முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுப்பேட்டை



செல்வராகவன் எனக்கு ஏற்கனவே பிடித்தமான இயக்குநர் - அவரது படங்களில் நான் திரும்பத் திரும்ப பார்ப்பதுபுதுப்பேட்டை” (2006) தான் (எப்படி முப்பது தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பேன்.). அதன் உருவாக்கம், இசை, அதன் பின்நவீனத்தன்மை, ஆண்-பெண் உறவின், மானிட இயல்பின் தலைக்கிழான சித்தரிப்பு, தமிழ் வணிக சினிமா நுண்ணுணர்வுகளை, நம்பிக்கைகளை சீண்டுகிற துணிச்சல், தனுஷின் அபாரமான நடிப்பு, பாலா சிங்கின் அட்டகாசமான உடல்மொழி, மணி, தமிழ்ச்செல்வன், மூர்த்தி, மூர்த்தியின் சகோதரன், கொக்கிக் குமாரின் அப்பா சேகர், அவனது குழந்தையை எடுத்து வளர்க்கும் ஏழைப்பெண்ணாக வரும்பசிசத்யா போன்ற உப-பாத்திரங்கள் சிரத்தையுடன் அமைக்கப்பட்டுள்ள விதம், உலக திரைப்படங்களை நினைவுபடுத்தும் பின்னணி இசை, இதற்கு முந்தைய, பிந்தைய எந்த தமிழ்ப் படங்களையும் நினைவுபடுத்தாத அதன் தொனி என பல விசயங்களுக்காக இப்படம் சிலாகிக்கத்தக்கது. நேற்று திரும்பப் பார்க்கும் போது நான் அதிகமாக வியந்தது செல்வராகவன் எப்படி ஒவ்வொரு பாத்திரத்துக்கும் - சில வினாடிகளே வருகிறவர்கள் என்றாலும் - அதற்கான நியாயத்தை, துல்லியமான குணவார்த்தை வழங்கி இருக்கிறார் என்பது (இதற்கான பெருமை வசனம் எழுதிய பாலகுமாரனையும் சேரும்). ஆகையாலே கொடூரமான வில்லனாகக் கருதத்தக்கவர்களை மனிதர்களாகவும், இயல்பான மனிதர்களாக கருத்தத்தக்கவர்களிடம் அசாதரணமான குரூரத்தையும் அவரால் காட்ட முடிகிறது.

 படம் துவங்கும் போது வரும் ஆகக்குரூரமான காட்சி கொக்கிக் குமாரின் அப்பாவான சேகர் அவனது அம்மாவின் கழுத்தை வெட்டிக் கொல்வதே. குமார் இதை நினைவுகூறும் போது அம்மாவுக்குசின்ன கழுத்து”, அதை அப்பா வெட்டியதில் கழுத்தையே காணவில்லை என்கிறான். குமாரின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போடும் கொலை இது - அவனுக்கு அப்போது பதின்வயது. முதிராத சிறுவன். தன்னை ஆணாக, துணிச்சல்காரனாக காட்ட விரும்பும் விளையாட்டுப் பையன். அதன் பிறகு அவன் அந்த முதிரா நிலையிலே நீடிக்கிறான். அதறான உளவியல் விதை இந்த கொலையுடன் தான் இடப்படுகிறது.


 அம்மாவுக்கும் அப்பாவுக்கு அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. அம்மா எடுத்த எடுப்பில் கையை நீட்டும் இயல்பு கொண்டவள். படம் துவங்கும் போதே அவள் கொக்கிக் குமார் தெருவில் விளையாடிக் கொண்டிருக்க அடித்தே பள்ளிக்கு விரட்டுகிறாள். கணவனிடம் முரண்படுகிறாள். கணவன் ஒரு வாடகைக்கொலையாளி. அவருக்கு ஏற்கனவே ஒரு தொடுப்பும், அவ்வகையில் வேறொரு குடும்பமும் உண்டு. மனைவி மீது சந்தேகம் வேறு. ஆக ஓரிரவில் இதனால் நடந்த சண்டையில் அவள் அடிக்க வர அவர் கத்தியால் கழுத்தை வெட்டி விடுகிறார். அம்மாவின் சடலத்தைப் பார்க்கும் குமாருக்கு அதிர்ச்சியை தாள முடிவதில்லை; இழப்பை ஜீரணிக்க முடிவதில்லை. அழுதுகொண்டே இருக்கிறான். அவனையும் கொன்று விடுமாறு சேகரிடம் அவரது நண்பர்கள் சொல்லும் போதுஉனக்குத்தான் மற்றொரு குடும்பமும், அதில் பிள்ளைகளும் உண்டேஎன நியாயம் சொல்கிறார்கள். இப்படி ஒவ்வொரு கொடுங்குற்றத்துக்கும் அதற்கான நியாயம் சொல்லப்படுகிறது.

 அதோடு சேகரின் தடுமாற்றங்கள் - அவரால் சுலபத்தில் தன் மகனைக் கொல்ல முடிவெடுக்க முடிவதில்லை, ஆனால் மகனால் தான் மாட்டிக்கொள்வோம் எனும் பயம் அவரைத் தடுமாற வைக்கிறது, இரவெல்லாம் யோசித்தபடி படுத்திருக்கிறார், அடுத்த நாள் அவர் கத்தியை எடுத்து தயாராகும் போது குமார் தப்பித்து ஓடுகிறான், அவர் பின்னால் ஓடி வருகிறார், ‘பாசத்துடன்கூவியபடி. பின்னர் குமார் ஒரு பெரிய தாதாவாகிட அவன் அப்பாவிடம் திரும்புகிறார். அப்போது அவர் நொடிந்து போயிருக்கிறார், குமாரி வளர்ச்சியால் பெருமை கொள்கிறார். அவர் அவனைப் பல இடங்களில் தேடியதாக, அவனைக் கொல்லும் உத்தேசம் தனக்கு ஒருபோதும் இருக்கவில்லை என்கிறார். யோசித்துப் பார்த்தால் இது உண்மையா, பொய்யா என நம்மால் தெளிவாக கண்டறிய முடியாது. சேகரின் பேச்சு படம் முழுக்க இப்படித்தான் மருண்மையாக இருக்கும். ஒரே சமயம் அன்பு, பயம், வீராப்பு, குரூரம், சவால் விடுவது என முன்னுக்குப் பின் முரணான பல உணர்வுகள் அவரது பேச்சில், இயல்பில் இருக்கும்

இதையே பாலா சிங் நடித்த அன்பு பாத்திரத்துக்கு சொல்லலாம். அவர் ஒருவரை மிரட்டியபடியே அன்பும் காட்டுவார், குமாரை அடித்து விட்டுஏண்டா உன்னை நான் எப்படி வச்சிருந்தேன், ஒவ்வொரு நாளும் மத்தவங்க விட்ட உன்னை எவ்வளவு உயர்வா பேசுவேன் தெரியுமா?” என்று கலங்குவார். “அன்புண்ணாஎன அழைப்பவர்கள் மத்தியில் குமார் முதன்முறையாக அவரைஅன்பு சார்என அழைக்கும் போது பாலா சிங் ஒரு திகைப்பும் கூச்சமும் பெருமிதமுமான பாவனையை காட்டுவார், அந்த ஷாட்டை எத்தனை முறை பார்த்தாலும் நான் கைதட்டுவேன். இதே அன்பை பின்னாளில் குமார் முறைக்கும் போது அவர் திகைப்பு, கோபம், அலட்சியம், சீற்றம், ஆணவம் என பல மனநிலைகளை வெளிப்படுத்துவார். ஆனால் குமார் அவரைப் பொருட்படுத்தவில்லை என்றதும் அவனைத் துரத்தி விடுவார். அவன் போனதும் கோபம் தணியாமல் அவனைக் கொல்ல ஆளனுப்புவார். அப்போது கோபம் தீராமல் கிருஷ்ணவேணியை (சினேகா) அடித்து சிதைப்பார். ஒரே சமயம் அன்பு (தன் பெயருக்கு ஏற்ப) ஒரு குழந்தை, ஆனால் தன் ஆண்மை கேள்விக்குட்படுத்துவதை தாங்க முடியாத முரடன்.

குமாரின் ஆரம்பகால சகாவான மணியின் பாத்திரத்தின் பரிந்துணர்வு முதல் சில காட்சிகளிலேயே நிறுவப்பட்டு விடும், இறுதியில் குமாரின் குழந்தையை மீட்டளித்து கொடுத்து அதனால் உயிர்த்தியாகம் செய்யும் வரையில் அவனது ஆதார சுபாவத்தில் மாற்றமிராது.


 அதே போல சில நிமிடங்களே தோன்றும் மூர்த்தியின் தம்பியின் பாத்திர அமைப்பு - அவன் உடல்ரீதியாக பலவீனமானவன், தன் ஆண்மையை நிரூபிக்க எத்தனிக்கிறான், சினிமாவில் ஹீரோவாக முயன்று தோற்றவன், அண்ணனுக்கு ரொம்ப செல்லம். இதையெல்லாம் காரில் இருக்கையில் அவன் இருமுவது, அதையொட்டி அண்ணன் அவனைக் கண்டிப்பதான சில வினாடிகளே வரும் உரையாடலிலே நமக்குத் தெரிய வந்து விடுகிறது. அவன் கொக்கிக்குமாரை அடித்தே கொல்ல முயன்று அது நடக்காமல் போய் எதிர்பாராமல் கொக்கிக்குமாராலே கொல்லப்படுவது வரை ஒரு கச்சிதமான குணவார்ப்பு தோன்றி விடுகிறது. “பொல்லாதவனில்டேனியல் பாலாஜியின் பாத்திரம் இந்த பாத்திரத்தின் தாக்கத்தில் வெற்றிமாறனால் உருவாக்கப்பட்டதோ எனும் ஐயம் எனக்கு உண்டு - சொல்லப்போனால் மிகுந்த பாசம் கொண்ட தாதா அண்ணன்-அவனுடைய பலவீனமான அகந்தை மிகுந்த தம்பி, தோற்றத்தில் சாதாரணமான எளிய மனிதன் ஒருவன் (தனுஷ்), இவர்களில் யார் தனது ஆண்மையை நிரூபிக்கிறார்கள், அப்போது என்னவாகிறது எனும் முக்கோணம் தானேபொல்லாதவனின்கருவே.


குமாரின் குழந்தையை எடுத்து வளர்க்கும்பசிசத்யாவின் பாத்திரமும் துல்லியமானது - ஒரு குழந்தையை வளர்க்க தன் உழைப்பும் அன்பும் போதும், சுயமாய் சம்பாதிக்காத பணம் பிரச்சனைகளைக் கொண்டு வரும் என அவர் போகிற போக்கில் சொல்கிறார். தவறாக ஈட்டின பணத்தால் குமார் தன் மகனை ராஜகுமாரனைப் போல வளர்க்க நினைக்க அவனோ ஒரு ஏழை வீட்டில் வளரும் நிலை ஏற்படுகிறது. ஆரம்பத்தில் நமக்கு பச்சாதாபம் ஏற்பட்டாலும் பிறகு யோசிக்க இதுவே அக்குழந்தைக்கும் நல்லது எனத் தோன்றுகிறது. குற்றத்தின் துர்நிழலில் இருந்து அது தப்பித்தே விடுகிறது.


கொக்கிக் குமாரின் குணவார்ப்புக்கு வருகிறேன் - ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல கொக்கிக் குமார் பதின்வயதிலேயே உறைந்து போன முதிர்ந்து முதிராத ஆள். கிளைமேக்ஸுக்கு முந்தின காட்சியில் அவனை போலிசார் சிறையில் இருந்து வெளியே அழைத்து செல்ல தான் என்கவுண்டர் பண்ணப்படுவோம் என நினைக்கும் அவன் தன்னை கடலில் போடுவதானால் நல்லதே, தன் அம்மா போன இடத்திலேயே தன்னையும் போடவும், அங்கே அவள் இன்னமும் இருந்து கொண்டிருக்கலாம் என்கிறான். படத்தில் அவன் இதயத்தில் ஆழத்தில் இருந்து பேசும் ஒரே வசனம் இதுதான். படத்தின் துவக்கத்தில் ரௌடிகளுடன் இருந்து குடிக்கும் போதும் தன் வாழ்க்கை இப்படி ஆனதற்கு தாயின் மரணமே காரணம் எனச் சொல்வதையும் குறிப்பிட வேண்டும். குமாரின் பிரச்சனை பாலியல் ரீதியானது என எனக்குத் தோன்றுவது இதனாலே:

 அவன் அம்மாவின் மடியில் வளர்ந்த பையன், அம்மாவின் பாராட்டுக்காக, பாசத்துக்காக படிக்க செல்லுகிற, எதையும் பொறுத்துக் கொள்ளுகிற பையன். ஈடிபல் காம்பிளக்ஸ் என இதை வகுத்துக் கொண்டால் குமாருக்கு உள்ளது தாய் மீதான அடக்கப்பட்ட ஒரு இச்சை என ஆகிறது. இதனாலே தாயைக் கொன்ற அப்பாவை கொடூரமாக உயிருடன் புதைத்துக் கொல்லுகிறான். ஆனால் இதை நேரடியாக செல்லும், அவரிடமே கூறுகிற துணிச்சல் அவனுக்கு இருப்பதில்லை. அடுத்து அப்பாவுடன் அந்த கொலைக்கு துணை போன ஆண்களையும் கொல்கிறான். படம் முழுக்க அவனுடைய மோதல் தன்னை விட வயதில் மூத்த அப்பா ஸ்தானத்தில் இருக்கும் ஆண்களிடமே ஏற்படுகிறது; அவர்கள் தன் விருப்பத்தை, கோரிக்கையை மறுக்கிறார்கள் எனத் தோன்றினால் அடுத்த நிமிடமே அவர்களைக் கொல்ல முனைகிறான். (அவனிடம் இருந்து தப்பிப்பது தமிழ்ச்செல்வன் மட்டுமே) மூர்த்தியைக் கொன்று விட்டு அவரை கட்டியணைத்து அவன் ஒரு குழந்தையைப் போல அழுகிறான். ஏன்? அவருடைய தம்பியைக் கொல்ல நேர்ந்த அந்த காட்சியை நினைவுகூர்ந்தா? அது தன் வாழ்க்கையை எப்படி உருமாற்றி விட்டது என யோசித்தா அல்லது தந்தையை ஒத்த இவர் ஏன் தன்னுடன் மோதி தன் கையாலே சாக நேர்ந்தது என நினைத்தா?


குமார் காதலிக்கும் பெண்கள் அன்றலர்ந்த இளம்பெண்கள் அல்ல என்பதையும் கவனிக்கலாம் - முதலில் அவன் தன்னை விட வயதில் மூத்த கிருஷ்ணவேணியிடம் ஈர்க்கப்படுகிறான்; ஏற்கனவே வேறு ஆண்களிடம் தொடர்பு கொண்ட அவள் அவனது இறந்து போன தாயின் இடத்தை எடுத்துக் கொள்கிறாள், இதனாலே அவளிடம் பாலுறவு கொள்வதில் அவனுக்கு மிகுந்த தயக்கம் ஆரம்பத்தில் உள்ளது. அவளை ஒரு வாடிக்கையாளர் துன்புறுத்துவதை போனில் கேட்க நேரும் போதே அவன் அன்பை எதிர்த்து அவளைக் காப்பாற்ற முயல்கிறான், அவளைக் காப்பாற்றும்பொருட்டான மோதலில் தன் அப்பாவின் இடத்தில் இருக்கும் அன்பைக் கொல்லவும் நேர்கிறது. (அதாவது அப்பாவைக் கொன்று அம்மாவைக் காப்பாற்றுவது.) பின்னர் அவன் கிருஷ்ணவேணிக்கு இணையான, மற்றொரு ஆணுக்கு உரிமையாகப் போகிறவளை விரும்பி அடாவடியாக அபகரிக்கிறான். அவளும் ஒருமாற்றுத் தாய் உருவகமே” - என்ன திருமணத்துக்கு முன்னரேஅப்பாவைத்’ (அவளது காதலனை) துரத்தி விடுகிறான்.


குமார் சுலபத்தில் தன் இதயத்தில் உள்ளதை வெளிக்காட்டுவதில்லை - சாவில் இருந்து தப்பித்து ஓடுவது, பசியில் இருந்து தப்பிக்க எந்த எல்லைக்கும் செல்வது, தன்னை யாராவது பார்த்து சிரித்தால் கொலைவெறிக்கு ஆளாவது, அதிகாரத்தின் போதையில் எதை வேண்டுமெனிலும் செய்யலாம், மணமேடையில் இருக்கும் பெண்ணையும் அபகரிக்கலாம், தப்பிக்கலாம், அதுவே நேர்மை என நம்புவது என அவனுக்கான இயல்புகள், தனித்த விழுமியங்கள் உண்டு. ஆனால் அவன் என்ன உண்மையில் நினைக்கிறான் என நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. தன் அப்பா ஸ்தானத்தில் அவன் வைத்திருக்கிற அடியாள் ரவியிடம் ஒரு இடத்தில் தன் பலவீனங்களை ஒப்புக்கொள்கிறான் (அவரும் அவனுக்காக அவனிடத்து இருந்தே குண்டடிபட்டு சாகிறார்). ஆனால் அவனுக்கு என்னதான் உண்மையில் வேண்டும் என நமக்கு இறுதி வரை புலப்படுவதில்லை. செல்வி (சோனியா அகர்வால்) ஒரு காட்சியில் அவனிடம்உனக்கு அழக்கூட வருமா? பக்கத்தில் வா, கண்ணில என்ன தண்ணியா?” எனக் கேட்பாள். குமார் முதன்முதலாய் அழுவது தன் குழந்தை கடத்தப்படும் போதே - ஏனென்றால் அவன் அந்த குழந்தையுடன் தன்னை அடையாளப்படுத்துகிறான், தனக்கு கிடைக்காத வாழ்க்கை அதற்குக் கிடைக்க வேண்டும் என ஏங்குகிறான், அது செத்துப் போய் விடுமோ என அஞ்சும் போதும் தன் காணாமல் போன குழந்தைமைக்கு ஒரு மீட்சி இல்லாமல் போகுமோ எனும் துக்கமே அவனை அசைக்கிறது. அடுத்தடுத்த காட்சிகளில் அவன் மனம் கலங்கி மெல்ல மெல்ல ஒரு மனிதனாகிறான். ஜெயிலில் மரணத்துக்காக காத்திருக்கும் போது தன் அகந்தையின், வெறியின் விளைவுகளைப் பற்றி வெளிப்படையாகவே பேசுகிறான். இது அவனது பாத்திரத்துக்கு ஒரு முழுமையை அளிக்கிறது


புதுப்பேட்டைஅது வெளியான சமயத்தில் சரிவர ஓடவில்லை - அதற்கான காரணம் என்னவென நேற்று பார்க்கையில் எனக்கு விளங்கியது: குமாரின் பாத்திரத்துக்கு என ஒரு தெளிவான இலக்கு இல்லை; அந்த இலக்கு உளவியல் ரீதியாக வலுவாக இருப்பது போல திரைக்கதை அமைப்பில் இல்லை. பார்வையாளனுக்கு கதை திசையற்று அங்கங்கே அலைவதாகத் தோன்றுகிறது. ஒரு வணிகப்படமாக இது முக்கிய பலவீனம். ஆனாலும் பல காட்சிகள் இன்றும் மீம்களில் அடிக்கடி தோன்றுகின்றன (“பயந்துட்டியா குமாரு?”), நம் நினைவில் நீங்காது இருக்கின்றன.

 கணிசமான பாத்திரங்களின் வசனங்கள் எப்படி நேரடியான உறுதியான அர்த்தமின்றி வழுக்கி செல்கின்றன என்பதையே தனியாக (பின்னமைப்பியல் கோணத்தில்) அலசலாம் - தமிழ்ச்செல்வன் பாத்திரம் தன் செயலாளரை வைது விட்டு மறுநொடியில் மைக்கில்செந்தமிழ்க் கவிஞன் நான்என உரையாற்றத் தொடங்கும் இடத்தைக் குறிப்பிடலாம், படத்தின் முடிவில் குமாரும் இந்த நரம்பில்லாத நாக்கையே வரித்துக் கொள்கிறான் (தமிழ்ச்செல்வனைக் கொல்லாமல் தமிழ்ச்செல்வனாகவே மாறுகிறான்).

 செல்வராகவனின் பிற படங்களில் போன்றே இதிலும் பிரதான பெண் பாத்திரங்கள் தட்டையாக உள்ளன. சில காட்சிகள்காட்பாதரில்இருது சுடப்பட்டுள்ளதையும், City of God படத்தை நினைவுபடுத்துவதையும் வேறு குறைகளாகக் குறிப்பிடலாம்.


இன்னும் நூறு வருடம் கழித்தும் இப்படம் செல்வராகவனின் புகழை நிலைநாட்டி நிற்கும்!   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...