முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருவள்ளுவர் யார்?



ப்ரியாப்ரீயன் கவரிமா என்பது கவரிமான் அல்ல இமய மலையில் வாழ்ந்த ஒரு சடைசடையாக முடிகொண்ட ஒரு மாடு என எழுதிய பதிவை படித்ததும் எனக்கு ஒரு விசயம் நினைவுக்கு வந்தது:


மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்


நான் பள்ளி மாணவனாக இருக்கும் இக்குறளை தமிழாசிரியர் எழுதிப்போட்டு விளக்குகிறார்:

கவரிமான் தனது மயிர்களை இழந்துவிட்டாலே தன் அழகு போய் விட்டதே என மனம் உடைந்து செத்துவிடும், கௌரவம் கொண்ட மாமனிதர்களும் அப்படியே.


எனக்கு ஒரு கேள்வி எழுந்தது: மயிர் உதிர்ந்தால் அது திரும்ப முளைத்து விடும். தற்காலிகமாய் மயிரிழந்ததற்கு ஏன் அக்கவரிமான் சாக வேண்டும்? அப்படி செத்தால் அது எவ்வளவு முட்டாளாக இருக்க வேண்டும்.


கல்லூரியில் இக்குறளை திரும்ப வாசிக்கும் போது மற்றொரு கேள்வி எழுந்தது: மயிர் அனையது மானம் என வள்ளுவர் சொல்கிறாரா?

மயிர் = மானம்?

அப்படித்தானே அவர் உவமையை இணைவைக்கிறார்

மயிரை இழந்ததும் அதை மிகையாக கருதி மனம் வருந்தி ஒரு மான் உயிரை விடுகிறது (அல்லது அப்படி ஒரு தொன்மம் இருந்துள்ளது) அல்லது அது மான் அல்ல, பனிப்பிரதேசத்தில் வசிக்கும் ஒரு மாடு. அதனால் முடியை இழந்தால் உயிர்வாழ முடியாது. அது தற்கொலை செய்யவோ, மனம் உடைந்து சாகவோ இல்லை, ஆனால் குளிர்பொறுக்காது சாகிறது

இந்த இரண்டு அர்த்தங்களிலும் மானம் என்பது அவ்வளவு உயர்வான ஒன்றல்ல, அது மிகைப்படுத்தப்படும் ஒரு மனக்கட்டமைப்பு எனும் தொனி உள்ளது.


இதை ஏன் நம் உரையாசிரியர்கள் கவனிக்க வில்லை? ஏன் இந்த கவரிமானை ஒரு பெருமைச்சின்னமாக்கி கதையையே மாற்றி விட்டார்கள்?


மார்ச் மாத காலச்சுவடு இதழில் ஸ்டாலின் ராஜாங்கம் திருவள்ளுவரின் உருவப்படம் வைதீகத் துறவியாக மாற்றப்பட்ட அரசியலைப் பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தார். அவர் மட்டுமல்ல மேலும் பல அறிஞர்களும் எப்படி தமிழகத்தில் சுதேசிகள் மற்றும் தமிழ்தேசியவாதிகளின், திராவிட அரசியல் எழுச்சியில் காலத்தில் முதலில் வள்ளுவரை ஒரு வைதீகராக, (தலித் அல்லவென திரித்து) பிராமணராக, சைவராக, மதசார்பற்றவராக பலவிதங்களில் காட்டி, முரண்பட்ட சித்திரங்கள் வள்ளுவரின் பின்புலம் பற்றி எழுப்பப்பட்டன என்பதைக்குறித்து பேசியிருக்கிறார்கள். இவ்விசயத்தில் கௌதம சன்னாவின்திருவள்ளுவர் யார்எனும் நூல் குறிப்பிடத்தக்கது

 இந்தவள்ளுவரை மதமாற்றுவோம்திட்டத்தை ஒட்டியே பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் உரைகள் பிரபலப்படுத்தப்பட்டன. ஆனால் உண்மையில் வள்ளுவர் சமணர் அல்லது பௌத்தர். ஒரு பௌத்தத் துறவி. எல்லீஸ் முதலில் வெளியிட்ட திருக்குறள் நாணயத்திலும் வள்ளுவரின் தோற்றம் பௌத்த துறவிக்கானதே. அயோத்திதாசர் திருக்குறளை ஒரு தமிழ் பௌத்த படைப்பாக முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் விளக்கி திரிக்குறள் என ஒரு நூல் எழுதினார் (அனைத்துக் குறள்களுக்கும் உரையெழுதி நிறைவு செய்ய அவரால் இயலவில்லை). ஒப்பிடுகையில், அவரது உரையே திருக்குறளின் மகத்துவத்தை நமக்கு புரிய வைக்கும் தெளிவுடன் உள்ளது. ஏன்


திருக்குறள் வெறும் நீதிநூல் அல்ல, அதற்கு ஒரு பௌத்த தத்துவப் பின்புலம் உள்ளது. நாம் அதை வைதீகப் பின்புலத்தில் வைத்தால் பல குழப்பங்கள் ஏற்படும். நடைமுறைப் பொருளில், மு.வரதராசன், சாலமன் பாப்பையா அல்லது பிற திராவிட ஆய்வாளர்களின் நோக்கில், படித்தால் குறளின் நுணுக்கங்கள் புலப்படாமல் எளிய தட்டையான அறிவுரைகள் ஆகி விடுகின்றன. மானத்தை மயிருடன் ஒப்பிடுகிறார் எனக் கூறும் ஒரு அபத்தமும் தோன்றுகிறது.


சரி பௌத்த தத்துவத்தின் பின்புலத்தில் வைத்துப் படிக்கும் போது மேலே குறிப்பிட்ட திருக்குறளின் பொருள் எப்படி மாறுகிறது?

விலங்குகளுக்கு ஆண்மைச்செறிவைக் காட்ட, எதிரியை பயமுறுத்தும் தோற்றத்தை தருவது மயிர். ஆண் சிங்கத்தை நோக்கி பெண் சிங்கத்தை ஈர்ப்பது அதன் பிடறி மயிரின் கம்பிரம். ஆண்மயிலுக்கு இது தோகை. பெரும்பாலான உயிரினங்களில் ஆணுக்கு அதிக உயரத்தை, எடையை, சதைதிரட்சியை இயற்கை அளித்துள்ளது. இது ஒரு தோற்றம் மட்டுமே. இதை விலக்கினால் ஆணும் பெண்ணும் ஒன்றுதான். இந்த தோற்ற மயக்கத்தைப் போலத்தான்மானமும்”. மானம் என்பதை சுயமரியாதை என அரசியல்படுத்தி புரிந்து கொண்டால் அது நவீன அரசியல் வாசிப்பாக, வள்ளுவர் உத்தேசிக்காததாகி விடும். மேலும் சுயமரியாதை என்றால் என்ன உதிர்கிற மயிரா எனும் கேள்வியும் எழும்.


நான்மானம்என்பதை அகந்தை, கர்வம், சுய-மதிப்பு, தன்னுணர்வு என வாசிக்க விரும்புகிறேன். பௌத்தத்தின் ஒரு அடிப்படையான அறிதல் முறை நம் எண்ணங்கள், நம்பிக்கைகள், உணர்வுகள் துவங்கி தூல உலகில் காணும் பொருட்கள், விசை, பல பௌதீக மாற்றங்கள் வரை சாரமற்றவை என தர்க்கபூர்வமாக விளங்கிக் கொள்வது. ஒவ்வொன்றின் இருப்பும் காலத்துடன், வெளியுடன் அது கொள்ளும் உறவினால், உறவாடலால் உருக்கொள்கிறது. விதை-செடி எனும் உதாரணம் மூலம் நாகார்ஜுனர் இதை விளக்குகிறார். விதையில் இருந்து செடி தோன்றுகிறதா என்றால் ஆம். ஆனால் விதையில் இருந்து வேறெந்த காரணிகளும் இன்றி செடி முளைப்பதில்லை. தட்பவெட்பம், ஈரப்பதம், மண், மண்ணிலுள்ள உரம், மண்ணின் இறுகாத லகுவான நிலை, விதை மண்ணுக்குள் இருக்கும் போது பிற சங்கதிகள் அதற்கு ஊறுவிளைவிக்காதது என ... எத்தனையோ காரணிகள் ஒரு செடி தோன்ற காரணமாகின்றன. இந்த காரணிகளும் தம்மளவில் விதைக்கு உதவுவதில்லை. அவற்றையும் பல்வேறு காரணிகள் தாங்கிப் பிடிக்கின்றன. இப்படி பின்னால் போய்க்கொண்டே இருந்தாலும் எதுவும் தன்னளவில் இருப்பதோ ஒன்றை செய்வதோ இல்லை என அறிவோம். முக்கியமாய், காலத்திற்கு இதில் ஒரு இடம் உள்ளது. விதை மண்ணுக்குள் செல்கிறது, அடுத்து அது முளைக்கிறது. செடி தோன்றுகிறது. இம்மூன்றும் வெவ்வேறு காலங்களில் நிகழ்கின்றன. ஆனால் இக்காலங்கள் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு முளைவிட்டு வளர்ந்து செல்கின்றன என நமக்கு எப்படித் தெரியும்? நான் நேற்று நட்ட விதை இன்று முளைவிடும் போது இல்லை. எனில் நேற்று நட்டதில் இருந்தே அது வருகிறது என எப்படி சொல்ல முடியும்? என் முன்னே இருப்பதுஇன்றுமட்டும் தானே? இப்படி இருப்பு என்பது காலம் குறித்த பல பிழையான புரிதல்களின் அடிப்படையில் நிகழ்கிறது என நாகார்ஜுனர் காட்டுகிறார். மனம், சுயம், அதனால் தோன்றும் தன்னுணர்வு, அதில் இருந்து வரும் தன்னை முன்னிறுத்திய, தன்னாலே எல்லாம் நிகழ்கிறது எனும் அகந்தை தோன்றுகிறது. எப்படி விதையில் இருந்து செடி முளைக்கிறதோ அப்படியே இருப்பில் இருந்து சுயமும், சுயத்தில் இருந்து தன்னுணர்வும், தன்னுணர்வில் இருந்து அகந்தையும், அகந்தையில் இருந்து உலகம் குறித்த புரிதலும் என பல்வேறு காரணிகளில் இருந்து தோன்றி சாரமற்ற நிலையற்ற ஒன்றாகிறது. தான் என்பதை சாரமற்றது, நிலையற்றது என ஒருவன் புரிந்து கொள்வது கவரி மா தன் மயிர்களை இழந்துநிர்வாணமடைவதைப்போல ஆகிறது. இங்கே அழிவு ஒரு விடுதலையாகிறது.


கொச்சையாக சொல்வதானால், எல்லாமே மயிருதானே, உன் தன்னுணர்வும் மயிருதானே, ஏண்டா அதுக்காக அழுகிறே என வள்ளுவர் கேட்கிறார். இந்த கவலையை விட்டொழி, அப்போது இப்பிறவிக்கடனை ஒழித்து நீ ஒளிவிடும் வடிவைப் பெறுவாய் என்கிறார்.


புத்தர் காலத்தின் துறவிகள் நீண்ட சடாமுடி தரித்து குளிக்காமல் சிக்குப்பிடித்து திரிந்தனர்; அசுத்தமான பயமுறுத்தும் இத்தோற்றமே துறவின் குறியீடாகக் கருதப்பட்டது. மற்றொரு பக்கம் சமணர்கள் தலைமயிரை கையால் பிடுங்கி மொட்டையாகும் சடங்கைப் பன்பற்றினர். புத்தர் இதை ஏற்கவில்லை. அவர் தன் சீடர்களிடம் இரு மாதங்களுக்கு ஒருமுறை தலையை சவரம் செய்து கொள்ளச் சொன்னார். அதற்கு மேல் மயிரை கொண்டாடவோ சிக்காக்கி வருந்தவோ பிடுங்கி துன்புறவோ வேண்டாம் என நினைத்தார். புத்தரின் இந்த பரிந்துரை வினய பிதாகா நூலின் காந்தகா எனும் அத்தியாயத்தில் வருகிறது. தலைமயிரைத் துறப்பது ஒருவர் பிக்கு ஆவதை, உலகப்பற்றை துறக்கிற நிலையின் குறியீடாகிறது.


இப்போதுமயிர்நீப்பின்உயிர்போய் விடும் என்பதை அகந்தை போனதும் மறுபிறப்பு எடுக்க இயலும் எனும் முழுக்க நேர்மறையான (நேரீடான) புரிதல் வருகிறது.


இதை தப்பாக விளக்கி நம்மை திசைதிருப்பியிருக்கிறார்கள் இந்த உரையாசிரியர்களும் தமிழாசிரியர்களும். திராவிட இனமானம், குடும்ப மானம், தனிமனித மானம், சாதி மானம் என இதை வெவ்வேறு பொருட்களில் மக்கள் படிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த வாசிப்பு சுதந்திரம் உண்டு அனைவருக்கும் எனிலும் ஆழமான வாசிப்பு பௌத்த வாசிப்பு மட்டுமே.  


சரி இந்த வாசிப்புக்கு திருக்குறளுக்கு உள்ளேயே சான்றுகள் உண்டா? தாராளமாக. அடுத்த பதிவில் அதைத் தருகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...