Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தமிழ் சினிமாவில் மெக்கபின் [MacGuffin] (1)



மிஷிகினின்சைக்கோவெளியான பிறகு சமூக வலைதளங்கில் அப்படத்தில் கதை உள்ளதா, அதன் தர்க்க பிழைகளைக் கடந்தும் அதை ரசிக்கத் தான் வேண்டும் எனும் கேள்விகளை வைத்து ஒரு மூன்றாம் உலக யுத்தமே நடந்தது. இந்த பின்னணியில் மிஷினிடம் நாம் (தர்க்க ஒழுங்கும், தீவிர வாழ்வியல் பிரச்சனைகளும் கொண்ட) கதையை நாட வேண்டுமா எனும் முக்கியமா அக்கேள்வி எழுந்தது. ஒரு மிஷ்கின் விசிறியாக நான் இதைப் பற்றி ஒரு தனிக்கட்டுரை எழுதத் தான் வேண்டும் என்றாலும் அந்த கடமையை ஒதுக்கி வைத்து விட்டு சினிமா குறித்த பொதுவான கேள்வியை இங்கு எதிர்கொள்ள முயல்கிறேன். சினிமாவுக்கு (அல்லது திரைக்கதைக்கு) கதை அவசியமா என்ன? ம்ம்ம் ... இல்லை.

ஒரு நல்ல சினிமாவுக்கு நல்ல விஷுவல்ஸ் வேண்டும். விஷுவல்ஸுக்கு ஏற்ற லாஜிக் வேண்டும். லாஜிக்குக்குப் பொருந்தும் உணர்ச்சிகளும் வேண்டும். இந்த மூன்றும் ஒன்றோடொன்று சச்சரவு கொள்ளாமல் இணங்கி வர வேண்டும் (இப்படி செய்வதன் பெயரே திரைக்கதை). ஹிட்ச்காக்கின் Vertigo நல்ல உதாரணம் இதற்கு. பாலசந்தரின்புன்னகை மன்னன்”, சிங்கிதம் சீனிவாச ராவின்பேசும் படம்மற்றும்  கௌதம் வாசுதேவ் மேனனின்விண்ணைத்தாண்டி வருவாயா”, மணிரத்னத்தின்அஞ்சலி”, “குருபோன்ற பல படங்களை தமிழ் சினிமா உதாரணங்களாகக் குறிப்பிடலாம். ஒரு நல்ல படத்துக்கு வேறொன்றும் வேண்டாம். கதை சத்தியமாக வேண்டாம்.

விளக்குகிறேன்! (தமிழில் வெளிவந்த கணிசமான நல்ல படங்களுக்கு நான் தந்துள்ள விளக்கம் பொருந்தும் என்றாலும் ஒரு வசதிக்காக ஒரு சில படங்களை மட்டும் இங்கே பேசுவதற்காக எடுத்துக் கொள்கிறேன்.)
முதலில் Vertigoகுக்கு வருகிறேன். 1958இல் வெளியான ஹிட்ச்காக்கின் இந்த படம் இன்று வரை திரும்பத் திரும்ப பார்க்கப்படுகிறது, கொண்டாடப்படுகிறது; இதன் ரசிகர்கள் முப்பது, நாற்பது முறைக்கு மேல் இப்படத்தைப் பார்ப்பது சாதாரணம். பிரஞ்சு சினிமாவின் மேதைகளில் ஒருவராகக் கருதப்படுகிற டுரூபோ இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது இப்படத்தை திரும்ப திரும்ப பார்ப்பது தன் வழக்கம் என்றார் (அந்தளவுக்கு அவர் ஹிட்ச்காக்கை வழிபட்டார்). இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் டுரூபோவின் 400 Blows போல இது ஒன்றும் மாற்று சினிமாவோ வித்தியாசமான தீவிரமான புரட்சிகரமான கதையோ அல்ல. ஒரு எளிய துப்பறியும் / காதல் கதை; இதில் அப்படி என்ன மாயம் என வெளியில் இருந்து பார்க்கிறவர்களுக்கு முதலில் தோன்றலாம்; உலக சினிமாவின் கொண்டாடப்பட்ட இயக்குநர் ஒருவர் தலையில் தூக்கிக் கொண்டாடுவதற்கு இந்த வணிக சினிமாவில் என்ன தான் இருக்கிறது
அதன் திரைமொழி, கதை அமைப்பு, அதன் கனவுத்தன்மை, எவ்வளவு முறை பார்த்தாலும் தீர்க்கமாக விளங்கிக் கொள்ள முடியாத ஏதோ ஒரு அரூபமான அழகு இந்த படத்தில் உள்ளது. அந்த அழகு அதன் கதையில் இல்லை. சொல்லப் போனால் இப்படத்தின் வலிமையே இதில் வாசகனின் கவனம் கதை பேசும் பிரச்சனைகளில் செல்லாமல் கதைகூறலில் செல்கிறது என்பது; இதன் பொருட்டு ஹிட்ச்காக் தன் கதைகளில் எந்த பாரித்த பிரச்சனைகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். கதை எந்தளவுக்கு சல்லிசாக இருக்கிறதோ அந்தளவுக்கு படத்தின் மொழி துலக்கமாய் தீவிரமாய் அமையும் என அவர் புரிந்து கொண்டார். உதாரணமாக ஒரு படத்தில் ஒரு நாயகிக்கு பணத்தேவை இருக்கலாம்; அவள் ஏமாற்றுகிறவளாக இருக்கலாம், ஆனால் அவள் ஏன் அப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தர்க்கத்தைப் பற்றி ஹிட்ச்காக் அவ்வளவாக கவலைப்பட மாட்டார் (“சைக்கோ”); அவர் அவளை விட ஆபத்தான ஒரு குற்றவாளியிடம், ஒரு சீரியல் கில்லரிடம் மாட்டினால், மொத்த பார்வையாளர்களும் அவள் காப்பாற்றப்பட வேண்டும் என கோருவார்கள் என அவர் அறிவார். ஆகையால் அவர் படத்தை ஒரு சிறிய குற்றத்தில் இருந்து பெரிய குற்றங்களை நோக்கி வேகமாய் கொண்டு சென்று விடுவார். இது வேகத்துக்காகவும் திகிலுக்காகவும் மட்டுமல்ல பார்வையாளன் கதையோட்டத்தில் மூழ்குவதற்கான முக்கியத் தேவை என்பதால் தான். ஹிட்ச்காக்கின் நம்பிக்கை எதுவொன்றுக்காக நாம் ஒரு செயலை ஆரம்பிக்கிறோமோ அப்போது நடக்கும் சம்பவங்களை பின்னர் யாரிடமாவது சொல்லும் போது அவர்கள் அந்த இலக்கு என்னவாயிற்று என அதிகம் கவலைப்பட மாட்டார்கள் என்பது. அதைப் பற்றி கவலைப்படால் அவர்கள் ஆர்வமாக கதைகேட்க மாட்டார்கள். (மிஷ்கினின்சைக்கோவைப்போல ஹிட்ச்காக்கின் பல படங்களிலும் தர்க்கப்பிழைகள் உண்டு; ஆனால் பார்வையாளர்களுக்கு அதையெல்லாம் கவனிக்கவே நேரமிருக்காது.) 
Vertigoவுக்கு கதையே இல்லை - மொத்த படமும் துரத்திச் செல்வதைப் பற்றியது. உயரமான இடத்துக்கு இந்த துரத்தல் வந்து சேரும் போது என்னவாகும்? துரத்துகிறவருக்கு வெர்ட்டிகோ எனும் தலைசுற்றல் வந்து விட்டால் அவரால் அதற்கு மேல் துரத்த முடியாது ஆகும். துரத்தப்படுகிறவர் தப்பிச் சென்று விடுவார். இப்படத்தில் முதல் காட்சியில் ஸ்காட்டி எனும் போலீஸ்காரருக்கு ஒரு கைதியை துரத்தி செல்லும் போது வெர்ட்டிகோ வந்து விடுகிறது. அதனால் அவர் தன் வேலையை விட்டு விட்டு தனியார் துப்பறிவாளன் ஆகிறார். அதுவும் தற்செயலாகவே. அவருக்குக் கிடைக்கும் வழக்கு உயரத்தில் இருந்து குதித்து தன்னை மாய்க்கப் போகும் ஒரு பெண்ணைக் காப்பாற்றுவது. இப்போது இரு புதிய சிக்கல்கள் வருகின்றன - ஸ்காட்டி விசாரிப்பது தன் நண்பனின் மனைவியைப் பற்றி. அந்த அழகியை அவர் காதலிக்கவும் தொடங்குகிறார். இப்போது அவளைக் காப்பாற்றுவது அவருக்கு இரண்டு விதங்களில் முக்கியமாகிறது. ஆனால் இந்தப் பெண்ணை காப்பாற்ற முடியாதபடி வெர்ட்டிகோ மீண்டும் குறுக்கிடுகிறது. அவள் இறந்த பிறகு தான் நண்பன் தன்னை ஏமாற்றி விட்டது ஸ்காட்டிக்கு தெரிய வருகிறது - அந்தப் பெண் உயிருடனே இருக்கிறாள்; அவளிடத்தில் உருவ ஒற்றுமை கொண்ட மற்றொருத்தியை அனுப்பி தன் மனைவியை தள்ளி விட்டு கொன்று அதைத் தற்கொலையாக்கி தன்னை நண்பன் நன்றாகவே ஏமாற்றி இருக்கிறான் என ஸ்காட்டிக்குத் தெரிய வருகிறது. ஸ்காட்டிக்கு நண்பனை எப்படியாவது கையும் களவுமாகப் பிடித்து விட வேண்டும். ஆனால் மற்றொரு பிரச்சனை வருகிறது - இந்த மூன்றாவது பெண்ணையும் ஸ்காட்டி இப்போது கண்டடைகிறான். அவள் மீதான காதல் அவனுக்குள் சுடர்கிறது. இந்த பெண்ணை உண்மையை ஒப்புக் கொள்ள வைப்பதற்காக அவன் அவளை பழைய இடங்களுக்கு அழைத்து செல்கிறான். இப்போது அப்பெண் அவன் மீது மிகுந்த காதலில் இருக்கிறாள். ஆகையால் அவள் அவனுக்கு உடன்படுகிறாள். அவன் தான் காதலித்தது அப்பெண்ணையா இப்பெண்ணையா என்பது தெளிவாகாத நிலையில் பட்டும்படாமல் காதலில் இருக்கிறான்; இன்னும் சொல்வதானால் முதல் பாதியில் அவள் அவனை காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றினாள் என்றால் பிற்பாதியில் அவன் அவளைக் காதலிப்பதாக சொல்லி ஏமாத்றுகிறான் எனலாம். ஆனால் முற்பாதியில் அவள் அவனை ஏமாற்றும் போதும் உண்மையாகத் தான் காதலித்தாள்; அவனும் பிற்பாதியில் அவளைக் காதலிப்பதாய் நடித்தாலும் அவன் இதயம் அவளுக்காக அழுகிறது; தேம்புகிறது; நிலைகொள்ளாது தவிக்கிறது. இறுதியில் உண்மையை நிரூபிக்கும் பொருட்டு அவளை அவள் முதலில் ஏறி விழுந்ததாய் பாவனை செய்த கட்டிடத்தின் உச்சிக்கு அழைத்து செல்கிறான். தன் காதல் நிஜமானது, தன்னை நம்ப வேண்டும் என அவள் அழுதபடி கோர இதனிடையே ஒரு நிழல் பின்னால் தோன்ற அவள் பயத்தில் திரும்பி தவறி விழுந்து இறந்து விடுகிறாள். மூன்றாவது முறையாக. மூன்று முறையும் ஸ்காட்டி கையாலாகாது நிற்கிறான். ஆனால் இப்போது (ஏற்பட்ட அதிர்ச்சியால்) அவனுக்கு வெர்ட்டிகோ சரியாகி விட்டது. அப்படி படம் முடிவுக்கு வருகிறது
சொல்லுங்கள், இந்த படத்தின் கதை எதைப் பற்றி?

Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...