்கும் வாழ்ந்து முடிக்கிறவர்களை நம்மால் ஏதாவது பண்ண முடியுமா சொல்லுங்கள்? பிறகு அதே லாஜிக்கை வைத்து ஏன் தற்கொலை செய்கிறவர்களிடம் மட்டும் பிலாக்காணம் வைக்கிறோம்.
2) குடும்பத்துக்கும், நண்பர்களுக்குமான கடமையை பாதியில் விட்டு செல்கிறோம் - இது மற்றொரு கற்பனை. படாதபாடு பட்டு வளர்த்த குழந்தைகள் ஒருநாள் டாட்டா காட்டிக் கொண்டு போய் விடுகிறார்கள். பலருக்கும் நம்மை நினைவில் கூட இருப்பதில்லை. நண்பர்களிடையே எந்த தொடர்ச்சியும் இப்போதெல்லாம் இருப்பதில்லை. பேசினால் உண்டு, அல்லாவிட்டால்தொடர்பில் இல்லைஎன மறந்து போவார்கள். சாகும் போது மட்டும் கொதித்து எழுந்து கொண்டு வருவார்கள். திருமண பந்தங்கள் கேலிக்கூத்தாகி விட்ட, காதலுறவுகள் அனுதினமும் நிலையற்றுப் போகிற காலத்தில் வாழ்கிறோம். கடமையாவது மண்ணாவது!
எங்காவது ஒருவரின் தற்கொலைக்குப் பின்னர் அவரது குடும்பம் திகைத்துப் போய் வாழ்க்கையை தொலைத்து நின்றதுண்டா? இல்லை. அது ஒரு காயமாக எஞ்சியிருக்குமே அன்றி வாழ்க்கையை தடை செய்யாது
3) “வாழ்க்கையென்றால் துன்பம், துயரம் இருக்கும், போராடி ஜெயிக்கத் தானே வேண்டும்!” நூற்றில் ஒருத்தர் தான் இங்கே போராடி ஜெயிக்கிறார்கள். மிச்ச பேர் தோல்விகளை சகித்து வாழ்கிறார்கள். அதில் எந்த பெருமையும் உண்மையில் இல்லை. சகிப்பது என்பது போராடுவது அல்ல. போராட மிகப்பெரிய அகவலிமை வேண்டும். பிடிவாதம் வேண்டும். நம்மில் பலருக்கும் இந்த அறிவுரை சொல்லத் தகுதியே இல்லை. அதிர்ஷ்டத்தால் தான் உயிருடன் இருக்கிறோம் என நினைக்கிறேன். குடும்பம், நண்பர்கள் இருக்கிற அதிர்ஷ்டம், சிரிக்கவும் வேடிக்கை காட்டவும் மறந்து போகவும் தெரிந்த அதிஷ்டம்
4) என்னால் சகிக்க முடியாதது தற்கொலை பண்ணுகிறவர்களை தோற்றுப் போனவர்களாக, பலவீனர்களாகக் காணும் பாங்கு. வாழ்க்கை ஒரு சாலைப் பயணம், அதில் விபத்து தான் தற்கொலை என்றால், அதில் தப்பித்து விட்டவருக்கு எந்த சிறப்புத் தகுதியும் இல்லை. அதிர்ஷ்டம் மட்டுமே அவரைக் காப்பாற்றி இருக்கிறது. அப்படியே தப்பித்து இவரொன்றும் நாளை இமயமலையில் கொடி நாட்டப் போவதில்லை. இதே ரோட்டில் தான் நாயாய் வெயிலில் அங்கும் இங்கும் அலையப் போகிறார்.
5) வாழ்வை முழுமையாக வாழ்ந்து முடிப்பதும் கூட எப்போதும் நல்லதில்லை - ஜெர்மனியில் ஹோலோகோஸ்டின் போது ஒரு எழுபது வயதாளர் 90 வயது வரை பிடிவாதமாக வதைமுகாம்களில் வாழ்ந்து மறைவதனால் என்ன பயன்? ஆனால் வாழத் தான் வேண்டும் என்பேன். அதில் ஒரு திகைப்பு இருக்கிறது, சின்ன சின்ன ஆச்சரியங்கள் இருக்கின்றன, இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியில் துவளாமல் நின்றேன் எனும் பெருமை இருக்கிறது. ஆல்பர்ட் காமுவின் நாவல்களில் நான் கற்றுக் கொண்டது இது. ஆனால் இந்த பெருமைக்கு மத்தியிலும் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி எனும் பணிவு வேண்டும்
6) வாழ்க்கை எந்த கணத்தில் முடிந்தாலும் அது ஏற்கத்தக்கதல்ல - ஏனென்றால் வாழ்க்கையில் ஒரு முடிவு மரணத்தால் ஏற்படுவதில்லை. முடிவு என்றால் நிறைவு. ஒரு புத்தகத்தை மூடுவதைப் போல, ஒரு கதவை மூடுவதைப் போல, ஒரு சினிமாவைப் பார்த்து முடிப்பதைப் போல வாழ்க்கையை முடிக்க முடியாது. எந்த மரணத்திலும் ஒரு முடிவற்ற தன்மை எஞ்சியே ஆகும். நம்முடைய அனுபவங்களில் சாவு மட்டுமே முழுமையற்றது என்றார் ஹைடெக்கர். நீங்கள் செத்துக் கொண்டிருக்கும் போதே செத்து விடுகிறீர்கள். இதோ சாகிறேன் என வசனம் பேசி யாரும் சாக முடியாது. இது ஏற்படுத்தும் திகைப்பு நம்மை மரணம் குறித்து நிறைய சிந்திக்க பேச செய்கிறது. வாழ்தலையும் சாகசமாக்குகிறது. இதை நான்எழுதிக் கொண்டிருக்கும் போது சாக மாட்டேன்எனும் எளிய நம்பிக்கையே என்னை எழுத செய்கிறது, ஆனால் நான் சாகக்கூடும் எனும் அதே எளிய பயம் தான் இதை ஒரு திகைப்பான இனிப்பான அனுபவமாக்குகிறது. வேறெதுவும் என்னை சாவுக்கு இவ்வளவு நெருக்கமாய் கொண்டு போவதில்லை. தொண்டு கிழம் கூட சாவையும் வாழ்வையும் இப்படித் தான் உணர்கிறது. அதனாலே வயசாளிகள் சாகாமல் தொடரும் போது எரிச்சல் கொள்கிறோம், அவர்கள் வாழ்வை ருசிக்க நினைத்தால் பகடி செய்கிறோம். தற்கொலை இந்த முழுமையற்ற அனுபவத்தை தானாக நெருங்கித் தொடுகிற சாகசம். நமக்கு ஏற்படும் கவலை அவர் போய் விட்டார் என்பதை விட அவர் போய் திரும்ப வரவில்லையே என்பது தான், அவர் திரும்ப வந்து அந்த சாகசம் எப்படி இருந்ததென சொல்லவில்லையே எனும் விசனம் தான். நாம் அவரைப் பற்றி பேசிப் பேசி இந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொள்கிறோம். அவருக்குப் பிறகு சின்னச் சின்ன தற்கொலைகளை நிகழ்த்திக் கொண்டே போகிறோம் - நம் பித்தான காதல்களில், நம் சிலாகிப்பான எழுத்துக்களில், நம் மயக்கமான கனவுகளில், நம் முடிவுறாத பேச்சுகளில்.
தற்கொலையின் விளிம்பு வரை சென்றவர்களிடம் பேசி சரி செய்திருப்போம்ஓரிரு அனுபவங்களாவது நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் அவர்கள் வெறுமனே விளிம்பு வரை செல்ல விரும்பியவர்கள் மட்டுமே. நாமும் அப்போது அனுபவித்த திகைப்பு அவர்களுடன் கையைப் பற்றி விளிம்பு வரை சென்று திரும்பியதே. எல்லாருடைய துயரங்களும் சாதாரண துயரங்களே. ஆனால் அத்துயரங்களை அசாதாரணமானவை என நினைக்கும் போது மட்டுமே அவர்கள் தற்கொலைக்கான முதலடியை எடுத்து வைக்கிறார்கள். அவர்களிடம் என்னுடைய துயரம் மகத்தானது, தனித்துவமானது எனும் உணர்வு இருக்கும். அதுஎன்னுடைய வாழ்வு மட்டும் மகத்தானது, தனித்துவமானதுஎனும் கோரலில் இருந்து வருவது. தற்கொலையில் மட்டுமே அதற்கான அங்கீகாரம் சில நேரம் கிடைக்கும். தற்கொலை முயற்சியாளர்களிடம் உரையாடுவது அவ்வளவு நாடகீயமாக ஆவேசமாக அமைவது அதனால் தான். நீங்களும் உங்கள் சொற்களும் அப்போது ஒரு அசாதாரணத்துவம் பெறுகின்றன.


போர்க்களத்தில் எதேச்சையாக குண்டுதாக்கி வீழ்ந்தவர்களைப் போல தற்கொலையாளர்களை அதற்கான கௌரவத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். தற்கொலையின் அந்த அதிரடி வேகத்தில் ஒரு அழகு இருக்கிறது, அதில் ஒரு கவித்துவம் இருக்கிறது, அதில் அணையாத ஒரு சுடரொளி இருக்கிறது - அதை நாம் வணங்க வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...