கோவை ஞானி: “ “மதம் நாம் நினைக்கிற அளவுக்கு வெறுக்கத்தக்கது இல்லை. (...) “மதத்தின் மேலடுக்கு பூசாரித்தனம். தெய்வம், கோயில், வழிபாடு, சடங்கு இதெல்லாம் இந்த மேலடுக்கு. உள்ளடுக்கு ஒன்று இருக்கிறது - தீர்க்கதரிசனம்.” என்னைப் பொறுத்த அளவில் இந்த உள்ளடுக்கையே மதமாக நான் பார்க்கிறேன். சமுதாயத்தில் ஒடுக்கப்படும் சூழலுக்கு எதிராக மக்களுக்கு ஒரு சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. இதற்கு மதம் பயன்படுகிறது. ஒடுக்கப்படும் சூழல் நிலவும் காலம் முழுவதும் மதம் உயிரோடு இருக்கும்.”
(கோவை ஞானியை சமஸ் எடுத்த பேட்டி)
இரண்டு கேள்விகள்: (1) மதம் மக்களுக்கு போலியான ஆறுதலைக் கொடுத்து அவர்களை அந்த சீரழிவுக்குள்ளே மயக்கி நிலைகொள்ள வைக்கிறது என கார்ல் மார்க்ஸ் சொல்கிறார். கோவை ஞானி இதையே தனக்கேற்ப திரித்து “ஒடுக்கப்படும் சூழல் நிலவும் காலம் முழுவதும் மதம் உயிருடன் இருக்கும் என்கிறார்”. எனில் மதம் மனிதனுக்கு மிகவும் அவசியமானது, தனக்கு அதன் உள்ளடுக்கான தீர்க்க தரிசனமே பிரதானம் எனச் சொல்லும் ஞானி மறைமுகமாய் மதத்தைக் காப்பாற்றுவதற்காக எப்பாடு பட்டாவாது ஒடுக்கப்படும் சூழலும் தழைக்கட்டும் என்கிறாரா? ஒடுக்கப்படும் மக்களிடையே அதிகமாய் மதுப்பழக்கமும் உண்டு. இங்கு ஞானியின் லாஜிக் படியே வருவோம்: ஒடுக்கப்படும் சூழல் நிலவுகிற வரை போதை, கஞ்சா போன்ற பழக்கங்களும் இருக்கும். ஆகையால் சாராயம் அவசியமானது, அதை மக்களிடம் இருந்து தடை செய்யக் கூடாது எனப் பேசலாமா?
எப்படி சாராயம் என்பது முதலீட்டியத்தின் கோர முகத்தைக் காட்டாமல் மறைக்கும் ஒரு கருவியோ மதமும் அப்படியே - அது சமூக ஏற்றத்தாழ்வுகளை, அபத்தங்களை, போதாமைகளை நேரடியாய் நாம் காணாமல் நம்மைத் தடுக்கிறது. இங்கு ஏற்றத்தாழ்வில் இருந்து மக்களைப் பாதுகாப்பதோ ஆறுதல் அளிப்பதோ அல்ல மதம், ஏற்றத்தாழ்வுகளுக்கு ஆதாரமான சக்தியாகவே இந்து மதம் செயல்படுகிறது. இதைப் பற்றி அம்பேத்கரில் இருந்து பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால் ஞானியோ “போதை வஸ்து” எனும் உவமையை எடுத்துக் கொண்டு அதையே இந்து மதத்தின் சிறப்பு எனப் பேசுகிறார். ஏற்றத்தாழ்வை சகித்துக்கொள்ள மதம் அவசியம் என்கிறார். எதற்கு சகித்துக் கொள்ள வேண்டும்? இது என்ன சமூகநல நோக்கு ஐயா?
மக்களில் ஒரு சாரார் இந்து பெருமதத்தின் புனிதங்களில் இருந்து விலக்கப்படுவது பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும் ஒன்று. இதைத் தாங்கிப் பிடிக்கும் சிலர் “தீண்டாமை தவறு, ஆனால் அதற்காக மதத்தை ஒட்டுமொத்தமாய் தாக்குவதை அனுமதிக்க மாட்டோம்” என்கிறார்கள். விலக்கி வைப்பது என்பது இந்து வைதிக மதத்தின் அடிப்படையான கருத்தியல், அங்கிருந்தே சாதியம் தோன்றுகிறது என இவர்கள் பேச மாட்டார்கள்.
இதைப் புரிந்து கொள்ள நேரடியான அனுபவம் வேண்டும்: எனக்கு சிறு வயதில் இருந்தே என் ஊனம் காரணமாய் கோயில்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பல அனுபவங்கள் உண்டு. இவற்றில் இரண்டு என் மனத்தில் இன்றும் தங்கி இருப்பவை. ஒன்று எட்டு வயதிருக்கும் போது எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நீலகண்ட ஸ்வாமி கோயிலில் இருந்து என்னையும் அம்மாவையும் பூசாரி ஒருவர் பிற பக்தர்கள் முன்னிலையில் அவமதித்து வெளியே போகுமாறு சொன்னது. நாங்கள் அமைதியாக வெளியே வந்தோம். இது நடந்து 26 வருடங்களுக்குப் பிறகு எனக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஷ்கார் வழங்கப்பட்ட போது ஊர் மக்கள் திரண்டு பாராட்டு விழா எடுப்பதாகச் சொல்லி என்னை அழைத்தார்கள். நான் அங்கு செல்ல மறுத்து விட்டேன். என்னை வெளியேற்றிய அந்த கோயிலை மையமிட்ட ஊர் எங்களுடையது. அங்குள்ள சில வெறியர்கள் வெள்ளைக்காரர்களைக் கூட கோயிலுக்குள் அனுமதிக்காமல் துரத்தியதை நான் பார்த்திருக்கிறேன். நான் எப்படி அங்கு செல்ல முடியும்?
அடுத்த அனுபவம் கர்நாடகாவின் எல்லையில் உள்ள ஒரு புராதன கோயிலில் நடந்தது. அன்று என் குடும்பத்தினர் அனைவரும் கோயிலுக்குள் சென்று சுற்றிப் பார்க்க நான் மட்டுமே பல மணிநேரம் வெளியேயே மனம் கசந்து நின்றிருந்தேன். நான் என்ன தொழுநோயாளியா? என்னை ஏன் வெளியே நிறுத்த வேண்டும் எனப் பல கேள்விகள் எனக்குள் எழுந்தன. (இதைப் பற்றி உயிர்மையில் ஒரு கட்டுரை கூட எழுதினேன்.)
நான் இந்த அனுபவங்களில் இருந்தே தேரைத் தொட்டு இழுக்க அனுமதிக்கப்படாத மக்களின் வலியைப் புரிந்து கொள்கிறேன். இதை வைதீக இந்து மதத்தில் உள்ள ஒரு சிலரின் தவறாக நான் பார்க்கவில்லை, கோவை ஞானியைப் போல இந்து மதத்தில் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு சிறு பகுதியாக நான் காணவில்லை (ஏதோ ஆப்பிளின் ஒரு பகுதி மட்டுமே அழுகி இருக்கிறது, வெட்டி எறிந்து விட்டு சாப்பிடுங்கள் என்பதைப் போல). வைதீக மதத்தின் சாரமே இந்த வெளியேற்றத்தில் தான் இருக்கிறது, அதுதான் வரலாறு, அதுதான் அதன் தத்துவம். கோவை ஞானிக்கு வைதீகத்தின் மீதிருந்த மிதமிஞ்சிய சிலாகிப்பால், மனமயக்கத்தால் இது ஒரு தவிர்க்கக் கூடிய பிரச்சனை, இதையும் வைதீகத்தையும் தனித்தனியாகவே பார்க்க வேண்டும் என முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அவரும் இளவயதில் இருந்து கோயிலில் இருந்து பலர் முன்னிலையில் தொடர்ந்து வெளியேற்றப்பட்டிருந்தால் இந்த மனமயக்கம் அவருக்கு ஏற்பட்டிருக்காது. கோவை ஞானிக்கு மட்டுமல்ல இதைப் படிக்கும் உங்களில் பலருக்கும் நேரடியான இத்தகைய அனுபவங்கள் இல்லையெனில் நான் பேசுவது புரியாது அல்லது அது ஒரு சிறிய பிரச்சனை எனும் எண்ணம் ஏற்படும்.
வைதீக இந்து மதத்தை உள்ளிருந்து சீர்திருத்துவோம் என்கிறார்கள். இது ஒரு வைரஸிடம் பேரம் பேசி ‘நீ பேஷா உள்ளே இருந்துக்கோ, ஆனால் எங்களுக்கு நோய் தராதே’ எனச் சொல்வதைப் போன்றது. நோயை ஏற்படுத்துவது வைரஸின் அடிப்படை இயல்பு. “எங்களுக்கு இந்து வைதிக மதத்தின் சில கூறுகள் பிடித்தமானவை, அதனால் சில அசௌகரியங்களைப் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்” எனும் சப்பைக்கட்டு இது.
வைதீக மதத்தை தாங்கிப் பிடிக்க அவர் முன்வைக்கும் அடுத்த வாதத்தைப் பார்ப்போம்:
“மதம் சார்ந்து காலங்காலமாக உருவாகியிருக்கும் கலாச்சாரப் பொக்கிஷங்கள். தமிழிலக்கியத்தில் சரிபாதி அளவுக்கு இருக்கும் பக்தி இலக்கியத்தை எடுத்துக்கொள்வோம். மதத்தோடு சேர்த்து அதையும் நாம் புறக்கணித்து விட முடியுமா? (...) ஆழ்ந்து பார்த்தால், ஒரு இனக்குழுச் சமூகத்தின் மேன்மையான பண்புகளின் கொள்கலமாக அல்லவா கடவுள் மாறிவிடுகிறார்.”
மதத்தை புறக்கணித்து விட்டு புறவயமாக பக்தி இலக்கியத்தை, அத்வைத தத்துவத்தைப் படிக்க முடியுமே. நான் அவ்வாறு தான் கம்ப ராமாயணம், திருவாய்மொழி, ஆண்டாள் பாசுரங்களை என் பதின்வயதில் படித்தேன். அவ்வாறுதான் கல்லூரிகளில் பக்தி இலக்கியத்தை தத்துவார்த்தமாக கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவ்வாறே பல ஆய்வுகள் பக்தி இலக்கியங்களின் பால் நடந்துள்ளன. இதில் எந்த சிக்கலும் இல்லையே. இருந்தும் ஏன் “கலாச்சார பொக்கிஷங்களையும்” “மதத்தையும்” கோவை ஞானி ஒன்றாக பாவிக்கிறார்? இது ஒரு தந்திரம்: பக்தி இலக்கியத்தைக் காட்டி வைதீக கட்டுமானங்களை நியாயப்படுத்துவது. இன்னொரு பார்வை பக்தி இலக்கியத்தை கோயில் கலாச்சார சூழலில், நெற்றியில் விபூதி, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டையுடன் மனம் உருக பாடியபடியே அணுக வேண்டும், அப்போதே அதன் சாரம் கிடைக்கும் என்பது. அது மற்றொரு கற்பிதம். பக்தி உணர்வையும் பக்தி இலக்கியத்துடன் பொட்டலம் கட்டுவது. காதல் இலக்கியத்தை காதலியின் மடியில் படுத்தபடி தான் படிக்கணுமா? போர் இலக்கியத்தை யுத்த களத்தில் நின்றபடியே குண்டுவெடிப்புகளின் மத்தியில் படிக்க வேண்டுமா? வைதீக மதம் வீழ்ந்தால் நம் பண்பாடு செத்து விடும் என்பது சுத்த அபத்தம்!
கோவை ஞானி வைதீக மதம் பற்றி எழுதியவன, பேசியுள்ளவை ஆகியவற்றை படிக்கும் போது வைதீக இந்து மத கட்டமைப்பை பாதுகாக்க வேண்டும் என்பதே அவரது பிரதான நோக்கம் என்பது தெரிகிறது. அதற்கு அவர் தனது தியான அனுபவம், தேடல், தரிசனம், மக்களின் விடுதலை, கலாச்சார பொக்கிஷத்தைப் பாதுகாப்பது என பல எடுபடாத நியாயங்களை வழங்குகிறார். இதனாலே அவர் ஶ்ரீஶ்ரீ ரவிசங்களைப் பாராட்டி ஒரு பேட்டியில் பேசுகிறார். (அதே பேட்டியில் நித்தியானதா குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் தவிர்க்கிறார்.) ஶ்ரீஶ்ரீ போன்றவர்கள் நவீன காலத்தில் பெரும் கார்ப்பரேட் கட்டமைப்புகளை உண்டு பண்ணி இந்துக்களை வைதீகக் குடையின் கீழ் திரட்டுகிறார் எனும் பெருமிதமே இதற்குக் காரணம். ஞானி எப்போதுமே முன்னுக்குப் பின் முரணாகப் பேசுபவர் (அவருக்கு ஒரே சமயம் மார்க்ஸியவாதியாகவும் வைதீக ஆதரவாளராகவும் வேண்டுமே!). தனக்கு மதத்தின் பிடிப்பில்லை என்றுவிட்டே, மதவாதத்தை எதிர்க்கிறேன் எனப் பதிவு செய்து விட்டே, வைதீக மதத்தை பெரும் செல்வத்தைத் திரட்டி முன்னெடுப்பவர்களை பாராட்டி உச்சிமுகரவும் செய்வார். இதையே நான் மென் இந்துத்துவா, கலாச்சார இந்துத்துவா என்கிறேன்.
2) “‘மதத்தின் மேலடுக்கு பூசாரித்தனம். தெய்வம், கோயில், வழிபாடு, சடங்கு இதெல்லாம் இந்த மேலடுக்கு. உள்ளடுக்கு ஒன்று இருக்கிறது - தீர்க்கதரிசனம்.’ என்னைப் பொறுத்த அளவில் இந்த உள்ளடுக்கையே மதமாக நான் பார்க்கிறேன்.” - ஞானி
ஒரு பக்கம் இந்த பூசாரித்தனத்தையே கார்ப்பரேட் சாமியார்கள் பண்ணும் போது ஞானி புளகாங்கிதம் அடைந்தார் என்பதை விடுவோம். கருத்துக்கு வருவோம். மதத்தை இரண்டாக இப்படிப் பிரித்துப் பார்ப்பது ஒரு பழைய காந்திய நோக்கு. இது வைதீக இந்து மதம் அதன் சாரத்தின் பரிசுத்தமானது, வேதங்களில் ரிஷிகள் எப்படியெல்லாம் எல்லைகளைக் கடந்து மானுடத்தை முன்னெடுக்கிறார்கள் பாருங்கள், சில பிற்போக்காளர்கள் தாம் இந்து மதத்தின் பெயரைக் கெடுக்கிறார்கள் என திசை திருப்பும் வாதம் இது. ஆனால் சமகாலத் தத்துவங்கள் இந்த உள்-வெளி தர்க்கத்தை நிகாரிக்கின்றன. எதார்த்தத்தில் உள்ளும் புறமும் ஒன்றே. மதத்தின் சாரம் என ஒன்று தனியாக இல்லை. அது நிகழ்த்துததிலேயே பல துண்டுகளாக பல கால வெளிகளில் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாய் சமூகத்தின் அனுபவத்தில் அனுதினமும் அது எப்படியாக இருக்கிறது என்பதை வைத்தே வைதீகம் எப்படியானது எனத் தீர்மானிக்க வேண்டும். பலரை விலக்கி விட்டு சிலரை மையத்தில் வைப்பதே அந்த நிகழ்த்துதல். அனைவரையும் ஒன்றாக ஏற்றுக்கொள்வது சில கவிகளின் பாடல்களில் இருக்கலாம், ஆனால் எதார்த்தத்தில் இல்லை. வைதீகத்தின் வெளிப்பாடாக சாதியம் உள்ளதே நிகழ்த்துததில் உள்ளது. அதையும் சேர்த்ததே மதத்தின் தரிசனம். இது ஏன், வைதீகம் மட்டும் ஏன் இருக்கிறது எனக் கேட்க வேண்டும். ஒருவர் கடவுள் நம்பிக்கையாளராக இருக்கலாமா, இந்து மத வழிபாட்டாளராக இருக்கலாமா, அதன் தத்துவார்த்தப் பிரச்சனை என்ன எனக் கேட்க வேண்டும். கோவை ஞானி ஒரு போதும் வைதீக மதத்தை நோக்கி கேட்டிராத கேள்வி இது.
இந்த விசயத்துக்குள் இன்னும் ஆழமாக செல்வதானால் நாகார்ஜுனர் மூலமத்யமகாகாரிகையில் சொல்வதைப் போல பிரம்மம் என்றும், பேருண்மை என்றும் ஒன்றை வாழ்வின் சாரமாக வேதங்கள் பார்ப்பதில் இருந்தே அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பிக்கின்றன. இதற்கு பின்னர் அத்வைதம் வாழும் பிரம்மம் என ஒரு புதிய வடிவம் அளிக்கிறது. இது கேட்க நன்றாக இருந்தாலும் நடைமுறையில் சிலரை கடவுளைப் போன்றவர், பரப்பிரம்மம், தெய்வாதீனம் பொருந்தியர்கள் என உயர்த்தி பிடித்து, பிறரைத் தாழ்த்தவே உதவுகிறது. ஏன்? பிரம்மம் என ஒரு இருப்பை அடையாளப்படுத்தி, இறை என்பது சாரமானது எனும் போது அது மறுக்க முடியாத ‘பேருண்மையாகிறது’. (தந்தைப் படிமம், சடங்குகளில் ஈடுபடும் துறவிகள், மக்களை ஆளும் அரசியல் தலைவர்கள் போன்றோரின் அதிகாரமும், இந்திய சூழலில் சாதிய மேலாதிக்கமும் இப்படியே இங்கிருந்தே தோன்றுகிறது. லக்கான் இதையே Symbolic என்கிறார்). அதை வைத்து ஒரு அதிகாரப் படிநிலை, கட்டமைப்பு தோன்றுகிறது. அது ஏற்றுத்தாழ்வுகளுக்கு அதனாலான துன்பங்களுக்கு வழிவகுக்கிறது.
அதாவது சுருக்கமாக எதையொன்றை சாரம் கொண்டதாக, மறுக்க இயலாததாக நாம் கருதினாலும் அது நம்மை அடிமையாக்கி பெரும் அறியாமை இருளில் தள்ளி விடும். (அது எங்கும் நிறைந்தது, முக்காலமும் உள்ளது என்றெல்லாம் ஜல்லியடிப்பதால் அர்த்தமில்லை.) இதை உணர்ந்து கொண்டததாலே, துக்கம் என்பது சாரம் குறித்த நம்பிக்கையில் இருந்து தோன்றுகிறது எனப் புரிந்து கொண்டே புத்தர் வைதீகத்தை எதிர்த்தார். இறை சாரமானது எனும் தரப்பை எதிர்த்தார். வைதீகத்தின் இந்த அதிகாரவர்க்க கருத்தாக்கத்துக்கு மாற்றாகவே நாகார்ஜுனர் பிரம்மம் என்பதும் வெறும் கட்டமைப்பு, சாரமற்ற வெறும் மொழி அமைப்பு என நிறுவுகிறார். இப்போது யாரையும் “சாமி” என அழைக்க முடியாமல் ஆகிறது. ஆனால் கோவை ஞானி இளமையில் இருந்து இந்த அபத்தக் கட்டமைப்புகளில் இருந்து மீளவில்லை. திரும்பத் திரும்ப பிரம்மம் அது இதுவென அவர் பேட்டிகளில் குறிப்பிடுவது வைதீகப் பார்வையில் ஒரு சாரத்தைக் கண்டுபிடிக்கவே. ஒரு கட்டத்தில் இது முடியாது எனும் போது அவர் தடுமாறுகிறார். அவருக்கு சாய்ந்து கொள்ள வைதீக பெருநிறுவனங்களின் ஆறுதல் தேவைப்படுகிறது. எளிய ஜனங்களுக்கான பெருமதம் என இன்றை வைதீக கார்ப்பரேட்டுகளை நியாயப்படுத்துகிறார் (இதையே ஜெ.மோவும் ஜக்கி பற்றின கட்டுரையில் செய்கிறார் என்பதை கவனிக்கலாம்.) ஆனால் இந்த பெருமதம், வைதீகம் தான் எளிய மக்களை பல துன்பங்களில் தள்ளுகிறது, அவர்களை ஒடுக்குகிறது என்பதை வசதியாகப் பேசாமல் விடுகிறார். அந்தளவுக்கு மத வெறி கண்ணை மறைக்கிறது. இதை நான் சொன்ன அடுத்த நொடியே ஞானியின் “எனக்கு மத அமைப்பிலோ கடவுளிலோ நம்பிக்கை இல்லை” எனும் ஒரு வாக்கியத்தை நீங்கள் இதே ஞானியின் பேட்டியில் இருந்து எடுத்து என்னிடம் தர முடியும். அதுதான் ஞானி - இந்த முரண்-பார்வை அவர் வசதியாக எடுத்தணியும் ஒரு முகமூடி. இதைக் கண்டு பலரும் ஏமாந்து விடுகிறார்கள். (மோடி ‘மித்ரோ’ என மனமுருக அழைக்கும் போது நாம் உருகி விடுவதைப் போல. இது ஒரு அடிப்படையான உளவியல் உத்தி - நீங்கள் உங்களைப் பற்றி வெளிப்படையாக என்ன சொல்கிறீர்களோ அதை வைத்தே மக்கள் எளிதாக உங்களைப் புரிந்து கொள்வார்கள்.) ஆனால் அவர் அதிகம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவது வைதீக மத அமைப்புகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதைப் பற்றியே. இதை வைத்தே அவரது அரசியல் குறித்து ஒரு நிலைப்பாட்டுக்கு நம்மால் வர முடிகிறது.
இறுதியாக ஒரு கேள்வி: ஒருவர் இந்து மத நம்பிக்கையாளராக இருப்பது தப்பா? நான் என் பாட்டுக்கு கோயில், புனஸ்காரம் என வாழக் கூடாதா? நான் எனக்குப் பிடித்த தெய்வத்தை நம்பக் கூடாதா? ஆம் தப்பே. எதையொன்றையும் சாரம் கொண்டதாக நம்புவது தப்பே. ஏனென்றால் அங்கிருந்தே, அத்வைதத்தில் இருந்தே நமது அத்தனை துன்பங்களும், ஏற்றத்தாழ்வுகளும் ஆரம்பிக்கின்றன. இதற்கு மாற்று சாரமின்மையை முன்வைக்கும் (நாகார்ஜுனரின்) தத்துவம்.
கோவை ஞானியின் மென் இந்துத்துவாவை இதை விடத் தெளிவாக விளக்க முடியாது. இப்போதே டயர்டாக இருக்கிறது!

Comments
தங்களின் மேலான நலம் விழைகிறேன்.
1) கலை இலக்கியத் துறையில் பயணப்பட விரும்பும் இளைஞர்கள் வாசிக்க வேண்டிய நூற்கள் எனத் தாங்கள் எண்ணுவதை பட்டியலாகாத் தர இயலுமா?
தமிழ் & ஆங்கிலம்.
2) தமிழ் மற்றும் ஆங்கில இலக்கண நூல்கள் பரிந்துரையுங்கள்.
நன்றி.