Skip to main content

தல்ஸ்தாயும் தஸ்தாவஸ்கியும்: ஒரு எளிய அறிமுகம் (4)

 


தஸ்தாவஸ்கி:


தஸ்தாவஸ்கி 1821 நவம்பர் 11இல் ரஷ்யாவில் பிறந்தார்.


தஸ்தாவஸ்கியின் தந்தை ஒரு ராணுவ மருத்துவர். அவர் மத்திய வர்க்கத்தை சேர்ந்தவர். ஆனால் மருத்துவப் பணியில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு சிறிய அளவுக்கு நிலத்தை வாங்கி அங்கு பண்ணையை அமைத்து அவர் நிலச்சுவாந்தாராக மாறினார். இருந்தும் தஸ்காவஸ்கியிம் அவரது நான்கு  கூடப்பிறப்புகளும் வசதியாக வாழ்க்கையை வாழ்ந்ததாக சொல்ல முடியாது. கடன்வாங்கியும் கூடுதல் நேரம் பணி செய்துமே தஸ்தாவஸ்கியின் தந்தை தஸ்தாவஸ்கியையும் அவரது சகோதரரையும் ராணுவக் கல்லூரியில் பொறியியல் படிக்க வைத்தார். தஸ்தாவஸ்கி ஆனால் பொறியியலை வேண்டாவெறுப்பாகவே படித்தார். இந்த காலகட்டத்தில் தான் தஸ்தாவஸ்கியின் தந்தை அவரது பண்ணையில் வேலை செய்த தொழிலாளிகளால் கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்படுகிறார். இந்த சம்பவம் பின்னாளில் தஸ்தாவஸ்கியை அதிகமும் பாதித்த வலிப்பு நோயை அவருக்கு ஏற்படுத்தியது எனச் சொல்லப்படுகிறது. இதுவே அவர்கரமசோவ் சகோதரர்கள்நாவல் எழுதவும் தூண்டுதலாக அமைந்திருக்கலாம். குரூரமான, குடிகாரரான கோமாளித்தனமான தூய தீமை வடிவான தந்தை பாத்திரங்களை அவர் பின்னாளில் எழுதவும் காரணமாக இருக்கலாம் (மெர்மலதேவ் / தந்தை கரமசோவ்). 


தந்தையைக் கொல்லும் விருப்பத்தைப் பற்றிய ஈடிபல் காம்பிளக்ஸ் கோட்பாட்டை வடிவமைக்க பிராயிட் தஸ்தாவஸ்கியில் இருந்து ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.


1845இல் தஸ்தாவஸ்கி தனது Poor Folk எனும் முதல் நாவலை வெளியிட்டார். அடுத்து தனது எழுத்து வாழ்க்கையில் கவனம் செலுத்தும் பொருட்டு தன் ராணுவ வேலையில் இருந்து நீங்கினார்.


தஸ்தாவஸ்கி அடுத்து தன் முக்கிய நாவலான “Double” 1846இல் வெளியிட்டார். கொகோலின் The Overcoat கதையை நினைவுபடுத்தும் இது உளவியல் ரீதியாக மிகச்சிறப்பான வெளிப்பாடுகளைக் கொண்டது. Split Personality கொண்ட ஒருவர் தன் பிறவுபட்ட ஆளுமையை நிஜ மனிதனாக நம்பி அவரிடம் மோதினால் என்னவாகும் எனும் சுவாரஸ்யமான் ஒற்றை வரியைக் கொண்டது இது. ஒரு மனிதன் தன்னை தூயவன், உண்மையானவன் என நம்பும் போது அவன் உடனடியாக அதற்கு நேர்மாறான ஒரு எதிரிணையை, மற்றமையை அங்கு கட்டமைக்கிறான், அதற்குள் சிறைப்படுகிறான், அவனுக்கு மீட்சி இல்லாமல் போகிறது என்கிறார் அவர் இந்நாவலில்.


1949இல் தஸ்தாவஸ்கி பெட்ராஷெவஸ்கி எனும் புரட்சிகர குழுமத்தில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனையாக சைபீரியவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் ஐந்து வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், கடுமையான உடல் வதைகளையும் அனுபவித்தார்.


சைபீரியாவில் இருந்து மீண்ட பிறகு தஸ்தாவஸ்கி சூதாடி, Idiot போன்ற நாவல்களையும் அவரது பிரதான படைப்புகளான குற்றமும் தண்டனை, கரமசோவ் சகோதரர்கள் போன்றவற்றை வெளியிட்டார். தஸ்தாவஸ்கியின் முதிர்ச்சியான காலகட்டம் என இதை அழைக்கலாம். தஸ்தாவஸ்கி இப்போது சமூகப் புரட்சி என்பதை ஒரு மேலோட்டமான செயல்பாடு, ஏமாற்றுவேலை என நினைக்க ஆரம்பித்தார். தனிமனித எழுச்சியால் மாற்றம் வராது, அழிவே ஏற்படும், எளிய மக்களின் ஆன்மாவில் ஏற்படும் மலர்ச்சியே புரட்சிகர மாற்றங்கள் அசலாகத் தோன்ற அவசியம் என நம்பினார். இதுவே அவரது பின்னாளைய நாவல்களானகுற்றமும் தண்டனையும்”, “கரமசோவ் சகோதரர்கள்போன்றவற்றில் முற்போக்கு சிந்தனையாளர்கள் எளிய பாமர ஜனங்களிடம் இருந்து பிளவுபட்டிருப்பதை, அவர்களின் செயல்பாடுகள் ஆன்மீக சீரழிவுக்கு அவர்களை இட்டுச்செல்வதை சித்தரிக்க ஆரம்பித்தார். அறிவுஜீவிகள் அவரது நாவல்கள் பகடி செய்யப்பட்டனர், எளிய பாசாங்கற்ற மனம் கொண்டவர்கள் போற்றப்பட்டனர். சைபீரியாவில் அவர் கண்ட அனுபவங்கள், மனிதர்கள், அங்கு அவர் மானுட இருப்பு குறித்து பெற்ற ஆழமான புரிதல், விவிலிய வாசிப்பு ஆகியவை அவரை இந்த இடத்துக்கு நகர்த்தின எனலாம்.


1881இல் தஸ்தாவஸ்கி மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் மரணமுற்றார். மரணப்படுக்கையில் அவர் தன் பிள்ளைகளிடம் தனக்கு விவிலியத்தில் இருந்து ஊதாரி மைந்தன் கதையைப் படிக்கும் படி கேட்டார் எனச் சொல்லப்படுகிறது.


தஸ்தாவஸ்கியின்குற்றமும் தண்டனையும்”, “கரமசோவ் சகோதர்கள்இரண்டும் அவரது அதிகம் பேசப்பட்ட படைப்புகள்.




தஸ்தாவஸ்கி உளவியல் எதார்த்தவாத நாவல்களின் தலைமகனாக கருதப்படுகிறார்.


ஏன்?


மனித மனத்தை தனிமனித விழைவினால் உந்தப்படுவதாகக் காணவில்லை, அதற்கு ஒரு சமூக கோணம் இருப்பதை, அது dialectical ஆக செயல்படுவதைக் கண்டறிந்தார். .தா., அவரது நாவல்களில் குற்றங்கள் தனிமனித விழைவினால் நிகழ்வதில்லை, மாறாக பல்வேறு சமூகத் தூண்டுதல்கள் அதற்குப் பங்களிக்கின்றன, அதாவது குற்றத்தில் அதை நிகழ்த்துபவனுக்கு மட்டுமல்ல அதை விசாரிக்கிறனுக்கும் உள்ள் பங்கை தஸ்தாவஸ்கி சுட்டிக் காட்டினார். “குற்றமும் தண்டனையும்நாவலில் ரஸ்கால்நிக்கோவ் ஒரு வட்டிக்கடை நடத்தும் பெண்ணைக் கொல்கிறான். ஆனால் அதன் பிறகு விசாரணை, தண்டனை குறித்த நடைமுறைகளால் அவன் ஆட்படுகிறான். ஒரு பக்கம் தன் குற்றம் எப்படியெல்லாம் விசாரிக்கப்பட வேண்டும் என விசாரணை அதிகாரிகளுடன் தொடர்ந்து உரையாடுகிறான், அடுத்து தனக்கான மீட்சி எப்படி சாத்தியமாகும் என ஒரு இளம் பாலியல் தொழிலாளியான சோனியாவுடன் உறவாடிப் புரிந்து கொள்கிறான். விசாரணை அதிகாரி இங்கு ஒரு சர்வாதிகார ஆட்சி அமைப்பின் கருவி. அதை ஒரு தனிமனிதனை கண்காணித்து, வரைமுறைக்கு கொண்டு வர முயல்கிறது. அதனாலே ரஸ்கோல்நிக்கோவ் தொடர்ந்து விசாரணை அதிகாரியிடம் பேசி இறுதியில் அவரிடம் உண்மையை ஒப்புக்கொள்ள முனையும் போது கூட அவரால் அவனை கைது செய்ய முடியாமல் போகிறது. ஏனென்றால் மனிதனின் ஆன்மா அல்ல அவனை வரையறுக்கும் புறவயமான ஆதாரங்களே அவனுக்கு முக்கியம். ஆனால் சோனியாவோ ஆன்மீகத்தின் தரப்பில் இருந்து அவனை ஏற்பதுடன் மன்னிக்கவும் செய்கிறாள்.


 அது மட்டுமல்ல விசாரணை என்பது எப்படி குற்றத்தின் மறுபக்கமாக செயல்படுகிறது எனும் சமூக உளவியலையும் இங்கு தஸ்தாவஸ்கி பேசுகிறார். மற்றொரு பக்கம் ஒரு குற்றவாளி எப்படி தொடர்ந்து விசாரணை குறித்த அக்கறையால், பயத்தால் ஆட்பட்டு விசாரணை அதிகாரியை கண்காணிக்கிறான், அதே சமயம் அவன் கண்காணிக்கப்பட்டும் வருகிறான் என்பதையும் தஸ்தாவஸ்கி முதன்முறையாக நாவலில் பேசினார். அவருக்குப் பிற்பாடு பல துப்பறியும் படங்களில், நாவல்களில் இந்த உளவியல் பரிமாணம் அலசப்பட்டது. மிஷ்கினின்யுத்தம் செய்படத்தில் வரும்கண்காணிப்புஎனும் கதைக்கரு ஒரு உதாரணம். பலரும் இப்படி தஸ்தாவஸ்கிக்கு கடன்பட்டிருக்கிறார்கள்.


கரமசோவ் சகோதரர்களில்தந்தை கரமசோவ் தன் மகன்களில் ஒருவரால் கொல்லப்படுகிறார், யார் கொன்றார் என்பது இறுதி வரை தெளிவாகாது, குற்றத்தை நேரடியாக இழைத்தவர் இன்னார் என சொல்ல முடிந்தாலும் அதற்கு அவர் மட்டும் தானா பொறுப்பு எனும் தஸ்தாவஸ்கியின் தத்துவார்த்த, உளவியல் கேள்வி சுவாரஸ்யமானது, தீவிரமானது.


டிமிட்ரி ஒரு ரௌடித்தனமான, உணர்ச்சிவயப்பட்ட மகன், இவான் ஒரு அறிவுஜீவி, அல்யோஷா ஆன்மீக நாட்டம் கொண்ட இளம் துறவி, பாவெல் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத உறவில் பிறந்த மகன் - இந்த நான்கு பேரில் டிமிட்ரியே கொன்றிருக்கலாம் என்றாலும் மனதளவில் மிச்ச மூன்று மகன்களுக்கும் இதில் இடமிருக்கலாம் என்பது அதிர்ச்சிகரமான சேதி, குறிப்பாக தூயவனான அல்யோஷாவுக்கும் தன் தந்தை மீது கொலை விருப்பம் இருக்கலாம் என்பது.


நாவலின் முடிவில் அறிவுத்தேடலோ, புலனின்பத் தேடலிலோ ஆன்மீகமோ அல்ல ஒரு தூய, அன்பாலான எளிய வாழ்க்கை நிலையே மனிதனுக்கு விடுதலையளிக்கும் எனும் இடத்துக்கு தஸ்தாவஸ்கி வந்து சேர்கிறார். இதை நாவலின் இறுதியில் அல்யோஷா காணும் குழந்தைகளின் காட்சி மூலம் அவர் சுட்டுகிறார்


தந்தை கரமசோவை நாம் அதிகாரம் மிக்க, அறமற்ற ஒரு தேசிய அமைப்புக்கான குறியீடாகப் பார்க்கலாம். அல்லது தூய தீமைக்கான உருவகமாகவும் பார்க்கலாம். இரண்டையும் நேரடியாக ஒருவர் எதிர்கொண்டு வெல்ல முடியாது


தஸ்தாவஸ்கியின் படைப்புலகம் குறித்த ஆய்வில் மிகைல் பக்தினின் விமர்சனங்கள் முக்கியம்: அவர் தஸ்தாவஸ்கியின் எழுத்தில் உள்ள பல்குரல்தன்மை, dialogism, முடிவுறாத தன்மை குறித்த அவதானிப்புகள், தத்துவங்கள் மிக சிறப்பான விவாதங்களை முன்னெடுத்தன




Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...