முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாசகன் என்பவன் சமையல்காரன் அல்ல ஜெயமோகன்



வாசகத் தகுதி குறித்த ஜெயமோகனின் தவறான நம்பிக்கைகளின் விளைவே விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் எனும் அமைப்பு என அண்மையில் அவரது வாசகர்களின் தகுதிப் பட்டியலைப் படிக்கையில் புரிந்து கொண்டேன்.
வாசிப்பு தொடர்ந்து மாறி வரும் நிலை, அதில் என்ன தகுதி இருக்க முடியும்? ஒருவர் தொடர்ந்து சமையலைக் கற்றுக் கொண்டு அனுபவம் மற்றும் படிப்பால் சமையல்காரரானால் அது ஒரு திறன். ஆனால் வாசிப்பு ஒரு திறன் அல்ல. அதற்கு நிரூபணம், சரியான நிகழ்த்துமுறை, தகுதிச்சான்றிதழ் ஒன்றும் கிடையாது. சமையல்காரன் தான் சமைத்த உணவை கொண்டு வந்து உங்களிடம் காட்ட முடியும். அவனது படைப்பே அவனது திறனின் நிரூபணம். ஆனால் ஒரு வாசகனால் அப்படி எதையும் கொண்டு வந்து காட்ட முடியாது.

 நான் ஜெயமோகனின்விஷ்ணுபுரம் வாசகர் வட்டகருத்தரங்குகளின் மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைத்ததே இதனால் தான். அவர்கள் வாசிப்பை கருத்துரைப்பதாகப் புரிந்து கொள்கிறார்கள். எழுத்தானின் சொந்தக் கதையே படைப்பு எனும் ஒரு அடிப்படை நம்பிக்கை அங்கு பயிற்றுவிக்கப்படுகிறது. ஆக, எழுத்தாளனின் வாழ்க்கை, அவனது பின்னணி, கருத்துக்கள் ஆகியவற்றை ஒரு பக்கம் தொகுத்தும் கொள்கிறார்கள். இதைக் கொண்டு ஒரு பிரதியை அர்த்தப்படுத்த முயல்கிறார்கள். சாகசப்பிரியர்களான அடுத்த சிலர் ஒரு படைப்பை அதன் வரலாற்றுச் சூழல், பாத்திர அமைப்பு, உருவகம், தர்க்கச் சரடு என பகுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இப்போது ஒரு திருப்தி வந்து விடுகிறது. ஆனால் குழந்தையை விடுத்து பொம்மைக்கு சோறூட்டி குழந்தையை பட்டினியிட்டுக் கொல்வதே தாம் செய்வது என அவர்களுக்குப் புரிவதில்லை. ஆங்கிலத்தில் dont throw the baby out with the bath water என்பார்கள். அதாவது குளிப்பாட்டுகிற ஆர்வத்தில் தண்ணீருடன் சேர்த்து குழந்தையையும் வெளியே எறிந்து விடுவது. இவர்கள் எவ்வளவு அனாயசமாக கம்சனைப் போல குழந்தையைக் கொல்கிறார்கள் எனப் பார்த்து எனக்கு கண்ணீரே வந்து விட்டது.
 வாசிப்பின் பெரும் திளைப்பு நிலை, பரவசம், பித்து நிலை, இவற்றை தர்க்கத்துக்கு உட்படுத்தும் தத்துவப்பயிற்சி (கடைசியான இது அவசியமில்லை என்றாலும்) அவர்களுக்கு வாய்ப்பதில்லை. ஏனென்றால் கோர்வையாக தர்க்கபூர்வமாக விளக்குவதே வாசிப்பு என ஜெயமோகன் இவர்களை நம்ப வைத்து விடுகிறார் போல. இவர்கள் வாசகர்கள் அல்ல, வாசிப்பில் இருந்து விடுபட்ட, வாசிப்புடன் பிணக்கம் கொண்டு விவாகரத்துப் பெற்றவிமர்சனப் போராளிகள்”. இவர்கள் புத்தகங்களைக் காதலிப்பார்கள், ஆனால் புத்தகங்களுக்குள் உள்ள பித்தை, மௌனத்தை, அதர்க்கத்தை வெறுப்பார்கள். இவர்கள்விஷ்ணுபுரம் விமர்சகர் வட்டம்எனப் பெயரை மாற்றிக் கொள்வதே தகும்
ஜெயமோகனை எது வெறுப்பூட்டியதோ, சீண்டியதோ தெரியவில்லை, ஆனால் ஒட்டுமொத்த வாசகப் பரப்பும் இந்த மேற்சொன்ன வாசக விரோதிகளாக மாற வேண்டும் என அவர் விரும்புகிறார் என இதிலிருந்து தெரிகிறது.
 ஒரு பெரும் வாசகனுக்குப் புலப்படாததது - புரிவதல்ல, புரியாததே சரியான வாசிப்பு எனும் உண்மை - ஒரு எளிய ஆரம்ப நிலை ஆளுக்கு சட்டெனப் புரியும். பரவலான வாசிப்பு பல சமயங்களில் வாசிப்புக்கு எதிராக செயல்படும். அது வாசிப்பை ஒரு உத்தியாக மாற்றி விடும். இதற்கு நான் ஆயிரம் உதாரணங்களை நேரில் பார்த்திருக்கிறேன். என்னுடைய இலக்கிய மாணவர்களில் சிறந்த வாசகர் எப்போது அதிகம் படித்த சிறந்த மாணவனாக இருப்பதில்லை. அவர்கள் அபிப்ராயம் உதிர்ப்பவர்கள் மட்டுமே. மிகக்குறைவாக வாசிக்கும் ஒருவர் அற்புதமான வாசகராக இருப்பதை எத்தனையோ முறைக் கண்டிருக்கிறேன். ஒரே ஒரு பொது இயல்பை இத்தகையோரிடம் காண்பதென்றால் கொஞ்சம் கிறுக்குத்தனம் இயல்பிலே இருக்கும் என்பது, ஆனால் கிறுக்கர்கள் எல்லாரும் நல்ல வாசகர்கள் அல்ல.

சரி ஒரு வாசகன் சொல்லும் கருத்துக்களை எப்படி எடுத்துக் கொள்வது?
ஒரு வாசகன் கருத்து சொல்லும் போது, எதிர்வினையாற்றும் போது - அது உங்கள் நாவல் டி.ராஜேந்தர் படம் பார்த்தது போல இருக்கிறது, ரொம்ப தமாஷாக / உணர்வுபூர்வமாக வடிவேலு / கௌதம் மேனனின் காதல் படக்காட்சிகளைப் போல இருந்தது என்பதிலிருந்து அற்புதமான இசையைக் கேட்டது போல இருந்தது எனச் சொல்லி முன்னுக்குப் பின் முரணாய் மனதில் எழும் எண்ணங்களைக் கொட்டுவது வரை எப்படி இருந்தாலும் - அதை ஒரு கருத்துக் கூறுதலாக நான் பார்ப்பதில்லை. அது ஒரு உணர்வு வெளிப்பாடு மட்டுமே. அந்தளவிலே அது அழகானது. ஆனால் அவனே தன் மேதைமையைக் காட்ட விமர்சன சொரூபம் எடுக்கும் நான் அவனது ஈகோவைத்தான் அங்கு பார்ப்பேன்
மொழி என்பது பல்வேறு மிதக்கும் குறிப்பான்களால் ஆனது. ஒன்று சொல்லப்படும் போது அதற்கு முன்பு வந்த ஒன்றில் சாய்ந்து நின்று, தன்னை அதுவாகக் காட்டியே இது அர்த்தம் பெறுகிறது. எந்த வாக்கியத்திலும் உண்மை இருப்பதில்லை. ஆக, சொல்லப்படும் எதுவும் ஒரு கருத்தாக முக்கியம் அல்ல. இந்தப் பிரச்சனையை உணர்ந்தே ஒரு உலர்ந்த உணர்ச்சியற்ற தர்க்க மொழியில் கோட்பாட்டு, கல்விப்புல உரையாடல்கள் நிகழ்கின்றன. ஆனால் இலக்கியத்தில் அவற்றுக்கு மதிப்பில்லை.

வாசகன் என்னைப் பொறுத்தமட்டில் ஒரு அழகான குழந்தை. அவனிடம் அப்போது ஒரு களங்கமின்மை இருக்கும். அவன் உளறுவதெல்லாம், அது அன்பார்ந்த பாராட்டோ வசையோ, எனக்கு சுகமான கவிதையே. அவன் தெளிவாக விமர்சன மொழியில் தொண்டையை கனைத்துக் கொண்டு ஒரு தோரணையில் பேசும் போது தான்அட அம்பியின் உடம்பில் அந்நியன் வந்து விட்டானேஎன நான் சுதாரிப்பேன். ஆனால் ஜெயமோகனோஅந்நியன்வந்ததும் துள்ளிக்குதிக்கிறார்இவன் தான் எனக்கு வேணும் என்கிறார். “அம்பிபொய், “அந்நியனேஉண்மை என்கிறார். இவன் இருந்தால் அவன் இருக்க மாட்டான், அவன் இருந்தால் இவன் இருக்க மாட்டான் சார். எல்லாவற்றையும் விட முக்கியமாய், இவன் இருந்தால் நாம்இருக்கமாட்டோம். எச்சரிக்கை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.