முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தல்ஸ்தாயும் தஸ்தாவஸ்கியும்: ஒரு எளிய அறிமுகம் (3)

 

தல்ஸ்தாய்:


தல்ஸ்தாய் 1828ஆம் வருடம் செப்டம்பர் 9ஆம் தேதி ரஷ்யாவில் யஸ்னயா பொல்யானா எனும் பண்ணை வீட்டில் ஒரு நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தார்.


தல்ஸ்தாயுடன் பிறந்தவர்கள் நால்வர்.


தல்ஸ்தாய்க்கு இரண்டு வயது இருக்கும் போது அவரது அம்மாவும், ஒன்பது வயது இருக்கும் போது அவரது தந்தையாரும் இறந்து போனார்கள். உறவினர்களின் கவனிப்பில் தான் தல்ஸ்தாயும் சகோதரர்களும் வளர்ந்தார்கள்.


1844இல் தல்ஸ்தாய் கஸான் பல்கலையில் சட்டமும் கிழக்கத்திய மொழிகளும் கற்றார். அவர் ஒரு ஆர்வமற்ற மாணவராகவே ஆசிரியர்களால் கருதப்பட்டார். கல்வியை பாதியில் விட்டுவிட்டு ஊருக்குத் திரும்பிய தல்ஸ்தாய் ஜாலியாக சொத்தை அனுபவித்தபடி வாழ்ந்தார். Childhood எனும் சுயசரியை நாவலை பிரசுரித்தார். சூதாட்டத்தில் நிறைய பணத்தை இழந்த நிலையில் ஒரு மாற்றத்துக்காக ராணுவத்தில் தன் அண்ணனுடன் சேர்ந்து கிரிமியன் யுத்தத்தில் பங்கேற்றார். 11 மாதங்கள் செவஸ்தபோலில் முகாமிட்டிருந்த அவர் அந்த பின்னணியில் செவஸ்தபோல் கதைகளை எழுதினார். இக்கதைகள் மூலம் போர் குறித்த அதுவரையிலான ரொமாண்டிக்கான, தேசபக்தி சித்திரத்தை தலைகீழாக்கினார். போரின் அழிவை, துன்பத்தை, எதிரி எனும் கட்டமைப்பின் போலித்தனத்தை அம்பலப்படுத்தினார். 1857இல் பாரிஸில் அவர் ஒரு பொதுவிடத்தில் நிகழ்தப்பட்ட மரண தண்டனையை காணுற்றார். மனம் உடைந்த நிலையில் தன் நண்பருக்கு இதைப் பற்றி கடிதமெழுதிய அவர்அரசு எப்போதும் மக்களை சுரண்டுகிற, சீரழிக்கிற ஒரு சதித்திட்டத்தில் பங்கேற்கிறது. இனி ஒரு போதும் அரசுப் பணிகளில் சேர மாட்டேன்என்றார். திருக்குறளின் மொழியாக்கம் ஒன்றைப் படிக்க நேர்ந்ததும் தல்ஸ்தாயின் வன்முறைக்கு எதிரான நம்பிக்கைகளை வடிவமைத்தது. 1908இல் அவர்  பின்னர் அவர் A Letter to a Hindu எனும் கடிதம் ஒன்றை பிரசுரித்தார் (இந்தியர்களை ஹிந்துக்கள் என அவர் நம்பினார், பாவம்!). இதில் அவர் இந்தியா எப்படி ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற முடியும் எனப் பேசியிருந்தார். அந்நேரம் தென்னாப்பிரிக்காவில் தொண்டு செய்து கொண்டிருந்த காந்தி இதைப் படித்து ஊக்கம் பெற்றார். தென்னாப்பிரிக்காவில் தன் ஆசிரமத்துக்கு தல்ஸ்தாய் காலனி எனப் பெயரிட்டார். பின்னர் அவர் அஹிம்சாவாதியாக மாறினதற்கும் காந்தியின் அரசியல் சித்தாந்தத்துக்கு உரமிட்டதற்கும் பாரிஸில் அவர் பார்த்த மரண தண்டனை நிகழ்ச்சி ஒரு துவக்கப் புள்ளியாக அமைந்தது


தனது சகோதரரின் மரணத்துக்குப் பின்னர் மனமாற்றம் ஏற்பட்டு தல்ஸ்தாய் 1862இல் தன்னை விட 16 வருடங்கள் இளையவளான சோபியாவை காதலித்து மணமுடித்தார். அவர்களுக்கு 13 குழந்தைகள் பிறந்தன. சோபியாவுடான அவரது உறவு ஒரே சமயம் இச்சையும் காதலும் கொண்டு பொலிந்ததாகவும் குரூரத்தின் விடம் தீண்டியதாகவும் அமைந்தது. தல்ஸ்தாய் தன் முதலிரவின் போதே தனது நாட்குறிப்புகளைப் படிக்கும்படி சோபியாவை வற்புறுத்தியதாகவும், அதில் அவர் தனது பாலியல் சாகசங்களை, தவறுகளை பட்டியலிட்டிருந்ததாகவும், தன்னுடைய பண்ணையடிமைகளில் ஒருவர் மூலம் தனக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உண்டு எனக் கூறிதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வெளிப்படுத்தல் சோபியாவை காயப்படுத்தியது. இருந்தாலும் அவர் மிகுந்த நேசத்துடன் அர்ப்பணிப்புடன் தல்ஸ்தாவை ஏற்றுக்கொண்டதுடன் அவரது இலக்கிய வாழ்விலும் பெரும் துணையாக அமைந்தார். பல வருடங்களாக தல்ஸ்தாயின் நாவல்களை படியெடுக்கவும் செப்பனிடவும் சோபியா உதவினார். சோபியா இல்லாவிடில்போரும் வாழ்வும்நாவலே சாத்தியப்பட்டிருக்காது என்றால் அது மிகையாகாது. ஆனால் பின்னாளில் வயோதிகத்தின் போது தல்ஸ்தாயின் நிலையற்ற முடிவுகளால் சோபியா அவரிடம் இருந்து விலகிச் சென்றார். (கிட்டத்தட்ட காந்தி தன் மனைவியை நடத்தியதைப் போலவே தல்ஸ்தாயும் இங்கு சோபியாவை நடத்தினார் எனலாம்.) சோபியாவிடம் சண்டையிட்டு வீட்டை வெளியேறின காரணத்தாலே தள்ளாடும் வயதில் தல்ஸ்தாய் மரணமடைய நேர்ந்தது.  


தல்ஸ்தாய் தன் எழுத்து வாழ்வின் இறுதிக் கட்டத்தில் தன்னுடைய பார்வையில் கிறித்துவ பரப்புரையில் ஈடுபட்டார் எனலாம். இந்த பிரச்சார காலத்தில் அவர் எழுதிய கட்டுரை நூல்கள் இலக்கிய வாசகர்களுக்கு சிலாகிக்கத்தவை அல்ல. இக்கட்டத்தில் எழுதப்பட்ட அவரதுபுத்தியுர்ப்புநாவலும் எனக்கு உவப்பானது அல்ல. வினோதமாய் இந்த வீழ்ச்சிக் காலத்தில் தல்ஸ்தாய் தனது மகத்தான நாவல்களானஅன்னா கரெனினாமற்றும்போரும் வாழ்வைநிராகரிக்கவும் செய்தார்.


தல்ஸ்தாய் தனதுபோரும் வாழ்வும்மற்றும்அன்னா கரெனினாஆகிய படைப்புகளுக்காக இன்றும் போற்றப்படுகிறார். உலக நாவல்களின் தந்தை என இவரைச் சொல்லலாம். நான் இவரை இலக்கியத்தின் கடவுள் என்பேன்.


தல்ஸ்தாய் ஒருவிதத்தில் காந்தியைப் போல பல சுயபரிசோதனைகளை தன்மீதே நிகழ்த்திக் கொண்டவர். இலக்கியத்தை ஒரு பொழுதுபோக்காக, கலை செயல்பாடாக மட்டும் அவர் சுருக்கிக் கொள்ளவில்லை. இலக்கியத்துக்கு ஒரு ஆன்மீக மேம்பாட்டு, சமூக சீர்திருத்த லட்சியம் இருக்க வேண்டும், பயன்பாடு இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். ஆன்மீக, ஒழுக்கவாத, சமூக நலன் சார்ந்த பல கருத்துக்கள், தீர்வுகளை அவர் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் பரிசீலித்துப் பார்த்தார். அப்போது எழுந்த பல முரணான அனுபவங்களை அவர் தன் படைப்புகளில் கொண்டு வந்தார்


.தா., தல்ஸ்தாய் தன் இளமையில் இருந்தே பல விபச்சார விடுதிகளுக்கு செல்லும், கேளிக்கைகளில் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்யும் பழக்கம் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் அவர் தன்னை நெறிப்படுத்த, கண்டிக்க, சீர்திருத்த முயல்வார், தோல்வி அடைவார். இந்த ஊசலாட்டத்தை அவர்அன்னா கரெனினாநாவலில் அன்னாவின் காதலனான, இளம் ராணுவ அதிகாரி விரான்ஸ்கியின் பாத்திரம் வழியாக சித்தரித்திருப்பார். விரான்ஸ்கி தன் தாய் கொடுத்த பணத்தை எல்லாம் சூதாடி அழித்த பின் மனம் உடைந்து நொந்து போய் அமர்ந்திருப்பார். அடுத்து தன் நாட்குறிப்பை எடுத்து கணக்கை மொத்தமாய் தெளிவாக எழுதி விடுவார். இனி கவனமாய் செலவழிக்க வேண்டும் என முடிவெடுப்பார். அடுத்து மீண்டும் சூதாடக் கிளம்பி விடுவார். இவை தல்ஸ்தாயின் வாழ்வில் நிகழ்ந்தவையே - அவரும் ராணுவத அதிகாரியாக, ஸ்திரி லோலராக இருந்தார். அதைக் கடந்து போகவும் முயன்றார். ஒரு பக்கம் தன் எல்லா நாவல்களிலும் தனிமனித ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை தல்ஸ்தாய் பிரச்சாரம் பண்ணினாலும் தனிமனிதர்களால் இது எப்போதும் சாத்தியமாகாது, சாத்தியமாகாததும் மனிதனின் அழகுகளில் ஒன்றே, பலவீனமும் மானுடச் சிறப்பே எனக் காட்டி இருப்பார். அதாவது தல்ஸ்தாயின் வெளிமனம் ஒழுக்கத்தை போதிக்க அக மனம் ஒழுக்கமீறலின் நியாயங்களைப் பேசும். இந்த ஊசலாட்டத்தை நாம் காந்தியின் வாழ்விலும் காணலாம். காந்தி சாகும் வரை இரட்டை மனிதராகவே இருந்தார். ஆனால் அவரிடம் பாசாங்கு இல்லை, தன் நிலையின்மையை, ஊசலாட்டத்தை அவர் வெளிப்படையாகவே பதிவு செய்தார்.


அன்னாவின் தங்கை கிற்றியை காதலிக்கும், பின்னர் மணர்ந்து கொள்ளப் போகும் லெவினின் பாத்திரத்திலும் தல்ஸ்தாயின் சாயல் உண்டு. லெவின் ஒரு நிலப்பிரபு. அதே நேரம் அவன் முற்போக்கு கருத்தியல் கொண்ட, பொருளாதாரம் சமூகநீதி நோக்கி நகர வேண்டியது குறித்து சிந்திக்கிற ஒரு 32 வயது இளைஞனும் தான். இந்த லட்சியம் அவனை தன்னிடம் உள்ள கூலி அடிமைகளை விடுவிக்கவும், உற்பத்தியில் சம பங்கை பிரித்தளிக்கவும் தூண்டுகிறது. ஆனால் அந்த கூலித்தொழிலாளிகள் இதற்குத் தயாராக இல்லாததால் கலவரமடைந்து லெவினை எதிர்க்கிற வருத்தமான அதே சமயம் நகைச்சுவையான நிலைமை அரங்கேறுகிறது. தல்ஸ்தாயும் இதே போல ஜார்ஜியம் எனும் சோஷலிச கொள்கையை நம்பியார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

 

 தனிமனிதனின் ஆன்ம வளர்ச்சி, சீரழிவு, ஆண்-பெண் உறவுச்சிக்கல்கள் என ஒவ்வொன்றைப் பற்றியும் தல்ஸ்தாய் ஒரு உபதேசியாக, மானுட ரட்சகராக தன்னைக் கருதிக்கொண்டே நாவல்களில் விவாதித்தார். ஒரு இலக்கியவாதியாக இது அவரது பலவீனம்


தல்ஸ்தாய் பெண் பாத்திரங்களை ஆண் சார்புநிலையில் சதா வைத்திருந்தார் என ஒரு குற்றச்சாட்டும் உண்டு. அவரது பெண் பாத்திரங்கள் ஆழமானவர்கள் என்றாலும், சுதந்திரத்தை நாடினாலும், சுயசார்பு குறித்து சிந்திப்பவர்கள் அல்ல. ஒவ்வொரு பெண்ணும் தன் முழுமையை உணர மணமுடித்து, குழந்தைகளை பெற்று வளர்த்து, கணவனுடன் திருப்தியுடன் வாழ்வதே ஒரே வழி என தல்ஸ்தாய் நம்பினார். “அன்னா கரெனினாவில்இளமையில் சமூகத்தை அனுசரித்தும் பின்னர் முப்பதுகளில் சமூக வரம்புகளை மீறி ஓடிப் போகும் அன்னா தற்கொலை செய்கிறாள். ஆனால் மாறாக அன்னாவின் தங்கை இளமையில் தவறான ஆண் ஒருவனை நேசித்து, மனம் உடைந்து மணமுடிக்காமல் தனித்திருந்து பின்னர் சமூக ஒழுங்கைப் பின்பற்றி தன் சமூக வகுப்பை சேர்ந்த லெவினை மணமுடித்து குழந்தை பெற்று பூரணத்துவம் அடைகிறாள். தல்ஸ்தாயின் இந்த கொள்கை பெண்ணியவாதிகளுக்கு உவப்பானது அல்ல.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...