முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்த புத்தகத்தின் நோக்கம் என்ன?




இந்த தேசிய கல்விக் கொள்கையின் வரைவு ஒரு தேன்மிட்டாயைப் போல இருக்கிறது - பார்க்க சிவப்பாய் அழகாய், உள்ளே ஜீரா வடிய, சுவையாய், ஆனால் உள்ளே பொத்தலாய், சத்தின்றி உள்ளது. நமது பிரதமர் ஜியின் பல உணர்ச்சி பொங்கும் பேருரைகளைப் போல, நிறைய அறிவிப்புகள், முழக்கங்கள், நம்பிக்கையூட்டும் பிரச்சாரங்களுடன் இதுவும் தோன்றுகிறது. ஜியின் அறிவிப்புகள் ஒன்று ‘ராவோடு ராவாக பொட்டியை தூக்கிக்கொண்டு ஊரை விட்டு காலி பண்ணு’ என பணமதிப்பிழப்பைப் போல மாரடைப்பை வரவழைப்பதாக இருக்கும், அல்லது ‘நாளைய விடியலோடு உங்கள் இருப்பில் பத்து லட்சம் டெபாசிட் ஆகும், வசந்தம் தோன்றும், தேனும் பாலும் வீதிகளில் ஓடும், வல்லரசுகளுக்கே வல்லரசாக நாம் இருப்போம்’ என தேர்தல் வாக்குறுதிகளாய் சர்க்கரை லெவலை ஒரேயடியாக ஏற்றுவதாக இருக்கும், இந்த கல்விக்கொள்கையோ முதலாவதை இரண்டாவதுக்குள் வைத்து மடித்து வைத்து நீட்டுகிறது. அநேகமாய் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இந்த ‘520’ பீடாவுக்கு மயங்கி சாய்ந்து விட்டன, என்னவொரு அற்புதமான கல்வித்திட்டம் இது, புரட்சி வருகிறது, இந்தியா வல்லரசாகிறது என ஆங்கில நாளிதழ்கள் புகழாரம் சூட்டி மன்னருக்கு சாமரம் வீசுகின்றன. தமிழகம் மட்டுமே இந்த பீடாவுக்குள் இருக்கும் போதை விஷத்தை, அரசியலை, கண்டுணர்ந்து எதிர்த்து நின்று போராடுகிறது.

 இதற்கான காரணங்கள் நாம் (1) ஏற்கனவே கல்வியிலும் பொருளாதார வளர்ச்சியில் சிகரம் ஏறி நிற்பது, (2) மொழி அரசியலின், தேசியத்தின் சாதக பாதகங்களை நாம் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பிருந்தே தெரிந்து வைத்திருப்பது, (3) தமிழ் தேசியவாதிகள் மற்றும் பெரியார் போன்ற பெருந்தலைவர்கள் துவங்கி இன்றைய திராவிட அரசியல் இயக்கங்களை வரை இம்மண்ணில் அணையாது பாதுகாத்து வைத்துள்ள தமிழ் தேசியக் கனல், (4) மற்ற (வடக்கத்திய) மாநிலங்களைப் போலல்லாது நம்மவர்கள் ஆங்கிலத்தில் சிறந்து விளங்குவது, வெளிநாடுகளுக்கு அதிகமாய் வேலைக்கு படையெடுக்கும் திறன் படைத்திருப்பது, இந்தி ஆதிக்க மாநிலங்களில் போலல்லாது நமக்கு ஆங்கிலம் குறித்த தாழ்வுணர்ச்சி குறைவாக இருப்பது, (5) ஒரு தேசம், ஒரு மதம், ஒரே மொழி எனும் ஆணைக்கு மண்டியிடாமல் எதிர்த்து நிற்கும் அளவுக்கு இங்கு முற்போக்கு அரசியல் பார்வை உயிர்ப்புடன் இருப்பது.

இந்த நூலுக்கான ஆதாரப் புள்ளியும் மேற்சொன்ன காரணங்களிலேயே இருக்கிறது.

 சுருக்கமாய் சொல்வதானால், இந்த தேசிய கல்விக் கொள்கையின் பிரச்சனையே பிரதானமாய் இதன் அரசியல், நாம் இவ்வளவு மூர்க்கமாய் இதை எதிர்க்கக் காரணமும் நமது அரசியலே. குறிப்பாய், மும்மொழிக் கொள்கை, மாநிலத்தின் கல்வி உரிமைகளைப் பறித்து, நம்மை மத்தியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்களின் செயலர்களின் இமையசைவுக்கு காத்து கைகட்டி நிற்க வைக்கும் இதன் நோக்கம், தனியார் பள்ளிகளைப் பின்பற்றி சிறார்களை கடுமையாய் ஒடுக்குகிற தேர்வு முறைமைகளை இது கொண்டு வருவது மற்றும் பாடத்திட்டத்தினுள் தொழிற்கல்வி எனும் பெயரில் இது கொண்டு வரும் அபத்தமான மாற்றங்கள் போன்றவை.


எந்த ஐயமும் தேவையில்லை. இச்சிறிய நூல் இந்த மோசமான அரசியலை அலச, விவாதிக்க, அம்பலபடுத்த எழுதப்பட்ட ஒன்று. அதே நேரம் இந்த தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும் சுட்டியிருக்கிறேன். இதன் சில சாதகமான அம்சங்களையும் குறிப்பிட வேண்டிய என் கடமையையும் உணர்ந்து முன்வைத்திருக்கிறேன்.


வாங்க, உரையாடுவோம்.


புத்தகத்தை கிண்டிலில் வாங்க: https://www.amazon.in/dp/B08HD9ZY14/ref=cm_sw_r_fa_apa_0sDuFbVS4BAVZ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...