முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கிய மொழி எனும் கற்பிதம் (1)



நான் என்னைப் பற்றிச் சொல்கிறேன்.எனக்கு எப்படிப்பட்ட வாசகரின் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கும்?எனில் நான் மாஸ்டர்கள் என்று சிலரை மனதில் வைத்திருக்கிறேன்.தாகூரை, ரூசோவை, எட்கார் அலன் போவை, எமிலி டிக்கின்சனை, அல்டஸ் ஹக்ஸ்லியை, ஆஸ்கார் வைல்டை, ,டால்ஸ்டாயை, தாஸ்தவஸ்கியை, புதுமைப் பித்தனை, சுராவை, மாதவனை, தி ஜாவை, அசோகமித்திரனை, சுகுமாரனை, ஜெயமோகனை வாசிக்கிற ஒரு வாசகர் என்னைப் பாராட்டினால் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். என்னை மட்டும் அல்லது எனது சமகால எழுத்தாளர்களை மட்டும் வாசிக்கிறவர்கள் பாராட்டும்போது பெரிய மகிழ்ச்சி ஏற்படுவதில்லை.”
- போகன் சங்கர்

வாசகத் தகுதி குறித்த ஜெயமோகனின் கட்டுரையை ஒட்டின போகனின் பேஸ்புக் பதிவு இது. இதில் எனக்கு சுவாரஸ்யமாகப் பட்டது அவர் வாசகர்களை தன்னையும் தன் சமகாலத்தவர்களையும் மட்டும் படிக்கிறவர்கள் (அரைகுறை வாசகர்கள்), முன்னோடிகளையும் படித்தவர்கள் (தேர்ந்த வாசகர்கள்) எனப் பிரிக்கிறார் என்பது. இதை அவர் செய்வதற்குப் பின்னால் ஒரு நம்பிக்கை (நான் அதை மூடநம்பிக்கை எனச் சொல்வேன்) உள்ளது. அதுஇலக்கிய மொழிபற்றியது. அதென்ன இலக்கிய மொழி?


 நீங்கள் முன்னோடிகளை வாசிக்கும் போது அவர்களின் பலவிதமான மொழிநடைகள், உருவகங்கள், கருத்து நிலைகள் உங்களுக்குப் பரிச்சயமாகின்றன. அடுத்து, நீங்கள் ஒரு சமகால எழுத்தாளரைப் படிக்கும் போது முன்னோடியின் மொழியுடன் இவரது மொழி கொண்டுள்ள தொடர்ச்சி அடையாளம் காணலாம். அங்கிருந்து இவர் எடுத்துக்கொண்டு நிகழ்த்தியுள்ள தாவலை கவனிக்கலாம். இது உண்மை தான் - ஆய்வுப்புலத்தில் இதை literature survey என்பார்கள்; அதாவது நிறைய மேற்கோள் காட்டுவது; ஒரு கருத்து எங்கிருந்து வருகிறது, எப்படி முரண்படுகிறது என ஆய்வுக்கட்டுரையின் துவக்கத்திலேயே நிறுவுவது. - ஆனால் இதை வாசிப்பு மனநிலையாகக் கருதுவதுதான் மூடநம்பிக்கை

வாசிப்பின் போது நீங்கள் ஒரு குறிப்பிட்ட முன்னோடியின் மொழியை அதன் வேறொரு நிறத்தில் அடையாளம் கண்டுகொண்டால் உங்களால் அதன் பிறகு நிம்மதியாய் வாசிக்க முடியாது. கண்ணனைப் படிக்கும் போதும், சு.ராவின் மாணாக்கர் தம்மைக் கருதிய எண்பதுகளின் பல எழுத்தாளர்களைப் படிக்கும் போதும் சு.ரா தாடியும் மீசையுமாய் குளோசப்பில் நம் முகத்தருகே வந்து பயமுறுத்துவார். இன்று சாருவின், ஜெ.மோவின் மொழியைப் பிரதியெடுப்போருக்கும் இதுவே நிகழ்கிறது. இது எழுத்தாளனிடத்து ஒரு வெறுப்பை ஏற்படுத்தும். தன்னை மறந்து வாசிக்க முடியாமல் பண்ணும். ஆனால் இதுவே உங்களுக்கு சு.ரா, ஜெ.மோ, சாரு என்பதெல்லாம் யாரென்றே தெரியவில்லை என்றால் பிரச்சனையே இல்லை. அந்த ஒரிஜினல் ஸ்டைல் இல்லாத கதையை நீங்கள் வெகுவாக ரசிக்கலாம்.

எனக்கு என்னை ஒருவர் ரசிப்பதை விட கச்சிதமாக மதிப்பிடுவதே முக்கியம்என நீங்கள் நினைப்பதானாலும் ஒரு பிரச்சனை உண்டு - நீங்கள் ஒரு இளம் எழுத்தாளனாக ஜெயமோகனின் ஒரு நாவலைப் பின்பற்றி அதைப் புதுவிதமாய் எழுதி அதை மற்றொரு நிலைக்கு உயர்த்தியிருந்தாலும் அது ஒரிஜினலாகாது. .தா., ஜெயமோகனின் புனைவுலகில் அவ்வப்போது சு.ராவின்ஒரு புளிய மரத்தின் கதைநாவலின் நிழலை கண்டடையும் போதெல்லாம் நான் விசனப்படுவேன். அது ஒரு எழுத்தாளனின் ரகசியம். அதை ஒரு வாசகன் கண்டடைவது ஒரு துன்பியல் சம்பவமாகும். அது ஜெயமோகன் மீதான என் ஈர்ப்பை குறைக்கிறது. சு.ராவின் புளியமரத்தை இவர் எவ்வளவு பெரிதாய் வளர்த்திருக்கிறார் எனத் தோன்றாது. ஆனால் அசோகமித்திரனிடம் இப்படியான ஒரு இலக்கிய மொழியை, தொடர்ச்சியை நீங்கள் தமிழில் அவரது முன்னோடிகளில் கண்டுபிடிக்க முடியாது; அவர் தன் ரகசியங்களை எங்கோ பாதுகாப்பாக புதைத்து வைத்திருக்கிறார்.

இந்த பிரச்சனை அதிகமாக கவிதையில் நிகழும் - ஒரு மரம் என்று வந்தாலே நமக்கு தேவதேவன், வானம்பாடிக் கவிஞர்கள், அங்கிருந்து தோரோ அல்லது பக்திக் கவிதை மரபு என மனம் செல்லும். குட்டி ரேவதியின் கவிதைகளை தேவதேவனைத் துண்டித்து விட்டு வாசிப்பது மிக மிக சிரமம். (ஆனால் அது சாத்தியமாகும்போதே நமக்கு வாசிப்பின்பம் கிடைக்கிறது.) ஆக, இப்படி வரிகளிடையே முன்னோடிகள் தலைகாட்டுவது வாசிப்புக்கு இடையூறாகும் - போகனைப் படிக்கும்போது கல்யாண்ஜியோ கலாப்ரியாவோ நினைவுக்கு வந்தால்ஆஹா அந்த முன்னோடியை வரியை வைத்து எப்படி புதிதாக பின்னியிருக்கிறார்என நினைப்பது மூளையை சொறிந்து விடுவது மட்டுமே. காதலியை உற்றுப் பார்த்து விட்டுஉன் அம்மாவின் சாயல் உனக்கு நிறையவே வந்திருக்கிறது, அதனால் தான் இந்த அழகுஎன்றால்நீ என்னை ரசிக்கிறாயா அல்லது என் அம்மாவை பற்றி நினைக்கிறாயா?” என அப்பெண்ணுக்கு எரிச்சல் வரும். “நீ யாரைப் போன்றும் இல்லை, நீ யாராகவும் இல்லை, அதனாலே நீ அனைத்தாகவும் இருக்கிறாய்என சொல்வதே இதயபூர்வமான பொய்கலக்காத காதல் லயிப்பு. நல்ல வாசிப்பிலும் அதுவே நடக்க வேண்டும். மாறாக விக்கிபீடியா பதிவில் வரும் ஹைப்பர்லிங்கைப் போல ஒவ்வொரு முன்னோடியாக வந்து விழக் கூடாது

டான் க்விக்ஸாட்டில்போல முன்னோடிகளை, சமகாலத்தவர்களை பகடி செய்யும் நோக்கி எழுதப்படும் படைப்புகளுக்கு மட்டுமே போகன் சொல்லியிருப்பது பொருந்தும் - யாரைக் கலாய்க்கிறார்கள் எனப் புரியாவிட்டால் ஜோக்கே இல்லையே. தமிழில் அப்படி வெகுகுறைவாகவே எழுதப்படுகின்றன என்பதால் அந்த பிரச்சனையும் இல்லை (கவிதையில் இசை முயல்கிறார் என்றாலும்).

இப்படி ஒவ்வொரு படைப்பும் ஒரு சரம் சரமான சங்கிலித்தொடருடன் பிணைக்கப்பட்டுள்ளது எனும் நம்பிக்கை பழமையானது - ஆங்கில விமர்சன மரபில் இதை liberal humanism என்பார்கள். இதன் பிதாமகரான ஹெரால்ட் ப்ளூம் குறித்து எனக்கும் போகனுக்கும் ஏற்கனவே பஞ்சாயத்து உள்ளது. ஆனால் இந்த யூதர் தான் இருபதாம் நூற்றாண்டில் இலக்கியப் பாற்கடலில் இந்த முன்னோடி வரிசை எனும் விடத்தைக் கடைந்து எடுத்தவர். நீங்கள் முன்னோடிகளை வாசித்து அவர்களின் மொழியின் அடிப்படையில் அவர்களின் சுவடை ஒட்டி எழுத வந்தவர்களை அடையாளம் கண்டு ஏற்க வேண்டும் என ப்ளூமின் மாபியா கும்பலை சேர்ந்தவர்கள் நம்பினர். பின்னமைப்பியல் தோன்றி தன்னை நிறுவிக்கொண்ட காலத்தில் ஒரு பிரதியின் அர்தத்தத்தைக் கடந்து செல்வதே வாசிப்பு எனப் புரிய வர ப்ளூமின் மாபியா கும்பல்என்கவுண்டர்செய்யப்பட்டு ஒழிந்தது; ஆனாலும் ப்ளூமின் ஆவி நமக்குள் இப்போது உலவியபடியே தான் இருக்கிறது. இப்போது போகனின் வடிவில் வந்து நிற்கிறது - அவருக்கு பேய்க்கதைகளில் ஆர்வம் அதிகம் என்பதால் கூட இருக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...