முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதும் அதற்கான மாற்றும் (1)



புதிய கல்விக் கொள்கை குறித்து இங்கு நிறைய விவாதங்கள் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறோம் என சொல்லியுள்ளதும் ஆறுதலானது; அதாவது மும்மொழியைக் கற்க வேண்டும் எனும் சுமையை நம் குழந்தைகள் இங்கு திராவிடக் கட்சிகள் ஆட்சியில் உள்ள வரையில் ஏற்க வேண்டாம் எனும் நம்பிக்கையை இது அளிக்கிறது. என்னுடைய ஒரு கோரிக்கை நமது டிவி மற்றும் யுடியூப் சேனல்கள் எளிய மக்கள், கீழ்த்தட்டு, மத்திய வர்க்க பெற்றோர்களிடம் இதைப் குறித்து பரவலாக கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட வேண்டும், பெற்றோர்கள் மட்டுமே பங்கேற்கிற விவாதங்களை இந்த கல்விக்கொள்கை குறித்த நடத்த வேண்டும் என்பது. இதை பாஜக எதிர்ப்பு அரசியலாக மட்டுமே யாரும் பார்த்து விடக் கூடாது, இதை ஒரு சமூகப் பிரச்சனையாக முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே பொதுமக்களை, சமூகவலைதளங்களில் களமாடாதவர்களை, இதைக்குறித்து பேச வைக்க வேண்டும் என்கிறேன்


இனி என் பார்வையை ஒரு கல்வியாளனாக, எழுத்தாளனாக முன்வைக்கிறேன்:


முதலில் இந்த கல்விக்கொள்கை பரிந்துரைக்கும் ஐந்து பொதுத்தேர்வுகளுக்கு வருகிறேன்.


1) முதலில் எனக்கு எந்த கல்விக்கொள்கை மீதும், அது தேர்வுகளை முன்னிறுத்தி வகுக்கப்படும் பட்சத்தில் நம்பிக்கை இல்லை. தேர்வே இல்லாத கல்வி அமைப்பு தோன்றுமெனில் அதுவே சிறந்த, அசலான கல்வியை குழந்தைகளுக்கு சாத்தியப்படுத்தும். ஏன்?

தேர்வு என்பது அடிப்படையில் ஒரு போலியான முறை. ஒருவருடைய அறிவுத்திறனை, கற்றல் திறனை, கற்பனையை, ஆழமான புரிதலை தேர்வினால் ஒரு போதும் அளந்திட முடியாது. இதனாலே தேர்வில் மிகக்குறைவாக மதிப்பெண் பெற்ற எத்தனையோ பேர் வாழ்வில் ஜொலிப்பதை நாம் காண்கிறோம். உடனே வாழ்க்கைத் திறன்களை இனிக் கற்றுத் தருவோம், அதை மதிப்பிடுவோம் என ஒரு கோஷ்டி கிளம்பி வருகிறார்கள். அவர்களுக்கும் சொல்கிறேன் - நீங்கள் எந்த மானுடத் திறனையும் மதிப்பிட முடியாது, கூடாது

எனில் மாணவர்கள் கற்கிறார்களா இல்லையா என எப்படி தெரிந்து கொள்வது?

அவர்களுக்கு தொடர்ந்து தம் கற்றல் சார்ந்து குறைவான எண்னிக்கையில் சிறு சிறு அசைன்மெண்டுகளை (பணி ஒப்படைப்புகளை) அளிக்கலாம். ஒரு வருட இறுதியில் இவற்றை 80-90% முடித்தால் தேர்வாகி விடலாம். இதில் மதிப்பீடு ஏதும் இல்லை. இங்கு ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். நம் கல்வி முறையில் ஒரு சிக்கல் இது போன்ற அசைன்மெண்டுகளை பெருமளவில் மாணவர்கள் மீது திணித்து திக்குமுக்காட செய்வது. அப்படி அல்லாமல் ஒரு குறைந்த எண்ணிக்கைக்கு மேல் இவற்றை மாணவர்கள் செய்யக் கூடாது என விதிமுறையை கொண்டு வர வேண்டும்.


2) இதை விட சிறந்த முறையென்பது ஐந்தாம் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை தொடர்ந்து சிறு அசைன்மெண்டுகளை மாணவர்கள் தம் விருப்பப்படி தேர்ந்து செய்து முடிப்பது. இந்த தொடர் அசைன்மெண்டுகளை ஒவ்வொரு வருட இறுதியில் அல்லாமல் பன்னிரெண்டாம் வகுப்பு முடிவில் மட்டுமே நிறைவு செய்திருக்கிறார்களா எனப் பார்ப்பது. இந்த முறையில் ஒரே ஒரு அசைன்மெண்ட் தான் ஒரு பாடத்துக்கு, இதை அவர்கள் சிறுக சிறுக ஏழு வருடங்களாக செய்து நிறைவு செய்யலாம். ஒரு வருடம் சரியாக முடிக்க இயலாவிடில் அடுத்த வருடம் கூடுதல் முனைப்புடன் வேகத்துடன் செய்து ஈடுகட்டலாம். நிறைவு செய்வதே முக்கியம், எப்படி செய்வது என்பதல்ல


.தா., தமிழ்ப் பாடம் படிக்கிறவர்கள் ஐந்தாம் வகுப்பு முதல் பேச்சு, எழுத்து, படைப்பாக்கம் எனும் ஏதோ ஒன்றைத் தேர்ந்து அதில் ஒவ்வொரு வருடமும் ஒரு அசைன்மெண்டை முடிக்கலாம். ஒரு பேச்சரங்கில் பேசலாம், ஒரு நாடகத்தை அரங்கேற்றலாம். கவிதைகளை எழுதி வாசிக்கலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் இதை நீள் கவிதை, நீள் கட்டுரை, குறுங்கதை, சிறுகதை, நாவல், புத்தகம் என விரிவாக்கிக் கொண்டு செல்லலாம். கணினிப் பாடம் என்றால் சொந்தமாக ஒரு மென்பொருளை உருவாக்குவது, செயலியை கண்டுபிடிப்பது, ஒரு புரோஜெக்டை செய்து காட்டுவது எனப் பண்ணலாம். இதைக் குழுவாக செய்யவும் அனுமதி உண்டு. ஐந்து பாடங்கள் உண்டெனில் இவற்றில் அனைத்துக்குமே அசைன்மெண்டுகள் செய்ய அவசியமில்லை.


இன்று அதிகமாய் மக்கள் பதிவு செய்கிற கோர்செரா போன்ற இணையவழிக் கல்வி முறையில் இப்படித்தான் சான்றிதழ் தருகிறார்கள், இறுதி எழுத்துத் தேர்வின் அடிப்படையில் அல்ல. மேலும் சில தனியார் பல்கலைகளில் சில குறிப்பிட்ட பாடங்களுக்கு இந்த முறையை இன்று பயன்படுத்துகிறார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும்


3) மேற்சொன்ன இரண்டு முறைகளுமே கல்வியை ஒரு விற்பனைப் பண்டமாக மாற்றி விடுகின்றன என்பதால் எனக்கு முழுக்க உவப்பானவை அல்ல. மாறாக இதைப் பரிந்துரைக்கிறேன்:

 எந்த தேர்வு, அசைன்மெண்ட், மதிப்பீடும் இன்றி மாணவர்கள் சுதந்திரமாகக் கற்று பன்னிரெண்டாம் வகுப்பில் இருந்து வெளியேற வேண்டும். பங்கேற்பு கட்டாயமாக இருக்கக் கூடாது. வருகைப் பதிவு இல்லை. முழுக்க உரையாடல் மூலமாக கல்வி நிகழ வேண்டும். மாணவர்கள் எப்போது வேண்டுமான்லும் எங்கிருந்தும் இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்கலாம். ஆசிரியர்கள் இந்த கலந்துரையாடல்களை வழிநடத்த அவசியம் இல்லை. ஆசிரியரை மையப்படுத்தாத, மாணவர் தாமே நடத்தும் வகுப்புகள் என இவற்றை சமகால கல்வியலில் குறிப்பிடுகிறார்கள். ஆதியில் கிரேக்கத்தில் சாக்ரடீஸ் தன் மாணவர்களுக்கு நடத்தின வகுப்புகள் இவ்வாறே இருந்தன. ஒரே கட்டாயம் குறைந்தது இத்தனை மணிநேரங்கள் இந்த கலந்துரையாடல்களில் அவர்கள் பங்கேற்றிருக்க வேண்டும் என்பது.


இங்கிருந்து திரும்பிப் பார்க்கும் போது நமது  ‘புதியகல்விக் கொள்கையில்புதிதாகஒன்றும் இல்லை எனத் தெரிகிறது. அதே பழைய மெக்காலே கல்விமுறையை, தேர்வுமுறையை, கரும்பலகையில் எழுதிக் காட்டி மாணவர்களுக்குபுகட்டும்முறையை கூடுதலாக சிக்கலாக்கி கொண்டு வந்திருக்கிறார்கள். மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகள் பொதுப் தேர்வு என இரண்டு சோதனைகளை நான்காக பெருக்கி இருக்கிறார்கள். இது தனியார் பள்ளிகள் கல்வியில் நுகர்வை விளம்பரப்படுத்த, பெருக்க பயன்படுத்தும் உத்தி. இதை அரசுப் பள்ளிகளுக்கும் கொண்டு வருகிறார்கள். (தொடரும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...