ஹாமீம் முஸ்தபாவின் நேரடிக் கவிதைகள், plain poetry, அரசியல் கவிதைகள் - இவற்றை எங்கே பொருத்துவது?
ஞானக்கூத்தன், இன்குலாப், மு.மேத்தா, பின்னர் எழுத வந்த மனுஷ்ய புத்திரன் போன்றோரின் அரசியல் கவிதைகளின் அருகிலா?
அல்லது குமரியின் சமகால கவிஞர்களான நட.சிவகுமார், என்.டி ராஜ்குமார் போன்றோர் தலித் அரசியல் நேரடிக் கவிதைகளின் அருகிலா? ஹெச்.ஜி ரசூலின் இஸ்லாமிய எதிர்-வஹாபிய கவிதைகளின் கூடவா?
முஸ்தபாவின் கவிதைகளுக்கு ஒரு தனித்துவம் உண்டு - அவை plain poetryஇன் கூறுமுறையை - நான் vs நீ எனும் எதிரிணையைக் கொண்டு ஆரம்பித்து இருவரையும் ஒன்றாக்கிற இடத்தில் முடிப்பது - கொண்டிருந்தாலும் ஒரு மானிட நேயத்தை இவை வலியுறுத்துகின்றன. உடைந்து போகிற இடத்தில் இருந்து நம்பிக்கைக் கீற்றை அழைத்து வருகின்றன, காயங்களுக்கு மருந்திட முயல்கின்றன. இக்கவிதைகளின் கவிதைசொல்லி ஒரு உருவகம், அவன் இஸ்லாமியன் என்பது கூட ஒரு தரப்பே அன்றி முஸ்தபா அல்ல. இவைதான் அவரை ஹெச்.ஜி ரசூல், நட.சிவகுமார், என்.டி ராஜ்குமார் ஆகியோரிடம் இருந்து தனித்துக் காட்டுகிறது.
ஒட்டுமொத்த மானுடத்துக்கான ஒரு குரலாக சாராம்சப்படுவதில் இக்கவிதைகள் நவீனத்துவத்துக்கு முன்பான ஒரு மானுடப் பொதுமை - liberal humanist - குரலாகிறது. அதே நேரம் ஊடுபாவும் பிரதிகளின் தன்மை, மிகுபுனைவு, நகைமுரண் என பின்நவீனக் கவிதையின் சுவடுகளையும் பின்பற்றுகிறது. இப்படி ஒரு வடிவ ரீதியாக வித்தியாசமான கலவையாக இக்கவிதைகள் சமைக்கப்பட்டுள்ளன.
இவை ஏன் அரசியல் கூற்றுகளாக அல்லாமல் கவிதையாகின்றன?
கற்கள், நிலம் போன்றவற்றை உருவகமாய் நுட்பமாய் மாற்றுவதால், கவிதையின் முடிவில் சட்டென ஒரு மாற்று அர்த்த வெளிக்கு நம்மை நகர்த்துவதால் - ஒரு போது உரைநடையில் சாத்தியமாகாத நுட்பம் இது.
கம்பன் குறித்த கவிதையைப் போன்ற சில கவிதைகள் மிக மிக மறைமுகமான ஒரு அரசியலைப் பேசுகின்றன, நகைமுரணின் உச்சத்தை எட்டுகிறன.
நவீன கவிதைக்கு அந்நியமான ஓசை நயத்தையும், சொற்கள் நகரும் சரளத்தன்மையையும் இக்கவிதைகளின் சிறப்பாக குறிப்பிட வேண்டும். பெரும்பாலும் எதுகையை பயன்படுத்துகிறார், அவை கவிதையை இடர்படுத்தாமல் கவிதைக்கு ஒரு ஓசைப் பின்புலத்தை அளித்து நாடகீயப்படுத்துகின்றன. கவிதையில் வரிகளை அவர் உடைத்து பயன்படுத்துவதிலும் ஒரு நேர்த்தி உள்ளது. பொதுவாக plain poetryஇல் இன்று இல்லாமல் போகிற மொழி நுட்பம் இது.
ஹாமீஸ் முஸ்தபா அண்ணனுக்கு என் வாழ்த்துக்களும் அன்பும்!

Comments