முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாம் ஏன் சுயமரியாதையற்ற பிச்சைக்காரர்களாக இருக்கிறோம்?



கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆடைத்தொழிற்சாலையில் நேற்று ஒரே நாளில் 1300 தொழிலாளிகள் (நமது விகடன் பாணியில்) வேலை நீக்கம் செய்யப்பட்ட சேதி அதிர்ச்சி அளிப்பதுடன் ஆத்திரத்தையும் மூட்டுகிறது. லாபம் இல்லாவிட்டால் ஒரு தொழிற்சாலை யூனிட்டை மூடுவது நிர்வாகத்தின் சுதந்திரம், ஆனால் போதிய அவகாசம் அளிக்காமல் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை, எளிய மக்களை, இப்படி வீட்டுக்கு அனுப்பி வயிற்றில் அடிப்பது அநீதி மற்றுமல்ல சட்டவிரோதமும் கூட. இந்த தொழிற்சாலை இப்படி செய்யப்போகிற விசயம் அரசுக்கும் தெரியும், ஆனால் எல்லா அரசுகளையும் போல கர்நாட அரசும் இப்படியான ஒரு பிரச்சனை வரும் போது முதலாளிகளுக்கே கூஜா தூக்குகிறது.

ஒரு வாரத்துக்கு முன்பே தொழிற்சாலையில் இருந்து எந்திரங்களை நிர்வாகம் அகற்றியபோது உள்ளூர் தாசில்தார் சென்று விசாரித்துள்ளார். அப்போது நிர்வாகத்தினர் வேலை நீக்கம் செய்யும் திட்டமில்ல தமக்கில்லை எனப் பொய் சொல்லியுள்ளனர். எந்த நிர்வாகமும் இத்தகைய முடிவுகளை ஒரே நாளில் எடுக்காது, ஆனால் தொழிலாளிகளின் கேள்விகளை எதிர்கொள்ள அஞ்சி கடைசி நாள் வரை இதை ரகசியமாய் காக்கின்றனர். இதனால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளை இந்த முட்டாள் முதலாளிகள் புரிந்து கொள்வதில்லை. குறைந்தது ஒரு மாத அவகாசமாவது அளித்து தொழிலாளிகளிடம் நிலைமையை பொறுமையாய் விளக்கி ஆற்றுப்படுத்துவது நிர்வாகத்தின் பொறுப்பு. சட்டமும் இதைத்தான் சொல்கிறது. ஆனால் எங்குமே இப்படி நடப்பதில்லை. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் கூட ஒருநாள் முன்பு ஊழியரை அழைத்து நாளையில் இருந்து வேலைக்கு வர வேண்டாம் என மனிதவளத்துறை மேலாளர் சொல்வது தான் நடக்கிறது. இந்த திமிர்த்தனத்துக்கு ஒரே காரணம் தனியார் துறை தன்னை அரசையும் அரசியலமைப்பையும் விட மேலான சக்தியாக நினைக்கிறது என்பதே. அந்தளவுக்கு அதிகாரத்தையும் இடத்தையும் அவர்களுக்கு நாம் கொடுத்திருக்கிறோம்.

இது போன்ற அவலங்கள் நிகழாதிருக்க நாம் செய்ய வேண்டியது நான் ஏற்கனவே எழுதியுள்ளதுதான் - முதலில் நாம் மரியாதை என்பதை நம் சாதி, நம் மதம், நம் பெண்களின் உடல் மீது நிறுவாமல் நம் உழைப்பின் மீது கட்டமைக்க வேண்டும். இங்கு ஒரு சாதியோ மதமோ சொந்த குடும்பத்துப் பெண்ணுடலோ அவமதிக்கப்பட்டால் கொதித்தெழுகிறோம். போராடுகிறோம். வழக்குப் பதிவு செய்கிறோம். கலவரங்கள் செய்கிறோம். ஆனால் நமது உழைப்பு காலில் இட்டு நசுக்கப்படும் போது இதில் பாதி கோபத்தைக் கூட காட்டுவதில்லை. ஏனென்றால் உழைப்பை நாம் நேரடியான பொருள் மதிப்பில்லாத ஒரு விசயமாகப் பார்க்கவே பழகி இருக்கிறோம்; சம்பளம் வாங்கும் போது அதை நமக்கு உரிமையான ஒன்றாக அல்ல ஒருவித பரிசாக, தேவ வரமாகப் பார்க்கிறோம். அல்லது உழைப்பிலும் அதன் கூலியிலும் ஒரே போல மதிப்பைக் காணாத பொறுப்பற்றவர்களாக இன்றைய ஊழியர்கள் பலரும் மாறியிருக்கிறோம். இன்னொரு பக்கம், படித்த படிப்புக்கு சம்மந்தமில்லாத வேலைகளை மனநெருக்கடியில்லாமல் செய்கிறோம். .டி படித்து விட்டு ஊடகங்களில், பி.பி.ஓக்களில் குப்பை கொட்டுகிறோம். இதனாலே ஒரு துறையில் சேர அதற்கு கல்வி பயிலும் போது கூட அதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதில்லை. படிக்கிற படிப்புக்கான விழுமியங்கள், லட்சியங்கள் குறித்து எந்த அக்கறையும் காட்டுவதில்லை. மருத்துவம் படித்து விட்டு கூச்சமின்றி ஒருவர் பெருமுதலாளிகள் மக்களை சுரண்டுவதற்கு துணை போகிறார்; இறந்து போய் ஒரு மாதமான ஒரு முதல்வர் சௌக்கியமாக இருக்கிறார், இட்லி, சட்னியும் சாப்பிட்டார் என ரிப்போர்ட் எழுதுகிறார். நீதியுணர்வு செத்து விட்டது. அறிவும் திறனும் அவசியம் இல்லை, எதையாவது செய்து வேலையில் பிழைத்துக்கொள்ளலாம் என நம்புகிறோம். இந்த சிக்கல்களுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுதான் - சாதி, மத, குடும்ப அடையாளத்துக்கு நாம் அளிக்கும் மதிப்பை உழைப்புக்குக் கொடுப்பதில்லை.
 பணப்பெருக்கத்தில் முதலீடுக்கு உள்ள பங்கை மிகைப்படுத்தி மூளைச்சலவை செய்ததன் விளைவாக நாம் சுயமரியாதை இல்லாதவர்களாக மாறியுள்ளது மட்டுமல்ல ஒரு நவீன சமூகமாக மாற முடியாமல் தவிக்கிறோம். நவீன சமூகம் தனிமனிதர்களால் ஆனது, சாதி, மதத்தால் அல்ல. இங்கு வேலையை இழக்கிற, பணமில்லாத ஒருவன் குடும்பத்தை, சமூகத்தில் தனக்குள்ள இடத்தை இழக்கிறான். அந்த பயத்தில் இன்று கணிசமானோர் வாழ்கிறோம். இந்த பயத்தை பயன்படுத்தி அமைப்புகள் நம்மைக் கூடுதலாக சுரண்டுகின்றன.

இதற்கான முதல் தீர்வு நமது உழைப்புக்கு கூலியை மட்டுமல்ல மதிப்பை, பாதுகாப்பைக் கோருவது. அதை உறுதி செய்யும் பொறுப்பை நம் பிரதிநிதிகளிடம் கோருவது. வலிமையான தொழிற்சங்கங்களை அமைப்பது, சாதி, மதம், போலி தேசியம், அரசு அளிக்கும் நல உதவிகளின் அடிப்படையில் அல்லாமல் நம் உழைப்புக்கு போதுமான கௌரவமும் மதிப்பும் அளிக்கப்படுகிறதா எனப் பார்த்து கட்சிகளுக்கு தேர்தலில் வாக்களிப்பது. அடிப்படையில், உற்பத்தியில் அனைவருமே சமம், அங்கு முதலாளி, தொழிலாளி பேதமில்லை என நம்புவது. மேலும் பொருளாதார வளர்ச்சிக்கான மொத்தப் பொறுப்பையும் தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசு பாதிக்கு மேல் முதலீட்டை ஏற்றுக்கொண்டு தொழிற்துறையை கட்டுக்குள் கொண்டு வருவது; தனியார் துறை அரசின் முதலாளி என்பதை மாற்றி அரசும் மக்களுமே அனைத்தும் முதலாளி எனும் நிலையைக் கொண்டு வருவது. அது நிகழும் வரை இந்த தேசத்தில் ஏகப்பட்ட வளமும் பணமும் இருக்கும், ஆனால் 3% தவிர எல்லாரும் பிச்சைக்காரர்களாக இருப்பார்கள். இந்த 97% தம்மை இந்த நவீனக் கங்காணிகள் செருப்பால் அடித்தாலும் எதிர்க்கும் சுரணை அற்றவர்களாக இருப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.