Skip to main content

புலிப்பாண்டியை குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்



கொரோனா பீதி தலைவிரித்தாடும் போது மோடி அதற்குத் தீர்வாக மக்கள் கைதட்டுவது, டார்ச் அடிப்பது போன்றவற்றை அளிப்பதை பலரும் சமூக வலைதளங்களில் கலாய்த்தார்கள். மோடி இப்படி செய்வதற்கு ஒரு காரணம் அவரது சுயவிளம்பர மோகம். மற்றொன்று அவரது டிஸைனே அப்படித் தான் என்பது.
 அண்மையில் நூலகம் ஒன்றில் அவரதுமன் கீ பாத்வானொலி உரைகளின் தொகுப்பான Mann Ki Baat: A Social Revolution on Radioவை பொறுமையாகப் படித்தேன். அப்போது எனக்கு ஒன்று விளங்கியது: அவர் ஒன்றும் கொடுமையான ஆள் அல்ல, உள்ளுக்குள் அவர் ஒரு குழந்தை. ஒரு பக்கம் ரொம்ப தந்திரமான ஆசாமி, இன்னொரு பக்கம் வெள்ளாந்தியான மனிதர் என விசித்திரமான கலவை.


 நாம் ஏதாவது ஒரு பெரிய பிரச்சனையில் இருக்கையில் ஒரு பாட்டி வந்துஎன்னப்பா இது?” என விசாரிப்பார். நாம் சொன்னதும் ஏதோ எல்லாம் புரிந்ததைப் போல கொஞ்சம் விபூதியை நெற்றியில் பூசி விட்டுகொஞ்ச நாள் ஒண்ணத்தையும் யோசிக்காதே. எல்லாம் சரியாயிடும்.” என்பார் பொக்கை வாய் சிரிப்போடு. நமக்கும் சற்று ஆறுதலாக இருக்கும். “சரி பாட்டிஎன நன்றி சொல்வோம்இந்த வானொலி உரைகளில் மோடி பேசுவது எல்லாம் இப்படித் தான் இருக்கிறது. கற்பனையாய் ஒரு உதாரணம்: ஊழல் அதிகமாய் இருக்கிறது என ஒரு பிரச்சனையை எடுத்துப் போனால்நீ ஒழுங்கா இருந்தா சமூகத்தில் ஊழல் சரியாப் போய் விடும். அதனால் சுய ஒழுக்கம் தான் முக்கியம். அதை கடைபிடியுங்கள்என்று சொல்லி விடுவார். இதற்கு நீங்க என்ன பதில் சொல்ல முடியும்? அவரது ஸ்வச் பாரத் பிரச்சாரம் இந்த நோக்கம் கொண்டது தான். நகரம் ஏன் அசுத்தமாக இருக்கிறது? நடைமுறைக் காரணங்கள் பல, போதுமான துப்புரவு தொழிலாளர்கள் இல்லாதது, குப்பைத்தொட்டிகள் இல்லாதது, அதற்கான நிதி கார்ப்பரேஷனிடம் இல்லாதது, நிறைய மக்கள் குறைவான இடத்தில் நெருக்கடியாய் வாழ நேர்வது, கூடவே மக்களின் சுகாதாரமின்மை என. ஆனால் மோடி இதை ஒட்டுமொத்தமாக மக்களின் சுய-ஒழுக்கமின்மை என சுருக்கி விடுவார். நீங்கள் என்னதான் சுத்தமாக இருக்க விரும்பினாலும் குப்பையை போட இடமில்லை என்றால் என்ன பண்ண முடியும் என்னும் கேள்விக்கு அவர் வர மாட்டார். அவர் எதையும் மிக மிக எளிமையாக குழந்தைத்தனமாக பார்க்க விரும்புவார்

இப்போது நிஜ உதாரணம்: பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்து கொண்டிருந்த போது மோடி தொடர்ந்து அப்போது மாணவர்கள் எப்படிப் படிக்க வேண்டும், எப்படி பதற்றமில்லாமல் இருக்க வேண்டும் என கரிசனத்துடன் வானொலியில் பேசியிருக்கிறார். அதன் எழுத்தாக்கத்தில் ஒரு அத்தியாயமாக இப்புத்தகத்தில் வருகிறது: மோடி குழந்தைகளுக்கு தேர்தல் சமயத்தில் ஏற்படும் உளவியல் சிக்கல்களைப் பற்றி குறிப்பிடுகிறார். அடடே நல்ல விசமாயிற்றே என நினைத்தேன். அடுத்து தான் தலைவர் தீர்வுக்கு வருகிறார்: தாள முடியாத அழுத்தத்தில் இருக்கும் ஒரு மாணவன் படிப்பின் இடையே ஒரு பத்து நிமிடம் வெளியே போய் விளையாடி விட்டு திரும்ப வந்து அமர்ந்து சமர்த்தாக படிக்க வேண்டும், எல்லா மன அழுத்தமும் காணாமல் போய் விடும் என்கிறார். (நண்பன் படத்தில் விஜய் சாவின் விளிம்பில் இருப்பவர்களிடம்ஆல் இஸ் வெல்சொல்வதைப் போல.) நமக்கு முதலில் இதைக் கேட்கஎவ்வளவு எளிமையான தெளிவான தீர்வைத் தருகிறார்எனத் தோன்றும். ஆனால் நடைமுறையில் இது எந்த பலனையும் அளிக்காது எனப் புரிகையில் இந்த ஆள் நம்மை பைத்தியமாக்குகிறாரா எனத் தோன்றும்.

 தேர்வு எனும் அமைப்பு ஏற்படுத்தும் உளவியல் பாதிப்பு, அது கல்விக்கு எந்த விதத்திலும் பங்களிக்காதது பற்றி பல நிபுணர்கள் பேசியுள்ளதை மோடி ஏன் பரிசீலிப்பதில்லை எனத் தோன்றும். ஒரு தலைவராக அவரது கடமை சமூக அமைப்புகளில் உள்ள சிக்கல்களை அகற்றுவதும், அதைப் பற்றி சிந்திப்பதும் அல்லவா? ஆனால் மோடியின் மனம் அந்தளவுக்கு ஆழத்தில் போய் அலசாது. அம்பேத்கரும் காந்தியும் தாம் வாழ்ந்த காலத்தின் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். நம் காலத்தில் கூட அத்தகைய தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்களின் பேட்டிகளில் காண்கிறோம். மோடி மட்டுமே இவர்களிடையே தனித்துவமானவர். எந்த மிகப்பெரிய சிக்கலான பிரச்சனைக்கும் யாரும் யோசிக்க முடியாத எளிதான தீர்வுகளைத் தருவதே அவரது பாணி, அது எவ்வளவு வேடிக்கையாக இருந்தாலும் அவர் கவலைப்படுவதில்லை

மோடி எந்த அரசியல் விவாதத்திலும் ஈடுபட மாட்டார். ஊடகங்களுக்கு சுலபத்தில் பேட்டி அளிக்க மாட்டார். தன்னை ஒரு காவலாளி, வேலைக்காரன் என தாழ்த்திக்கொண்டு மக்களை நோக்கி வணங்கி பணிவாக நின்று கொள்வார். இதெல்லாம் அவரது தற்காப்பு உத்திகளாக இருக்கலாம். ஆனால் அவரது உடல்மொழியைப் பார்த்தால் அவரது பணிவு ஒரு பாசாங்காக நமக்குத் தோன்றாது.   ஒருவேளை இந்த குழந்தைமை தான் இந்தியர்களை வரை நோக்கி ஈர்க்கிறதோ?

 என் வேலை, என் எதிர்காலம் என்ன ஆகும்? நாளை நான் உயிருடன் இருப்பேனா என்று கவலையுடன் நீங்கள் இருக்கும் போது அவர் உங்கள் அருகே வந்துகண்ணை மூடி சற்று அமைதியாக இருங்கள். எல்லாம் சரியாகி விடும்என சொல்கிறார். உங்களால் என்ன செய்ய முடியும்? அவரை கலாய்க்கலாம். ஆனால் அதுவும் ஒருவித இரக்கத்தை தான் தூண்டும்.
 ஏகப்பட்ட பிரச்சனைகளால் தலையை பிய்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு அவர் ஒருவேளை வாழ்நாள் ஆறுதலாக, நம்பிக்கையின் ஒளியாகத் தோன்றலாம். படிக்காத ஏகப்பட்ட ஜனங்களுக்கு (அவர்களின் நலனுக்கு அவரே பெரும் விரோதி என்றாலும்) அவர் தங்களது மொழியைப் பேசுவதாகப் படலாம். நான் என்னுடைய மாணவர்கள் பலரிடம் மோடியைப் பற்றி அவர்களின் கருத்தைக் கேட்டிருக்கிறேன். அவர்களில் பாஜக. இந்துத்துவ எதிர்ப்பாளர்களுக்கு கூட மோடி மீது ஒரு கரிசனம், நம்பிக்கை உண்டு. அவர்களால் மோடியின் ஆளுமையை இந்துத்துவாவுடன் இணைத்துப் பார்க்க முடிவதில்லை. மோடியை இந்து ராஷ்டிர தலைவராகக் காணும் பக்தாள்களுக்குக் கூட அவர் கடுமையான இந்துத்துவர் அல்ல. மோடியின் டிஸைனை நாம் பகடி செய்யலாம், ஆனால் அதுவே அவருக்கு அனுகூலமாகவும் அரசியலில் இருக்கிறது. அவரை எதிர்க்கட்சிகள் திட்டினதும் அது அவர்களுக்கு எதிராகவே திரும்பி விடுகிறது. ஆனால் இதே மோடி தன் எதிர்க்கட்சியினரை காறித் துப்பினாலும் மக்கள் கண்டு கொள்வதில்லை
இந்த புலிப்பாண்டி பயங்கரமானவன் தான், ஆனால் குழந்தைகளுக்கு இல்ல” (“மஜாவில்வடிவேலு) - குழந்தைகளால் புலிப்பாண்டியை வெறுக்க முடியுமா சொல்லுங்க

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...