முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெபினார்களின் வரவு



வெபினார் (இணையவழி கருத்தரங்கம்) என்ற சொல்லை நான் கேள்விப்படுவதே இந்த நாடடங்கு காலத்தில் தான். நேரடிக் கருத்தரங்கு போல பலரை சந்திக்க, உரையாட, கவனிக்க இதில் வாய்ப்பிருக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கருத்தரங்குகள், கூட்டங்கள் இப்போது இணையவழியாக நடக்கின்றன - பத்து மடங்கு அதிகமாக என நினைக்கிறேன். ஸூம், கூகிள் மீட், மைரோசாப்ட் டீம்ஸ் போன்ற பல செயலிகள் வழியாக. இவற்றை சகஜமாக பயன்படுத்தும் அளவுக்கு நாம் மாறியிருக்கிறோம். (இன்னொரு பக்கம், பொழுதுபோக்கு தளத்தில், இன்ஸ்டாகிராம், யுடியூப் போன்ற தளங்களில் பிரபலங்கள் தினம் தினம் பேட்டி கொடுத்தும் நேரடியாக பேசியும் வருகிறார்கள்.) இதில் நிறைய சௌகர்யங்கள்

1) கருத்தரங்குகளுக்கு காசு கட்ட வேண்டாம் (முன்பு குறைந்தது 500 ரூ வசூலித்தார்கள்.); பயணிக்க வேண்டாம். நான் தூங்கி எழுந்து அப்படியே வெபினார்களில் பார்வையாளனாய் கலந்து கொள்கிறேன், பல்தேய்த்து, காபி குடித்து, சிற்றுண்டி அருந்தி, அப்பப்போ டிவியை வேறு பார்த்துக் கொண்டு கருத்தரங்க உரைகள், விவாதங்களையும் கவனிக்க முடிகிறது. இது ஏன், கட்டுரை எழுதிக் கொண்டு கூட கருத்தரங்கை கவனிக்க முடிகிறது. ஒருமுறை இரண்டு சுவாரஸ்யமான வெபினார்கள் ஒரே சமயத்தில் நடந்தன - நான் இரண்டு கருவிகளில் லாக் இன் செய்து ஹெட்போன்களை காதுக்கு ஒன்றாய் நுழைத்து இரண்டு உரைகளையும் ஒரே சமயம் கேட்டேன்; ஒன்றில் முக்கியமான கருத்து வரும் போது மற்றொன்றின் ஒலியளவைக் குறைத்து கவனித்தேன்; இரண்டிலும் கேள்விகள் எழுப்பி விவாதத்தில் கலந்து கொண்டேன். இப்படி வானமே எல்லை, பைத்தியம் பிடிக்காதவரை.


2) இந்த வெபினார்களில் வெளிநாடுகளில் இருந்து, பல ஊர்களில் இருந்து பிரசித்தமான சிந்தனையாளர்களை, சாதனையாளர்களை பேச வைக்கிறார்கள்; இவர்களை ஒரு நேரடி கருத்தரங்கில் கலந்து கொள்ள வழக்கமாய் வெபினாரில் பேசுவதை விட ஐந்து / பத்து மடங்கு அதிக செலவாகும் - விமான / ரயில் கட்டணம், தங்கும் செலவு, சாப்பாட்டுச் செலவு. பயணித்து சில நாட்களை செலவழித்து வர வேண்டும் என்பதால் நல்ல பேச்சாளர்களை, கலைஞர்களை சுலபத்தில் சம்மதிக்க வைக்க முடியாது. வெபினாரில் அந்த சிக்கலெல்லாம் இல்லை - இன்று பெங்களூர் ஜோதி நிவாஸ் கல்லூரி நடத்திய வெபினாரில் இயக்குநர் கௌதம் மேனன் பேசினார், அரைமணி நேரம் அறிமுக உரை நல்கி விட்டு, பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு இயல்பாக நேர்மையாக பதிலளித்தார், அவரது அறையில் இருந்த கிடார்கள், புத்தகங்கள், அவரது கண்களில் நாம் எப்போதும் பார்க்கும் உக்கிரம், குரலில் அந்த மென்மை, எல்லாரையும் சமமாக பாவிக்கும் போக்கு என ரம்மியமாக ரசிக்கும்படியாக இந்த இணையவழி சந்திப்பு இருந்தது. ஆனால் இதுவே நேரடியான கருத்தரங்கு என்றால் எளிதில் அவரைப் போன்றவர்களை வேலை நெருக்கடிக்கு இடையில் வரும்படி ஒப்புக்கொள்ள வைக்க முடியாது. நிறைய கெஞ்ச வேண்டும், கடைசி நேர ரத்துகள் இருக்கும்.

3) அதை விட முக்கியமாய் மரபான கருத்தரங்குகளில் அவரைப் போன்ற பிரபலங்கள் வரும் போது அவர்களைச் சுற்றி ஆசிரியர்கள், நிர்வாகிகள் என ஒரு அதிகார வட்டம் தோன்றி, சாமான்யர்களிடம் இருந்து அவர்களைப் பிரித்து விடும்; வெபினார்களில் இந்தசமூக இடைவெளி’, அதிகாரப் படிநிலை இல்லை. அவர்களது அறையில் பக்கத்தில் உட்கார்ந்து கேட்பதை போல இருக்கிறது.

 

4) அடுத்து, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை - தற்சமயம் எங்களுடைய ஆங்கிலத்துறை ஒரு கருத்தரங்க இணையவழி நடத்தி வருகிறது; பிரபலங்கள் யாருமில்லை; துறையின் பேராசிரியர்களே பேச்சாளர்கள். அதற்கே ஆயிரத்துக்கும் மேலான பேர் பங்கேற்க பதிவு செய்து கொண்டு ஐநூறுக்கும் மேலானோர் கலந்து கொண்டு வருகிறார்கள். நினைக்க வியப்பாக இருக்கிறது; ஒரு மரபான கருத்தரங்கை நடத்த ஆறு மாதங்களுக்கு மேலாக திட்டமிட்டு, செலவழித்து, நூறு மடங்கு அதிகமாய் உழைத்து ஒருங்கிணைக்க வேண்டும். இப்படி செய்தும் ஐநூறு பங்கேற்பாளர்களை எல்லாம் கற்பனை பண்ண முடியாது. கட்டுரை வாசிக்க மட்டுமே பெரும்பாலானோர் வருவார்கள். ஆனால் இதெல்லாம் அதிகமாய் இல்லாமல் சுலபத்தில் பெரிய தாக்கத்தை வெபினார் மூலம் செய்ய முடிகிறது, முயற்சியும் ஊக்கமும் மட்டும் போதும்.

5) கடைசியாக வெபினார்களின் தளம் என்பது இணையமே என்றாலும் அது பௌதீகமாக நிகழ்வது நமது வீடுகளில் தான் - இன்றைய வெபினாரில் ஒரு பெண் பங்கேற்பாளர் குறிப்பிட்ட ஒரு தகவல் என்னைப் பெரிதும் யோசிக்க வைத்தது: பெண்ணியம் குறித்து வெபினாரில் பேசப்பட்ட கருத்துக்களை அப்பெண்ணுடன் அவரது கணவரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்; ‘இப்படியெல்லாம் இருக்கிறதா, நான் கேள்விப்பட்டதே இல்லையேஎன பெண்ணுரிமை பற்றி அவர் சொல்கிறார். இதுவே மரபான கருத்தரங்கு என்றால் மனைவி ஒரு பக்கம் கல்வித்துறை விவாதங்கள் இருப்பார், கணவர் தன் வேலை, தன் பிரச்சனைகள் என இன்னொரு பக்கம் போய்க்கொண்டு இருப்பார். தன் பெண்ணியக் கோபங்கள் குறித்து அவர் யோசிப்பவை எல்லாம் கணவரின் காதுக்கே போகாது. இந்த வெபினார்கள் இருவரின் உலகங்களையும் இணைக்கிறது. இது ஒரு நல்ல விசயம் - அறிவுப்பரவலில் ஒரு ஜனநாயகபூரவமான மாற்றம். இணையவழி வகுப்புகளிலும் இது நடக்கிறது - மாணவர்கள் ஸ்பீக்கரில் கேட்கிறார்களில் எனில் பேசப்படும் கருத்துக்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் விசயத்தில் அவர்களின் இணையர்களும் தான் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். இப்படித்தான் சமூக மாற்றம் நிகழ முடியும்.


இணையத்துக்குள் அறிவும் கலையும் இலவசமாக இருப்பதாலே வெபினாரிலும் (வேறு வழியின்றி) காசு வசூலிக்கப்படுவதில்லை எனப் புரிந்து கொள்கிறேன், இல்லையென்றால் கோப்பு, சாப்பாடு, டீ, பேச்சாளர் செலவு என கணக்குக் காட்டி ஒவ்வொரு கல்வி நிறுவனமும் 500-1000 என வசூலித்து லாபம் ஈட்ட நினைக்கும். கொரோனா நாடடங்கு விலகியதும் கருத்தரங்க சந்தை மீண்டும் களைகட்டும், வசூலும் தூள் பறக்கும். அறிவுத்துறைகள் ஒரு சிறிய எலைட்டான வட்டத்துக்குள் முடங்கும். அப்படி நிகழக் கூடாது என்பதே என் வேண்டுகோள்


தமிழ் இலக்கியவாதிகள் தனியாக இத்தகைய இணையவழி சந்திப்புகளை செய்து கொண்டு வருகிறார்கள். டி. தர்மராஜ் யுடியூபில் வழங்கிய தத்துவ அறிமுக உரைகள் மிகவும் பயனுடையதாக இருந்தன. (ஆனால் அந்த வரிசை சரியாக விளம்பரப்படுத்தப்படவில்லை.) நிறைய பேர் பங்கேற்கும் வெபினார்களை ஒருங்கிணைக்க நம் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களுக்கு கட்டமைப்பு வசதி (அதுவும் பெரிதாகத் தேவையில்லை என்றாலும்) இல்லை. உயிர்மை, காலச்சுவடு, விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் போன்ற கலாச்சார அமைப்புகள் (பதிப்பகம் என அவர்களை சுருக்கி விட முடியாது) இலக்கியம், அரசியல், சமூகம், தத்துவம் ஆகிய தளங்களில் வெபினார்களை திட்டமிட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். புத்துணர்வு, நம்பிக்கை, படைப்பூக்கம் என இலக்கிய உலகம் மீண்டு வர இது உதவும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...