முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தல்ஸ்தாயும் தஸ்தாவஸ்கியும்: ஒரு எளிய அறிமுகம் (1)


ஆகஸ்ட் இரண்டாம் தேதி கலசலிங்கம் பல்கலையின் இணையவழி கருத்தரங்கில் நான் பேசிய உரைக்கான குறிப்புகளை இங்கு சிறு பகுதிகளாக பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.


வரலாற்றினூடாக ஒரு நாவலாசிரியனின் பிம்பத்தின் பயணம்:


நாவல் ஆசிரியன் என்பவன் பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடர்கதைகள் வழியாக சமூக, குடும்ப, வரலாற்றுப் பிரச்சனைகளை, தனிமனிதர்களுக்கும் சமூகத்துக்குமான மாறி வரும் உறவுகளை சித்தரித்தவன். ஐரோப்பா காலனிய படையெடுப்பை துவங்கி, அங்கு தொழில் புரட்சி ஏற்பட்ட காலத்தில் தேசம் குறித்த கற்பனைகள், கருத்தியல்களை வளர்த்தெடுப்பவனாக, அதற்கு வடிவம் அளிப்பவனாக நாவலாசிரியன் மாறுகிறான். அடுத்து குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு துவங்கி இருபதாம் நூற்றாண்டுகளின் ஆரம்பம் வரை நாவலாசிரியன் ஒரு சமூக, அரசியல் விமர்சகனாக, மக்கள் பிரச்சனைகளை பல்வேறு கோணங்களில் அலசுகிறவனாக, அதற்காக போராடுகிறவனாகவும் இருந்தான்


பின்னாளில்அன்புள்ள டாக்டர்” / agony aunty போன்ற பத்திகள், கேள்வி-பதில் பகுதிகள், அரசியல் சமூக, உளவியல் பத்திகள் மெல்ல மெல்ல நாவலாசிரியனின் இந்த இடத்தை எடுத்துக் கொண்டன. கலாச்சார விழுமியங்கள், கேள்விகள், சமூகத்தில் அவ்வபோது எழும் அலைகள், தத்தளிப்புகள், தடுமாற்றங்கள் (குற்றங்கள், படுகொலைகள், ஆண்-பெண் உறவுச்சிக்கல்கள், தேசியம், எழுச்சி,போராட்டங்கள்) ஆகியவற்றை பேசுவதற்கு, படிக்க விரும்பாத பெரும்பகுதி ஜனங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக சினிமா எனும் சக்தி வாய்ந்த ஊடகம் தோன்றியது. சினிமாவுக்குப் போட்டியாக பின்னர் டிவியும், டி.விக்கு மாற்றாக இணையம், கைப்பேசி, ஸ்மார்ட் டிவி, யுடியூப், சமூக வலைதளங்கள் ஆகியவை தோன்றின. இப்போது மக்களே தம்மை அவ்வப்போது அலைகழிக்கிற, கவர்கிற, கோபப்படுத்துகிற விசயங்களை தாமே செய்தியாக்கி, தாமே அலசி, தாமே ஒரு முடிவுக்கும் வருகிறார்கள். பத்திரிகைகள், இலக்கியம், நாவல், சினிமா, டிவி ஆகியவற்றில் இருந்து இன்று மக்களே ஒரு சுய-ஊடகம் ஆகிறார்கள்.


வரலாற்றில் இந்த இடம் நாவலாசிரியனுக்கு சிக்கலானது - பத்தொன்பதாம் நூற்றாண்டில் டிக்கென்ஸ் நாவலை சமூக இடர்களை, தீமைகளை அம்பலப்படுத்தும் ஒரு தளமாக பயன்படுத்தினார். கார்க்கி தொழிலாளர் போராட்டத்தை உத்வேகப்படுத்தும் ஒரு கருவியாக்கினார். ஜேன் ஆஸ்டின், வெர்ஜினியா வூல்ப் போன்றோர் தத்தமது காலத்தில் பெண்கள் சந்தித்த நெருக்கடிகளை உளவியல், பாலின, மொழி, கலாச்சார, சமூக விழுமிய தளங்களில் வைத்து பேச நுட்பமான உரையாடல் களமாகவும் பிரச்சார கருவியாகவும் பயன்படுத்தினர். யாரும் பேச மறுத்த பாலியல் சிடுக்குகளை, டார்வினும் பிராயிடும் சந்திக்கும் இடத்தில் ஆண்-பெண் உறவு இனி என்னவாகும், ஒரு தூய மிருக நிலையில் காதல் பகட்டில்லாத ஒரு உறவாக மலருமா போன்ற கேள்விகளை டி.எச் லாரன்ஸ் எழுப்பினார்.


 இவை அத்தனையையும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தன் நாவல்களில் விரிவாக அலசக் கூடிய மகத்தான படைப்பாளியாக தல்ஸ்தாய் விளங்கினார். தல்ஸ்தாயிடம் நாம் விடை காண முடியாத கேள்விகளே இல்லை. ஒரு பெண் சுதந்திரமாக முடிவெடுத்தால், அதனால் அவளது குடும்பம் உடைந்தால், பரவாயில்லை என அவள் ஒரு விட்டுவிடுதலையான காதலை நாடினால் என்னவாகும் எனும் கேள்வியை அவர் ரஷ்யாவின் மத்திய வர்க்கம், மேற்தட்டினரின் பாசாங்கான வாழ்க்கை, அரசு எந்திரத்தின் சுயநலம், போலித்தனம், விழுமியங்களை, சமூகக் கட்டுப்பாடுகளை சற்றும் பொருட்படுத்தாமல் இருக்கும் ஆண்கள் சமூகத்தால் எந்த கேள்விக்கும் உட்படுத்தப்படாமல் இருப்பது, ஒரு பெண்ணின் சின்னச்சின்ன முடிவுகள் மீது ஒட்டுமொத்த சமூகமும் செலுத்தும் மிகப்பெரிய அழுத்தம், கட்டற்ற வாழ்க்கையில் ஈடுபடும் கலைஞர்களின் நிலை, இதையே பொருளாதார தளத்தில் விவசாயத்தில் செயல்படுத்தி நிலவுடைமை அடிமைகளான கூலிகளுக்கு சம உரிமை அளிக்க விரும்பும் ஒரு மேற்தட்டு இளைஞனின் நிலை, ஒழுக்கத்தின், மதத்தின், குடும்பத்தின் நிர்பந்தங்களின் மத்தியில் ஒரு தனிமனுஷியின் இருப்பு என்னவாகிறது ... இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளை தல்ஸ்தாய் எழுப்புவார். அத்தனை கேள்விகளையும் ஒரு மணமான பெண் ஓடிப்போகிற ஒற்றை வரி மீது வைத்து வெற்றிகரமாய் ஆழமாய் அலசி ஒட்டுமொத்தமான ஒரு தத்துவார்த்த முடிவுக்கு வந்திருப்பார். அந்த தத்துவத்தை நாம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் அதற்கு முரணான பல கருத்தியல்களை அதே அளவுக்கு வலுவாக அவர் பரிசீலித்திருப்பார். அதாவது இத்தனை ideas மத்தியில் அவற்றுக்கான counter-ideas-உம் வலுவாக இருக்கும். இன்றும் நான் எந்த நாவலைப் படித்தாலும்அட இதைத்தான் தல்ஸ்தாய் ஏற்கனவே பேசிட்டாரேஎனத் தோன்றாமல் இருக்காது. அதனால் தான் அவரை நான் நாவல்களின் கடவுளாக நினைக்கிறேன்.


தல்ஸ்தாய் வாழ்ந்த காலத்தில் இயங்கிய மற்றொரு மகத்தான நாவலாசிரியர் தஸ்தாவஸ்கி. இருவருமே மேற்தட்டு சமூகத்தில் தோன்றியவர்கள். ஆனால் தல்ஸ்தாய் தஸ்தாவஸ்கியை விட அதிக பணம் படைத்தவராக, பல்லாயிரம் ஏக்கம் நிலங்களுக்கு, பல ஊர்களுக்கு, அந்த ஊரில் வாழும் கூலிகளுக்கு சொந்தக்காரராக இருந்தார். தான் வாழ்ந்த காலத்தில் அவர் தன் நாவல்கள் மூலமாகவும் நிறைய பணம் பெற்றார். ஒரு கட்டத்தில் கிறித்துவம் போதிக்கும் எளிமை, இரக்கம், பரோபகாரம் போன்ற நல்ல விழுமியங்களை நாடி தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டார். இனம், மதம் ஆகிய எல்லைகளைக் கடந்து மனிதன் பரஸ்பரம் நேசிக்க வேண்டும் எனும் கொள்கையைக் கொண்டார். அதற்காக தன் எழுத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை தண்ணீராக செலவழித்தார். வயோதிகத்தை எட்டிய நிலையில் அவர் தன் மனைவி, குழந்தைகளிடம் இருந்து மனதளவில் விலகி தன் பண்ணையில் மிக எளிய வாழ்க்கையை வாழ்ந்தார். தனக்காக செருப்பை தானே தைத்து பயன்படுத்தினார். ஒரு குடியானவனைப் போல ஆடை அணிந்தார். அவரது காப்பிரைட் வருமானம் ஏழைகளுக்கான தொண்டில் பறிபோவது கண்டு பொறுக்காமல் அவரது மனைவி சோபியா சண்டை போட தள்ளாடும் வயதில் வீட்டில் இருந்து வெளியேறி ரயில் நிலையத்துக்கு சென்றார். அவரது மனைவியும் மக்களும் எத்தனையோ கெஞ்சியும் திரும்ப செல்ல மறுத்து விட்டார். இந்த சம்பவங்கள் ஊடகங்களால் பரபரப்பாக பதிவு செய்யப்பட்டு. இரண்டு நாட்களில், நவம்பர் 20, 1910இல் தல்ஸ்தாய் ரயில் நிலையம் ஒன்றில் உடல் நலிவுற்று இறந்து போனார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...