முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு இறைமறுப்பாளன் பண்டிகைகளின் போது வாழ்த்தலாமா?

சதுர்த்தி, தீபாவளி மட்டுமல்ல கிறித்துமஸ், ஈகைப் பண்டிகை போன்றவற்றுக்கும் முற்போக்காளர்கள் வாழ்த்துவது தவறு! அது நோய்க்கூறை பழித்து விட்டு நோயை வணங்குவது போலாகும்.
இச்சமூகத்திலுள்ள சாதி, பாலின, பொருளாதாரம் உள்ளிட்ட ஏற்றத்தாழ்வுகள், பேதங்கள் அனைத்தும் இறைநம்பிக்கையில் இருந்தே விளைகின்றன. பல்வேறு அதிகார அமைப்புகள் முன் மனிதன் வக்கற்றவனாக கைக்கட்டி நிற்க, அவன் தன்னம்பிக்கை இல்லாதவனாக குடும்பத்தின் அடிமையாக மாறி நிற்கக் காரணமும் இறைநம்பிக்கையே.

இறைவனுக்கும் சமூக அநீதிகளுக்குமான (சூழலியல் அழிவுக்குமான கூட) தொடர்பு என்பது இறை எனும் புள்ளியில் இருந்தே மனிதன் ஒவ்வொன்றையும் essentialize செய்யத் தொடங்கினான் என்பதில் இருக்கிறது. இறைவனில் இருந்தே சமூகப் படிநிலை, அடிமைமுறை, ஆண்-பெண் பேதம், குடும்ப அமைப்பு, முதலீட்டியம், அங்கிருந்து சமூக அரசியல் கட்டமைப்புகள், தேசம், தேசியம், இனவாதம் (இந்தியாவில் தீண்டாமை போன்றவை), தேசியவாதம், பாசிசம், இந்துத்துவா என அனைத்தும் தோன்றின. 
நம்மில் ஒவ்வொருவரின் ஆழ்மனத்திலும் ஒரு முள்ளைப் போல் இருக்கும் குற்றவுணர்வு, பயம், தாழ்வுணர்வு, அதன் விளைவான பாலியல் குற்றங்கள், கொலை உள்ளிட்ட குற்றங்கள், அவற்றின் மறுபக்கமாக விளங்குகிற மன அழுத்தம் போன்ற நோய்களும் அங்கிருந்தே தோன்றின. உளவியல் மட்டுமல்ல உடல் பிரச்சனைகளுக்கும் காரணம் நாம் இந்த உடலை essentialize செய்ததே. ஆனால் இந்த உண்மையை மறைக்க மருத்துவம் எனும் துறை தோற்றுவிக்கப்பட்டது, மருத்துவர்களின் சகோதரர்களாக ராணுவங்கள், காவல்துறையினர் தோன்றினர் - ஒரு சாரார் தேசத்துக்கு வெளியே யுத்தம் செய்தால் மற்றவர்கள் தேசத்தினுள் மக்களையே விரோதிகளாய் பாவித்து துணுக்குற வைத்தார்கள். ராணுவத்தினர் மற்றமையை தேச விரோதியாக்கி நம்மை தேசபக்தர்களாக கருத வைத்தால், காவலர்கள் மக்களை குற்றவாளிகளாக்கி பரஸ்பரம் ஐயம் கொண்டு பிரிந்து கிடக்க செய்தனர்.
 இறைநம்பிக்கையை உடைக்காமல் இதில் எதையும் சரி செய்ய முடியாது. 

இறைவனை வணங்குகிறேன் எனும் இடத்தில் இருந்தே எனக்கும் வாழ்வுக்குமான, எனக்கும் காலத்துக்கும், உலகுக்கும், சமூகத்துக்குமான உடைவு, அதனாலான எதிர்வு தோன்றி விடுகிறது. அதற்கு மேல் இந்த வாழ்வை முழுமையாக சுதந்திரமாக வாழ முடியாமல் போய் விடுகிறது. (ஹைடெக்கர் இதைப் பற்றி ஆழமாகப் பேசி இருக்கிறார்). இறை எதிர்ப்பு என்பது மூடநம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு மட்டுமல்ல, அது ஒரு ஆழமான தத்துவ நிலைப்பாடு. இறை நம்பிக்கை என்பது வாழ்வின் மீதான அவநம்பிக்கை, அதன் ஆழமான தளத்தில். 

 மதத்தையும் இறைநம்பிக்கையையும் குழப்புகிறேன் என சொல்லாதீர்கள், ரெண்டுமே ஒன்றுதான். புத்தர் நமக்கு என்ன சொல்லித் தந்தார், எதையுமே உடை, சுக்குநூறாக உடை, ஒன்று சேர்த்து அர்த்தம் கொள்ளத்தக்க உருவகமாக்காதே என. 
நம்மால் அவ்வழி நிற்க முடியவில்லை என்பதே இன்று மானுட குலம் அனுபவிக்கும் அத்தனை இழிவுகளுக்கும் ஆதாரக் காரணம்.
 பெரியாரின் அனார்க்கிஸம் சொல்வதும் இதையே. அது பிடிக்கவில்லை எனில் நீங்கள் நீட்சேயிடம் செய்யலாம். கர்த்தரைக் கொண்டு இந்த உலகை எப்படி போலியான விழுமியங்களால், இரக்கம், கனிவு, பணிவு சரி-தவறு எனும் ரெட்டை நாவுப் பேச்சால் கட்டமைத்தார்கள் இறையியலாளர்கள், இவற்றின் பின்னால் ஒளிந்திருப்பது காலம் மீதான, நீதி, நிஜம் மீதான அச்சமே  என அவர் செறிவான தத்துவப் பின்புலத்தில் அம்பலப்படுத்தினார்.

இந்த காரணத்தாலே எந்த பண்டிகையின் போதும் நான் வாழ்த்துவதில்லை. சமூகநீதி பேசுவோரும் இதைப் பின்பற்றுவதே தகும். இல்லாவிட்டால் அது பச்சைப் பாசாங்காகி விடும். (திமுகவினரின் தவறு இது)

வெகுஜனத்தின் நம்பிக்கைகளை பழித்தலாகாது என்பது வேறு, அதை வணங்கி வாழ்த்துவது வேறு. முதலாவது நாகரீகம், இரண்டாவது போலித்தனம். 

ஒரு பக்கம் இஸ்லாமிய, கிறித்துவப் பண்டிகைகளில் பங்கேற்று கைநனைத்து விட்டு இந்து நம்பிக்கைகளை பழிப்பதும் பாசாங்கே. (திகவினரின் தவறு இது)

எனக்கு இறைநம்பிக்கை இல்லை, அதனால் நான் வழிபட மாட்டேன், நீங்க வழிபடுவதிலும் இடைநிற்க மாட்டேன்  ... என இழுபதும் பயனற்றது. இறைநம்பிக்கை ஏதோ சப்பாத்தியா, தோசையா தேர்வு போலாகி விடுகிறது. (நடுநிலையாளர்களின் தவறு இது)
நீதிக்கும் அநீதிக்கும் இடையில் தேர்வே இல்லை.

மாறாக, நம்பாததன் காரணத்தை சொல்லி நம்பிக்கையாளர்களிடம் விவாதித்து பரிவுடம் விளக்க வேண்டும். ஒருவர் கண்ணீர் விட்டு அழும் போது, அவமானத்தில் குறுகும் போது இதற்குக் காரணம் உன் இறைநம்பிக்கையே என புரிய வைக்க முயல வேண்டும். 

 இறைமறுப்பாளர் தன்னை அறத்தின் பாலானவன் என நம்ப வேண்டும். 'இருக்கு ஆனா இல்ல' என ஜல்லியடிக்கக் கூடாது. வாழ்த்துவது, பம்முவது, புனித நூல்களில் செக்ஸை அம்பலப்படுத்துகிறேன் என்றெல்லாம் குழப்பக் கூடாது. இறைமறுப்பை அநீதி மறுப்பாக, அதிகார எதிர்ப்பாக அவர் முன்வைக்க வேண்டும்!

ஆகையால் நண்பர்களே, கொழுக்கட்டை சாப்பிடுவோம், அது ஆரோக்கியமான உணவு. ஆனால் பிள்ளையார் என்றில்லை எவரையும் வணங்க வேண்டாம்.

கருத்துகள்

Arulratnam Kularatnam இவ்வாறு கூறியுள்ளார்…
No mean No for every religion I like this Approach.this is the honest approach. Same Time if you follow a Religion give the same Respect to Other Religion also

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.