முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விராத் கோலி – எங்கிட்ட மோதாதே



2011 உலகக் கோப்பைக்கு பிறகு புற்றுநோயால் தளர்ந்து பிறகு மீண்டு வரும் வேளையில் யுவ்ராஜ் சிங் ஒரு பேட்டி அளித்தார். அதில்காலத்தில் திரும்ப சென்று நான் வேறு விதமாய் ஆட விரும்பினால் அது விராத் கோலியை போலத் தான் இருக்கும். அவரது கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகிய பண்புகள் எனக்கும் இருந்திருக்க கூடாதா என ஆசைப்படுகிறேன்என்றார். ஒருநாள் கிரிக்கெட்டின் அசுரர்களில் ஒருவரான யுவ்ராஜ் ஒரு இளம் வீரரை பற்றி இதை சொல்கிறார் என நினைவில் கொள்ள வேண்டும். திறமையும் கடும் உழைப்பும் ஒன்றாய் சேர்ந்தால் நம்பர் 1 ஆகலாம் என்பதற்கு கோலி ஒரு உதாரணம்.

248 ஒருநாள் ஆட்டங்களில் 11,867 ரன்கள். 43 சதங்கள். பொதுவாக மட்டையாளர்களுக்கு சதத்தை விட அரைசதங்கள் மும்மடங்கு இருக்கும். ஆனால் கோலி 58 அரைசதங்களே அடித்துள்ளார் (ஆனால் இது சச்சினின் சத-அரைசத விகிதத்தை [49-96] விட பலமடங்கு மேலானது). அநேகமாய் பாதிக்குப் பாதி அரைசதங்களை அவர் சதமாய் மாற்றுகிறார். இது ஒரு அபாரமான திறன். டெஸ்ட் போட்டிகளில் அவர் 27 சதங்களும் 22 அரை சதங்களும் எடுத்துள்ளார் - ஒருநாள் போட்டிகளில் அரைசதங்களை சதமாக அவர் உருமாற்றுவதைப் போல டெஸ்டில் அவரால் நிகழ்த்த முடிவதில்லை என்பதை கவனிக்கலாம்; அதற்கு ஒரு முக்கிய காரணம் அவரால் ஒருநாள் போட்டிகளில் போல தன் இன்னிங்ஸை கட்டமைக்க முடிவதில்லை என்பது. ஒருநாள் போட்டிகளில் 15-25வது ஓவர்களுக்குள் களமிறங்கும் கோலி ஒற்றை, இரட்டை ரன்களாக குவித்து 35வது ஓவருக்கு மேல் அடித்தாடுவார். அல்லது பத்தாவது ஓவருக்குள் களமிறங்கினால் அடுத்த 10-15 ஓவர்களில் அதிகமாய் நான்குகளை அடித்து 35-40 ரன்களை எடுத்த பின் ஒற்றை, இரட்டை ரன்கள் மூலம் அரை சதத்தைக் கடப்பார். அடுத்து 35வது ஓவருக்குப் பின்னால் ஆக்ரோஷமாய் ஆடி 45வது ஓவருக்குள் சதமெடுப்பார். ஒருநாள் ஆட்டவடிவில் எல்லையில் எவ்வளவு களத்தடுப்பாளர்களை நிறுத்தலாம் எனும் விதிமுறைகளை, பந்து தொடர்ந்து புதிதாக கடினமாக இருப்பதை பயன்படுத்தி தான் ரன்களை குவிப்பதைப் போல கோலியால் டெஸ்டில் முடிவதில்லை. டெஸ்டில் கோலி நான்காவது களமிறங்கும் போது எதிரணி ஒன்று தடுப்பாட்டத்துக்கு சென்று விடும் அல்லது சுழலர்களை அதிகமாய் பயன்படுத்தும். அப்போது ஒற்றை, இரட்டை ஓட்டங்கள் சுலபத்தில் கிடைக்காது. அவர் பொறுமையாய் ஆடி சதம் எடுத்தாலும் இந்தியா 250 ரன்களை 3 விக்கெட் இழப்புக்கு தாண்டும் பட்சத்தில் கோலி அடித்தாடி சீக்கிரமாய் இலக்கை நிர்ணயிக்கும் நெருக்கடிக்கு உள்ளாவார். வினோதமாய் கோலியால் ஒருநாள் போட்டிகளில் போல டெஸ்டில் பொறுமையாய் அமைதியாய் ஆட முடிவதில்லை. அவர் டெஸ்டில் நிதானத்தை விட ஆக்ரோஷத்தை கடைபிடிக்கிறார். அதே போல கோலி டெஸ்டில் அரை சதத்தைத் தாண்டும் போது அல்லது ஆட வரும் போது இரண்டாவது புதுப்பந்தை எடுத்து விடுவார்கள். இந்த சூழலும் அவரது விக்கெட் விரைவில் விழ, சதமடிக்கும் சாத்தியம் குறைய மற்றொரு காரணம்.


 கோலிக்கு 31 வயதாகிறது. இப்போதைக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாய் 70 சதங்கள் எடுத்திருக்கிறார். இன்னும் 7 வருடங்கள் அவர் ஆடினால் கூடுதலாய் 50 சதங்கள் அடித்து விடுவார், எனில் என்பதில் ஐயமில்லை. அதாவது என் கணிப்பு படி கோலி தன் 35வது வயதுக்கு முன்னரே சச்சினின் சதத்தை முறியடித்து வரலாற்றில் தனி முத்திரை பதிப்பார். ஓய்வு பெறும் போது ரன்களை பொறுத்த மட்டிலுமே அவர் சச்சினை விட 20-25 சதங்கள் கூடுதலாய் (ஒருநாள் + டெஸ்ட் போட்டிகள்) எடுத்திருப்பார்.


ஆனால் ஆட்டத்தரம், எந்த சூழலுக்கு தன்னை தகவமைத்துக் கொள்ளும், எந்த சவாலையும் எதிர்கொண்டு ஜெயிக்கும் திறன் எனப் பார்க்கும் போது சச்சின் எப்போதுமே கோலியை விட பல மடங்கு உயரமானவரே. சச்சின் மலை எனில் கோலி நடுவே. இருந்தாலும் ரன்குவிக்கும், ஆட்டத்தை வென்றளிக்கும் திறனைப் பொறுத்து கோலி சச்சினை விட கெட்டிக்காரர்.

 

ஆவேசத்தின் கனல்


விறகடுப்பு அணைந்த பின்னும் சாம்பலுக்குள் கனல் தகதகத்துக் கொண்டே இருக்கும். கோலிக்குள்ளும் அந்த நெருப்பு ஒரு போதும் அணைவதில்லை. மட்டையாடும் போது மட்டுமல்ல களத்தடுப்பில், வெற்றியை கொண்டாடுவதில், களத்தில் ஒரு புலியை போல் உலாத்துகையில் அவரது கண்களில், நடையில், உடல்மொழியில் ஆக்ரோசம் மிளிர்ந்து கொண்டிருக்கும். ஆனால் பேட்டிங்கின் போது இந்த வெறியுணர்ச்சியை அமைதியான ரன்களாக உருமாற்ற தெரிந்தவர் கோலி. இத்திறன் அவரை போன்று ஆவேசம் மிக்க காம்பிளி, கங்குலி, யுவ்ராஜிடம் கூட இருக்கவில்லை. அதனால் தான் கோலி இவ்வயதிலேயே இவர்களையும் கடந்து சென்று விட்டார்.


அப்பாவின் கனவு


விராத் கோலி தில்லியில் ஒரு பஞ்சாபிய குடும்பத்தில் 1988இல் பிறந்தார். அவருடைய அப்பா பிரேம் கோலி ஒரு வழக்கறிஞர். கோலி தான் குடும்பத்தில் கடைக்குட்டி. அவருக்கு ஒரு அண்ணனும் அக்காவும் உண்டு. மூன்று வயதிருக்கும் போதே அவர் ஒரு சின்ன கிரிக்கெட் மட்டையை எடுத்து விளாசி விளையாடத் துவங்கி விட்டார் என்கிறார் அவரது அம்மா. தெருவில் அவர் விளையாடும் அழகை பார்த்து விட்டோ அல்லது தங்கள் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை இனியும் இப்பையன் உடைக்க வேண்டாம் என கருதியோ அவரது பக்கத்து வீட்டார் பிரேம் கோலியிடம் விராத்தை ஏதாவது ஒரு கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்த்து விட பரிந்துரைத்தார்கள். அப்பா விராத்தை ராஜ்குமார் ஷர்மா எனும் பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார். அங்கிருந்து விராத்தின் கிரிக்கெட் பயணம் நேர்த்தியாக முன்னகர்ந்தது.


தன் அப்பா தினமும் தன்னை தவறாது பயிற்சிக்கு அழைத்து போய் விடுவதை சர்வதேச நட்சத்திரம் ஆன பின்னர் நினைவு கூரும் கோலி தன் அப்பாவின் அருகாமையை மிகவும் மிஸ் பண்ணுவதாய் குறிப்பிடுகிறார். ஏனென்றால் 2006இல் கோலி தன் 18வது வயதில் தன் இரண்டாவது ரஞ்சி கோப்பை ஆட்டத்தை தில்லிக்காக ஆடும் போது அவரது அப்பா மாரடைப்பில் காலமானார். மனமுடைந்து போன கோலி அப்பாவின் சிதைக்கு நெருப்பூட்டிய உடனே ஆட்டத்தை தொடர்வதாய் திரும்ப சென்றார். இது மொத்த தில்லி அணியையும் திகைப்பில் ஆழ்த்தியது. இழப்பின் தவிப்பை மறைத்து விட்டு மன உறுதியுடன் அவர் அன்று கர்நாடகாவுக்கு எதிராய் அடித்த 90 ரன்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியது. அப்பா காலமுற்ற அன்றிரவில் இருந்து கோலி மிகவும் மன உறுதி கொண்டவராக மாறினதாய் அவர் அம்மா ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். தேசிய அணியில் மகன் ஆட வேண்டும் எனும் தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதே ஒரே இலக்காய் கொண்டு கோலி அதன் பிறகு உழைத்தார். அது மட்டுமல்ல அப்பாவின் மறைவுடன் குடும்பம் பொருளாதார ரீதியாய் சரிந்தது. வாடகை வீட்டுக்கு இடம்பெயர்ந்தது. குடும்ப வியாபாரம் தளர்ந்தது. தன் குடும்பத்தை சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பு தன்னுடையது என கோலி ஏற்றுக் கொண்டார். அன்றிருந்து அவர் உருக்கு இதயம் படைத்த முதிர்ச்சியான இளைஞராய் உருமாறினார். இந்த பொறுப்புணர்வையும் உறுதியையும் பின்னர் அவர் பலமுறை இந்திய அணிக்காய் பேட்டிங் செய்த போது வெளிப்படுத்தினார்


முதல் உலகக்கோப்பை


பள்ளி மற்றும் சிறுவர்களுக்கான பிற ஆட்டங்களில் தொடர்ந்து ரன்களை குவித்த கோலி 2008இல் மலேசியாவில் நடந்த 19 வயதுக்கு கீழாருக்கான உலகக்கோப்பை அணிக்கு தலைவராய் நியமிக்கப்பட்டார். அவரது கிரிக்கெட் வாழ்வில் அது ஒரு திருப்பு முனை. உலகக்கோப்பையை கோலி வென்றளித்தார். குறிப்பாய் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா சொற்ப ரன்களில் வெளியேற கோலி அதிரடியாய் தலைமை தாங்கி வெற்றிக்கு வித்திட்டார். அத்துடன் கோலியின் பெயர் இந்தியா முழுக்க பிரபலமாகியது. விரைவில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி துவக்க ஆட்டக்காரராய் களமிறங்கி சிறப்பாய் ஆடினார். கால் பக்கம் மட்டுமே பிரதானமாய் ஆடினாலும் அவரது துணிச்சலும் கவனமும் அற்புதமாய் தனித்து தெரிந்தன. ஆனாலும் அணியில் நிறைய சீனியர் நட்சத்திர வீரர்கள் இருந்ததாலும் கோலி திமிர் பிடித்தவர் எனும் அவப்பெயர் நிலவியதாலும் ஒரு வருடம் அணியில் இருந்து விலக்கப்பட்டார்.


2009இல் மீண்டும் ஆட வந்த கோலி முற்றிலும் மாறுபட்ட, கூடுதல் முதிர்ச்சியான வீரராக இருந்தார். அப்போதைய அணியில் சச்சின், சேவாக், யுவ்ராஜ், தோனி, ரெய்னா போன்று நிறைய அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தனர். அவர்கள் இடையே கோலி ரிஸ்கே எடுக்காமல் ஒற்றை இரட்டை ஓட்டங்களில் கவனம் செலுத்தும் நிதானமான பேட்ஸ்மேன் ஆனார். Off sideஇல் அவரது ஆட்டமும் மெருகேறியது. 2011 உலகக்கோப்பை வந்த போது கோலி உலகின் கவனிக்கத்தக்க மத்திய வரிசை பேட்ஸ்மேனாக இருந்தார். உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சச்சின் மற்றும் சேவாக் ஆட்டமிழந்த நிலையில் கோலி பதறாமல் ஒற்றை இரட்டை ரன்கள் எடுத்து காம்பிருடன் அணியை நிலைப்படுத்தினார். அவரது 35 ரன்கள் அணிக்கு நிதானத்தையும் வேகத்தையும் அளித்து இந்தியா உலகக்கோப்பையை வெல்ல பிரதான காரணமாகியது.


கோலி 2.0


2012இல் இருந்து கோலி புது உயரங்களை எட்ட துவங்கினார். சச்சின், சேவாக், காம்பிர், யுவ்ராஜ் ஆகிய நட்சத்திரங்கள் மங்கத் துவங்க கோலி சூப்பர் ஹீரோவாக உயர்ந்தார். இந்தியா இரண்டாவதாய் பேட்டிங் செய்யும் போது அவரது ஆட்டம் அசாத்தியமாய் இருந்தது. ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற இந்தியா 40 ஓவர்களில் 321 அடிக்க வேண்டியிருந்தது. கோலி 133 அடித்து 37 ஓவர்களிலேயே இலக்கை எட்ட வைத்தார். ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு 148 பந்துகளில் அவர் அடித்த 183 1998இல் ஷார்ஜாவில் சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராய் அடித்த சதத்துக்கு இணையானது.

ஆஸ்திரேலிய தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் கோலி அடித்த கன்னி சதம் அவர் டெஸ்ட் அரங்கில் நிலைபெற உதவியது. 2014இல் இந்தியா மீண்டும் ஆஸ்திரேலியா சென்ற போது கோலி டெஸ்ட் தொடரில் 692 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்கள் எனும் சாதனையை படைத்தார்.

 

குறைபட்ட டெக்னீக்


கோலியின் முக்கிய பலவீனம் அவர் எப்போதும் பேட்டை கால்பக்கம் அடிக்கும் வண்ணம் சற்றே திருப்பி பிடித்திருக்கிறார் என்பது. இதனால் off sideஇல் வைடாக போகும் பந்தை அவரால் சுலபத்தில் விரட்ட முடிவதில்லை. முதல் இங்கிலாந்து தொடரில் சொதப்பிய கோலி அடுத்த பயணத் தொடரில் off ஸ்டம்புக்கு வெளியே விழும் பந்துகளை விடுத்து நேராக ஆடப் பழகி ரன்களை குவித்தார்

கோலியின் அடுத்த பிரச்சனை ஸ்கொயர் கட்

கோலி ஆரம்பத்தில் இருந்தே குறைநீளப் பந்துகளை பின்னங்காலுக்கு சென்று வெட்டும் ஸ்கொயர் கட் அதிகம் ஆடாமல் இருந்தார். இந்த நீளத்தில் பவுலர்கள் தொடர்ந்து வீசும் பட்சத்தில் ஒற்றை ரன்னுக்காக அவர் பந்தை பாயிண்ட் பகுதியில் வழிநடத்தும் ஷாட்டை ஆட அதிகம் முயன்று வந்தார். தன் உடம்பில் இருந்து விலகி பந்தை நோக்கி மட்டையை உந்துகிற இந்த ஷாட் அவ்வப்போது அவரை ஸ்லிப்புக்கு எட்ஜ் செய்ய வைத்தது. இதை உணர்ந்து அவர் பின்னர் தனதான பாணியில் குறைகளைக் கடந்து, ஆஸ்திரேலிய தொடரில் ஸ்கொயர் கட்டை தனதான பாணியில் அடித்து வெற்றியடைந்தார்.


இதை அடுத்து கால்சுழலர்களின் கூக்ளி பந்தை சரியாக கணிக்காமல் பிணங்களை சென்று அதை வெளியே செல்லும் பந்தாக பாவித்து ஆடி விக்கெட் இழக்கும் வழக்கம் கோலிக்கு ஏற்பட்டது. இன்னும் முழுமையாக அவர் கடந்துவிடாத குறை இது.

இருந்தாலும், ஒவ்வொரு தொழில்நுட்ப சவாலையும் அவர் எதிர்கொண்டு உழைத்து மீண்டு வரும் விதம் அவரை ஒரு முழுமையான பேட்ஸ்மேனாக வளர உதவுகிறது எனலாம்.


கேப்டன் கோலி


இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக கோலியின் தலைமை பாஸிட்டிவாக ஆக்ரோசமாய் உள்ளது. தோல்வி நிச்சயம் எனத் தெரிந்தாலும் அவர் பின்வாங்க மாட்டார். அவரால் பவுலர்களை உத்வேகப்படுத்தி பிரமாதமாய் வீச வைக்க முடிகிறது என்பதும் முக்கிய பலம். ஆனால் இதையே அவரது ஒருநாள் அணித்தலைமைக்கு சொல்ல முடியாது.

ஒரு தலைவராக ஒருநாள் போட்டிகளில் கோலி நிலையற்ற தீர்மானமற்ற அணுகுமுறை கொண்டவர் என்பது பெரிய பலவீனம். 2019இல் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையின் போதான அணித்தேர்வு முன்னுக்குப்பின் முரணாக் அமைந்தது, இதுவே இந்தியா கோப்பையை வெல்ல முடியாததற்குக் காரணம் என டாம் மூடி, நசீர் ஹுசேன் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் கருதுகிறார்கள். அதுமட்டுமல்ல ஒரு நீண்ட ஆட்டத்தொடரின் போது தலைவர் கூலாக இருப்பது அவசியம், ஆனால் தீப்பிழம்பான கோலி தன் அணியினரையும் விரைவில் எரிந்தடங்க வைப்பதால், அரை இறுதியின் போதே அணி துவண்டு போகிறது. இக்குறைகளை களைந்தால் மட்டுமே கோலியால் ஒரு உலகக்கோப்பையை வெற்றி வரலாறு படைக்க முடியும்.


கூடுதல் தகவல்கள்


ஆட்டம் ஆரம்பிக்கும் முன் விராத் கோலி நல்ல மூடில் இருந்தால் நிச்சயம் சதம் அடிப்பார். எதிரணி, ஆடுதளம், ஆட்ட சூழல் எல்லாம் ஒரு பொருட்டல்ல” – இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன்.

விராத் கோலி எனக்கு என்னையே நினைவுபடுத்துகிறார்”, மே. தீவுகளின் கிரிக்கெட் மேதை விவியன் ரிச்சர்ட்ஸ்.

2013ஆம் ஆண்டு கோலி அர்ஜுனா விருது பெற்றார்.

2015இல் கோலி T20யில் மிக வேகமாய் 1000 ரன்களை அடித்த முதல் பேட்ஸ்மென் ஆனார்.

ஒருநாள் போட்டிகளில் மிக வேகமாய் 5000 ரன்களை அடித்து சாதனை படைத்தார்.

ஒருநாள் போட்டிகளில் மிக வேகமாய் 10 சதங்களை அடித்த சாதனை கோலியுடையது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...