முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஷோயப் அக்தர்: மோதி விளையாடு


கிரிக்கெட்டில் பந்து வீசப்படும் போது மட்டையாளன் அதை எப்படி அடிக்கப் போகிறான் எனத் தான் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு தூக்கலாக இருக்கும். ஆனால் தொண்ணூறுகளில் முதன் முதலாக பாகிஸ்தான் அணியில் இருந்து ஷோயப் அக்தர் எனும் ஒரு அதிகவேக பந்து வீச்சாளர் மைதானத்தின் லட்சோபலட்சம் பேரின் கவனத்தையும் தன் மீது திருப்பினார். பேஸ்மேனை பொருட்டே அல்லாமல் மாற்றினார். 1998இல் ஏஷியன் டெஸ்ட் சேம்பியன்ஷிப்பில் அக்தர் இந்தியாவில் ஆடிய முதல் ஆட்டமே அப்படித் தான் அமைந்தது. ராகுல் திராவிடை அக்தர் புல்லட் வேகத்தில் ஒரு யார்க்கர் வீசி வீழ்த்தினார். அடுத்து களமிறங்குவது சச்சின் என்பதால் மைதானம் முழுக்க கரகோஷம் எழுப்பியது. சச்சின் பந்தாவாக வந்து முதல் பந்தை சந்திக்க தயாரானர். அக்தர் அடுத்து வீசிய பந்தை சச்சினும் காணவில்லை, மைதானத்தில் அவரது லட்சோபலட்சம் ரசிகர்களூம் கவனிக்கவில்லை. அவரது ஸ்டம்புகள் மட்டும் சிதறிக் கிடந்தன. முதல் பந்தில் சச்சின் பவுல்ட் ஆன அதிர்ச்சியில் மைதானம் எங்கும் கொடூர அமைதி. யாரிந்த ஆள் என அனைவரும் அக்தரை பார்த்தனர். ஒரே பந்தில் அவர் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஆளுமையிடம் இருந்து முழு கவனத்தையும் தன் மீது ஈர்த்தார்.

வேகப்பந்து வீச்சை ஒரு ஆக்‌ஷன் சினிமாவாக மாற்றியவர் ஷோயப் அக்தர். மைதானத்தின் விளிம்பில் இருந்து அவர் ஓடி வந்து கிரீஸை நெருங்கி பந்தை வெளியிடுவதற்குள் பாதி ஓவர் முடிந்து விடும். ஆனால் அக்தரின் ரன் அப் அவ்வளவு த்ரில்லிங்காக இருக்கும். ரசிகர்கள் மூச்சை உள்ளடக்கியபடியோ கைதட்டி வரவேற்றுக் கொண்டோ அவரது ஓட்டத்தின் ஒவ்வொரு அடியையும் சிலாகிப்பார்கள். கடையில் பந்து மட்டையாளனை ஒரு மின்னல் போல் கடந்து போகும் போது களிப்படைவார்கள்.

ஷோயப் அக்தர் 46 டெஸ்டுகளில் 178 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அது ஒரு சிறு எண்ணிக்கை தான். ஆனால் ஷோயப் அக்தரின் பந்து வீச்சில் விக்கெட் முக்கியமல்ல. வேகம் வேகம் வேகத்துக்கும் முன்பாக ஓட்டத்தின் வேகம்.


துவக்கம்: கசப்பை குடித்த குழந்தைப்பருவம்


ஷோயப் அக்தர் 1975 ஆகஸ்ட் 13ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் மோர்கா எனும் சேரியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் ஐந்து குழந்தைகளில் ஒருவராக பிறந்தார். அவரது அப்பாவுக்கு இரவு நேர காவலாளியாக வேலை. சின்ன ஒற்றை மட்டுமே கொண்ட சிதிலமடைந்த வீட்டில் அந்த குடும்பம் வசித்தது. மூன்று வேளை சாப்பிட உணவிருக்காது. ஆனாலும் அக்தரின் அம்மா ஹமீதான் யாரிடமும் கடன் வாங்க மாட்டார். சொற்ப வருமானத்தில் பிள்ளைகளை கடும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார். ஒரு இரவில் கடும் மழையும் புயலும். திடீரென வீட்டுக் கூரை நொறுங்கி விழுந்தது. ஷோயப் நான்கு வயது பிள்ளை. அவரை தூக்கி வெளியே கொட்டும் மழையில் உட்கார வைத்து விட்டு பெரியவர்கள் கூரையை செப்பனிட செல்கிறார்கள். அன்றிரவு மழையில் அழுதபடி இருந்த நினைவு அக்தரின் மனதில் இருந்து நீண்ட காலமாக அகலவில்லை. பின்னர் இது நினைவு வரும் போதெல்லாம் செல்வந்தனாகி வசதியாக வாழ வேண்டும் என அக்தர் உறுதி எடுத்துக் கொள்வார்

அக்தரின் அம்மா குழந்தையாக இருக்கும் போது குடும்ப வறுமை காரணமாய் அவரை ஒரு ஆங்கிலேய தம்பதியினருக்கு தத்து கொடுத்து விடுகிறார்கள். அவர்கள் அவரை வசதியாக வைத்துக் கொண்டாலும் சொந்த பெற்றோரை பிரிந்து இருக்க முடியாமல் அவர் தவித்துப் போனார். இதை அறிந்த அவரது சித்தப்பா ஒரு சைக்கிளில் வைத்து அவரை திரும்ப கடத்தி வந்து விடுகிறார். ஹமீதா அவ்வாறு தன் பெற்றோரிடம் மீளா விட்டால் ஷோயப் பிறந்திருக்க மாட்டார். ஷோயப்பிடம் இதைக் கூறும் அம்மா ஆங்கிலேய தம்பதியினரின் உணவு, உடை, பழக்க வழக்கங்களை விவரிப்பார். அக்தர் வளர்ந்து நட்சத்திரமான பின் இங்கிலாந்துக்கு பாகிஸ்தான் அணியுடன் பயணம் போன போது அது அவரது அம்மாவின் தத்துப் பெற்றோரின் நாடென நினைத்து சொந்த நாடு போல் பாவித்ததாய் கூறுகிறார்.

குழந்தையாய் இருக்கையில் அக்தர் கடுமையான நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். நோய் குணமாகாத நிலையில் அவர் இறந்து விடுவார் என கருதிய உறவினர்கள் ஈமச்சடங்குகளுக்கு பணம் சேர்க்கும் படி அவரது அம்மாவிடம் வலியுறுத்தினர். ஆனால் அம்மாவோ விடாப்பிடியாய் அவரை கையில் ஏந்தியபடி நீண்ட தூரம் நடந்து டவுனில் உள்ள மருத்துவமனைகு கொண்டு சென்று சிகிச்சை பெற வைத்தார். எதிர்பாராத விதமாய் அக்தர் உயிர் பிழைத்தார். அதே போல் அக்தரின் உள்ளங்கால்கள் தட்டையானவை. இது flat foot எனும் ஒரு கோளாறு. இதனால் ஆறு வயது வரை அவரால் நடக்கவே முடியவில்லை. ஒருநாள் சட்டென அவர் எழுந்து நடக்கத் தொடங்கினார். நடை ஓட்டமாகியது. அவர் ஓடிக் கொண்டே இருந்தார். இளமையில் அக்தருக்கு ஓட்டமே முக்கிய விளையாட்டு. இது பிற்பாடு அவர் சிறந்த வேகவீச்சாளராக உதவியது.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் அக்தர் அஷ்கர் மால் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் முதன்முதலாக கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு விளையாட துவங்கினார். அக்தர் குழந்தையில் இருந்தே ADHD எனும் கவனக்குறைவு பிரச்சனை கொண்டவர். அவரால் தொடர்ந்து ஒரு இடத்தில் இருக்க முடியாது. ஏதாவது சேட்டை செய்து கொண்டே இருப்பார். கல்லூரியில் படிக்கும் போதும் ஒருமுறை நண்பர்களின் சவாலை ஏற்று முதல்வரின் அறையின் ஊடே பைக்கை வேகமாய் ஓட்டி சென்று அதனால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். எப்போதும் வகுப்பை தாமதமாய் முடிக்கும் பேராசிரியர் ஒருவர் இருந்தார். ஒருநாள் சரியாக மணி அடித்த போது ஷோயப் வகுப்புக்குள் பட்டாசு வெடித்தார். அந்த அதிர்ச்சியில் பேராசிரியருக்கு கிட்டத்தட்ட மாரடைப்பு வந்து விட்டது. அக்தர் பாகிஸ்தான் அணியில் நுழைந்த பின்னர் இது போன்ற ஒழுங்கீனம் மற்றும் சேட்டை காரணமாய் பல சர்ச்சைகளுக்கு ஆளானார். தற்காலிக நீக்கம், தடை என தண்டனைகள் அனுபவித்தார். வளர்ந்த பின்னும் வளராது பிள்ளையாகவே அவர் இருந்தார்.

1992இல் பாகிஸ்தான் இம்ரான்கான் தலைமையில் உலகக்கோப்பை வென்றிட ஷோயப் அக்தர் அதனால் தூண்டப்பட்டு கிரிக்கெட் மீது பித்தானார். இம்ரான்கான் தான் அவரது ஆதர்ச நாயகன். பந்து வீச்சில் கடுமையாக உழைத்தார். அவரது விடா முயற்சியையும் மூர்க்கமான பயிற்சியையும் கண்டு வியந்த ராபர்ட் கிராஸ் எனும் பயிற்சியாளர் அக்தருக்கு பிண்டி கிளப் ஆட்டங்களில் வாய்ப்புகள் பெற்றுத் தந்தார். பின்னர் ராவல்பிண்டி கிரிக்கெட் கிளப்பின் தலைவரான இஷ்டியாக் ஷா அக்தரின் பந்து வீச்சால் கவரப்பட்டு 19 வயதுக்கு கீழான நியுசிலாந்த் அணியுடனான ஆட்டம் ஒன்றில் அவருக்கு வாய்ப்பளித்தார். அக்தர் 11 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கராச்சியில் பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்வேஸ் கிளப்பில் வீரர்களை தேர்வு செய்வதாய் அறிந்து ஷோயப் தன் நண்பனுடன் டிக்கெட் எடுக்காமல் பேருந்தில் பயணித்து இரவில் போய் சேர்கிறார். கையில் 25 ரூபாய் மட்டுமே உள்ளது. அதைக் கொண்டு உணவருந்தினால் இரவு தூங்க இடம் இருக்காது. என்ன செய்வது? ஷோயப் தன்னம்பிக்கையை கைவிடாமல் ஆஸிஸ் கான் எனும் ரிக்‌ஷா ஓட்டுநரிடம் சென்று தன்னை ஒரு கிரிக்கெட் வீரர் என அறிமுகப்படுத்துகிறார். “நான் எதிர்காலத்தில் பாகிஸ்தான் அணியில் ஆடி பெரிய நட்சத்திரம் ஆகி விடுவேன். அப்போது நிச்சயம் உன்னைத் தேடி வருவேன். இன்றிரவு மட்டும் எனக்கு தூங்க இடம் கொடுங்கள்”. அக்தரின் தன்னம்பிக்கையால் கவரப்படும் அவர் நடைபாதையில் தன்னோடு உறங்க இடம் அளிக்கிறார். பின்னர் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்ற பின் முதல் வேலையாக அக்தர் ஆஸிஸ் கானை சிரமப்பட்டு தேடி வந்து கட்டி அணைத்துக் கொள்கிறார். நெகிழ்ந்து போகும் ஆஸிஸ் கான் கண் கலங்குகிறார்.

ஏர்வேஸ் கிளப்பில் தேர்வாகும் அக்தர் அணியினரின் அரசியல் காரணமாக வாய்ப்பு கிடைக்காமல் மனம் துவள்கிறார். அணியை விட்டு விலகி ராவல்பிண்டி கிளப்புக்காக ஆடுகிறார். முதல் பருவத்தில் 75 விக்கெட்டுகள் வீழ்த்துகிறார். உள்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்களில் அக்தரின் புகழ் பரவ அவருக்கு இங்கிலாந்துக்கு செல்லும் அணியில் இடம் கிடைக்கிறது. விரைவில் பாகிஸ்தானில் மே. தீவுகளுக்கு எதிராய் டெஸ்டில் ஆட வாய்ப்பு கிடைக்கிறது. தென்னாப்பிரிக்காவிலும் அதன் பின்னர் இந்தியாவிலும் அக்தரின் பந்து வீச்சு அவருக்கு உலகளில் பெரும் கவனத்தை பெற்றுத் தருகிறது. 1999 உலகக்கோப்பையில் அவர் 16 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் நூறு மைல் வேகத்தையும் தொட்டு சாதனை படைத்தார்.

தொடர்ந்து காயங்களாலும் சர்ச்சைகளாலும் அவதிப்பட்டாலும் 2011 உலகக்கோப்பை வரை அவர் நீண்ட காலம் தன் அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்தார்.


கூடுதல் தகவல்கள்:


அக்தர் 161.3 கிலோமீட்டர் வேகத்தில் உலகின் மிக வேகமான பந்தை வீசி சாதனை படைத்தார்.

ஷோயப் அக்தர் 163 ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டுகள் எடுத்தார்

டெஸ்ட் போட்டிகளில் 12 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்

சக வேகவீச்சாளர் ஆசிப்பை மட்டையால் அடித்ததற்காய் ஷோயப் அக்தர் அணியில் இருந்து சற்று காலம் தடை செய்யப்பட்டார்.

ஷோயப் அக்தர் பந்தைஎறிவதாய்நடுவர்களால் புகார் செய்ய அவர் .சி.சியால் தடை செய்யப்பட்டார். அப்போது அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள பயோமெக்கானிக்கல் நிபுணர்களால் பரிசோதனை செய்யப்பட்ட போது அவரது கை, கால் முட்டிகள் hyper extension எனும் கோளாறு கொண்டவை என கண்டறியப்பட்டது. அதாவது அவர் பந்தை வீசும் போது தோள்பட்டையில் இருந்து எலும்பு வெளியே வந்து மீண்டும் உள்ளே போகுமாம். கைகால் எலும்புகள் முட்டியில் முழுக்க பொருந்தாமல் சவ்வு போல் வெளியே வருவதும் போவதுமாய் இருக்கும். இயற்கையான இந்த நிலையினால் தான் அக்தரால் அவ்வளவு வேகமாய் பந்து வீச முடிந்தது என்கிறார்கள் நிபுணர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...