முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தாளனும் சிறையும்


சவுக்கு சங்கரின் “உளவு-ஊழல்-அரசியல்” நூலின் ஆக சுவாரஸ்யமான பகுதி அவரது சிறை அனுபவங்கள்தாம்; முதலில் சிறைச்சூழல் அவரை அச்சுறுத்துகிறது; பின்னர் போகப் போக அங்குள்ள மனிதர்கள் மற்றும் உணவு உள்ளிட்ட நடைமுறைகளுடன் இணங்கிப் போகிறார்; எவ்வளவு வெகுளியான அன்பான, அதே நேரம் குரூரமான, மனிதர்கள் அந்த புழல் சிறைக்குள்ளே. ஆனால் வெளியே உள்ள மனிதர்களின் ஏமாற்றுத்தன்மை இவர்களிடம் இல்லை. நாம் பேசும் ஒரு சிறிய பொய்யை மறைக்கக் கூட ஆயிரம் கதைகளைப் புனைவோம். ஆனால் இந்த கைதிகள் தம் குற்றங்களைப் பற்றி அவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறார்களே என வியந்தேன். நல்லவன்-கெட்டவன் எனும் இருமை இல்லாத அந்த வெளி சுலபத்தில் உங்களை பரிசுத்தமாக்கி விடுகிறது.
காலை ஐந்தரைக்குத் தேநீர், அடுத்த இரு மணிநேரங்களில் காலை உணவு (பொங்கல்), அதன் பிறகு செய்தித்தாள் (தந்தி) / வார இதழ்கள் (விகடன், குமுதம்), சக-கைதிகளுடன் அரட்டை, மதிய உணவு, மாலை ஐந்தரைக்கு இரவுணவு, வாரம் ஒருமுறை சிக்கன் என வசதியாகத் தான் இருக்கிறது. (நடுவே சில இலக்கிய உரைகளை நுழைத்தால் விஷ்ணுபுரம் இலக்கிய விழா தோன்றி விடும்.)

 வெளியே இந்த உணவுக்காக எவ்வளவு அல்லல்பட வேண்டியிருக்கிறது. சிறைக்குள் நீங்கள் உங்கள் பிரதமர் நள்ளிரவில் தோன்றி உங்கள் கைவசம் உள்ள பணம் செல்லாதது என்றோ, ஒரு மாதத்திற்கு வீட்டுச்சிறை என்றோ, சான்றுகளை உடனே சமர்ப்பிக்காவிட்டால் உங்களது குடியுரிமை ரத்தாகும் என்றோ அறிவிப்பார் என அஞ்ச வேண்டியதில்லை.
 சிறை வாழ்க்கையில் ஒரே பிரச்சனை சிறை எனும் கட்டுமானமும் திரும்ப சமூக வாழ்வுக்கு மீள வேண்டும் எனும் ஏக்கமும் தான் என சங்கர் காட்டுகிறார். நினைத்த நேரத்துக்கு ஒன்றை செய்யும் வாய்ப்பில்லை என்பதே சிறை - ஆனால் அந்த வாய்ப்பு இருந்து நாம் அதை செய்யவில்லை என்றால் அது கஷ்டமாகத் தெரியாது. சிறை வாழ்க்கை என்றில்லை, தனிமை கூட ஒருவிதத்தில்  விருப்புரிமை இல்லாமல் போவது தான். எனக்கு உங்களுடன் உரையாட விருப்புரிமை இல்லாவிட்டால் குமைந்து போவேன். அதை நீங்களே எனக்கு மறுத்தால் இன்னும் அவதிப்படுவேன். அதைக் காலமோ சூழலோ மறுத்தால் மனம் உடைந்து போவேன். ஆனால் எனக்கு அந்த விருப்பம் இல்லை எனில் பிரச்சனையில்லை. அது தனிமையல்லாமல் ஆகும். இப்போது தனிமையின் பொருள் என்ன? துணை இல்லாததா? இல்லை, துணையை அடையும் விருப்புரிமை இல்லாததே. சிறைவாழ்வின் கசப்பு இப்படித்தான் உண்டுபண்ணப் படுகிறது என இந்நூல் உணர்த்தியது.

கடைசியாக, எழுத லேப்டாப் மட்டும் அனுமதித்தால் ஒரு எழுத்தாளனுக்கு சிறை ஒரு அருமையான இடம் என்றும் தோன்றியது. எந்த இடையூறும், கவலையும் இல்லாமல் வருடத்திற்கு ஒரு நல்ல புத்தகம் எழுதலாம். டிசம்பர்-ஜனவரியில் ஜாமீன் வாங்கி வெளியே வந்து புத்தகத்தை வெளியிட்ட பின் மீண்டும் சிறைக்குத் திரும்பி விடலாம்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...