முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தி தெரிந்த நடிகர்களால் ஏன் பாலிவுட்டில் சாதிக்க முடியவில்லை?

 



பல மொழித் திறன் கொண்டோரை நமக்குத் தெரியும். அவர்களால் ஏகப்பட்ட மொழிகளைப் புரியவும் அவற்றில் பேசவும் ஓரளவுக்கு முடியும். ஆனால் எந்த மொழியிலும் அவர்களுக்கு தனித்த ஆளுமையோ நிபுணத்துவமோ இராது. ஏனென்றால் ஒரு மொழியை தக்க வைக்க அதனை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். ஏழெட்டு மொழிகளில் ஒரே சமயம் அனுதினமும் உரையாடும் சூழல் பெரும்பாலானோருக்கு வாய்ப்பதில்லை. ஆகையால், தினமும் பயன்படுத்தும் ஒன்றிரண்டு மொழிகளைத் தவிர மற்ற மொழிகள் காலப்போக்கில் உதிர்ந்து விடுகின்றன. அதாவது மொழி என்பது அறிவியல், வரலாறு போல படித்தால் வாழ்நாளெல்லாம் மூளையில் தகவல் தொகுப்பாக நிலைக்காது. என் மாணவர்கள் சிலரிடம் இந்த சிக்கலைக் கண்டிருக்கிறேன் - அவர்களுக்கு பிரஞ்சு ஓரளவுக்குத் தெரியும், ஆனால் சரளமாக பேச முடியாது, இந்தி, மலையாளத்தில் பேச முடியும், ஆனால் எழுத வராது, இம்மொழிகளில் அவர்களின் சொல்வளமும் மிக சொற்பமாகவே இருக்கும். மொழிக் கற்பித்தல் கோட்பாட்டில் இதை immersion என்பார்கள். நீருக்குள் மூழ்கி இருப்பதைப் போல ஒரு மொழிக்குள் நீங்கள் இருக்க வேண்டும், அதையே கேட்க வேண்டும், அதிலேயே பேச வேண்டும், அதையே படிக்க வேண்டும். இல்லாவிடில் நீர் காய்ந்து விடுவதை போல மொழியும் உலர்ந்து மறைந்து விடும். வடிவேலுவின் ஜோக் ஒன்றில் சரிவர பார்க்க முடியாத ஒரு காரோட்டி “வரும் ஆனா வராது” என்பாரே, அப்படித்தான் இந்த பன்மொழித் திறனும் இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை, மொழியியல் ஆய்வு சொல்லுகிறது.


எனில், மூன்றாவதாக நம் பிள்ளைகள் கற்கிற பிரஞ்சோ இந்தியோ சமிஸ்கிருதமோ எப்படி அவர்களின் திறனாக நீடிக்கும்? அவர்கள் தினமும் யாருக்காவது சமிஸ்கிருதத்தில் காதல் கடிதம் எழுதுவார்களா? அவர்கள் தமிழகத்தில் உள்ள தம் நண்பர்களுக்கு தினமும் இந்தியில் வாட்ஸாப் பண்ணுவார்களா? அவர்கள் தம் தாயிடம் சென்று பிரஞ்சில் “ஆத்தா நான் பாஸாயிட்டேன்” என சொல்வார்களா? ஆங்கிலத்திலாவது சொற்பமாகவேனும் நாம் வகுப்பில் உரையாட கட்டாயம் ஏற்படுகிறது, வேலையிடங்களில் ஆங்கிலம் கட்டாயமாகிறது, பெரும்பாலான தகவல்களை நாம் கூகிளில் ஆங்கிலத்திலே தேடிப் படிக்கிறோம். ஒரு வேலைக்கான நேர்முகத்தில் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்கப்படுகிற கேள்வியில் இந்தியில் பதில் சொல்ல முடியுமா? நீங்கள் பீகாருக்கு கல் சுமக்க போகாத பட்சத்தில் அப்படியான ஒரு இந்தி நேர்முகம் சாத்தியமில்லை.

அரசு உங்களுக்கு ஒரு யானையை எப்படி பயிற்சி அளித்து, உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சொல்லித் தருகிறது. ஆனால் பயிற்சிக்கு உங்கள் முன் யானை இல்லை. பாகனாக தேர்ச்சி பெற்ற பின் உங்களிடம் தொரட்டி மட்டுமே இருக்கும், என்றாவது ஒருநாள் நிஜ யானையைக் காணும் போது பயத்தில் ஒளிந்து கொள்வீர்கள். 

இந்தி கற்றால் என்ன வேலை கிடைக்கும் என்கிற கேள்விக்கே நான் வரவில்லை - அதை எப்படி தக்க வைப்பது, எப்படி பயன்படுத்தாமல் நினைவில் தேக்குவது எனும் கேள்வியையே கேட்கிறேன். மலையாளிகளில் பலரும் ஓரளவுக்கு உடைந்த இந்தியில் பேசுவார்கள், அவர்களால் வடக்கிந்தியாவில் சமாளிக்க முடியும். பாலிவுட் படம் பார்க்க முடியும். வேறேன்ன பயன்? அவர்களால் இந்தியில் ஒரு புத்தகம் எழுத முடியுமா? சொந்தமாய் ஒரு நாவலோ கவிதையோ இந்தியில் எழுதுகிற, இந்திக்காரர்களால் கொண்டாடப்பட்ட எத்தனை மலையாளி எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்? மோகன்லாலால் இந்தியில் பேசி அங்கு சல்மான்கான், ஷாருக்கான் அளவுக்கு உயர முடியுமா? பிரகாஷ் ராஜால் தமிழுக்கு வந்து தமிழைக் கற்று பெரும் நடிகராக முடிகிறது, ஆனால் அவரால் ஏன் பாலிவுட்டில் கால்பதிக்க முடிவதில்லை. திராவிட மொழிகளுக்கு இடையிலான இந்த கொடுக்கல் வாங்கல் ஏன் ஹிந்துஸ்தானி மொழிகளிடம் சாத்தியமாவதில்லை? ஏனென்றால் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடியர்கள் அருகாமையில் இருக்கிறோம், தமிழகத்தில் மற்ற மூன்று மொழிக்காரர்களும் தமிழில் சரளமாக புழங்கியபடி இருக்கிறார்கள். ஆனால் பிராந்திய அருகாமை இல்லாததாலே இந்த ஊடுபாவல் இந்தி பெல்ட் மக்களுடன் சாத்தியமாவதில்லை. ஆம், திலீப் குமாரைப் போன்ற ஒரு எழுத்தாளர் தமிழில் மிகுந்த ஆளுமையுடன் செயல்பட்டார். ஆனால் எதார்த்தத்தில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சௌகார்பேட்டைக்காரர்கள் தம் சொந்த மாநிலத்துக்கு சென்று வாக்களிப்பதே நடக்கிறது. அவர்கள் என்னதான் தமிழில் பேசினாலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றை தாய்மொழியாகக் கொண்டவர்களைப் போல, தமிழர்களாக தம்மை அடையாளப்படுத்துவதோ கருதுவதோ இல்லை. ஒரு நாயுடு இங்கு பெரியார் ஆவதைப் போல, ஒரு மேனன் எம்.ஜி.ஆனதைப் போல, ஒரு பல்வீந்தர் சிங்ங்கோ, ஒரு ஜெயினோ தம்மை தமிழராகக் கருதி அரசியல் தலைவர் ஆவது இல்லை. இதுதான் மொழி அடையாளத்துக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்குமான தொடர்பு. இது இப்படி இருக்க, இந்தியைக் கற்றுக் கொள்வது உங்களுக்கு ஒரு மொழியை புதிதாக சொந்தமாக்கும், ஆனால் அந்த மொழியின் அடையாளமோ, சமூகமோ, நிலப்பரப்போ உங்களுக்கு சொந்தமாகாது. இந்தியை கற்கும் தென்னகத்தோர் என்றுமே அதில் வெளிநபர் தான். இந்திக்கே இதுதான் நிலை என்றால் சமிஸ்கிருதத்தின் நிலை அதை விட பரிதாபம்.

புத்தகத்தை கிண்டிலில் வாங்க

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...