(பில்கேட்ஸும் பிராயிலர் கோழிகளும்)
தனியார் கார்ப்பரேட் பள்ளிகளில் பயின்று வந்த, சிபி.எஸ்ஸி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் அரசுப்பள்ளி மாணவர்களை விட அதிக திறமையானவர்கள் அல்லவா? அவர்கள் பெரிய கல்லூரிகளில் இடம்பெற்று ஜொலிக்கவில்லையா? ஒரு மாணவனாகவும் பின்னர் கல்வியாளனாகவும் இது ஒரு பொய்ப் பிரச்சாரம், தொன்மம் என என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் நமது அரசுப்பள்ளி மாணவர்களால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஈடுகொடுக்க முடிவதுடன் அவர்களை மீறி செல்லவும் முடிகிறது என்பதே உண்மை.
என் கதைக்கு முதலில் வருகிறேன்:
நான் அரசுப்பள்ளியிலே படித்து தனியார் கல்லூரிகளுக்கு சென்றேன். குறிப்பாக சென்னையில் நான் முதுகலை படிக்க சென்ற போது அங்கு வகுப்பில் என்னையும் சேர்த்து நான்கு பேரே அரசுப்பள்ளி மாணவர்கள். மிச்ச பேர்கள் சென்னையின் தனியார் பள்ளிகளில், தனியார் கல்லூரிகளில் அனைத்து வசதிகளையும் பெற்று முன்னேறி வந்தவர்கள். எங்களை விட ஸ்மார்ட்டானவர்கள். ஆனால் முதல் அரை கல்வியாண்டில் இருந்தே எனக்கு இந்த தனியார் பள்ளி நட்சத்திரங்களை முறியடித்து முதல் மதிப்பெண் வாங்குவது எந்த சிரமமும் இருக்கவில்லை. அவர்கள் என்னளவுக்குத் திறமையானவர்களே, ஆனால் என்னளவுக்கு உழைக்க மாட்டார்கள். இது தனியார் கல்வியின் ஸ்மார்ட்டாக் கற்கும் பயிற்சியின் ஒரு சிக்கல். ஒரு சின்ன விசயத்தை ஒரு பக்க குறிப்புகளைக் கொண்டு படிக்கக் கூடாது, அதற்கு பத்து புத்தகங்களையாவது புரட்ட வேண்டும் என நான் நினைத்தேன். அவர்கள் தேர்வுக்கு ஒரு வாரம் முன்பு படிக்க ஆரம்பித்தால் நான் கல்வியாண்டு முழுக்க ஒருநாள் விடாமல் படிப்பேன். அவர்களை நான் முறியடித்தற்கு மற்றொரு காரணம் அவர்கள் அப்போது படிக்க ஆரம்பித்த உளவியல், அமைப்பியல், பின் அமைப்பியல் கோட்பாடுகளை நான் பதினைந்து வயது முதலே கலை இலக்கியப் பெருமன்ற விவாதங்கள் மூலம் பரிச்சயம் கொண்டிருந்தேன். (மொழியியல் தவிர - ஏனென்றால் அதை தீவிர இலக்கியக் கூட்டங்களில், பத்திரிகைகளில் யாரும் பொருட்படுத்துவதில்லை.) ஆக எனக்கு வகுப்புகள் ரொம்ப அடிமட்டமாக, சவால் அளிக்காததாக இருந்தன. அதாவது அரசுப் பள்ளியில் இருந்து சென்ற எனக்கு அந்த சென்னையில் உள்ள உன்னதமான தனியார் கல்லூரியின் ரெண்டு வருடத்திற்கான பாடத்திட்டம் மூன்றே மாதங்களில் படிக்கும் அளவுக்கானதாக இருந்தது. “ஏண்டா இந்த லாலி பாப் பாடத்திட்டத்தை வைத்து என் டைமை வேஸ்ட் பண்றீங்க?” என்றே நான் உள்ளுக்குள் கதறினேன். இன்று எழுதி வரும் இளம் எழுத்தாளர்கள் யாரும் ஒரு தனியார் பல்கலையில் சென்று இலக்கியம் படித்தால் இப்படித்தான் கதறுவீர்கள்.
என்னுடன் வகுப்பில் இருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பத்ரா என்றொரு மாணவன் இருந்தான். அவனும் என்னைப் போன்றே வகுப்புகளைப் பற்றி உணர்ந்தான். ஆக, நாங்கள் வகுப்புகளை சுவாரஸ்யமாக்க ஒரு திட்டமிட்டோம். ஆசிரியரை வழக்கம் போல நடத்த விடக் கூடாது, திசை திருப்ப வேண்டும். நாங்கள் இதற்காக வகுப்புக்கு முந்தின நாள் ஒரு கூட்டம் போடுவோம். ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஆசிரியர் எப்படியெல்லாம் பேசுவார் என கணித்து அவரது கருத்துக்களை எப்படி மறுத்து கேள்வி கேட்கலாம் என ஒரு திட்டவரைவை தயாரிப்போம். அதில் நான் ஒரு கேள்வியை இப்படிக் கேட்டு ஆசிரியர் இப்படி பதிலளித்தால் அதற்கு நீ இப்படி ஒரு மறுப்புக் கேள்வியைத் தொடுக்க வேண்டும், அடுத்து அவர் சரணடையாவிட்டால் நான் உனக்கு ஆதரவாக இப்படியான கேள்வியை எழுப்புவேன் எனக் குறித்து வைப்போம். அவ்வாறே ஒரு திரைக்கதையை போல கேள்வி-பதிலை வகுப்புக்குள் நிகழ்த்துவோம். பெரும்பாலான ஆசிரியர்கள் திகைத்துப் போய் பேசுவதை மறந்து விடுவார்கள். மற்ற மாணவர்கள் தூங்கப் போவார்கள்.
இதை குறிப்பிடக் காரணம் நாங்கள் இருவரும் மற்றவர்களை விட புத்திசாலிகள் எனக் காட்டவல்ல. மாறாக, நாங்கள் உருவான வாழ்க்கைச் சூழல், அனுபவங்கள் எங்களை மற்றொரு இடத்தில் கொண்டு போய் வைத்தன. நான் கலை இலக்கிய பெருமன்றத்தின் தீவிர இலக்கிய விவாதங்கள் வழி உருவானவன் என்றால் பத்ராவோ கொல்கொத்தாவில் அவன் வீட்டுக்குள்ளும் வெளியிலும் அரசியல், தத்துவ விவாதங்களைக் கேட்டு குழந்தையில் இருந்தே வளர்ந்தவன். இதை நீங்கள் வரையறைக்குட்பட்ட செயற்கையான வகுப்பறை அமைப்புகளைக் கொண்டு பதிலீடு செய்ய முடியாது. ஐந்தாம் வகுப்பு முதலே ஷேக்ஸ்பியரைக் கற்கும் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இன்று உண்டு. ஆனால் ஒரு இடதுசாரி இலக்கிய, அரசியல் அமைப்புக்குள் வளர்கிற இளைஞனை வாதத்திலோ எழுத்திலோ அறிவுத்திறனிலோ வெல்ல இந்த கான்வென்ட் லாலிபாப்புகளால் இயலாது. முன்னவன் அனுபவத்தால் புடம் போடப்படுகிறவன், பின்னவனோ அனுபவத்தால் காயம்படாமல் அமைப்புகளால் பாதுகாக்கப்பட்ட செயற்கையாக உருவாக்கப்படுகிறவன்.
ஆம், கான்வெண்ட் மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள், கூடுதல் தன்னம்பிக்கையுடன் தோன்றுகிறார்கள். உண்மையே, அதே நேரம் கிராமத்தில் இருந்து செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களும் ஒரு தனியார் கல்லூரிக்குள் சென்று ஒரு வருடத்துக்குள் தம்மை தகவமைத்து, இந்த கான்வெண்ட் பேபிகளை பேச்சிலும் ஆளுமையில் கடந்து செல்வதை நான் நேரடியாகவே காண்கிறேன். வகுப்பில் முதல் மாணாக்கராய் வருவதைக் காண்கிறேன். அவர்களுக்குத் தேவையெல்லாம் பணம், இடம் உள்ளிட்ட வசதிகள் மட்டுமே. முன்பு போலல்ல, இன்று காலம் வெகுவாக மாறி விட்டது - கூகிள், ஆங்கில ஊடகங்களுடன் சதா வாழும் நிலை, சமூகவலைதளங்கள் மாணவர்கள் வேகவேகமாய் ஈடுக்கட்டி முன்னேற உதவுகின்றன.
ஒரு ஆசிரியனாக என்னுடைய அனுபவம் என்னவெனில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் தனியார் கொழுந்துகளுக்கும் திறன் மற்றும் சாதனை அளவில் பெரிய வித்தியாசமில்லை என்பதே. இரண்டு பிரிவிலும் சோம்பேறிகள் இருக்கிறார்கள், உழைப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் மக்குகள் இல்லை. நான் இதுவரை ஒரு மக்கு மாணவனைக் கூட கண்டதில்லை, சரியான நேரத்தில் போதுமான ஊக்குவிப்பு ஆதரவும் கொடுத்தால் எந்த மாணவனாலும் எதையும் கற்கவும் வெல்லவும் முடிகிறது.
ஒரே வித்தியாசம் உள்ளூர் கல்விக்குப் பிறகு வெளிநாட்டுக்கு சென்று படிக்க பண வசதி நமது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இருப்பதில்லை. அதே போல பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் உடனடியாய் நல்ல பொறுப்புகளில் அமர்த்தப்படும் அளவுக்கு அவர்களுக்கு ஒரு பிராமண, மார்வாரி, பஞ்சாபிப் பையன் அளவுக்கு தொடர்புகள் இருப்பதில்லை.
எதார்த்தம் இப்படி இருக்க நமது புதிய கல்விக்கொள்கை தனியார் கல்விக்கொள்கைகளை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிக்க முயல்வது அபத்தமானது. அது தனியார் கல்வி குறித்து மத்திய வர்க்கத்துக்கு உள்ள மாயையை பயன்படுத்தி மைய அரசு குறுக்குவழியில் நல்ல பெயர் வாங்க உதவலாம். ஆனால் மாணவர்களுக்கு நடைமுறையில் எந்த பயனும் இராது. மாறாக அவர்களை பிராயிலர் கோழிக்குஞ்சுகளாக மாற்றும். எனக்கு ஒரு மகன் இருந்தால் அவனை நான் ஒரு அரசுப்பள்ளியிலே சேர்ப்பேன். அங்கு அவன் எளிய வாழ்க்கைச்சூழலுக்கு, கீழ்மத்திய வர்க்கப் பிள்ளைகளுடன் நட்பு பூண்டு, பெரிய அழுத்தங்கள் இன்றி சுயமாய் சிந்தித்து வளர வேண்டும் என விரும்புவேன். பிராயிலர் கோழிகளைக் கொண்டு நீங்கள் பிரியாணி மட்டுமே போட முடியும். நடைமுறையில் அவர்களால் எந்த பயனும் இல்லை. கூண்டைத் திறந்து விட்டால் பறந்து போகக் கூடத் தெரியாது.
நமக்கு இப்போதைக்குத் தேவை அரசுக் கல்வி முறையை மாற்றுவதல்ல, கல்விக்கு கூடுதலாக நிதியை ஒதுக்குவது, நிறைய ஆசிரியர்களை பணியில் அமர்த்துவது, ஒவ்வொரு வகுப்பிலும் 20க்கு மேல் மாணவர்கள் எடுக்காமல் இருப்பது, உள்கட்டமைப்பு வசதிகளை தனியாருக்கு நிகராய் வலுப்படுத்துவது, நவீனப்படுத்துவது, மாணவர்களின் ஆய்வுக்கு நிதி ஒதுக்குவது, தேர்வுகளை ஒழிப்பது, அனுபவரீதியான, ஆய்வுரீதியான, கலந்துரையாடல் வழியிலான கல்விக்கு வழிவகுப்பது.
முடிந்தால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி போன்ற முன்னணி நிறுவனங்களில், அரசு வேலைகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டத்திருத்தத்தை கொண்டு வருவது, தில்லியிலும் கேரளாவிலும் நிகழ்வதைப் போல மக்களை தனியார் பள்ளிகளைத் தவிர்த்து அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்ப்பது.


Comments