நா. முத்துக்குமார் பற்றின என் முகநூல் பதிவுக்கு பல திசைகளில் இருந்து குதித்து வந்து சீன ராணுவம் போல அதிர்ச்சித் தாக்குதல் நடத்திய நா.மு தற்கொலைப் படையினரில் சிலர் முத்துக்குமாரின் புகழைக் கண்டு பொறாமைப் பட்டு நான் அவரை விமர்சிப்பதாகக் கூறினர். இன்னும் சிலர் என்னால் ஒருபோதும் முத்துக்குமாரின் பிரபல்யத்தை, “பல கோடி இதயங்களை வென்ற” அவரது வீச்சை தொட முடியாது என கருத்திட்டிருந்தனர். நான் அவர்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே தான் - நீங்கள் ஒரு சினிமாக்காரரை மட்டுமே சினிமாக்காரருடன் ஒப்பிட வேண்டும். ஒரு திருடனை ஓவியர், பிளம்பர், மீனவர், முடிதிருத்துநர் போன்றோருடன் எப்படி நாம் ஒப்பிடுவதில்லையோ அப்படியே சினிமாக்காரருடனும் இலக்கியவாதியை ஒப்பிடுவது அபத்தம். சினிமாவுக்குள் கூட ஒரு நட்சத்திர நடிகரை ஒரு நடிகையுடன் ஒப்பிட முடியாது, நடிகையின் புகழை இயக்குநரின் புகழுடன் ஒப்பிட முடியாது, ஒரு மகத்தான இசையமைப்பாளரின் புகழை பாடலாசிரியரின் புகழுடன் ஒப்பிட முடியாது. இந்த புகழின் அளவுக்கும் அவர்களின் திறமைக்கும் சாதனைக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை, சொல்லப் போனால் நேர்கீழாகவே அது இருக்கும். ஒரு நோய் கொண்ட சமூகத்தில் பாகுபாடுகள் இப்படியே அமையும். இப்படியான நிலையில் ஒரு பாடலாசிரியனை நீங்கள் ஒரு தீவிர படைப்பாளியுடன் ஒப்பிடலாமா? அம்மி கொத்துகிறவரை சிற்பியுடன் ஒப்பிடக் கூடாது.
இது ஏன், நீங்கள் ஒரு சினிமாக்காரரை ஒரு மகத்தான அரசியல் தலைவருடன், முதல்வராக இருந்தவருடன் கூட ஒப்பிட முடியாது - எம்.ஜி.ஆரின் கிளாமர் முன்பு கலைஞர் தொடர்ந்து தோற்கவில்லையா? அது கலைஞரின் தவறு அல்ல, அது நடிப்பையும் அரசியலையும் உங்களைப் போன்றோர் கலந்ததன் தவறு. அதன் விளைவாகவே ஜெயலலிதாவால் தொடர்ந்து இங்கு ஜொலிக்க முடிந்தது. (அவர் இடத்தைப் பிடிக்க ரஜினி, விஜய் போன்றோர் இன்று துடிக்கின்றனர்.) எண்பதுகளின் இறுதியில் கூட, எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அதிமுகவின் பிரச்சாரத்துக்கு வேறு தலைவர்களை கொண்டு சென்றால் கூட்டம் சேராது என ஜெயலலிதாவையே அனுப்பினார்கள். அண்மையில் வடிவேலுவும் சிங்கமுத்துவும் எதிரெதிராக தேர்தல் பிரச்சாரக் களத்தில் நிறுத்தப்பட்டதைப் பார்த்தோம். இதெல்லாம் குடிக்கும் நீருடன் சாக்கடைக் குழாய் இணைக்கப்பட்டதைப் போன்ற அவலங்கள். நீங்கள் ஒரு அரசியல் தலைவரிடம் சென்று உங்களுக்கு ரஜினியின் அகில இந்திய புகழ் உண்டா, அவரைப் போல உங்களைக் கோடிக்கணக்கானோர் கொண்டாடுவார்களா எனக் கேட்கலாமா? கடவுள் கூட விதிவிலக்கில்லை - நம்மவர்கள் சர்வசாதாரணமாக நடிகைகளுக்கு கோயில் கட்டி கடவுளை விட நடிகையே மேல் எனக் கோருவார்கள். ஒருவேளை கடவுளே இறங்கி வந்து “இது நியாயமா?” எனக் கேட்டால் “ஓய் உமக்கு எங்கள் குஷ்பு, நயன்தாரா அளவுக்கு புகழ், ரசிகர்கள் உண்டா? கிளாமர் உண்டா?” என நம்மவர்கள் திரும்ப கேட்பார்கள்.
இதன் பொருள், எனக்கு சினிமாக்காரர்கள் மீது வெறுப்பு, மனவிலக்கம் என்றல்ல. அவர்கள் வெகுஜனக் கலைஞர்கள், அதற்கான மதிப்பை அவர்களுக்கு அளிப்போம். ஆனால் தமிழகத்தில் ஆரம்பிக்கும் அத்தனை நதிகளும் சினிமா எனும் கடலில் தான் போய் கலக்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்கக் கூடாது.
சினிமா என்பது இங்கு என்றல்ல உலகம் முழுக்க ஒரு மகத்தான, ராட்சஸ வளர்ச்சி கண்டுள்ள வெகுமக்கள் ஊடகம். நீங்கள் அமெரிக்காவில் போய்க் கேட்டால் கூட ஒரு நடிகனே ஒரு சிறந்த இலக்கிய நாவலாசிரியனை விட அதிகப் புகழுடன் இருப்பான். அவர்களுக்கும் நமக்கும் ஒரே வித்தியாசம் அவர்கள் இந்த புகழ் வீச்சைக் கொண்டு எழுத்தாளனை மதிப்பிட, மட்டம் தட்ட மாட்டார்கள் என்பது. அவர்கள் எந்த நடிகனுக்கு அதிக ரசிகர்கள், யார் படம் அதிக நாட்கள் ஓடும் என பரஸ்பரம் அடித்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு கலைஞனுக்கும் கொடுக்க வேண்டிய இடம், மரியாதை என்னவெனத் தெரியும். கேரளாவில் எம்.டி நடிகர்கள் அளவுக்குப் புகழ் கொண்டவர் தான், ஆனால் அவரால் மோகன்லாலை நட்சத்திர அந்தஸ்தில் மீற முடியாது. லாலின் படங்களைப் பார்த்த அளவுக்கு மக்கள் எம்.டியின் நாவல்களை கேரளாவில் படித்திருக்க மாட்டார்கள். ஆனால் லால் தனக்கு இணையான ஒரு கலைஞனாகவே எம்.டியை அங்கு கருதுவார். சொல்லப் போனால் எம்.டி வந்தால் அவர் எழுந்து நின்று மரியாதை செலுத்துவார். முக்கியமாக அங்கு ஆரம்ப கட்ட எழுத்தாளனைக் கூட பொதுமக்கள் இப்படி அவமதிக்க மாட்டார்கள். இங்கு விஜய்க்கு அசோகமித்திரன் என்றால் யாரெனத் தெரிந்திருக்குமா? படிக்க வேண்டாம், பெயராவது தெரிந்திருக்குமா?
மற்றுமொரு விசயத்தையும் குறிப்பிட வேண்டும்:
எனக்குத் தெரிந்து மிகச்சில தீவிர எழுத்தாளர்கள் தாம் தமக்கு சினிமாப் புகழ் இல்லையே என மருகுவார்கள். அவர்களில் ஒரு சிறிய பகுதியினர் பாட்டெழுத வாய்ப்பு தேடுவார்கள். இதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால் நான் பார்த்துள்ள நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் தமது ஆயுட்காலம் முழுக்க இருட்டிலேயே முடியும் எனத் தெரிந்தே தான் அவர்கள் எழுத வருகிறார்கள். அவர்கள் பாடலாசிரியர்களை விட அதிக முனைப்புடன் துடிப்புடன் பண்பாட்டுத் தளத்தில் இயங்குகிறார்கள். தமக்குப் பிடித்திருக்கிறது என்பதால், அது தம் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் தருகிறது என்பதால், அது தம் மொழிக்கும் பண்பாட்டுக்கும் அளிக்கும் ஒரு கொடை என்பதால் செய்கிறார்கள். எழுத்தாளர்கள் இந்த தமிழ் சமூகத்தில் இப்படி கவனம் பெறாத தரப்பாகவே நீண்ட காலம், அடுத்த பல பத்தாண்டுகள், இருந்தாக வேண்டும். அதுவரை இங்கு இலக்கியத்தில் நுழையும் ஒவ்வொருவனும் ஒரு விளிம்புநிலை மனிதனே. தமிழ் இலக்கியத்தின் மிகப் பெரிய நட்சத்திரங்களான எஸ்.ரா, ஜெ.மோ போன்றோரை விட ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்புகள் தாம் பொதுமக்களுக்கு அதிகம் தெரியும், அதிகம் பிடிக்கும். அதற்காக எஸ்.ராவும், ஜெ.மோவும் சேலைகட்டி தம் இடுப்பு மடிப்புகளைக் காட்டி படமெடுத்து புகழ் பெற முடியுமா?
இந்த நிலை மாறுவது சுலபத்தில் நடக்காது, அதற்கு கல்வி இந்த சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரவ வேண்டும். வேலையை, பணத்தைப் பற்றி அதிக கவலையில்லாமல் மக்கள் படிக்கிற பல தலைமுறைகளாக மக்கள் படிக்கிற நிலை வர வேண்டும். இங்கே சினிமா வெறியர்களாகத் திரிகிறவர்களின் முகநூல் பக்கங்களைப் போய் பார்க்கும் போது அவர்களின் வாசிப்பும் பெரும்பாலும் பூஜ்யமாக இருக்கும் அல்லது அவர்கள் எழுபதுகளில் பிறந்தவர்கள் எனில் வெகுஜன பாக்கெட் நாவல்கள் படித்திருப்பார்கள் எனத் தெரிகிறது. இதை ஒரு குற்றமாக நான் சொல்லவில்லை - இவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் இலக்கியம், தத்துவம், சமூகம், அரசியல் என புத்தக வாசிப்பை மேற்கொள்வார்கள்; அவர்கள் பா. விஜய்யும், நா.முத்துக்குமாருமே மகத்தான கவிகள் என பேசுமளவுக்கு முதிர்ச்சியற்றவர்களாக இருக்க மாட்டார்கள்.
நான் இங்கு சாதி, பொருளாதார நிலை போன்ற பாகுபாடுகளை காரணிகளாகப் பார்க்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் - கேரளா நம்மை விட வளர்ச்சியில் நலிந்த மாநிலம். ஆனால் அங்கே எல்லா நிலையில் உள்ளவர்களும் படிக்கிறார்கள். ஆனால் இங்கே நாம் ஒப்பிடுகையில் அதிக வளர்ச்சி பெற்றிருந்தாலும் ஒரு மிகச்சிறிய மத்திய வர்க்க பகுதியினர் தாம் படிக்கிறார்கள், எழுதுகிறார்கள். அவர்களும் திராவிட இயக்கத்தின், இடதுசாரிகளின் அரசியல் பிரக்ஞை அளித்த விழிப்புணர்வால் படிக்க ஆரம்பித்தவர்கள் அல்லது வசதியாக உட்கார்ந்து படிக்கும் நிலப்பிரபுத்துவ வம்சாவளியில் தோன்றியவர்கள். இதில் சாதி, வர்க்க பாகுபாடு ஒன்றுமில்லை. ஒட்டுமொத்தமாக இது ஒரு குப்பைக்கிடங்கு. இங்கு நாமெல்லாரும் ஒரே இடத்தில் தான் ஒரு மிகச்சிறிய ஒளிரும் வைரக்கல்லைப் போல இருக்கிறோம். மலை கலையான குப்பைக் கூளங்களுக்கு நடுவே நம்மை யாருக்கும் புலப்படவில்லை. நாம் ஒன்றாகத் தான் முன்னேற முடியும். அதுவரை இந்த தற்கொலைப் படையினர், படிக்காமல் இருப்பதை ஒரு தகுதியாக நினைப்பவர்கள் நம்முடன் இருந்தே ஆவார்கள். உச்சநிலை எழுத்தாளர்களுக்குக் கூட புத்தகம் சில ஆயிரங்களுக்கு மேல் விற்காத நிலை தொடரவே செய்யும்.
இதை என் சக எழுத்தாளர்கள் நன்றாகவே அறிவார்கள். ஒரு சிறந்த கவிஞனிடம் போய் நம் தற்கொலைப் படையினர் “பா.விஜய்யின் நூல் லட்சக்கணக்கில் விறகும். உன் புத்தகத்தை நூறு பேர் படிப்பார்களா?, யார் பெரிய கவிஞன்?” என கூச்சமின்றி கேட்பார்கள். இப்படிக் கேட்பது தமக்குத் தான் அசிங்கம் எனப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் எழுத்தாளன் ஒரு சிறிய மூலையில் போய் ஒதுங்கிக் கொள்வான். (என்னைப் போன்ற ‘பைத்தியங்கள்’ வெளியே வந்து கல்லெறியை எதிர்கொள்வார்கள்.) அவனுக்கு சினிமா குறித்த பொறாமையோ வயிற்றெரிச்சலோ இராது. இருந்தால் அவன் எழுதவே வர மாட்டான். சினிமாப் புகழைக் காட்டி அவனைப் புண்படுத்த எல்லாம் முடியாது.
ஒரு பேஸ்புக் பெண் பதிவர் நான் ஹைடெக்கர் குறித்து எழுதிய குறிப்பை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து “இப்படி மிகக்குறைவாய் லைக்கு வாங்கும் இவருக்கு என்ன திமிர் பாருங்க” என கலாய்க்கிறார். அடப்பாவமே! ஹைடெக்கரைப் பற்றி தமிழில் மிக மிகக் குறைவாகவே எழுதப்பட்டிருக்கிறது. அவரை மேற்குலகிலேயே மக்கள் படிக்கத் திணறுவார்கள். அவரைப் பற்றி தமிழில் எழுதினால் பல்லாயிரம் பேர் படிக்க மாட்டார்கள் என எனக்குத் தெரியாதா? தெரிந்து தான் எழுதுகிறேன். அனுமோளின் படத்தைப் போட்டு ஒரு வரியை ரெட்டை அர்த்தத்துடன் பதிவேற்றினால் கூடுதல் லைக்குகள் கிடைக்கும் என் எனக்குத் தெரியும். அரசியல், சர்ச்சைக்குரிய விசயங்களைப் பற்றி மிகச்சிறிய குறிப்புகளை எழுதினால் பல்லாயிரம் லைக்குகள், ஆயிரக்கணக்கில் பகிர்வுகள் வருமெனவும் எனக்குத் தெரியும். அப்படியான எளிய உடனடி நுகர்வுக்கான பதிவுகளையும் எழுதியிருக்கிறேன். அதில் எனக்கு எந்த கிளுகிளுப்பும் இல்லை, இது குறித்து எந்த ஏமாற்றமும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலை வெகுவாக முன்னேறும் என்றும் அறிவேன். அதற்காக நான் காத்திருப்பேன். இந்த உடனடி விருப்பக்குறிகளுக்காக இரவுபகலாய் யோசித்து மண்டையை உடைக்க மாட்டேன்.
இவர்கள் பைத்தியங்கள், விலகியிருப்போம் என நான் யோசிக்கப் போவதில்லை. நான் இவர்களுடனே இருப்பேன். ஒருநாள் இவர்களுக்குத் தெளிவு பிறக்கும். அன்றும் நான் இருப்பேன்.
பின்குறிப்பு: இந்த சந்தர்பத்தில் ஆதரவாய் உடன் நின்ற நண்பர்களுக்கு நன்றி!

Comments