முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹைடெக்கர் குறிப்புகள் (4)



இருப்பு என்றால் என்ன?

நான் இருக்கிறேன் என்பதே இருப்பு. “இருக்கிறேன்என்றால் வாழ்தலா? இல்லை. தத்துவத்தில் இதற்கு வேறொரு பொருள் உண்டு. எதுவாக எப்போது எப்படி இருக்கிறேன் என்பதே தத்துவத்தில் உங்கள் இருப்பு.

இருப்பு குறித்த விவாதம் என்பது நமது இந்திய மரபில் குறிப்பாக பௌத்ததில் வருகிறது - மிகவும் குறிப்பாக நாகார்ஜுனரின்மூலமத்யமகாகாரிகையில்”. இந்நூலில் நாகார்ஜுனர் பொருட்களின், மனிதர்களின், உயிர்களின் இருப்பு பற்றி விவாதிக்கும் போது இந்த இருப்புகள் சாரமற்றவை என்கிறார்


மேற்கில் இது குறித்து முதலில் தீவிரமாக தனது மெய்யியல் நூலில் விவாதித்தவர் அரிஸ்டாட்டில். அவர் நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு பொருட்களின் இருப்பு குறித்து விவாதித்து விட்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்த சாரமான மாற்றமில்லாத இருப்பு உண்டு என ஒரு முடிவுக்கு வந்தார். .தா., ஒரு கோப்பையில் நீங்கள் மது அருந்துகிறீர்கள் என்றால் அப்போது மது அருந்தப்படும் கோப்பை எனும் இருப்பு அதற்கு வருகிறது. அது மதுக்கோப்பை ஆகிறது. ஒரு கப்பல் வெறுமனே கப்பல் ஆவதில்லை, அதில் நாம் பயணிக்கும் போதே அந்த இருப்பை அது கொள்கிறது. இதை அவர் “present at hand” என்றார். ஆனால் அரிஸ்டாட்டில் இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தார் என்றாலும் அவர் இருப்பை ஒவ்வொரு பொருளின் சுபாவம் என சுருக்கினார். கப்பலில் செல்லும் மனிதனின் இருப்பு என்னவாகிறது என அவர் கேட்கவில்லை. கப்பல் அவருக்கு வெறுமனே ஒரு கருவி, மனிதனை அது பாதிப்பதில்லை.




இருப்பு குறித்து பேசியவர்களில் அடுத்து 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த டெகார்ட் முக்கியமானவர் - இவர்நான் சிந்திக்கிறேன், ஆகையால் இருக்கிறேன்எனும் பிரசித்தமான மேற்கோளுக்காக நினைவு கூரப்படுபவர். அவர் தான் முதன்முதலில்சிந்திக்கும் இருப்புகள்எனும் சிந்தனைக்கு வழிகோலினார். அவரைப் பொறுத்தவரையில் ஒரு கோப்பையை நாம் மதுவருந்த பயன்படுத்தவதனால் அல்ல அதை மதுவருந்த பயன்படுத்துவதாய் ஒருவர் கருதுவதாலே அதன் இருப்பு மதுக்கோப்பையாகிறது. அதாவது பயன்பாடல்ல, சுயமே இருப்பை தீர்மானிக்கிறது. மற்றொரு உதாரணம்: திருமணம் செய்ததாலே இருவர் தம்பதியாவதில்லை. பரஸ்பரம் கணவன் மனைவியாகக் காண்பதாலே, கருதுவதால் அவர்கள் கணவன் மனைவி. ஆனால் டெகார்ட்டிடமும் ஒரு பிரச்சனை உண்டு - ஒன்றை அல்லது ஒருவரை மற்றொருவர் எப்படிக் காண்கிறாரோ அதைப் பொறுத்து ஒரு இயல்பை அதற்கு / அவருக்கு அளிக்கிறார். என் நண்பனை நான் காண்கையில் அவனுக்கு நான் நண்பன் எனும் பெயரை அளிக்கிறேன், அவன் எனது நட்பின் நீட்சியாக இருக்கிறான். அந்த கணத்தில் அவனுக்கு என தனித்த இருப்பு இல்லை, அல்லது அவனது இருப்புக்கு என் மீது தாக்கமில்லை. டெகார்ட் சிந்திக்கிற மனிதனுக்கு அதிக இடமளித்து அவனது நீட்சியாகவே மொத்த உலகையும் பார்த்தார்


இப்படி அவர் ஒவ்வொன்றுக்குமான பின்னணியை, சூழலைப் பொருட்படுத்தவில்லை என்பதை ஹைடெக்கர் விமர்சித்தார். .தா., மின்விசிறி ஓட நான் அதன் கீழ் அமர்ந்திருக்கிறேன். மின்விசிறி மற்றும் எனது இருப்புகளை பரஸ்பரம் தீர்மானிக்கிறோம், அதோடு அன்றைய சீதோஷ்ண நிலை, அந்த அறை, அங்குள்ள காலம் என ஒவ்வொன்றும் அந்த இருப்புகளுக்கு பங்களிக்கிறது. இவை சேர்ந்து ஒரு ஒட்டுமொத்த இருப்பு, பிரிக்க முடியாத நிலையான இருப்பு தோன்றுகிறது என ஹைடெக்கர் கருதினார். வெறுமனே நான் அதை மின்விசிறியாகக் கருதுவதாலே, எனது விருப்பத்தினால் அது மின்விசிறியாகிறது எனும் டெகார்ட்டின் மானுட மைய வாதத்தை அவர் ஏற்கவில்லை.


இறுதியாக ஹசர்ல் நமது பிரக்ஞையை அனுபவமாக பொருட்களுடனான உறவில், அவற்றை நாம் எப்படி முன்கூட்டியே தீர்மானித்தபடி பார்க்கிற விதத்தில் தோன்றுவதாக சொன்னார். அவரையும் ஹைடெக்கர் பின்னணிக்கு இடமளிக்காத காரணத்தால் நிராகரித்தார்.


இருப்பை ஹைடெக்கர் இரண்டு சுவாரஸ்யமான உதாரணங்களால் விளக்கினார்:

1) ஒரு காதலியைப் பார்க்க செல்லும் ஆண் அவன் ஒரு தாவரவியல் அறிஞனாக இருந்தாலும் செடிகொடியை அல்ல பூங்கொத்தையே கொண்டு செல்வான். ஏனெனில் அது அவனது காதலின் இருப்பில் ஒரு முக்கிய இடம் பிடிக்கிறது.

2) ஒருவர் சுத்தியலால் அடிக்கும் போது அவர், அவரது, கை, அடிக்கப்படும் ஆணி, சுவர் மற்றும் சுத்தியல் இணைந்து ஒரு இருப்பை உண்டு பண்ணுகிறது. இதனாலே ஒருவர் சுத்தியலால் ஒரு பெண்ணை அடித்தால் செய்தித்தாளில் a woman was hammered என எழுதப்படும் என்கிறார் ஹைடெக்கர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...