ஒரு எழுத்தாளன் தன் வாசகனை எப்படி மதிப்பிடுவது?
இந்த கேள்வியே தவறானது. வாசகன் உங்களுடன் அல்ல ஒரு பிரதியுடன் பேசுகிறான். பேசிப்பேசி தன் வாழ்வின் முரண்களை உணர்ந்து அவன் மொழியின் கண்ணிவெடியில் கால்வைத்து தன்னையே கொல்கிறான். வாசிப்பு ஒரு தற்கொலைக்களம், ஒரு பலிபீடம். அங்கிருந்து ஒரு பிரதியோ அதை வாசிக்கும் மனிதனோ மீள்வதில்லை. வாசகனை நீங்கள் “பார்க்கவே” முடியாது எனும் போது எப்படி மதிப்பிட முடியும்?
ஆனால் பார்க்க முடிகிற ஒருவன் இந்த வாசிப்பில் இருந்து ஒரு வேள்வித்தீயில் இருந்து வரும் உருவத்தைப் போல வெளியே வருகிறான். ஆனால் அவன் வாசகன் அல்ல, விமர்சக-வாசகன். அவன் எழுத்தாளனுக்கு கடிதம் எழுதுவான், ஆட்டோகிராப் வாங்க காத்திருப்பான், வாசக வட்டம் அமைத்து அங்கு தேர்தல் நடத்தி வெற்று வாசகர் தலைவன் ஆவான், பிற வாசக வட்டத்தினருடன் மோதுவான், எழுத்தாளன் தன்னைப் பற்றி எழுதியதும் புளகாங்கிதம் அடைவான், எழுத்தாளனின் இடத்தை தான் எடுத்துக்கொள்ளும் ஒரு நாளுக்காக கனவு காண்பான். ஆனால் இவன் நிச்சயமாக “வாசகன்” அல்ல.
வாசிப்பு எனும் அச்சமூட்டும் நடவடிக்கையை, சுய-பலியை, சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிற மற்றொருவன் தான் விமர்சன-வாசகன். அவன் இந்த “தற்கொலையை” பகுத்தறிவைக் கொண்டு விளக்க முயல்கிறான். குற்றக் காரணிகளைத் தொகுக்கிறான். ஆதாரங்களை கோர்வையாக்கி ஒரு கதையாடலை நெய்து குற்றத்தை நிரூபித்து வழக்காடுகிறான். ஆனால் அவன் வேடிக்கை பார்க்கிற ஒரு வெளியாள். அவனை நீங்கள் மதிப்பிட முடியும், அவனுக்கு நீங்கள் உங்கள் அரசவையில் ஒரு இருக்கை அளிக்கலாம், அவனுக்கு நீங்கள் ஊதியம் கொடுக்கலாம், விலைக்கு வாங்கலாம், தொண்டர் படையாக்கலாம். ஆனால் வாசகனை எடுத்துக்கொள்ள, எதிர்கொள்ள முடியாது. வாசகனும், வாசக-விமர்சகனும் ஒரே மனிதனுக்குள் தான் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் இரு எதிரெதிர் வேலைகளை செய்கிறார்கள் - ஒருவன் குற்றவாளி, மற்றவன் துப்பறிவாளன். நாம் செய்கிற அபத்தம் துப்பறிவாளனை வைத்து குற்றவாளியை மதிப்பிடுவது. துப்பறிவாளன் ஜெயிக்கும் போது குற்றவாளி தோற்கிறான்; குற்றவாளி ஜெயிக்கும் போது துப்பறிவாளன் தன் வேலையை இழக்கிறான். தன் துப்புத்துலக்கலின் போது குற்றவாளி இறந்து விட்டான், குற்றத்திற்கான தடயமே கிடைக்கவில்லை என அவன் அறிகிறான், ஆனால் அவன் அந்த உண்மையைக் கண்டு அஞ்சுகிறான். அவன் ஒரு குற்றத்தையும், குற்றவாளியையும் கற்பனை செய்து அறிக்கையை எழுதி சமர்ப்பிக்கிறான். ஜெயமோகனின் தரப்பு இத்தகைய அறிக்கைகளையே கொண்டாடுகிறது. இத்தரப்பு பொய்யைத் தொழுகிறது.

Comments