Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?



எச்சரிக்கை: இங்கு நான் பேசப் போகும் சமத்துவமானது உங்களுக்கு நன்கு பழக்கமான சமூக அரசியல்  சமத்துவம் அல்ல.

இன்று என்னிடம் ஒரு புரோஜெக்டின் பொருட்டு பேட்டி எடுக்க சில மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களின் விவாதப்பொருள் மாற்றுத்திறனாளிகள் கல்விப்புலத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்களா, ஏதேனும் சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறதா, அதற்கு தீர்வு என்ன என்பது. பல சுவாரஸ்யமான கேள்விகள், ஒவ்வொன்றாய் ஆர்வமாய் பதிலளித்து வந்தேன். கடைசியாக ஒரு கேள்வி மாற்றுத்திறனாளிகளைப் பார்த்து அடுத்தவர் இரக்கப்படுவதைப் பற்றியது. அதுவே ஆக சுவாரஸ்யமான கேள்வி என்பதால் நான் அதற்கு அளித்த பதிலை மட்டும் இங்கு சொல்கிறேன்:

இரக்கம் என்பது அண்மையில் ரொம்ப மோசமான பெயரைப் பெற்று விட்ட ஒரு உணர்வு. மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்ல சாதி, மத, பால்நிலை ரீதியாக ஒடுக்கப்படுவோர் கூட இரக்கத்தை விரும்புவதில்லை. “இரக்கப்படாதீர்கள், வேண்டுமானால் புரிந்து கொள்ளுங்கள்என்பது அவர்களின் கோரிக்கையின் அடிநாதம். “எங்களை சமமாக நடத்துங்கள்என்பது மறைமுகமான வேண்டுதல். ஒருவரை சமமாக நடத்த வேண்டும் என்பது இன்றைய ஜனநாயக சூழலில் முக்கியமான தேவை என்பதை நான் மறுக்கவில்லை, ஆனால் மானுட உறவாடலில் அப்படி சமத்துவம் சாத்தியமா என்பதில் எனக்கு பல கேள்விகள் உண்டு. நண்பர்கள், காதலர்கள், கணவன்-மனைவி, சக பணியாளர்கள், குடும்ப உறுப்பினர், சகோதர்கள், சகோதரிகள் எல்லாரும் சமமாகவா இருக்கிறார்கள்? இல்லை. இந்த உறவுகள் ஆரோக்கியமாக இருக்கிறதென்றால் அங்கே சமத்துவம் இல்லை என்பதே பொருள்.

 ஒரு உறவுக்குள் சமத்துவம் வந்ததும் அங்கு ஒரு இறுக்கமும் கசப்பும் வந்து விடுகிறது. கணவன்-மனைவியிடையே சமத்துவம் வந்ததும் விவாகரத்துக்கு / பிரிவுக்கு விண்ணப்பிக்கிறார்கள். பிள்ளைகள் உங்கள் தோள் உயரத்துக்கு வளர்ந்ததும் மனதளவில் உங்களிடம் இருந்து விலகுகிறார்கள். நண்பர்கள் எல்லா விசயத்திலும் ஒத்திசைவு பெற்றதும் பரஸ்பரம் வெறுக்கத் தொடங்குகிறார்கள் - இவன் நானல்ல, இவன் நானல்லாது இருக்கக் கூடாதா என மறைமுகமாக ஏங்குகிறார்கள். அடுத்து கருத்தொற்றுமை இல்லை எனக் காரணம் காட்டி விலகுகிறார்கள். விலகி இருக்கும் காலத்தில் இருவரும் வேறு வேறு எனப் புரிந்ததும் மீண்டும் இணைகிறார்கள்.  
அசோகமித்திரன் குறித்த இந்த ஜோக் முக்கியமானது - அவருக்கு உடல் நலமில்லை என செய்தி கசிகிறது. அவர் வயதானவர். ஆகையால் நண்பர்கள் பதற்றமாகிறார்கள். செய்தி பரவுகிறது. இரு நண்பர்கள் அவரைக் காண்பதற்காக அவரது வீட்டுக்கு செல்கிறார்கள். கதவைத் தட்டுகிறார்கள். கதவு திறந்தால் அங்கு முன்னே நிற்பது சாட்சாத் அசோகமித்திரனே தான். இருவரும் திகைக்கிறார்கள். அசோகமித்திரன் உடனேஎன்ன ஏமாற்றமாகி விட்டதா?” என்று முகத்தை ரொம்ப சீரியஸாக வைத்துக் கொண்டு கேட்கிறார். “உங்களுக்கு உடல் நலமில்லை என்றார்களே? அதான் பார்க்க வந்தோம்.” உடல் நலமில்லை தான், ஆனால் அதற்கு நான் படுத்த படுக்கையாக இல்லைஎன்கிறார் .மி. ஒருவருக்கு உடல் நலமற்றுப் போகும் போது நாம் கவலைப்படும் அளவுக்கு உள்ளுக்குள் மகிழவும் செய்கிறோம். அப்போது அவரை ஒரு குழந்தையைப் போல நடத்த, “கவனிக்கநமக்கு ஒரு வாய்ப்பு கிட்டுகிறது. முன்பிருந்த அந்த ஆள் இப்போது அங்கிருப்பதில்லை; பலவீனப்பட்ட ஒரு உடல் நம் முன் படுத்துக் கிடக்கிறது. நம் இரக்கம் கண்களில் நீராகி சொரிகிறது. அவருக்கு ஏதாவது செய்ய நாம் பரபரக்கிறோம். அவருக்கும் நமக்கும் ஜென்மப்பகை இருந்தால் கூட அதை ஒரு நொடி மறந்து விட்டு அன்பு பாராட்டுகிறோம். ஏனென்றால் சமத்துவம் முழுக்க காலியாகி அங்கே அந்த நபரின் தன்னிலை இல்லாமல் ஆகிறது. பல நாட்களாக பேசாமல் கடும் குரோதத்துடன் திரியும் கணவன் மனையிடையே ஒருவர் நோயுற்று விழுந்து விட்டால் உடனே நேசம் மீண்டும் துளிர்த்து விடும். விழுந்து விழுந்து கவனிப்பார்கள். “ஜுரம் கிரம் வந்து நான் நாலு நாள் படுத்துக்கிட்டா பரவாயில்லைன்னு படுதுஎன என்னிடம் ஏக்கமாகப் பேசும் தோழிகள் உண்டு. அவர்களின் ஆசையெல்லாம் யாரையாவது தாம் சில நாட்கள் எந்த நிபந்தனையுமற்று சார்ந்திருக்க வேண்டும் என்பது. அன்புக்கான ஏக்கம் பல சமயங்களில் சமத்துவமின்மைக்கான ஏக்கமே.

சமநிலைக் குலையும் போதே நாம் ஒருவரின் தேவையை உணர்கிறோம்; அவரது அருகாமைக்காக ஏங்குகிறோம். என் உடல் எனக்குப் போதாது, நாம் சமமற்று இருக்கிறேன் என்பது தானே பாலியல் இச்சை ஆகிறது? சமநிலைக்குலைவு தானே நம்மை கண்ணீர் விட்டு அழச் செய்கிறது? அது தானே மற்றொருவரை அணைத்துநான் இருக்கிறேன்என ஆறுதல் சொல்லச் செய்கிறது. அப்போது சமநிலை ஒரு நொடி மீண்டும் மீள்கிறது. அடுத்து குலைகிறது. நாம் தத்தளிக்கிறோம். நாம் தத்தளிக்க தத்தளிக்க நமது அன்பு, பாசம், காதல், அக்கறை, கனிவு எல்லாம் உயிர்ப்புடன் இருக்கிறது

ஆனால் இன்னொரு பக்கம், மானிட உறவுகளில் சமத்துவம் தோன்றும் போது நம் உணர்ச்சிகள் மரத்துப் போகின்றன. நாம் சுய-பிரக்ஞையுடன் செயல்படத் தொடங்குகிறோம். மனம் கரைந்து நெகிழ்ந்து பேச முடியாது போகிறது. “என்னை இவன் / இவள் மதிக்கிறானா / ளா?” என்னும் கேள்வி நமக்குள் எழுகிறது. அங்கு மற்றொரு பிரச்சனை - எனக்கு எதிர்தரப்பு தனி மரியாதை தர வேண்டுமெனில் அங்கு ஒரு சமநிலைக்குலைவு ஏற்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் உறவுநிலையில், அந்தரங்கமான, அன்பான உறவுநிலையில், விலகி நின்று கைகூப்புவதல்ல சமநிலை. அங்கு சமநிலையின் பொருளே வேறு. சொல்லப் போனால் அந்தரங்க உறவுகள் ஒவ்வொன்றுமே சமத்துவமின்மையை நம்வசம் கோருகின்றன.

சமநிலைக்குலைவுக்கும் சமத்துவத்துக்கும் இடையில் தோன்றும் பிரத்யேக உணர்ச்சி தான் இரக்கம். இரக்கமே நம்மை தன்னைத் தாழ்த்திக் கொள்கிறவரை நோக்கி இரு கைகளை நீட்டி அவரணைக்கத் தூண்டுகிறது. இரக்கமே நம்மை பதிலுக்கு கண்ணீர் விடச் செய்கிறது. இரக்கமேஇவருக்கு எதாவது பண்ண வேண்டும்என ஆவேசத்தை அளிக்கிறது (கருணை என்கிறஆன்மீகஉணர்வை நான் இங்கே குறிக்கவில்லை.). நமக்கு ஒரு குழந்தையைப் பார்த்ததும் அள்ளிக் கொண்டு கொஞ்சத் தோன்றுகிறதே ஏன்? அது பலவீனமாக தம் உதவியை நாடும் நிரந்தர நிலையில் இருப்பதால். நீங்கள் அள்ளிக் கொண்டு கொஞ்சி திணறடித்த பிறகு குழந்தை அழுகையை நிறுத்தி உங்கள் தோளில் இருந்து இறங்கி விடத் துடிக்கிறதே ஏன்? அது இப்போது பலவீனமாக இல்லை, இப்போது அது (தற்காலிகமாக) சமமாகி விட்டது என்பதால். நம்மால் அதை ஏற்க முடிவதில்லை. நாம் அதை மீண்டும் அள்ளியெடுக்க நினைக்கிறோமே ஏன்? நம்மால் அது சமமாகி விட்டதை நம்ப முடியாததால்
தெருவில் இறங்கிப் போராடுகிறவர்களுக்கு குண்டாந்தடிகளால் அடிபடும் போது தான் நாம் அவர்களுடன் சேர்ந்து நிற்க நினைக்கிறோம். ஒருவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொண்டு சாகும் போது தான் மொத்த சமூகமும் அவர்களுக்காக கொதித்துப் போய் குரல் கொடுக்கிறோம். எனக்கு சாப்பிடனும் காசு கொடு என்று ஒருவர் கேட்டால் முறைத்து விட்டு கடந்து விடுவோம். ஆனால் பசிக்கிறது என அவர் கேட்டால் நம்மால் அப்படி கடந்து விட முடியாது. ஒரு தலைவர் ஒருநாள் உண்ணாநிலைப் போராட்டம் பண்ணினால் சிக்கலில்லை. ஆனால் காலவரையற்ற போராட்டமாக அது சில நாட்கள் நீடித்தால் மொத்த மாநிலமும் அவருக்காக பதறிப் போகும்.
 தன்னை பல விதங்களிலும் தாழ்த்திக் கொண்டு, சிறுக சிறுக அழித்து உடலை துன்புறுத்திக் கொண்டு அதை ஒரு போராட்ட மார்க்கமாகவே மாற்றிய, மக்களின் குரோதங்களை, மற்றமை மீதான வெறுப்பை உண்ணாவிரதம் செய்தே கரைத்த, சுயவதையால் மொத்த தேசத்தையும் தன் பக்கம் ஈர்த்து, பின்னர் மகாத்மாவாகி சமநிலைக்குலைவை மக்கள் பக்கமாய் திருப்பி அவர்களையும் தன்னைப் போலபலவீனப்பட்டர்களாக்கினார்ஒருவர். அதற்கு அவர் அஹிம்சை எனப் பெயரிட்டார். ஆம், நான் காந்தியைப் பற்றித் தான் பேசுகிறேன். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு அதுவரையில் தான் தொடர்ந்து பயன்படுத்தி பாதிக்கப்பட்ட, அடிவாங்குகிற தரப்பை அந்த மகான் இழந்தார். அதன் பிறகு, குறிப்பாக பிரிவினையின் போது, அவரது அரசியல் மக்களில் ஒரு சாராருக்கு கொதிப்பையும் கோபத்தையும் அவர் பால் ஏற்படுத்தியது, மறுசாராருக்கு அவர் மீதான ஈர்ப்பும் அக்கறையும் குறைய ஆரம்பித்தது. மக்களால் காந்தி மீது இரக்கப்படவோ தன்னை காந்தியால் இரக்கப்படத்தக்கவர்களாக ஆக்கவோ இல்லை. ஒரு பொது எதிரி மறைந்திருந்தான். அப்போது கோட்ஸேயின் வடிவில் காந்திக்கு ஒருதீர்வுகிடைத்தது; கோட்ஸேவின் துப்பாக்கி காந்தியை மீண்டும் ஒருமுறை அழித்தது, அவர் மீது தீராத இரக்கமும் இழப்புணர்வும் தேசம் முழுக்க அலையென எழ உதவியது. “சிலுவையில் ஏற்றப்பட்டஅந்த தருணம் காந்தியை நிரந்தரமாக நாம் இரங்கி மனம் கசிய வணங்கும் நாயகனாக்கியது. தனது இன்மையே தன்னை மக்களிடத்து இணக்கமாக்கும், தன் சேதியை உணர்வுவேகத்துடன் கொண்டு சேர்க்கும் என அந்த மகான் அறிந்திருந்தார். அதனாலே மரண வாசனையை உணர்ந்தும் கூட அவர் அதற்காக பிர்லா மந்திரில் காத்திருந்தார்.

சமநிலைக்குலைவைப் போன்றே இரக்கமும் நாடகத்தனமானது தான். சமநிலையின்மை ஒரு போலியான மனநிலை என்பதைப் போன்றே இரக்கமும் ஒரு செயற்கையான உணர்ச்சி தான். ஆனால் இந்த இரண்டும் இன்றி நம்மால் ஒரு உறவுக்குள் உயிர்த்திருக்க சாத்தியமாவதில்லை. இந்த இரண்டும் இல்லாத போது ஒரு தரப்பு மற்றதை நோக்கிஇதயமற்றவன்என்கிறது; மற்றது இதை நோக்கிஎன்னை உனக்குப் புரியவில்லை”. இரண்டு தரப்புமே கடலில் மிதக்கும் இரு பனிப்பாறைகளாகி மெல்ல மெல்ல விலகிச் செல்கின்றன

மகிழ்ச்சியின் போது என்னவாகிறது? இதே தான் - நான் மிகுதியான மகிழ்ச்சியில் இருக்கிறேன், எனக்குப் போதவில்லை, நீயும் என்னுடன் சேர்ந்து கொள்கிறாயா, என்னை நிரப்புகிறாயா என நாம் வேண்டுதல் விடுக்கிறோம். உண்மையில் நாம் மகிழ்ச்சியை யாருடனும் பகிர்வதில்லை. மகிழ்ச்சியை ஒரு துணையுடன் சேர்ந்து பன்மடங்காக்குகிறோம். ஒரு நிறைவின்மையை நிறைவாக்குகிறோம். மகிழ்ச்சியின் மையத்தில் உள்ள துயரமும் இதுவே.
 மிகுந்த மகிழ்ச்சியின் போது தான் மனிதன் தன் தனிமையை சட்டென தொட்டறிகிறான். வெற்றிக் கொண்டாட்ட்டம் என்பதே இதற்காக கண்டுபிடிக்கப் பட்டது தானோ! கொண்டாட்டத்தை (அல்லது பார்ட்டியை) ஏற்பாடு செய்கிறவன் - “மகிழ்ச்சிக்குக்காரணமானவன் - “நான் மகிழ்ச்சியாக இல்லைநான் மகிழ்ச்சியாக இல்லைஎன பிரகடனம் செய்கிறான். ஆட்கள் தன்னைச் சுற்றி கத்தி ஆர்ப்பரிக்கத் தொடங்கியதும் தான் தனியாக இருப்பதாக அவனுக்கு ஒரு கணம் தோன்றுகிறது; அவர்களுடன் போய் இணைந்து கொண்டதும் அவனது மகிழ்ச்சி மீள்கிறது. அவன் மகிழ்ச்சியானவன் என்றாலும் மகிழ்ச்சியற்ற தன் நண்பர்களிடம் அவன் தன்னை தாழ்த்திக் கொள்கிறான். அவர்கள் பூரிப்புடன் அவன் மீதுஇரக்கம்காட்டுகிறார்கள். தாழ்வில் இருந்து மேட்டுக்கு அவனை கைப்பிடித்து ஏற்றி விடுகிறார்கள்.

இரக்கம் என்பது இந்த வாழ்க்கை நமக்கு அளித்த கொடை எனத் தோன்றுகிறதுஇரக்கத்தை தனியாகப் பார்க்கும் போது, அதை உறைய வைத்துநம்மை இப்படி மதிப்பிடுகிறார்களேஎனஇரங்கும்போது தான் நமக்கு வெறுப்பும் கோபமும் இரங்குபவர் மீது வருகிறது. நான் இரங்கத்தக்கவன் அல்ல என கூவத் தோன்றுகிறது. ஆனால் இந்த உலகில் ஒவ்வொருவரும் இரங்கத்தக்கவரே எனப் புரிந்து கொண்டால் இத்தகைய சிக்கல்கள் இராது. மாற்றுத்திறனாளியாக நான் காட்சிபூர்வமாகவே மக்களின் இரக்கத்தைத் தூண்டுகிறேன். என்னை நோக்கிஇரங்கும்படிநான் யாரையும் கைப்பிடித்து இழுக்கத் தேவையில்லை. அவர்களாகவே என்னை நோக்கி வருகிறார்கள். நான் ஒரு இரக்கக்காந்தம்”. எங்களிடையே ஒரு உறவாடல் துவங்கும் போது அந்த இரக்கம் மறைந்து அது அன்பாக பரிமளிக்கிறது. தொலைவில் இருந்து வெறித்துப் பார்க்கிறவர்கள் மட்டுமே என்னை ஒரு மற்றமையாக்குகிறார்கள், அவர்கள் என்னை எரிச்சலூட்டுகிறார்கள்.

தற்போது பணி செய்யும் இடத்தில் நான் வந்ததுமே, முதல் ஐந்து நிமிடங்களிலேயே, நான்கு நண்பர்கள் அமைந்து விட்டார்கள். இது எனக்கு முன்பு நிகழ்ந்ததில்லை. ஏனெனில் முன்பு நான் சக்கர நாற்காலி பயன்படுத்தியிருக்கவில்லை. சக்கர நாற்காலி இரு மனிதர்களுக்கு இடையில் தோன்றுகிற ஈகோ எனும் கோட்டை சுவரை தகர்த்து விடுகிறது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் நான் அவர்களை இரக்கப்பட அனுமதிக்கிறேன், அவர்கள் என்னை நிரப்பிட தயக்கமின்றி வருகிறார்கள். ஒரு மனிதனின் ஊனம் வெறும் ஊனம் இல்லை. அது அடுத்தவரின் இதயத்துக்குள் நுழைய அவன் வைத்திருக்கும் சாவி. அதுவே தான் என் ஊனத்தை அழிக்கும் சாவியும்


நம் சமூகத்தில் மாற்றுத்திறனாளி எனும் சொல் துவங்கி பல்வேறு விதங்களில் மற்றமைகள் (பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர்) தொடர்ந்து அரசியல்வயப்படுவதை, அரசியல் சரித்தன்மைக்குள் போய் மாட்டிக் கொள்வதைக் காண்கிறோம். இது இரக்கத்தை ஒழித்து அந்த இடத்தில் ஒரு போலியான எந்திரத்தனமான மரியாதையை கொண்டு வருகிறது. வெளியே சாதி ஒழிய வேண்டும் என்றுவிட்டு மற்றொரு பக்கம் இன்னும் கெட்டியாக சாதியைப் பற்றிக் கொள்ளச் செய்கிறது; பெண் சமத்துவத்துக்காக விழுந்து விழுந்து பேசி விட்டு முடிந்தவரையில் அவர்களை கீழாகவே நடத்த செய்கிறது. இந்த எந்திரத்தனம் நமது ஆன்மாவையே அரித்து விட்டது. எதிர்காலத்தில் இந்த எந்திரத்தனம் மாற்றுத்திறனாளிகளிடத்தும் வந்து விடக் கூடாது என விரும்புகிறேன். நான் இந்த மரியாதையைத் தான் நான் வெறுக்கிறேன். நான் மரியாதையின் இடத்தில் என்றுமே இரக்கத்தை எடுத்துக் கொள்வேன்.  

நன்றி: அங்கே என்ன சத்தம்?  (10)

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...