முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு கல்வியாளனாக என் சித்தாந்தமும் ஆன்லைன் வகுப்புகளும் (1)


ஆன்லைன் வகுப்புகள் மீது ஒரு அவநம்பிக்கை ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் போகப் போக அவற்றின் மீது ஒரு நன்மதிப்பு ஏற்பட்டு விட்டது. சில காரணங்கள்:


1) உட்கார்ந்த இடத்தில் இருந்தே பேச முடிகிறது, அடித்துப் பிடித்து வகுக்குப்பறையை அடைய வேண்டாம்.

2) ரொம்ப கத்த வேண்டியதில்லை - ஐம்பது பேர் கொண்ட வகுப்பானாலும் 120 பேர் உள்ள வகுப்பானாலும் ஒரே ஒலி அளவை தக்க வைக்கலாம். தொண்டைக்கு நல்லது.

3) போரடித்தால் மாணவர்கள் ஹெட்போனைக் கழற்றி வைத்து ஓய்வெடுக்கலாம் (நான் அவ்வப்போது அவர்களிடம் கேள்வியை கேட்டு சோதிப்பேன் என்றாலும்) - இது ஜனநாயகபூர்வமானது என நம்புகிறேன்.

4) குறிப்புகளைப் பகிர்வது - திரையைப் பகிர்வது - ரொம்ப ரொம்ப ஈஸி. கரும்பலகையில் எழுதுவது, கணினியை திரையிடப் இணைத்துக் காட்டுவதில் உள்ள சிரமங்கள், நேர வீணடிப்புகள் இல்லை.

5) வகுப்பில் யாரும் புத்தகம் கொண்டு வரவில்லை என அதகளம் பண்ண முடியாது - கணினித்திரையே / முகநூல் திரையே புத்தகம்.

6) மாணவர்களுக்கு வினாடி வினா போன்ற கேள்விகளை கூகிள் கிளாஸ்ரூமில் அளிக்க முடிகிறது. mentimeter ஒரு ஜாலியாக கருத்து பகிரும் விளையாட்டு. இப்படி பல சங்கதிகள் ஆன்லைன் வகுப்புகளை வண்ணமயமாக்குகின்றன.

7) எல்லா வகுப்பிலும் 8-10 பேர் அதிகமாய் உரையாடுவார்கள், முப்பது பேர் கவனிப்பார்கள், மௌனமாக, மிச்ச பேர் பாதிக்குப் பாதி காதில் வாங்குவார்கள், அவர்களில் ஒரு சிலர் வாங்கியபடியே கண்ணயர்வார்கள். ஆன்லைன் வகுப்பும் இப்படித்தான் என்பதால் பெரிய ஏமாற்றமில்லை.


ஏன் ஏமாற்றமில்லை? இங்கு தான் மாணவன் குறித்த என் சித்தாந்தம் வருகிறது.


ஒரு கல்வியாளனாக, ஆசிரியனாக என் அணுகுமுறை, கொள்கையை இங்கு குறிப்பிட வேண்டும் - என் பணி அனைவருக்கும் ஒன்றை புரியும்படியாக செய்வது என நான் நம்பவில்லை. அது போதகரின் பணி. நான் போதகன் அல்ல. மேலும் அறிவு என்பதை மிட்டாய் அல்ல, யாருக்கும் உடைத்துக் கொடுக்க முடியாது என நினைக்கிறேன். அறிவுத்தேடலில் நான் ஒரு பங்கேற்பாளன் எனில் மாணவன் மற்றொரு பங்கேற்பாளன். விவாதிக்க, யோசிக்க, பயில அறிவு பெருகும் (அது நிரந்தரமாய் தங்காது, அப்படித்தங்கினால் அது அறிவாகாது). அதை 60-70 மணிநேரங்களில் யாருக்கும் கையளிக்க முடியாது. அறிவு என்பது ஒரு பண்டமல்ல, அதை வாங்க, விற்க முடியும் என இன்று ஏற்பட்டுள்ள நம்பிக்கை மூடத்தனமானது, கல்வியாள வணிகர்கள் பரப்பி வரும் மூடநம்பிக்கை அது


என்னிடம் ஒரு மாணவன் கற்க வந்தால் நான் அவனை ஒரு சக-சிந்தனையாளனாக, சக-எழுத்தாளனாக கூட சேர்த்துக் கொள்வேன். என்னுடன் பயணிப்பவன் மட்டுமே என் மாணவன். என்னுடன் ஒரு வருடமாவது பயணித்தால் அது ஒரு சில கட்டுரைகள் / கதைகள் / நாவல் எழுதுவான். அவன் இதையெல்லாம் செய்ய நினையாவிடினும் செய்வான். இல்லாவிட்டால் அவன் என் மாணவன் அல்ல, வழிப்போக்கன். அவனுக்கும் நான் வகுப்பெடுப்பேன், ஆனால் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.


ஒரு மாணவன் எழுத்தாளன் அல்லவே என நீங்கள் நினைக்கலாம். இல்லை, என்னைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு அறிவுத்தேடல் கொண்ட மாணவனும் சிந்தனையாளனே, மொழியில் இயங்குபவனே, அடிப்படையில் அவன் எழுத்தாளனே. ஒரு நல்ல சமூகத்தில் 90% பேராவது எழுத, சமூக கலாச்சார உரையாடலில் பங்களிக்க வேண்டும். அதுவே மேம்பட்ட விடுதலை பெற்ற சமூகமாக இருக்கும். இது என் சித்தாந்தம்.

 நான் இதை எப்போதும் மறைமுகமாக வகுப்பில் என் மாணவர்களுக்கு உணர்த்துவேன் - நான் ஒரு எழுத்தாளன், அதற்கு அடுத்தே ஒரு ஆசிரியன், நான் உங்களையும் என் வழியில் அழைத்து செல்லவே வந்திருக்கிறேன், வந்தால் மட்டுமே நீங்கள் எனக்கு சமம், வந்தால் மட்டுமே உங்களை என் உயிராக மதிப்பேன்.


ஆனால் நமது தவறான சமூகப்பொருளாதார அமைப்பு காரணமாக மிகச்சில மாணவர்களே என்னுடன் என் பாதையில் வருவார்கள். என் ஆறு வருட ஆசிரிய வாழ்வில் எனக்கு மூன்று மாணவர்களே அப்படி அமைந்தார்கள். இவர்களில் ஆயுஷே என் சிறந்த மாணவன் - அவன் என்னுடன் இரண்டு புத்தகங்கள் எழுதினான். இப்போது நாங்கள் சேர்ந்து நாகார்ஜுனரின் பௌத்த தத்துவம் பற்றி ஒரு நூலை எழுதி வருகிறோம். அவன் ஏன் சிறந்த மாணவன் என்றால் அவன் (1) எழுத்தாளனாகி விட்டான் (அதன் வழியாக பண்பட்ட, சமூகப்பொறுப்புள்ள மனிதன் ஆகி விட்டான்), (2) ஒரு புதிய சிந்தனையைக் கற்றறியும் போது என்னால் பல சமயங்களில் அவனிடம் சந்தேகம் கேட்குமளவுக்கு அவன் தெளிவாக சிந்திக்கிறான், அவன் எனக்கு சமமாக, பல சமயங்களில், என்னை விட மேலாக இருக்கிறான். அடுத்தொரு மாணவன் தமிழில் கவிதைகள் எழுதினான், தொடர்ந்து இலக்கிய நூல்கள் வாசித்தான், ஊடகங்களில் பணி செய்தான், இப்போது திருமணமாகியிருக்கிறது. மூன்றாவது மாணவன் தத்துவ வாசிப்பில் ஈடுபட்டிருந்தான், குறிப்புகள் எழுதி எனக்குக் காண்பித்து வந்தான். அவனிடம் இப்போது நான் தொடர்பில் இல்லை

இந்த மூவருக்குமே ஒரு ஒற்றுமை உள்ளது - நான் எதேச்சையாக சாக்ரடீஸ் பற்றி ஆங்கில வகுப்புகளில் பேசப் போக அதனால் தூண்டுதல் பெற்று என்னிடம் விவாதிக்க, ஐயம் கேட்க வந்து நண்பர்கள் ஆனவர்கள் இவர்கள். சாக்ரடீஸ் இப்படி எனக்கு ராசியாக இருக்கிறார்


சரி, மிச்ச மாணவர்கள்? அவர்களிடமும் என்னுடைய சிந்தனையின், கருத்துக்களின் தாக்கம் இருக்கும், அதனால் சமூகத்துக்கு பயனிருக்கும் என நம்புகிறேன்


ஒரு மாணவருக்கு ஒரு புதிய விசயத்தைகற்றுக்கொடுப்பதாக நம்புவது ஒரு ஆபாசம், அவமதிப்புச் செயல் - மாணவரைக் கீழாகவும் ஆசிரியரை மேலாகவும் கருதும் ஒரு படிநிலை இதனால் உருவாக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் மொழியில் நாம் அனைவரும் சமம். அதனாலே என்னால் எழுதவும் அதை மற்றொருவரால் படித்து புரிந்து கொள்ளவும் முடிகிறது, என்னால் பேசவும் அதைக் கேட்டு ஒரு மாணவனால் சிந்திக்கவும் எதிர்வினையாற்றவும் முடிகிறது. ஆனால் கற்றறிவித்தல் என்பது ஒரு போலியான கட்டுமானம். மாறாக உரையாடலும் அதன் வழி இரு பக்கத்திலும் கிடைக்கும் தெளிவுமே சாத்தியம் - ஆசிரியனும் மாணவனும் ஒரே சமயம் மொழியில் கருத்துக்கள் தோன்ற துணை போவதன் வழி தெளிவு பெறுகிறார்கள். (அவன் கேட்பதே மொழிப்பங்கேற்பு தான்.)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...