முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உளவியல் நூல்கள்: ஒரு பார்வை (4)


இருத்தலியல் உளவியல் என ஒரு துறையும் உண்டு - இதில் வாழ்க்கை அர்த்தமற்றது, சாரமற்றது எனும் புள்ளியில் இருந்தே விவாதத்தை ஆரம்பிக்கிறார்கள். மனிதனின் துன்பங்களுக்கு, அவநம்பிக்கைகளுக்குக் காரணம் வாழ்க்கை அர்த்தமற்றது, அதனால் நிச்சயமற்றது, அதனாலே அவநம்பிக்கையை ஏற்படுத்துவது எனும் தொடர் விளைவுகளே. பௌத்தம் இந்த தொடர் சங்கிலியை உடைத்தால் மனிதன் விடுதலை அடைவான் எனும் போது, உளவியலில் இந்த சங்கிலிகளை ஓரிடத்தில் நிலையாக அறைந்து வைக்க ஒரு ஆணி - ஒரு அர்த்தம் - அவசியம் எனப் பேசினார்கள். குறிப்பாக யூதர்களின் வதைமுகாம்களில் மக்கள் மரணம் கண்முன்னால் தோன்றும் போது எப்படி வாழ்க்கையில் நம்பிக்கை வைத்து முன்னகர்ந்தார்கள் எனும் கேள்வியை வைத்தே இது தோன்றியது. இந்த உளவியல் வகையை தோற்றுவித்தவர் பெயர் விக்டர் பிராங்கிள் [Viktor Frankl] (1905-97). இவர் வதைமுகாம் ஒன்றில் சிறைவைக்கப்பட்டு மீண்டு வந்தவர். உளவியலாளரான இவர் எப்படி அந்த வதைமுகாமினர் நம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடர்ந்தார்கள், ஏன் தற்கொலை செய்யவில்லை எனக் கேட்டார். இம்மக்கள் வாழ்க்கை குறித்த பல நம்பிக்கைகளை அன்றாடத்தில் கற்பனையாய் உருவாக்கி அவற்றை நம்பினார்கள் எனக் கண்டுப்பிடித்தார். நவீன காலத்தில் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டு அவநம்பிக்கையால் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை கண்டுபிடித்து அளித்தாலே சரியாகி விடும் எனக் கூறினார். இந்த முறைமையை logotherapy என்றார்கள். இவரது முக்கிய நூல் Man’s Search for Meaning. 




அடுத்து இதே உளவியலை இருத்தலிய, சமூகவியல், மார்க்ஸிய பொருளாதாரத்தின் பாதையில் வைத்து அலசியவர் எரிக் புரோம் (Erich Fromm) [1990-80]. இவர் வரலாற்றின் போக்கை நிலப்பிரபுத்துவம், முதலீட்டியம் எனப் பிரிக்கிறார். நிலப்பிரபுத்துவ காலத்தில் மக்கள் அடிமைகளாய், அறியாமையில் இருந்தாலும் அவர்கள் தாம் யார் எனும் நிச்சயத்துடன் இருந்தார்கள் (அதாவது லோகோதெரப்பியில் வரும் இருத்தலின் அர்த்தம்). ஆனால் முதலீட்டிய சமூகத்திலோ சமூதாயங்கள் உடைந்து, கிராமத்தில் இருந்து மக்கள் நகரங்களுக்குப் புலம்பெயர்ந்து தனிமனிதர்கள் தோன்றுகிறார்கள். இந்த தனிமனிதர்கள் நிலையான ஒரு குறிப்பிட்ட ஊரை சேர்ந்தவன், சமுதாயத்தை சேர்ந்தவன், தொழில் அடையாளத்தைக் கொண்டவன் என தம்மைக் குறிக்க முடியாது. அவர்கள் ஒரு எந்திரத்துடான தம் உறவால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுவார்கள், அவர்கள் பணத்தின் மதிப்பால் மதிப்பிடப்படுவார்கள். ஆனால் மார்க்ஸ்மூலதனம்நூலில் பணத்தின் மதிப்பு என்பது அரூபமாய் இருப்பதாலே அது ஏற்றத்தாழ்வுகளுக்கு, அநீதிக்கு வழிவகுப்பதாய் சொல்கிறார். அதே போல தொழிலில் இருந்து தொழிலாளி அந்நியப்படுவதைப் பற்றியும் (உழைப்பின் மதிப்புக்கான நியாயமான பங்கு மறுக்கப்படுவதால்) அவர் பேசியிருக்கிறார். இது மனித மனத்தில் ஏற்படுத்தும் நிச்சயமின்மைகளை, அதனாலான அவநம்பிக்கையை, அழுத்தத்தை, நெருக்கடியைப் பற்றி விரிவாக அலசியவர் புரோம். ஆனால் மார்க்ஸில் இருந்து சற்று விலகி அவர் நிலப்பிரபுத்துவ அடிமை வாழ்வை ஒரு சுதந்திர வாழ்வாகக் கண்டார்; இங்குதான் இவரது உளவியல் இருத்தலியல் தத்துவத்தின் பாதையை எடுக்கிறது. இவரது ரொம்ப பிரசித்தமான நூல் Fear of Freedom (இது Escape of Freedom என்றும் அறியப்படுகிறது). இதன் தலைப்பே வித்தியாசமானது, இவரது கோட்பாட்டின் அடிப்படையைக் காட்டுவது. மனிதன் சுதந்திரத்தை விரும்பினாலும் அது அவனுக்கு ஊறானது, அவன் சுதந்திரத்தைக் கண்டு அஞ்சுகிறான், இந்த அச்சமே அவனை மனச்சிக்கல்களை நோக்கித் தள்ளுகிறது என்றார்.

 கிறித்துவத்தில் உள்ள மன ஊக்கம் / மனத்திட்பம் (will) எனும் கருத்தாக்கத்தையே அவர் உளவியலில், இருத்தலியலில் வைத்து வித்தியாசமாக அர்த்தப்படுத்துகிறார். நான் எப்படி வாழ வேண்டும், என்ன தேர்வுகளை எடுக்க வேண்டும் எனும் கேள்விகள் கடும் பதற்றத்தை ஏற்படுத்துபவை. ஒரு எழுத்தாளனுக்கு தன் கதையின், நாவலின் ஒரு அத்தியாயத்தை எழுதும் முன் எப்படி எழுதப்போகிறோம் எனும் தேர்வு கடும் நெருக்கடியை அளிக்கும். நுகர்வோனாக நாம் அனுதினமும் நுட்பமாக ஒரு பதற்றத்தில் இருக்கிறோம். அந்த பதற்றத்தை பின்னர் ஒரு இன்பமாக மாற்றிக் கொள்கிறோம். திருமணம் பெண்கள் பலருக்கும் நெருக்கடியான சந்தர்ப்பம். அதற்குப் பதிலாக யார் வசமாவது முடிவெடுக்கும் உரிமையை கொடுத்து விடலாம் என புரோம் சொல்வதில்லை; மாறாக 1) வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை உண்டு பண்ணி அதன் முன் நம் தேர்வுகளை ரத்து பண்ணிடலாம் என்கிறார்; 2) நெருக்கடியின் காரணம் இதுவே எனப் புரிந்ததும் மனம் லகுவாகி விடும் என்கிறார்.


எரிக் புரோமின் எழுத்துக்கள், குறிப்பாகவிடுதலை நோக்கிய அச்சம்எனக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்த புத்தகம். நான் கடுமையான சோர்வில் இருக்கும் போதெல்லாம் புரோமின் சிந்தனைகளை அசைபோடுவேன், மனம் லேசாகி விடும்.

ஆனால் தத்துவத்தில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் புரோம் எழுத்திலுள்ள குறைகள், போதாமைகள் தென்பட்டன, அவர் சற்று அலுக்கத் தொடங்கினார் என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். இருந்தாலும், இன்றும் எனக்கு ஒரு மன இறுக்கம் ஏற்பட்டால் நான் நாடுவது அவரது நூலையே



4) இறுதி வகை உளவியல் நூல்களை positivism (நேர்கருத்துவாதம்) என்கிறார்கள். சிக்ஸென்மிகாயின் (Mihaly Csikszentmihalyi) ஒழுக்குக் கோட்பாடு (flow) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரக்ஞையின் இடையூறு இன்றி ஒரு வேலையில் ஆழ்ந்து செயல்படும் போது நாம் உச்சபட்ச மகிழ்ச்சியை அடைவதாய், அதை எப்படி சாத்தியப்படுத்துவது என சிக்ஸன்மிகாய் விளக்குகிறார்.  

தன்முனைப்பு உளவியல் (motivational) நூல்கள் கடந்த நான்கு பத்தாண்டுகளுக்கு மேலாக உலக புத்தக சந்தையில் முதல் பத்து இடங்களுக்குள் வருபவை. நம்மூரில் கண்ணதாசன் பதிப்பகம் இத்தகைய நூல்கள் பலவற்றை மொழியாக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்

நமது இந்திய தத்துவம் மனவோட்டம் குறித்து சொல்வதற்கும் இந்த வகை உளவியலின் அணுகுமுறைக்கும் ஒரு தொடர்பு உண்டு. நம் தத்துவம் எண்ணம் என்பது நிலையானது அல்ல, நெகிழ்வானது என்கிறது. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆவாய் என்கிறது. அதற்காக தினமும் பணத்தைப் பற்றி நினைத்தால் பணம் மடியில் வந்து விழாது. ஆனால் நமது ஒற்றை சிந்தனை தொடர் சிந்தனைகளை உருவாக்குகிறது, தொடர் சிந்தனைகள் ஒரு வழித்தடத்தை மனத்தில் உருவாக்குகின்றன, ஆகையால் நம் மனவோட்டம் நம் மனநிலையை, எடுக்கும் முடிவுகளை, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் முறையைத் தீர்மானிக்கிறது. ஒரு சாமியார் ஒரு பூனையை வளர்க்க ஆரம்பித்து, அதற்கு பாலுக்காக பசுமாடு வாங்கி, பால் கறக்க ஒரு பெண்ணை நியமித்து கடைசியில் அவளை மணந்து கொள்ளும் கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது மேற்சொன்ன தத்துவத்தின் ஒரு கொச்சையான விளக்கம் எனலாம்.

இந்த கோட்பாட்டை நேர்கருத்துவாத உளவிலாளர்கள் நவீன நரம்பியலின் கண்டுபிடிப்புகளின் தளத்தில் வைத்து மனித மனத்தின் இயல்பை, அதை நம் தேவைக்கேற்ப வடிவமைக்கும் உபாயங்களைத் தருகிறார்கள். ஸ்டீவன் கோபியின் Seven Habits of Highly Successfuly People, ஆந்தனி ராபின்ஸின் Awaken the Giant Within இந்த வகை நூல்களில் நான் ரசித்தவை.


எனக்கு தன்முனைப்பு உளவியலில் நம்பிக்கை இல்லை என்றாலும், இவர்கள் மனித நடத்தையை அலசுவதை கவனிக்கப் பிடிக்கும். ஏனோ இத்தகைய நூல்களைப் படிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. ஆனால் இவற்றைப் படித்து யாரும் உருப்பட முடியாது என்று நம்புகிறேன்.


லக்கான், பிராயிட், டெலூஸ் ஆகியோரை அறிமுக நூல்கள் படித்து பின்னர் மூலநூல்களை நேரடியாகப் படிப்பது நல்லது. பிராயிட் ஏகப்பட்ட ஆதாரங்கள், மேற்கோள்களை அள்ளி வழங்கியபடி செல்வார், ஒரு சிறிய பொருளை எடுக்க ஒரு இருட்டான குடௌனுக்குள் செல்வதைப் போல இருக்கும். டெலூஸின் மொழி (தெரிதாவைப் போல) கவித்துவமானது, உருவக ரிதியானது என்பதால் ஒரு எளிய அறிமுகத்துடன் அவரைப் படிப்பது உதவும். லக்கானின் எழுத்துமுறையும் சற்று சிக்கலானது. நிறைய பொறுமையும் கவனமும் அவருக்குள் செல்ல அவசியம்.


பிராயிடின் மிகப்பிரபலமான நூல் The Interpretation of Dreams. லக்கானின் பெயர் பெற்ற நூல் Ecrits. டெலூஸுக்கு Difference and Repetition. சிஸெக்கின் நூல்களைப் படிக்கும் முன் அவரது சுவையை லேசாய் அறிய பேட்மேன் படங்களைப் பற்றி அவரது கட்டுரையான The Politics of Batman படிக்கலாம். சமகால அரசியல், சமூகச் சூழல் பற்றி ஜாலியான நூல்களையும் சிக்கலான தத்துவ, உளவியல் ஆய்வு நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார்.

இவர்களைப் போக மிச்ச உளவியலாளர்களை நேரடியாகவே நீங்கள் படிக்கலாம்!

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...