Skip to main content

ஆணவக் கொலைகளும் நாம் கொள்ளும் குற்றவுணர்வும்

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு குறித்து அரற்றுகிறவர்கள் ஒருவித சாதிக் குற்றவுணர்வை, சாதியும் வேண்டும் அதே சமயம் அது நீதியுடனும் இருக்க வேண்டும் எனும் போலி இரட்டை மனப்பான்மையுடன் சிந்திக்கிறார்கள் என டி. தர்மராஜ் ஒரு பதிவை இட்டிருந்தார். வழக்கம் போலஎன்ன இவர் இப்படி சொல்கிறார்?” என ஒரு நொடி தோன்றினாலும் அவர் குறிப்பிடும் உண்மை பளிச்சென மறுநொடி விளங்கியது. ஆம் உண்மையே. சாதியம் குறித்த மேல் மற்றும் இடைசாதியினரின் கவலைகள் குற்றவுணர்வில் இருந்து வருவதே.

 நான் இதனுடன் ஆற்றாமையையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சட்டரீதியாக தீண்டாமையை தடை செய்யலாம், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு மெலிதான பாதுகாப்பு வலையை உருவாக்கலாம், ஆனால் இதையெல்லாம் செய்யும் போதே இவை பாசாங்கு மட்டுமே, நடைமுறையில் பெரிய அளவில் பயனளிக்காதவை என உங்களுக்கு உள்ளூரத் தெரிந்திருக்கும். சிலர் அமைப்பு ரீதியாக இதை சீர்திருத்த முடியுமா என யோசிப்பார்கள். சிலர் ஆற்றாமையில் வெதும்புவார்கள். சிலர் கூச்சப்படுவார்கள், சிலர் கோபப்படுவார்கள். ஆனால் அத்தனையும் உள்ளே இருப்பவனின் உணர்வுகளே, இது தானும் இதன் பகுதி என உணர்ந்தவனின் குற்றவுணர்வின் விளைவன்றி வேறில்லை என டி தர்மராஜ் கூறுவது அப்பட்டமான உண்மை. ஆனால் நடைமுறையில் ஒடுக்கப்பட்ட சாதிக்குள் இருந்தபடி போராடுகிறவர்கள், எழுதுகிறவர்களாலே சாதியில் இருந்து விடுதலை பெற ஒரு வழியைக் கண்டறிய முடியவில்லை என்பதும் இந்த நாணயத்தின் மற்றொரு பக்கமே. மேலே இருப்பவர்களுக்கு குற்றவுணர்வு என்றால் கீழே இருப்பவர்களுக்கு கோபம், கசப்பு, அவநம்பிக்கை. இரண்டுமே இயலாமையின் வெளிப்பாடுகள். இந்த சாதி அமைப்பை உடைப்பதில் மேல்சாதி என அறியப்படுகிறவர்களால் பங்களிக்க முடியுமா? சாதியின் கண்ணிகளை உடைத்து விட்டு தனி மனிதனாக வாழ முடியுமா? விரும்பியோ விரும்பாமலோ சாதிய சமூகம் உங்களுக்கும் உங்கள் சமூகத்துக்கும் அளிக்கிற அனுகூலங்களை மறுக்க முடியுமா? முடியாது.


விருப்பமோ துணிச்சலோ இல்லாமல் அல்ல, மேலே இருப்பவனுக்கு அவன் முற்போக்கோ பிற்போக்கோ, அவன் கிராமத்தில் இருக்கிறானோ அல்லது நகரத்தில் வசிக்கிறானோ சாதி வேண்டாம் என ஒதுக்குமளவுக்கு அது கையில் எடுக்கும் ஒரு பொருளாக இல்லை. அதை புலன்களால் அல்ல செயல்களாலே அறிகிறோம். பா. ரஞ்சித்தின் ஒரு பேட்டி நினைவுக்கு வருகிறது. மால்கம் எக்ஸ், அலி போன்ற படங்களைப் பற்றிப் பேசும் போது அவர் தான் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் கறுப்பர்களைப் போல இருக்கலாதா என ஏங்கியதுண்டு எனச் சொல்கிறார். இனவாதம் சாதியத்தை விட நேரடியானது, எளிமையானது. அதை அடையாளம் காண்பது, எதிர்ப்பது ஒப்பீட்டளவில் சுலபம். கறுப்பராக இருப்பது ஒரு பௌதீகமான உண்மை. அவர் அதை மறுக்க வேண்டியதில்லை, சமத்துவத்தை, சம உரிமையை மட்டும் கோரினால் போதும். ஆனால் சாதியை அப்படி தோலில் அடையாளம் காண முடியாது - அது பூடகமானது, மாரீசன் போல மறைந்து பொய்யுருவங்களில் உலவுவது, ரகசியமாகவும் வெளிப்படையாகவும் ஒரே சமயம் இருப்பது, புதிரானது. நீங்கள் இன அடையாளத்துக்குள் இருந்தபடியே விடுதலை பெற முடியும். ஆனால் சாதிக்குள் இருந்தபடி சமத்துவம் பெற முடியாது. இந்த வித்தியாசம் முக்கியம். சாதிக்குள் இருப்பது ஒரு நாடகத்தில் வேடம் பூணுவதைப் போன்றது. வேடம் பூண்டு நடித்தபடியே இது நானே, ஆனால் அது நானில்லை எனக் கூற முடியாது. கறுப்பின மக்களுக்குள் பல பிரிவுகள், குழுக்கள் இருந்தாலும் அவர்களிடையே படிநிலை இருக்காது. ஆனால் சாதியில் படிநிலையை தவிர்க்கவே முடியாது.  

 

 சாதி ஒருவித நிகழ்த்து வடிவம். எவ்வளவு தான் மனிதன் நவீனப்பட்டாலும் அவன் பேசுகிற மொழியில், புழங்குகிற வெளியில், பார்க்கிற, கேட்கிற விசயங்களில் சாதி நிகழ்த்தப்பட்டபடியே இருக்கிறது. எப்படி? மற்றமைகள் உருவாக்கப்படுவதன் வழி. நாம் இந்தியர்கள் உளவியல் ரீதியாக மற்றமையை உண்டு பண்ணி அதைக் கொண்டு நம் சமூக அரசியல் பண்பாட்டு வெளியை, அங்கு நம் இடத்தை உறுதி செய்கிறோம். அதை மீறிப் போகவும் முயல்கிறோம். இன்றைய தலைமுறை ஒன்று இரண்டுக்கும் இடையில் மாட்டி இருக்கிறது, அல்லது பழமையில் மூழ்கி மீட்புவாதம் பேசுகிறது. சாதியின் வழியே நம் அடையாளம் மற்றும் அந்தஸ்து உருவாகிறது என்பதே பிரதானமான சிக்கல், இது பிரக்ஞைபூர்வமாக அல்ல நம் சமூக உறவாடலின் வழி, மொழிப்பயன்பாட்டின் வழி அபோதமாக நடக்கிறது எனபதே அதிபிரதானமான சிக்கல்.

 இதை உடைக்க நாம் மொழியில் இருந்து வெளியேற வேண்டும். மதத்துக்கு நிச்சயம் இதில் மிகப்பெரிய பங்கிருக்கிறது என்பதால் மதத்தின் குறியீட்டு மொழியில் இருந்து, பண்பாட்டுக்கு இடமிருக்கிறது என்பதால் பண்பாட்டின் குறியீட்டு மொழியில் இருந்து, திருமணம், அதிலிருந்து குடும்பம், குழந்தை வளர்ப்பு போன்று அன்றாடம் நிகழ்த்தப்படும் சடங்குகளில் இருந்து, நீ இன்னவன், அது என்பது இன்னது என மனிதரை, உயிர்களை, பொருட்களை விரல் சுட்டி அடையாளம் காண்பதில் இருந்து வெளியேற வேண்டும். இப்படி வெங்காயத்தை உரிப்பதைப் போல இது சென்று கொண்டே இருக்கும்.

இந்து மதத்தை எடுத்துக் கொள்வோம் - நாத்திகராக தம்மை அறிவித்துக் கொண்ட, உணர்ந்த எத்தனை பேரால் முழுமையாக இந்து மதத்தில் இருந்து வெளியேற முடிந்தது? அவர்கள் விரும்பாவிடினும் அவர்களின் சமூக செயல்பாடுகளில், பார்வையில், அசைவில், வெளிப்பாடுகளில் இந்து மதம் இருந்தபடியே தான் இருந்தது. இந்து மதத்தில் இருந்து வெளியேறுவது விளக்கை அணைத்து வெறும் கண்களால் இருட்டைப் பார்ப்பதைப் போல இருக்கிறது. ஒருவேளை மற்றொரு விளக்கு கிடைத்தால் அது சாத்தியமாகலாம். அது எங்கே இருக்கிறது

 

இந்த உளச்சிக்கல் தாழ்த்தப்பட சாதியினருக்கும் உண்டு. அவர்கள் ஒரு சமயம் ஒடுக்கப்படும் ஒற்றை இனமாக உணர்ந்தபடி அதனுள் தாம் இப்படியாக பிற ஒடுக்கப்பட்டவரில் இருந்து வேறுபட்டவர் என வரையறுப்பார்கள். அதற்குள் ஒரு படிநிலையை ஏற்படுத்துவார்கள். மேலும் அவர்களும் இந்து மதத்துக்குள்ளே தான் இருக்கிறார்கள். இருக்கும் வரை அவர்களாலும் வெளியேற முடியாது. (நான் இங்கு இந்து மதம் என்பதையே டி. தர்மராஜ் பிராமணியம், பிராமண மனப்பான்மை என்கிறார் என நினைக்கிறேன்.)


அதனாலே சாதியை ஒழிப்போம் போன்ற பிரச்சார எளிமைப்படுத்தல்களில், சாதியைக் கடந்து விட்டவன் நான் எனும் கோரல்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. இது ஒரு சமூக உளவியல் பிரச்சனை. நம் மொழியில் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு உயிரி. இப்போதைக்கு ஒவ்வொருவரும் நமது சாதியத்தை மறைக்காமல் அதனுடன் வெளிப்படையாக முரண்பட்டபடி, அதை எதிர்க்க முயன்ற படி, தொடர்ந்து அதனிடம் தோற்றபடி வாழ முயலலாம். இது ஒரு போதும் தனிமனிதன் ஒருவனால் சாத்தியமாகாது - அவனால் முடிந்தது ஒரு காலடி எடுத்து வைப்பது, ஒரு கல்லை எடுத்துப் போடுவது. அதைச் செய்யலாம். குற்றவுணர்வு-கோபம் எனும் இருமைக்குள் சிக்குவதைத் தவிர நமக்கு இப்போதைக்கு வேறு வக்கில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளலாம்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...