முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஷ்ணுபுரம் ஒரு ஆர்.எஸ்.எஸ் நாவலா?

இந்த கேள்விக்குள் போகும் முன் முகநூலில் இதைப் பற்றி 'காலச்சுவடு' கண்ணன் எழுதியுள்ளதை பகிர்கிறேன்:

"முப்பது வருடங்களிருக்கும். வீட்டு மொட்டைமாடியில் ஒரு 
நார்க்கட்டிலில் அமர்ந்தபடி ஜெயமோகனுடன் பேசிக்
கொண்டிருக்குதேன். சரியாகச் சொல்வதென்றால் 
பேசக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவருடன் அதிகப் பழக்கம் இல்லாத காலகட்டம் (கடைசிவரை ஒட்டவில்லை என்பது வேறு செய்தி). ராமஜென்மபூமி இயக்கம் பற்றி உணர்ச்சிப்பிழம்பாக பேசிக்கொண்டிருந்தார். என் அசுவாரசியம் முகத்திலேயே வழிந்திருக்க வேண்டும். எனவே என்னைப்போன்ற 'மேற்கத்தியச் சிந்தனை' 
மரபினர்மீது கொஞ்சேநேரம் பொழிந்தார். ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் 
தனக்கு வேறுபாடு ஏற்பட்டிருந்தாலும் ராம ஜென்ம பூமியில் கோயில் கட்டுவது இன்றும் ஒரு உணர்வுபூர்வமான விஷயம்தான் என்றார். அப்படிப்பேசும் ஒரு தமிழ் எழுத்தாளரை அப்போதுதான் 
முதலில் பார்த்தேன். அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 30 வருடங்களுக்குப் பின்னர் அப்படி ஒரு தமிழ் எழுத்தாளர்தான்  இப்போதும் இருக்கிறார். 


ராமஜென்மபூமி இயக்கம் உருவாகியிராவிட்டால் ஜெயமோகனின் 
படைப்புலகின் ஒரு முக்கியக் கூறு  உருப்பெற்றிருக்காது.  அல்லது இப்படிச் சொல்லலாம். ராம ஜென்ம பூமி இயக்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் 'இந்து எழுச்சி'யின்  வழி உருவான மனம்தான் 'இந்திய ஞான மரபு' என்பதான படைப்புலகை உருவாக்கியது. எனவேதான் அதற்குத் தமிழில் முன்னோடிகள் யாருமில்லை. 
ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து வேறுயாரும் தமிழ் இலக்கியத்திற்கு வரவில்லை என்பதால் பின்னோடிகளுமில்லை. 

கார்கில் யுத்தமும் அதை பாஜக அரசு தேசியவெறியாக வளர்த்தெடுத்த லாவகமும் நடந்திராவிட்டால் ஜெயமோகன் எனும் சமூக அரசியல் கருத்தாளருக்கு அத்தலைமுறையில் விசிறிகள் உருவாகியிருக்கமுடியாது. IPKF இலங்கையில் யாரையும் வன்பாலுறவு செய்யவில்லை 
என்பதையோ இந்தியாவுக்கு எதிரான மதச் சிறுபான்மையினரின் சதிகளைப் பற்றிய பினாத்தல்களையோ செரிக்க தேசிய வெறி இருத்தல் வேண்டும். (இதற்கும் தேசப்பற்றுக்கும் சம்பந்தமில்லை).  
 
பெண்ணியம், தலித்தியம், இடதுசாரிக் கருத்தியல் சார்ந்து சிலர்
கவனம்பெற்றுவிடுவதாக ஆக்ரோஷப் பதிவுகளைப் பார்க்கும்போது 
இதை நினைவில் கொள்க. 

விஷ்ணுபுரம் நாவலின் அச்சாக்கத்திற்கும் விநியோகத்திற்கும் 
ஆர்.எஸ்.எஸ். நேரடியாக உதவிசெய்தது. இதுபற்றி இன்னொரு 
சந்தர்ப்பத்தில் ஆதாரப்பூர்வமான செய்திகளைப்  பார்க்கலாம்."

அடுத்து என் எதிர்வினை:

ஜெயமோகனுக்குள் ஒரு சங்கி உண்டு, ஆனால் சங்கிகளை ஏற்காத தரப்புகளும் அவருக்குள் உண்டு. நிறைய உள்முரண்கள் கொண்ட படைப்பாளி அவர். ஜெயமோகன் இந்து தேசியவாதத்தைக் கடந்து எவ்வளவோ எழுதி இருக்கிறார். அவரை கண்ணன் இப்படி ஒரு இந்துத்துவ புனைவெழுத்தாளராக  சுருக்குவது அநீதி. 

 மேலும், கண்ணன் குற்றம் சாட்டுவதைப் போல "விஷ்ணுபுரம்" ஒன்றும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சார நாவல் அல்ல. (அது எப்படி வெளியிடப்பட்டது என்பது வேறு கதை) அது இந்திய சுதந்திரத்துக்குப் பின்பான அரசியல் மாற்றங்களை ஒரு நீதிக்கதையாக (parable) முன்வைக்கிற, இந்து, தத்துவ மரபுகளின் மோதல்களை, தத்துவ இயக்கத்தின் சாரமின்மையை மார்க்வெஸின் "நூற்றாண்டுகளின் தனிமை" நாவலின் பாணியில் சித்தரிக்கிற, மிக முக்கியமாக மானுட இருப்பு குறித்து கவித்துவமான கேள்விகளை எழுப்புகிற ஒரு படைப்பு. தமிழில் அதற்கு முன்போ பின்னரோ அப்படி ஒரு இலக்கிய பிரதி உருவாகவில்லை. அவ்வளவு பெரிய சவாலை ஒரு எழுத்தாளன் துணிந்து மேற்கொண்டதில்லை. அதற்கே ஜெயமோகனுக்கு நாம் கைத்தட்டலாம்.
 இவ்விசயத்தில் கண்ணனுடன் முழுக்க மாறுபடுகிறேன். நாம் இலக்கியத்தை இப்படி அரசியல்படுத்திப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்! 
முக்கியமாக, ஒருவரைத் தாக்க அவரது படைப்புலகை பயன்படுத்தக் கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...