பிரசாந்த் பூஷண் நீதிபதிகளிடம் வருமானத்துக்கு அதிகமான சொத்திருப்பதாய் குறிப்பிட்டது ஊர் உலகம் அறிந்த உண்மையே. யாருக்கும் அதை சொல்லும் துணிச்சல் இருக்கவில்லை, அதைப் பற்றி பேசுவது ஜனநாயகம் மீது நமக்குள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் ஒரு கனவாக கலையச் செய்திடுமோ எனும் பயமும் இருந்தது. ஆனால் பிரஷாந்த் பூஷண் இந்த போலித்தனங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்டத்தை கலைத்து விட்டார். மற்றொரு பக்கம் அரசுத்தரப்பும் அவரைத் தண்டிப்பதை விரும்பாத நிலையில் (அது வேறொரு அரசியல்) நீதிபதிகளின் இருக்கை “தயவு செஞ்சு மன்னிப்பு கேட்டிருய்யா” எனக் கெஞ்சும் இடத்துக்கு வந்து விட்டனர்.
இதில் வினோதம் என்னவெனில் தண்டனை அளிக்கும் போது ஒருவர் குற்றவாளி ஆகிறார், ஆனால் அவர் அக்குற்றத்தை ஒப்புக்கொண்டதாய் ஆவதில்லை. தண்டனை அளிப்பது ஒருவர் மீது அதிகாரத்தை நிலைநாட்டும் செயல் மட்டுமே. ஆனால் மன்னிப்பு வேண்டுவது ஒரு தற்காலிக சமத்துவத்தை நிலைநாட்டும் செயல். இன்றைய பின்-உண்மை (post-truth) சமூகத்தில் திட்டுவது, விமர்சிப்பது, மன்னிப்பு கேட்பது எல்லாம் மேம்போக்கான சமாச்சாரங்கள் ஆகிவிட்டன. ஒருவர் பொதுவெளியில் பாராட்டுவதும் கூட வெறும் “லைக்” பட்டனை அழுத்தும் காரியம் போல ஆகிவிட்டது.
நீதிபதிகளின் இருக்கை எதிர்பார்ப்பது: (1) “பிரஷாந்த் பூஷன், யோவ், நீ எங்களை சமமாக நடத்துப்பா, அசிங்கப்படுத்தாதே, நான் உன் மீது தண்டனை விதிக்காம விட்டு விடுறேன்” - இது ஒரு சமரசப் பேச்சு வார்த்தை. பிரசாந்த் பூஷண் இதற்குத் தன் மனசாட்சி ஒப்புக்காது எனக் கூற, (2) “மன்னிப்பு கேட்டுடுப்பா, நீ அதை நம்பாம இருந்தாலும் பரவாயில்ல” என்கிறார்கள். ஒருவேளை பூஷண் மன்னிப்பையே கேட்டாலும், அந்த மன்னிப்புக் கோரலை நீதிபதிகளும் பொருட்படுத்த மாட்டார்கள், மக்களும் நம்ப மாட்டார்கள். ஆனால் அது status quoவை நிலைநாட்ட பயன்படும்.
இந்த நாடகத்தின் பின்னால் இவ்வளவு அவலமும் உண்டு.
(கேவலமா இல்லியா குமாரு!)
நீதிபதிகளின் இந்த அட்டூழியத்துக்கு ஒரு தீர்வு இல்லையா?
உண்டு!
நீதிமன்றத்தை மக்களின் எதிர்வினைப்படி மறுவடிவமைக்க வேண்டிய நாள் நெருங்கி விட்டது. நமக்குத் தேவை ஒரு சட்டமாற்றம்: ஒவ்வொரு வருட இறுதியிலும் ஒரு நீதிபதியின் சேவையை மதிப்பீடு செய்யும் ஒரு பணியை ஒரு பொது அமைப்பு மேற்கொள்ள வேண்டும் - அந்நீதிமன்றத்துடன் தொடர்புள்ள வக்கீல்கள், அங்கு வழக்காட, வழக்குத்தொடுக்க வந்தவர்கள், தொடுத்தவர்கள், மனித உரிமை அமைப்புகள் என போதுமக்களும் சட்டவல்லுநர்களும் ஓட்டளிக்க வேண்டும். குறைவான வாக்குகளைப் பெறும் நீதிபதி ஐந்து வருடங்களுக்கும் மிகக்குறைவான வாக்குகளைப் பெறுபவர் பத்து வருடங்களுக்கு அதிகமாகவும் நீதிபரிபாலனம் செய்யத் தடை விதிக்கப்பட வேண்டும். இந்த சட்டமாற்றம் வந்தால் இன்று தனியார் துறையில் பலரும் எதிர்கொள்ளும் பணி மதிப்பீடு முறைமை நீதித்துறையிலும் கொண்டு வரப்பட்டால், நீதிபதிகளின் ஊழல், அகந்தை, அதிகார துஷ்பிரயோகம், அடித்து துவைக்கப்பட்டவர்களை சிகிச்சையின்றி ரிமாண்ட் செய்யும் அநீதிப்போக்கு, உச்சநீதிமன்ற சங்கி நீதிவான்கள் மத்திய அரசுக்கு பூச்சொரிந்து மணியடிப்பதும், அதைக்கொண்டு பின்னர் கவர்னர் ஆக ஆசைப்படுவதும் ஒரு முடிவுக்கு வரும்.
பின்குறிப்பு: ஒருபோதும் காவல்துறையினருக்கு இந்த பணி மதிப்பீட்டு உரிமை அளிக்கப்படலாகாது. அதிகாரத் தரப்பை சேராதவர்களுக்கு மட்டுமே அது அளிக்கப்பட வேண்டும்.
குற்றவாளிகளுக்கு அளிக்கலாமா?
நிச்சயமாக! தமக்கு நீதி வழங்கப்படவில்லை எனத் தோன்றினால் அவர்கள் ஏன் நீதிபதிக்கு கம்மியான ரேட்டிங் வழங்கக் கூடாது!

Comments