Skip to main content

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதும் அதற்கான மாற்றும் (2)




சரியான கல்வி முறை எப்படி இருக்கக் கூடாது, எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணங்கள் தருகிறேன்.


என் மாணவி ஒருவர் அண்மையில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு பள்ளியில் வேலை செய்தார். நல்ல சம்பளம், பகட்டான வேலையிடச் சூழல். மாணவர்கள் மேற்தட்டை சேர்ந்த பிஞ்சுகள். வயது 2-3 வரை. இப்பிள்ளைகளுக்கு என்ன பயிற்சி அளிக்கிறாய் எனக் கேட்டதற்கு நிறைய பெற்றோர்கள் தம் ரெண்டு வயது மகனோ மகளோ சரளமாக ஆங்கிலம் பேசவில்லை என வருந்தி, அவர்கள் ஸ்மார்ட்டாக இல்லை எனக் கருதியோ இந்த பயிற்சி நிலையத்துக்கு அனுப்புவதாய் சொன்னாள். இக்குழந்தைகளை ஒரு மணிநேரம் ஒரு மாணவருக்கு ஒரு பயிற்சியாளர் எனும் விதத்தில் கூட இருந்து பேசுவார்கள். அவர்களுக்கு வாழ்க்கைத் திறன்களைப் புகட்டுவார்கள் எனச் சொன்னாள். ஒரு மூன்று வயதுக் குழந்தையின் பேச்சு / வாழ்க்கைத் திறனை ஏன் மதிப்பிட வேண்டும் என நான் வியந்தேன். ஆனால் இன்று பெற்றோர்கள் அந்த இடத்தை தான் வந்தடைந்திருக்கிறார்கள். வாழ்க்கையை கூறுபோட்டு அறிவை, திறனை, பண்பாட்டை கல்விச் சந்தையில் ஒரு பண்டமாக வாங்கி பிள்ளைகளுக்கு அளித்திட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். இந்த நுகர்வு மனப்பான்மையை பயன்படுத்தி வியாபாரம் செய்ய ஏராளமான முதலீட்டாளர்கள் முளைத்துள்ளார்கள். ஆனால் உளவியல் என்ன சொல்கிறது?


குழந்தைகளின் மன, அறிவு, திறன் வளர்ச்சியை எந்த ஒரு பருவத்திலும் வேகப்படுத்தவோ நிறுத்தி வைக்கவோ முடியாது என்கிறது உளவியல். அதாவது ஒரு குழந்தை மூன்று வயதில் ஸ்மார்ட்டாக இருந்தால் பத்து வயதிலும் அப்படி இருக்க வேண்டும் என்பதில்லை, பதினைந்து, பதினெட்டு வயதில் அதை உலகை ஜெயிக்கும் என உத்தரவாதமில்லை. ஏனென்றால் நமது மூளை பிளாஸ்டிக்கானது, அது தொடர்ந்து மாறியபடி இருக்கும், ஆனால் பதின் வயதைக் கடந்து முதிரும் வரை மிக அதிகமான மாற்றங்கள் மூளை அமைப்பில் தோன்றும், ஹார்மோன்களின் சுரப்பு, புதிய சூழல்கள் ஒரு மாணவனின் வளர்ச்சியை பாதிக்கும். பொதுவாக நமது கல்வி அமைப்பு இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கற்றலை எளிமைப்படுத்துகிறது என்பது பிரச்சனை - இதனாலே கல்வியில் வெல்லுகிற மாணவர்கள் எப்போதும் வாழ்வில் வெல்லுவதில்லை. வாழ்க்கைத்திறன் பயிற்சி எனும் புதிய கோமாளித்தனத்தாலும் இதை உறுதி செய்ய முடியாது. இதனாலே மூன்றாம் வகுப்பில் பொதுத்தேர்வு என்பது ஒரு பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பான திட்டமாக இருக்கிறது.



ஆம், இன்றைய குழந்தைகளுக்கு நாம் அதிகமான தகவல்களை, சவால்களை தர வேண்டி இருக்கிறது, அவர்கள் கற்றல் திறன் இணையத்தின் மிகுதியான தகவல் குவிப்பால் முன்பைப் போல இன்று இல்லை. திறன் அடிப்படையிலான பயிற்சிகள் என நமது புதிய கல்விக்கொள்கை (ஒரு பக்கம் தையல், தோட்டக்கலை என பிதற்றினாலும்) முன்வைக்க நினைப்பது கல்வியை இந்த நவீன காலத்துக்கு ஏற்ப தகவமைப்பதே. ஆனால் இந்த கல்விக்கொள்கை கல்வியை எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதே அடிப்படையில் தவறானது. .தா., திறன் என்பது ஒரு நாற்காலியை செய்வது அல்ல. கட்டுமான அறிவு சார்ந்து மாணவர்களை சுயமாய் யோசிக்கத் தூண்டுவது. ஆனால் பத்தாம் வயதிலேயே தேர்வெழுத வேண்டும் எனச் சொல்லும் போது சுயவளர்ச்சியை இந்த கல்விக்கொள்கை குழிதோண்டிப் புதைத்து விடுகிறது. அதோடு குழந்தைகளை கராறாய் தேர்வுகள் மூலம் மதிப்பிடலாம் என்பதே அறிவியலுக்கு புறம்பானது. இதற்கு நான் பின்னால் வருகிறேன். முதலில் அனுபவத்தின் முக்கியத்துவத்துக்கு வருவோம்.


சுய-கல்வியும் அனுபவமும் 


சுயமாய் சிந்திக்கும், சிந்தித்தைக் கொண்டு ஒரு புதிய கருத்தாக்கத்தை வந்தடையும் தர்க்க அறிவும், மனமுதிர்ச்சியும், அனுபவங்களும் எட்டு வயதில் வாய்க்காது, அது பத்து அல்லது பன்னிரெண்டு வயதிலும் வாய்க்காது. ஏனென்றால் அறிவு வளர்ச்சியில் தகவல்களுக்கும் பயிற்சிக்குமான இடம் சிறியதே, பெருமளவு நமது அனுபவங்களே நம்மை புடம் போடுகின்றன. சுயசிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், பில் கேட்ஸ் போன்ற தொழில்முனைவோர் நமது சூழலில் சுலபத்தில் தோன்ற முடியாது. ஏன்? கற்றலின் போது வாழ்க்கை அனுபவத்துக்கு இடம் அளிக்காததனால். கல்வியை நாம் கல்வியை வகுப்பறைக்குள் உற்பத்தி செய்யப்படும் ஒரு வஸ்துவாக, வகுப்பறையை ஒரு தொழிற்சாலையின் உற்பத்தி யூனிட்டைப் போல, கற்பிப்பதனால். கல்வியில், மாறாக, வகுப்பறையை பயிற்சியை விட சுயமான தேடலுக்கு அனுபவத்துமே முன்னுரிமை அளிக்க வேண்டும்.


வாழ்க்கை அனுபவத்தை எப்படி அளப்பது?


கல்வி அமைப்பின் கட்டுப்பாடுகள், கண்காணிப்புக்கு வெளியே குழந்தைகளை சுயமாய் செயல்பட, பரிசோதனைகளை செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். ஒரு உதாரணம் தருகிறேன். பில்கேட்ஸ் அமெரிக்காவின் எலைட் சமூகத்தை சேர்ந்தவர். அவரது பெற்றோர்கள் பெரும் செல்வந்தர்கள். அவர்கள் வாழ்ந்த குடியிருப்பில் உள்ளவர்கள் சேர்ந்து ஒரு பொது மேசை கணினியை வாங்கி அங்குள்ள அனைத்து குழந்தைகளும் பயில்வதற்கு ஏற்பாடு செய்தனர் (அந்த காலத்தில் இந்தியாவில் நாமெல்லாம் கணினியை விடுங்கள் டிவியைப் பற்றி கூட கேள்விப்பட்டிருக்க மாட்டோம்). அந்த காலத்தில் வீடுகளிலே கணினி இருக்காது, அதன் மதிப்பே கோடிகளில் இருக்கும் என்கிறார்கள். சிறுவயதில் கல்வியின் பகுதியாக அல்ல விளையாட்டின் பகுதியாக கிடைத்த இந்த வாய்ப்பு தான் அவரை மென்பொருளை உருவாக்குவதில் நிபுணராக்கியது. விண்டோஸ் தோன்றியது. மற்றொரு பக்கம் அதற்குப் போட்டியாகக் தோன்றிய ஆப்பிளின் கதையின் இப்படியானதே. ஸ்டீவ் ஜாப்ஸ் முறையான கல்வி அமைப்பில் இருந்து தோன்றியவர் அல்ல. அவர் தொழில்நுட்ப நிபுணரும் அல்ல. ஆனால் ஜிப்ஸியாக திரிந்த காலம், அந்த அனுபவங்கள், கலை சார்ந்த நாட்டங்கள், கற்பனை, இந்தியாவுக்கு வந்து அடைந்த அனுபவங்கள், மாற்று சிந்தனைகள் எல்லாம் ஆப்பிள் கணினியின் வடிவமைப்பில் பெரிதும் பங்களித்தன. அது மட்டுமல்ல, அவருடன் இணைந்து ஆப்பிளின் மென்பொருளை வடிவமைத்த வோஸ்னெயிக் கல்லூரிப் படிப்பை முடித்தவர் அல்ல. அதற்கு முன்பே அவர் சுதந்திரமாக செயல்பட்டு சொந்தமாக ஒரு கணினியை உருவாக்கினார். பின்னர் தோன்றிய மைக்ரோபுரோசசர், கீபோர்ட் போன்றவற்றுக்கு முன்னோடியாக அமைந்த கணினி இது.


 மேற்கில் இப்படி மிகப்புரட்சிகரமான கண்டுப்பிடிப்புகள், மாற்றங்கள் கல்வி அமைப்புக்கு, எழுத்துத் தேர்வு முறைக்கு, பொதுத்தேர்வுகளுக்கு வெளியிலே நிகழ்ந்திருக்கின்றன. ஏனென்றால் அங்கு அதை ஊக்குவிக்கிறார்கள். நாமோ பிள்ளைகளை பொத்திப் பொத்தி நமது அறிவுறுத்தலின், கண்காணிப்பின் கீழே முப்பது வயது வரை வைத்திருக்கிறோம். அவர்கள் தொடர்ந்து ஏதாவது அமைப்புகளின் கீழ் பயிற்சி பெற வேண்டும், வருடாவருடம் தகுதித் தேர்வுகள் எழுத வேண்டும், நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அப்போது நமது பிள்ளைகள் யாருக்கோ அடிமைகளாகத் தான் ஆக முடியும். ரொம்பத் திறமையான மாணவர்களிடம் நான் இந்த சிக்கலைப் பார்க்கிறேன். சொந்தமாய் யோசிக்கவோ திட்டமிடவோ சொன்னால் அவர்கள் பதறுகிறார்கள். அவர்களுக்கு யாராவது தொடர்ந்து வழிகாட்ட வேண்டவோ, மந்தைக்குப் பின்னால் ஓடவே அவர்கள் தயாராக இருக்கிறார்கள்


இந்த புதிய கல்விக் கொள்கை இதை மாற்ற முனைகிறதா? நிச்சயமாய் இல்லை, இது (1) தனியார் பள்ளிகளின் நுகர்வோர் அடிப்படையிலான செயற்கையான கல்வி முறையை அரசுப்பள்ளிகளுக்கும் கொண்டு வர முயல்கிறது. (2) மேஜையில் அமர்ந்து கொடுக்கப்பட்ட பணியை செய்து கூலியை வாங்கிப் போகும் மற்றொரு தலைமுறையை தயாரிக்கிறது. இதையே தானே பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெக்காலே முன்னெடுத்தார். என்ன வித்தியாசம் பாஸ்


(தொடரும்)


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...