முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹாமீம் முஸ்தபா அண்ணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்



எனக்கு பதினாறு வயது இருக்கும் போது ஹாமீம் முஸ்தபா அண்ணன் தக்கலையில் ஒரு புத்தகக் கடை அமைத்தார். அங்கு பின்பக்கம் ஒரு அறையில் டியூசன் வகுப்புகளும் நடந்தன. அங்கு கணக்குப் பாடம் கற்க வேண்டாவெறுப்பாக நான் சேர்ந்தேன். இயல்பாகவே கணக்கை விட முன்பக்கம் உள்ள புத்தகக் கடையே என்னை அதிகம் கவர்ந்தது. நான் அங்கேயே குடியிருக்கத் தொடங்கினேன். அங்கிருந்து நான் வாங்கிய புத்தகங்களை விட அமர்ந்து படித்தவை அதிகம். அண்ணன் அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார். அவர் அங்கே ஒவ்வொரு வெள்ளி மாலையும் கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டங்கள் நடத்தினார். அந்த கூட்டங்கள் வழியாகத் தான் தமிழின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை நான் அறிமுகம் கொண்டேன். இன்று யோசித்துப் பார்க்கும் போது என் எதிர்கால அரசியல் சமூக சிந்தனைகளை வடிவமைத்த உரையாடல்கள் பெரிதும் அங்கே முஸ்தபா அண்ணனின் கடையிலே நடந்துள்ளன எனப் புரிகிறது - எப்படி சமூகப் பார்வையுடன் படிக்க வேண்டும், எழுத்தை எப்படி ஒரு சமூகச் செயல்பாடாகக் காண வேண்டும் என நான் அன்று புரிந்து கொண்டதே இன்றும் என்னை வழிநடத்துகிறது. அதற்கு விதையிட்டவர் முஸ்தபா அண்ணனே. அண்ணனின் கடையில் வைத்தே நான் ஜெயமோகனை முதலில் சந்தித்தேன். முதல் உரையாடலிலே அவரிடம் (சற்று அமெச்சூராக) முரண்பட்டேன். அந்த முரண்பாட்டுடனே ஜெ.மோவுடனான என் பின்னாளைய உறவு இருக்கிறது - இன்னும் ஆழமாக முரண்பட்டபடி. இடதுசாரிகளுடன் என்னால் இன்றும் சுலபத்தில் இணங்கிப் போக முடிவதன் உளவியல் முடிச்சுகள் அந்த இடத்திலே விழுந்தன எனத் தோன்றுகிறது.


 மற்றவர்களிடம் இருந்து முஸ்தபா அண்ணன் ஒரு விதத்தில் பெரிதும் வேறுபடுவார்அவர் தனது சமூக இலக்கியப் பார்வையை சுலபத்தில் வெளிக்காட்ட மாட்டார். உங்களிடத்துள்ள தனது மதிப்பீட்டை ஒருபோதும் காட்ட மாட்டார். தன்னிடம் இருந்து மிகவும் முரண்படும் நபர்களிடம் கூட அவரால் ஒரு நல்லுறவை தக்க வைக்க முடியும். புதியவர்களை அரவணைத்து தன்னுடன் அழைத்து செல்ல முடியும். அடுத்தவரின் சிந்தனைகளை தன் வழியில் மாற்றியமைக்கக் கூடாது என நம்புவார் - அந்தளவுக்கு மாற்றுப் பார்வைகளுக்கு இடமளிப்பார். மிக மென்மையாக தன் மாற்றுக்கருத்தை உணர்த்தவும் செய்வார். பாலு மகேந்திரா எப்படி ஒர் பத்து வயதுப் பையனைக் கூட தனக்கு இணையாக வைத்து அவனிடம் மன்னிப்பெல்லாம் கேட்பார் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். முஸ்தபா அண்ணன் கிட்டத்தட்ட அந்த மாதிரி தான். தன் கடையில் வேலை செய்யும் பையனை தன்னை விட மேலாகவே நடத்துவார், கருத்துக்களைக் கேட்டறிவார், அவரது தாக்கத்தால் அவன் கவிதையெழுதி பிரசுரிக்க, கூட்டங்களில் கலந்து கொண்ட பேசத் தொடங்குவான்.

 நட்பை வளர்க்க, அதற்கு மதிப்பளிக்க அவர் எடுக்கிற எத்தனங்கள் வியப்பளிக்கும். நான் சென்னைக்கு முதன்முதலாக வந்த போது முஸ்தபா அண்ணனுடன் அவரது கல்லூரிப் பருவத் தோழியைக் காண அவரது வீட்டுக்கு என்னையும் அழைத்து சென்றிருந்தார். பத்து நிமிடங்கள் அங்கிருந்திருப்போம். ஆனால் அந்த தோழி அன்று அடைந்த மகிழ்ச்சி அவரது முகத்தில் துலங்கியது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நான் சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்த போது அண்ணன் ஒவ்வொரு முறை சென்னை விஸிட் அடிக்கும் போது என்னைப் பார்க்க வருவார். அரை மணி பேசிக்கொண்டிருந்து விட்டுப் போய் விடுவார். ஒருவரிடம் உறவைத் தக்க வைக்க போனில் சில நிமிடங்கள் அவ்வபோது பேசினால் போதும் எனும் காலத்தில் எந்த நோக்கமும் பயனும் நாடாமல் அவர் தன் பழைய நண்பர்களை சந்திக்க அவ்வளவு எத்தனம் எடுக்கிறாரே என நான் மிகவும் நெகிழ்ந்து போவேன். அவர் மாறவே இல்லை. நட்பாட்டத்தை அதிகார விளையாட்டாகக் காணும் இன்றைய உலகில் ஒரு உதிரி அவர்.

முஸ்பதா அண்ணன் தன் மனைவியை சமமாக நடத்துவதுடன் பன்மையில் அழைத்து பேசுவது எங்களுக்கு அந்த காலத்தில் வியப்பாக இருக்கும். தன் மகள்களுக்கும் அவர்கள் விரும்பினபடி பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பளித்து சென்னைக்கு அனுப்பி விடுதியில் தங்க வைத்து படிக்க செய்தார். (எங்கள் ஊரில் இது பெரிய விசயம்.) முற்போக்காக சிந்திப்பது ஒன்று, அவ்வாறு வாழ்வது வேறொன்று.  

முஸ்தபா அண்ணனை என் பதின்வயது சந்தித்திராவிடில் என் வாழ்க்கை வேறுவிதமாக இருந்திருக்கும் நான் அடிக்கடி யோசிப்பேன். என்னைப் போல இன்னும் நிறைய பேர் வாழ்வில் அவர் போகிற போக்கில் மாற்றிவிட்டு அதற்கான அங்கீகாரத்தை வாங்காமல் கடந்து போய் விடுவார்

அவருடைய இந்த பிறந்த நாளில் என்னுடைய வாழ்த்துக்களும் நன்றியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...