முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் (2)


புதுமைப்பித்தனின்அகலிகைசிறுகதை எங்கள் பல்கலைக்கழகத்தின்இந்திய இலக்கியம்எனும் பாடத்தில் இருந்தது. அக்கதையை வகுப்பில் விவாதிக்கும் போது அகலிகையின் தொன்மக் கதையை சரிவர அறியாத நவீன மாணவர்கள் கூட சுலபத்தில் அக்கதைக்குள் பயணிக்க முடிவதை, மனம் கரைந்து அதனுள் மூழ்குவதை கவனித்தேன். இது வினோதம், ஆனால் உண்மை. தொன்மத்தை நாம் பரிச்சயம் பண்ணுவது கூட கதைக்குள் நுழைவதற்கான ஒரு துவக்க விசைக்காகத் தான். மற்றொரு பக்கம், அகலிகையின் தொன்மத்தை கரைத்து குடித்தவர்களுக்கு அக்கதைக்குள் பயணிப்பது சிரமமாவதை நான் கண்டிருக்கிறேன் - அவர்கள் கதைக்குள் தொன்மத்தையே, அது சரியாக துல்லியமாக புனையப்பட்டிருக்கிறதா எனும் கவலையுடன், தேடிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அகலிகை என்பது அங்கு ஒரு பேச்சுக்கு மட்டுமே. அது ஒரு திசைகாட்டி அடையாளப் பலகை. அதைக் கடந்ததும் நீங்கள் தொன்ம அகலிகையை மறந்து விடுகிறீர்கள். இப்போது தொன்ம அகலிகையில் இருந்து பு.பி எந்தளவுக்கு விலகி செல்கிறாரோ அந்தளவுக்கு அக்கதை உங்களுக்கு கூடுதல் உண்மையாகப் படுகிறது. ஒரு கட்டத்தில் இவள் அகலிகை அல்ல, வேறு யாரோ ஒரு பெண், உங்களுக்கு நன்கு பரிச்சயமான ஆனால் வாழ்வில் என்றும் சந்தித்திராத பெண் எனத் தோன்றுகிறது. அப்போது தான் உங்கள் மனம் உடைகிறது. என் வகுப்பில் இக்கதையை படித்து மனம் உடைந்து கண் கலங்கினவர்கள் ஏற்கனவே புதுமைப்பித்தனைப் பரிச்சயம் கொண்டிராதவர்கள். அகலிகையை முன்பின் அறியாதவர்கள். அகலிகை என்பவள் விக்கிபீடியாவில் வருகிற அகலிகை பாத்திரம் அல்ல, அவள் யாரும் இதுவரை சந்தித்திராத ஒரு உருவற்ற ஒரு மாயப் பெண் அல்லது பெண்ணுருவையும் கடந்த ஒரு உரு என எனக்கு அப்போது தான் புரிந்தது. அதுவும் ஒரு கண்ணீர்த் துளி வழியே, உருவகம், உவமை, கவித்துவ வர்ணனை வழியே நீங்கள் அகலிகையாகவே ஆகும் போது, கல்லாய் உறையும் போது நீங்கள் அந்த ஆதி உருவை உங்கள் உடல்வழி நிகழ்த்துகிறீர்கள்; அவளுக்கும் வாசிக்கும் உங்களுக்கும் பேதமில்லாமல் ஆகிறது.


இங்கு நாம் விவாதிப்பது வாசிப்பில் நம் பிரக்ஞையின் இடம் குறித்தே. போகன் குறிப்பிடும் இந்த தொல்படிமத்தைக் கண்டுணரும் வாசகப் பிரக்ஞை உண்மையானதா எனக் கேட்க வேண்டியுள்ளது. தத்துவத்தில் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?
 பிரக்ஞையை / சுயத்தை விளக்கும் போது தத்துவஞானி கீர்க்கெகாட் சுயம் என்பதுசுயம் குறித்து பிரக்ஞைஎன்கிறார். “இது நான்எனக் கோருவதுநான்அல்ல; “நான்என ஒரு கட்டமைப்பை உருவாக்கி ஒரு கட்டத்தில் அந்த கட்டமைப்பு தான் உண்மை என நம்புவதே நாம் எதிர்கொள்கிற அந்தநான்”. அதாவது நான் எனத் தன்னை கற்பித்து அந்த கற்பிதத்தைக் குறித்து ஒரு பிரக்ஞை உருவாக அப்பிரக்ஞையேநானாகமாறுவது. இந்த பொய்யான நம்பிக்கையே நமது சுயம் அல்லது பிரக்ஞை என கீர்க்கெகாட் அவதானித்தார். நம்முடைய மரபிலும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி இதைப் பற்றி பேசியிருக்கிறார். இதன்படி அகலிகை என நாம் காண்பது அகலிகையை அல்ல, அகலிகையை நாம் காண்பதாக நம்புகிற ஒரு கட்டமைப்பு காண்கிற மற்றொரு கட்டமைப்பை. இந்த கட்டமைப்புகள் ஒரு ஆழமான வாசிப்பின் போது தகர்கின்றன. நம் புலனுலகில் ஒரு அசல் அனுபவமாக உருக்கொள்கின்றன. ஆனால் விமர்சிக்கும் போது அவை நம் மொழியில் மீண்டும் பலவீனமாகத் திரள்கின்றன

இதனாலே, தொல்படிமத்தை வாசிப்பில் அடையாளம் காண்பதுஇது அதுதான்என சொல்வதல்ல என்கிறேன். ஒரு புகைப்படத்தை நோக்கி இவரா, எனக்குத் தெரியுமேஎனச் சொல்வதைப் போன்றல்ல என்கிறேன். உன்னதமான வாசிப்பு என்பது ஒரு தொல்படிமத்தை இருப்பற்ற ஒன்றாக அடையாளம் காண்பது. அது மொழியின் கட்டுமானத்தைக் கடந்தது, அதை வாழ முடியுமே ஒழிய, பகுத்துப் புரிய முடியாது என அறிவது. கீதையில் அர்ஜுனன் கிருஷ்ணனிடம்நீ யார்?” எனக் கேட்க அதற்கு பதிலளிக்கும் கிருஷ்ணன்நான் இந்த ஆகாயமும் அல்ல, இந்த பூமியும் அல்ல, இந்த மரமும் அல்ல, அந்த மேகமும் அல்லஎன மறுத்தபடியே போகிறான். சர்வோத்தமன் அன்னோஜனின் கதையில் தொல்படிமத்தை அடையாளம் கண்டதல்ல கிருஷ்ணன் தன்னை கீதையில் அடையாளம் காட்டுவதே (வாழ்க்கையே நான், சிந்தனை அல்ல) மிகச்சரியான வாசிப்பு என்பேன்.   

அடுத்து இதே கோணத்தில் ஜெயமோகன் கூறும் கருத்தொன்றைப் பார்ப்போம்:
பொதுவாக ஒரு படைப்பில் அதற்குரிய நுண்தளம் ஒன்று இருக்கும். அந்த நுண்தளத்தை தொட்டுவிட்டு மேலே பேசும் விமர்சனங்களுக்கு மட்டுமே விமர்சனம் என்ற மதிப்பு உண்டு.

வாசகனாக ஒருவன் செய்யவேண்டியது அந்த நுண்தளத்தை, ஆழ்பிரதியை வாசிப்பது மட்டும்தான். அதை வாசிக்காதவன் வாசகனே இல்லை. ... அந்த நுண்பிரதியை எடுத்து அதிலிருந்து நம் வாழ்க்கையுடன் இணைத்து நாம் சொல்லும் கருத்துக்கு மட்டுமே மதிப்பு. அந்த நுண்பிரதியை எடுப்பதற்கு கதையின் வடிவமோ மொழியோ போதாமலிருந்தால் அதைப்பற்றிய எதிர்மறையான குறிப்பை அளிக்கலாம்.”
- ஜெயமோகன்

நுண்தளத்தை வாசிப்பதைக் கூட ஏற்கிறேன். ஆனால் நுண்பிரதியை எப்படிஎடுக்கமுடியும் ஜெயமோகன்? அது என்ன பவுடர் டப்பாவா? அது ஒரு ஆய்வகத்தில் வளர்க்கப்படும் நுண்கிருமிகளின் கல்ச்சரா, எடுத்து நுண்பெருக்கியின் கீழ் வைக்க? அதை எப்படி வாழ்க்கையுடன் இணைக்க? வாழ்க்கை என்ன கடை அலமாரியில் லேபள் ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறதா, வாங்கி ஒன்றுடன் இன்னொன்றை கலக்க? அல்லது அது என்ன மின்கம்பியா, பச்சையையும் சிவப்பையும் இணைக்க? நுண்பிரதியை கையாளக் கூடிய மொழிக்கட்டுமானமாகப் பார்ப்பது சுத்த அபத்தம். அப்படி இருக்க அதற்கு மதிப்புண்டு, மதிப்பில்லை என ஏன் பேசுகிறீர்கள் ஜெயமோகன்? எவ்வளவு செறிவாகத், தெளிவாக அதை ஒருவர் அதை விளக்கினாலும் குருடன் இருட்டில் பார்ப்பதைப் போலத்தானே? (ஏற்கனவே பார்வையில்லை, அதில் இருட்டென்ன வெளிச்சமென்ன?) உங்களது இந்த கருத்தில் உள்ள பிரதானப் பிரச்சனையே அது ஒரு தாவரவியல் / உயிரியல் ஆய்வேட்டில் எழுதப்பட்ட குறிப்பைப் போல உள்ளது என்பது. கரப்பான்பூச்சியைக் கிழித்து அதன் உள்ளுறுப்பை எடுத்து இது இன்னது என ஒரு மாணவர் நிறுவுவதைப் போல ஒரு வாசகர் தன் கருத்தை முன்வைக்க வேண்டும் என்கிறீர்கள். நீட்சே, ஹைடெக்கர் துவங்கிய ஒரு பின்னமைப்பியல் மரபு எழுச்சி கொண்டதும் மேற்கத்திய தத்துவத்தில் இந்த பகுப்பாய்வு பித்துக்குளித்தனம் ஒரு முடிவுக்கு வந்தது; தெரிதா இந்த நுண்பிரதியை ஒருவித இன்மை என அங்கு விளக்கினார். (அது மேற்கில் ஒரு மிகப்பெரிய மாற்றத்துக்கு வழிவகுத்தது.) இன்மையை எப்படி எடுத்துக்காட்ட முடியும் ஜெயமோகன்? இப்படி நுண்பிரதியை வாசிப்பில் இருந்து பிரித்து விடலாம் என நம்புவது ஐரோப்பிய analytical மரபில் இருந்து இங்கு வந்து சேர்ந்த ஒரு பிழையான போக்கு என்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...