முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜுரம் எனும் கிங்காங்கிடம் மாட்டிக் கொண்ட கதை

பெங்களூர் வந்த பிறகு ஒன்றிரண்டு முறை ஜுரம் வந்ததுண்டு. கொஞ்சமாய் படுத்துகிற 99-100 டிகிரி ஜுரங்கள். மருத்துவரைப் பார்த்ததும் பறந்தோடிப் போகிற ஜுரங்கள். ஆனால் இந்த ஜுரங்களுக்கெல்லாம் கிங்காங் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் விசிட் அடித்தார். ஞாயிறு இரவு தொடங்கி 72 மணிநேர உண்ணாநோன்பு எடுக்க திட்டம். இதற்கு முன்பே நான் இடைவிட்ட விரதம் (intermittent fasting) பயின்று வந்திருந்த நாட்களில் இந்த 72 மணிநேர சங்கதியை வெற்றிகரமாக முயன்றிருக்கிறேன். சரி, அதனால் இம்முறையும் தைரியமாக செய்யலாம் என இறங்கினேன். ஆனால் ஒரு சின்ன விசயத்தை கவனிக்கவில்லை - நான் இடையிட்ட விரதத்தை விட்டு மூன்று வேளை உணவுப்பழக்கத்துக்கு வந்து பல மாதங்கள் ஆகின்றன; உடம்பு விரதம் என்றால் என்னவெனக் கேட்கும் நிலை. திடுதிப்பென நான் இறங்கியிருக்கக் கூடாது.


 முதலில் வந்தது வயிற்றுப்பிரச்சனை; அடுத்து உள்ஜுரம். நா வறளும், ஆனால் ஒரு மிடறுக்கு மேல் தண்ணீர் குடிக்க முடியாது. புத்தகம் படிப்பது போக டிவி கூட பத்து நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியாது. எழுந்து அமர்ந்தால் உடல் தள்ளாடுகிறது. காலை வேளையில் ஓரளவுக்கு உடம்பு ஸ்டெடியாக இருக்கும், மதியம் ஆனால் பேய் புகுந்ததைப் போல புரட்டிப் போடும். சரியாக ஐந்து மணிக்கு மேல் வாந்தி எடுப்பேன். இதை வைத்துக் கொண்டு தான் அருகாமை ஆளுமைகள் நேரலையில் பேசுகிறேன், தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தினேன். முடிந்ததும் தளர்ந்து விழுந்தேன்.

 தொடர்ந்து இரு தினங்கள் இப்படிப் போக, நேற்று நிலைமை கைமீறிப் போய் விட்டது. ஜுரம் கொதிக்கிறது. படுக்கவோ உட்காரவோ முடியாது. வாந்தியெடுத்தால் சரியாகி விடும், ஆனால் ஐந்து நிமிடங்கள் பெரும் அவஸ்தை. ஒரே சமயம் ஜுரம், வயிற்று வலி எனத் தாக்கியதாலோ என்னவோ தாங்க முடியாத சிரமம். ஆஸ்பத்திரி செல்லலாம் என நினைத்தால் இந்த ஊரில் தான் ஒன்பது மணிக்கு மேல் வண்டி கிடைக்காதே. பல்லவி வழக்கம் போல் எதைப்பற்றியும் யோசிக்காமல் ஆட்டோ மேல் ஆட்டோவாக புக் செய்து, அதில் முதலாவது கேன்ஸல் ஆக இரண்டாவது டிரைவரிடம் ‘தயவு செய்து கேன்ஸல் பண்ணாதீங்க, எமர்ஜென்ஸி, ஆஸ்பத்திரி போகணும்’ எனக் கெஞ்சிட அவரும் வந்து விட்டார். நாய் ஜீனோவை வீட்டில் விட்டுப் போனால் அப்பார்ட்மெண்டி பெரிய கலவரமே வரும் அளவுக்கு குலைப்பான் என்பதால் அவனையும் அழைத்து சென்றோம். என்னால் சில அடிகள் நடக்கவே முடியவே, மூச்சு வாங்குகிறது. ஆனால் ஆஸ்பத்திரி சென்ற பிறகு மருத்துவரும் செவிலியரும் நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள். வயிற்றுவலியும் ஜுரமும் அவர்கள் போட்ட டிரிப்ஸிலே வெகுவாக குறைந்து விட்டது.

ஆஸ்பத்திரி படுக்கையில் இருக்கும் போது அப்படியே கோழியைப் போல அமுக்கி மூன்று நாட்கள் அட்மிட் பண்ணி விடுவார்களோ, பர்ஸ் தாங்காதே எனும் பயம் ஒரு பக்கம், இவர்கள் பயமுறுத்துவது போல கொரோனாவாக இருக்குமோ எனும் கடுப்பு மற்றொரு பக்கம். ஆனால் ஜுரம் குறைந்ததும், நம்பிக்கை வந்து விட்டது. ஒரு மணிநேரத்தில் விட்டு விடுவோம் என்றார்கள், அப்படியே செய்தார்கள்.


இந்த சில நாட்களில் பல்லவியின் கவனிப்பும், ஜீனோவின் பாசமும் எனக்கு பெரிய ஊக்கம். என்னுடைய ஒவ்வொரு சின்னச் சின்ன உடலநலச் சரிவும் அவளுக்குப் புரியும். விரதத்தை முடித்து உணவெடுத்துக் கொள் என வற்புறுத்துவாள். என் பிடிவாதம் அதை ஒப்புக் கொள்ளாது. ஜீனோ முன்பு இல்லாத தனி அக்கறையை காட்டுவான், நான் வாந்தியெடுத்தால் அவனும் போய் வாந்தியெடுக்க முயல்வான். நான் எழுந்து உட்கார்ந்தால் உற்சாகமாகி என்னை வந்து கொஞ்சுவான். என் கால்கள் மீது படுத்துக் கொள்வான். பொதுவாக தானாக வந்து கொஞ்சும் பழக்கம் அவனுக்கு இல்லை. எனக்கு ஏதோ பிரச்சனை, என்னைத் தேற்ற வேண்டும் என நினைத்து இதையெல்லாம் செய்கிறான் எனப் புரிந்து கொண்டேன். ஆஸ்பத்திரியிலும் வார்டுக்கு வெளியிலே, வாயிலில் விழிபதித்து, அமர்ந்திருந்தான். பல்லவி மருத்துவரிடம் சிறப்பு அனுமதி அளித்து என் படுக்கைக்கு அவனைத் தூக்கி வந்தாள். அவனைத் தடவினேன். நக்கிக் கொடுத்து வாலாட்டினான். அவ்வளவுதான். அவனை நான் ‘நடிகர் திலகம்’ என்றுதான் அழைப்பேன். என்னிடம் அமைதியாக நடந்து கொள்வான், என்னைத்தவிர பிறரிடம் அநியாயத்துக்கு உணர்ச்சிகளைக் கொட்டி ஆர்ப்பாட்டம் பண்ணுவான். 

வீட்டுக்கு வந்து படுத்ததும் தூங்கினது தான், தூங்கினதே தெரியாத தூக்கம். காலையில் சாப்பிட்டு விட்டு மீண்டும் அப்படியொரு உடம்பை மறந்தொரு தூக்கம். ஜுரம் குறைவதன் அறிகுறி என் ரத்த சர்க்கரை குறைந்து நார்மலாவதுதான். அடுத்து, சாப்பிட, படிக்க, டி.வி பார்க்க முடிகிறது. ஆனால் இந்த ஜுரம் கண்ணாமூச்சி ஆடுகிறது, பெருமளவு அறிகுறிகள் குறைந்து விட்டாலும், உள்ஜுரம் விட்டு விட்டு வருகிறது. இதற்கு மேல் இந்த பிஞ்சு உடலைப் படுத்துவதில் ஜுரத்திற்கு எந்த பெருமையும் இல்லை எனக் கூற விரும்புகிறேன். அதற்கு களமாட  எத்தனையோ 56 அங்குல மார்பு கொண்டோர் இருக்கிறார்கள். 


கிடைத்த பாடம்: இனி எந்த முயற்சியிலும் முறையான தயாரிப்பு இன்றி குதிக்கக் கூடாது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...